Tuesday, August 20, 2013

குட்பை குப்பை

ஒவ்வொரு நகராட்சி, பேருராட்சி, மாநகராட்சி என அனைத்து ஊர்களிலும் தலையாய சிக்கலாக இருப்பது. சந்தேகமே இல்லாமல் குப்பைகள்தான், இந்த குப்பை என்றதும், இந்த தேசத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் இவற்றை நீக்குவது எல்லாம் தலித்துகளின் வேலை என்று,ஒரு பொதுபுத்தி மட்டும் இருக்கின்றது எல்லோருக்கும், அரசுக்கும்.  அதைப் போலவே இன்று தேசமெங்கும், மனிதக் கழிவு, மருத்துவக் கழிவு, மின்பொருள் கழிவு, என கழிவுப் பொருட்களை பல வகைப்படுத்தினாலும், எல்லாமே குப்பைதான். இரண்டு வரியில் சொல்வதென்றால், மக்கும் குப்பை, மக்கா குப்பை. இவைதான் நிதர்சனமான உண்மை.

இவைகளை அகற்றும் பணியை அரசு தலித்துகளுக்கு மட்டுமே வழங்குகின்றது. இதுவும் ஒரு வகையான சாதிய பாகுபாடுதான். குப்பைகளை அள்ளுவதால் தலித் சமுகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பும், உளவியல் பாதிப்பும். சொல்லி மாளாது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், தமது கழிசடை நாவலில் இவர்களது வலியை சொல்லி இருப்பார். ஆனால் இங்கு நான் சொல்ல வந்த செய்தி அதுவல்ல.

ஊர் சுத்தமாக இருக்க குப்பைகளை அள்ளும் தலித் தொழிலாளியின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. காலை விடிந்ததும், நமக்கு நமது தெரு சுத்தமாக பளிச்சென்று இருக்கும், அதற்காக துப்புரவு தொழிலாளி படும் துயரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இரவெல்லாம் தெருவை கூட்ட வேண்டும், பெரும்பாலும் பெண் பணியாளர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆண் பணியாளர்கள் வண்டியி்ல் சென்று குப்பைத் தொட்டியில் இருக்கும், குப்பைகளை எடுத்துக் கொண்டு குப்பையைத் கொட்டும் இடத்தில் கொட்டுவார்கள். இவர்களின் பணியும் விடியற்காலை நேரத்தில் இருக்கும். பகல்பொழுது இவர்களுக்கு நரகமாக இருக்கும். ஊதியமும் மிக குறைவாகவே இருக்கும். அதனால் இவர்களின் குடும்பங்ள் வறுமையில் உழலும்.
கழிவுநீக்கும் பணியில் உள்ள அணைத்து துப்புரவு தொழிலாளிக்கும் தமது இழி நிலையை எண்ணியும், குப்பைகள், கழிவுகளின் குமட்டலை குறைக்க மது பழக்கமும் இவர்களிடம் காணப்படும். நாளடைவில் இவர்களை இந்த தொழில் குடி நோயாளிகளாக உருமாற்றி, குடும்பத்தை குலைத்து, ஏழையாகவே இறந்து போவததான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது இந்த தேசத்தில்.
இவர்களின் ஏழ்மை நிலையை மாற்றி இம்மக்களையும் ஒரு பெரும் வணிகர்களாக உருவாக்க இயலும், சற்றே மாற்றி சிந்தித்தால் போதும்.
எந்ததொழிலை குலத்தொழிலாகவும், இழிவுத் தொழிலாக பொது சமுகம் கட்டமைத்து இருக்கின்றதோ, அதே தொழிலில் இருந்து நாம் நமக்கான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்..

முதலில் துப்புரவு பணியில் உள்ள அணைத்து தொழிலாளர்களும், தமக்கென ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும். குப்பைகள கொட்டுவதற்கு பதிலாகவும், அல்லது எரிப்பதற்கு பதிலாகவும் தங்களுக்கான வருமானத்திற்கான வாழ்வியல் ஆதாரமாக அந்த பணியையும், குப்பையையும் பயண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

அந்த சங்கம் இரண்டு வகையான பணிகளை செய்ய வேண்டும்.

