Saturday, February 9, 2013

பறையிசை

பறை என்னும் சொல் தமிழ் இலக்கியத்தில் சொல்லுதலுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதை பிங்கல நிகண்டும் உறுதி படுத்துகின்றது. பறையொலியால் பறையர் சமுகம் விடுதலை பெறுமா? பறை விடுதலை கருவியாக?  என்ற கேள்வி எனக்குள் நெடுங்காலமாக உண்டு.

      பறையிசைப்பதால் தலித்துகள் சமுக நிலையிலும், அரசியல் நிலையிலும், மற்றும் பொருளாதார நிலையிலும் எந்த வகையான மாற்றத்தை கண்டுள்ளனர் என்பதை பறை விடுதலைக்கான கருவி என்போர் உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
      பறை என்பதும் இழிவுகளில் இருந்து கட்டமைக்கும், சொல் அல்லது தலித்துகளுக்கான செயல். தாழ்த்தப்பட்ட சமுகம் முன்னேற வேண்டும் என்றால், அல்லது விடுதலை பெற வேண்டும் என்றரால் அதனுடைய இழிவுத் தொழில்களில் இருந்து விடுதலை அடைய வேண்டும் . அப்போதுதான் சாதியத்தின் கட்டமைப்புகளை உடைக்க முடியும் என்று 80 களில் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி உருவானது.
      அந்த எழுச்சியை அந்தந்த பகுதியில் இருந்த தலித் தலைவர்கள் பெருமையோடும் துடிப்போடும் முன்னெடுத்தனர் . அய்யா இளைய பெருமாளும், வை.பா.அவர்களும், பெருந்தலைவர். சுந்தராசனும், பறையை மூலமாக கொண்ட பாரம்பரிய தொழில் எதிர்ப்பை பறை எதிர்ப்பாகவே முன்மொழிந்து தலித்துகளுக்கான பாரம்பரிய இழிவை துடைக்கும் பணியில் முன்நின்றனர்.
      பறையிசைக்க மருத்தால்  கடலுர் மாவட்டம், காட்டு மண்ணார் கோயில் வட்டம், ரெட்டியுர் கிராமத்திலிருந்த துருமயில் – சின்னப்பொண்னு .இவர்களின் மகன் பாண்டியன். காவல் துறையின் துப்பாக்கி சூட்டினால் 15.08.1985 அன்று இறக்கின்றார்.
      இதைப்போல பறையிசை எதிர்ப்பு போரில் பாதிக்ப்பட்டவர்களும், பங்கெடுத்தவர்களின் வரலாறும் நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு வருகிறது. இதே காலத்தில் ஆரணிவட்டம், அக்ராபாளையம் கிராமத்தில் பறையிசைக்க மறுத்தால் ஆதிக்க சாதியினரின் பிணம், எடுக்கமுடியாமல் சாதிகலவரம் நடந்து  காவல் துறையினர் தலித்துக்களை துரத்தி துரத்தி அடித்திருக்கின்றனர். அந்த காலத்தில் இந்த போராட்டத்தை நடத்தியவர். இந்த பகுதியில் இருந்த சமிபத்தில் மறைந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த. திரு. அரி அவர்கள். இந்த வரலாறு அந்த பகுதி தலித் மக்களின் பழம் பெருமை பேசும் வாய்மொழி வரலாறாகவே இன்றும் இருக்கின்றது.
      பாரம்பரியத் தொழிலை விடாத எந்த விளிம்பு நிலை சமூகமும், விடுதலை பெற்றது இல்லை. அந்த வகையில் கிராமந்தோறும், தலித்துகளின் பாரம்பரியத் தொழிலை இருக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும். பறையை எவ்வாறு தலித்துகளுக்கான விடுதலைக் கருவி என்று சொல்லமுடியும்.
      பறையை பொதுசமுகம் இன்னும் தலித்துகளோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கின்றது. பொதுச் சமூகம் அதனை இசைக் கருவியாக ஏற்றுக் கொள்ளாதவரை அது இழிவுக் கருவி.  உதாரணத்திற்க்கு திருமணங்களுக்கு தவில் இசைக்கும் கலைஞர்களுக்கும், தவிலுக்குமான இலவச பேருந்து அட்டையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நலிவுற்ற கலைஞர்கள் என்பதால்.
      அவர்களை விட கீழான நிலையில்தானே இன்று சேரிகளில் சாவுக்கு பறையிசைக்கும் பறையிசைக் கலைஞர்கள் இருக்கின்றனர். தவில் இசைக்கும் கலைஞர்களுக்கு திருமணம்தோறும் முன்னுரிமையும் ஒரு உயர்ந்த தொகை கூலியாகவும் வழங்கப்படுகின்றது.

      பறையிசையையும், பறையையும் அரசு சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கின்ற காரணத்தால், பறையிசையையும், பறைஇசைக் கலைஞர்களையும் அங்கிகரிக்க மறுக்கின்றது.
      தொண்டு நிறுவனங்களின் முன் முயற்சியால் தான் தமிழகத்தில் இன்று பறையிசை பரவிக்கொண்டு வருகின்றது. அவர்கள்தான் பறையிசைக் குழுவை நடத்தும் புரவலராக இருக்கின்றனர். அதிலும் பறையை பறையர் சாதி அல்லது தலித்துகள் மட்டுமே இசைக்க வேண்டும் என்னும் சாதிய கட்டமைப்பைக் கொண்டே அந்த பறையிசைக் குழுக்கள் உருவாக்ப்பட்டு அவர்களால் இசைக்கப்படும் இசை, சேரிகள் தோறும் உள்ள சாதிய கட்டமைப்பை உடைக்கும் கருவி என்பதை எப்படி நம்புவது தோழர்களே.
      ஒரு காலத்தில் பறை இசைக்க மறுக்க வைத்தப் போராட்டங்களை வேகமாக முன்னெடுத்த இந்திய குடியரசு கட்சியின் மேடைகளில் கூட இன்று பறை இசைக்கப்படுவதுதான் மிகுந்த வேதனை. அவர்களைப்ப் பொருத்த வரை சாதிய இழிவு நிலை மாறிவிட்டதாக கருதுகின்றனரோ என்னவோ.
ஆனாலும் இழிவும், தேவையும் அப்படியேதான் உள்ளது. குடியரசுக் கட்சித் தலைவர்களே கூட அதனை கூட்டம் சேர்க்க பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாக பார்க்க தலைப்பட்டு விட்டனர் என்பதைதான் இது காட்டுகின்றது.
      இன்றும் கூட பறையிசைக்கு எதிராக அல்லது பறையிசைத்தலுக்கும் , சாதியத் தொழில்களுக்கும் எதிராண ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை தலித்துகளுக்கும், தலித் அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
      தோல் இசைக் கருவிகளுக்கு கிடைக்கும் மரியாதை, மிருதங்கம், தவில், உறுமி ஏன் பறைக்க கிடைப்பதில்லை என்று என்றேனும் பறையிசையை விடுதலைக் கருவிகளாக்குவோம் என்போர் எண்ணிப் பார்த்த்துண்டா?

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்