  1. மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரங்களை தயாரிக்க வேண்டும், அதை அவர்களுடைய கூட்டுறவு சங்கங்கள் வழியாவே விற்பனை செய்ய வேண்டும். அதன் வழியாக வருகின்ற லாபம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
  2. அல்லது குப்பையில் இருந்து தயாரிக்கின்ற இயற்கை உரத்தை, விவசாயம், மற்றும். இயற்கை உரங்கள் தயாரிக்கின்ற உர நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். அவை இயற்கை உரங்களுடன் கலந்து தயாரிக்கப் பயன்படும். உதாரணம், வேப்பம் புண்ணாக்குடன் இத்தகைய உரங்களை கலந்து தயாரித்தால் உயிர் சத்து மிகுந்த உரமாக இருக்கும். பயிரும் நன்கு விளையும்.
இந்த தொழில் நுட்பத்தை இந்த மக்களுக்கு விவசாய கல்லுாரியினரும், மற்ற நபர்களும் கற்றுத் தர வேண்டும். அல்லது அவர்களாகவே கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள மாற்று வழியில் முயற்சிக்க வேண்டும்.
  1. இரண்டாவதாக,மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம்தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், வாய்ப்புகள் மற்றும் வசதிகளையும் அரசிடம் இருந்து கேட்டு பெற்று, அதன் வழியாக கிடைக்கின்ற மின்சாரத்தை அரசிற்கே கொடுக்கலாம். இதன் வழியாக பொருளாதாரம் கணிசமாக உயரும்.
  2. எந்த தொழிலை இந்த சமுகம் இழிவாக  நிணைக்கின்றதோ, அந்த தொழிலையே தமக்கான முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. இவ்வாறு நாடு முழுவதும் செய்யும் போது, எங்கும் குப்பைகள் இருக்காது. மாறாக குப்பைகளில் இருந்து துப்புறவு தொழிலாளிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்...
  4. இதை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் அணைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்கள், சமுக இயக்கங்கள் ஒருமித்து குரல் கொடுத்து செயல்படுத்த வேண்டும்..

Tuesday, August 13, 2013

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

மா. அமரேசனின் 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்' நூலை இயற்கை வளங்கள், சூழல், விளிம்பு நிலை மக்கள் என மூன்று தளங்களில் இயங்குவதாக வரையறுக்கலாம்.

பாலாறு குறித்தும், தண்ணீர் வியாபாரம் மற்றும் நீரை பற்றிய நான்கு கட்டுரைகளும், கவந்தி வேடியப்பன் மலை, சவ்வாது மலையின் பாதிப்புகள் என நான்கு கட்டுரைகளும், தலித் மக்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அரசியல் சார்ந்த கட்டுரைகள் என மொத்தம் 18 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.

சமூகத்தின் செயல்பாடுகள், சூழலியல் தன்மைகள் மற்றும் அதன் பாதிப்புகளை விளிம்பு நிலை மனிதனின் தெளிந்த பார்வையில், துணிவு மிக்க வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர்.

இன்றைய தமிழகத்தில் சமவெளி பிரதேசத்தில் மட்டுமல்லாது கடல், மலை சார்ந்த பகுதிகளில் வாழும் விளிம்பு நிலை மக்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

காடுகளின் பரப்பளவு 17%-ல் (சமன்நிலைக்கு 33% தேவை) ஆரம்பித்து, புலிகளின் அழிவு, யானைகளின் இறப்பு, பலவகை பறவைகளின் அழிவு மற்றும் அதன் வாழிட அழிப்பு, கிரானைட் என்ற பெயரில் மலைகளை தகர்த்தல், குவாரி என்ற பெயரில் ஆறு, ஏரிகளை சாகடித்தல், விளைநிலங்களை விட்டு விவசாயிகளை துரத்தியடித்தல், கடற்கரையை அழகு செய்தல் என்று மீனவ மக்களை வேரோடு பிடுங்கி எறிதல், கல்பாக்கம், கூடங்குளம் என 'அழிவுக்கான அறிவியலை' மக்கள் தலையில் திணித்தல், நீயூட்ரினோ ஆலை அமைத்து பேராபாய சங்கு ஊதுதல், 560-க்கும் மேற்பட்ட மீனவ சொந்தங்கள் இறந்தும் மயான அமைதி காத்தல், ஈழத்தில் இனப்படுகொலையில் 1.5 லட்சம் சொந்தங்கள் இறப்பு என தமிழகம் மற்றும் உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் அவல நிலை எட்டு திக்கும் தொடர்கிறது.

இவற்றில் இருந்து தமிழ்ச் சமூகம் எப்படி மீள்வது? என புரியாத ஒரு நிலையே இன்று அனைத்து தளங்களிலும் உள்ளது. இந்த அடிப்படையிலேயே அமரேசனின் நூலை நோக்க வேண்டியுள்ளது.


இன்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிகவும் முதன்மையானது 'தண்ணீர்' பிரச்னை. இதனை, 1. அண்டை மாநிலங்கள் நியாயமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடாமல் துரோகமிழைப்பது, 2. தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கத் தவறுவது மற்றும் கழிவு நீர் குட்டைகளாக மாற்றுவது, 3. ஆறு, ஏரி, குளங்களை வீட்டு மனைகளாக (Real Estate) மாற்றுவது, 4. நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

ஒரு பொருளைத் தயாரிப்பதில் இருந்து அதனை சந்தைப்படுத்துவது வரையிலான தொடர் செயல்பாடுகளின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர், 'புலப்படாத தண்ணீர்' என்ற புதிய கருத்தாக்கத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் கேரளாவுக்கு நம் மாநிலத்தில் இருந்து தினந்தோறும் செல்லும் அரிசி, முட்டை, காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும், உற்பத்தியில் ஈடுபடும் போது செலவாகும் தண்ணீரையும் சேர்த்து விலை நிர்ணயிக்க 'புலப்படாத தண்ணீர்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் செல்கிறது. அவர்களுக்கு அதனை தயாரிக்கும் போது ஏற்படும் தண்ணீர் இழப்பு மற்றும் செலவு இதனால் மிச்சமாகிறது. அப்போது நமது தயாரிப்பு செலவுடன் தண்ணீருக்கான அடக்க விலையையும் சேர்த்து சொல்வது சரியான முடிவாகவே இருக்கும் என்பதை நூலாசிரியர் முன்வைக்கிறார். இந்த செயல்முறையை சர்வதேச நாடுகள் நடைமுறைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார். நமது அரசியல்வாதிகள் இதனை கருத்தில் கொண்டால் நல்லது.


இயற்கை வளங்களில் ஒன்றான, பல்லாயிரம் வருடங்களில் உருவான மலைகள், இன்று கனிம வளத்திற்காகவும், கிரானைட் கற்களுக்காகவும் முற்றாக அழிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கவுந்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு ஒப்படைத்து கொள்ளைக்கு துணை போகும் அரசின் கயமையை 'வெடிக்கும் வேடியப்பன் மலை...' என்ற கட்டுரையில் தோலுரித்துக் காட்டுகிறார்.

சுற்றுலா என்பது சுரண்டலுக்கு முதல்படி. பெரு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு குழுமங்களுக்கும் நமது இயற்கை வளங்களை சுரண்ட கிடைத்திருக்கும் துருப்பு சீட்டுதான் 'சுற்றுலா' என்ற வார்த்தை. காடு, மலை சார்ந்து பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு யாருக்காக 'சுற்றுலா' பகுதியாக மாற்றுகிறார்கள் என்ற உள் அரசியலை 'சுரண்டலுக்கு முதல் வழி சுற்றுலா' என்ற கட்டுரையில் பதிவு செய்கிறார் நூலாசிரியர் மா. அமரேசன்.

சுற்றுலாவினால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், சூழல் சீர்கேடுகளை பட்டியலிடுகிறார். நம்முடைய பண்பாடு சீரழிவதையும் சுட்டிக் காட்டுகிறார்.


பஞ்சமி நிலங்கள் மீட்பது குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உண்மை முகம் குறித்தும் தனது கூர்மையான அறிவாற்றல் மூலம் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

வியாபார உலகில் அன்னை தினமும் ஒன்று தான், காதலர் தினமும் ஒன்று தான். சந்தையை குறிவைத்து இயங்கும் இத்தகைய கூட்டத்திற்கு இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து பலியாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடத்தின் அத்தனை நாட்களையும் ஏதாவதொரு நாளாக கொண்டாட தயாராகி உள்ள பெரு நிறுவனங்களை எதிர்த்தும் குரலெழுப்பியுள்ளார் ஆசிரியர்.

சூழலில் தொடங்கி நூலின் பயணம் காடு, மலை, சமவெளி பிரதேசம் என பயணப்பட்டு பெண்ணியத்தை தொட்டு இளைஞர்களின் நலன் பேசி முடிகிறது.

எளிமையான எழுத்து நடையால் வாசகரிடம் நெருங்கி சென்று தன் கருத்தை அவர்களின் மனதில் விதைக்கிறார்.

நூலின் அட்டை வடிவமைப்பும், உள்ளடக்கமும் சிறந்த முறையில் அமைந்துள்ளது. அதே வேளையில் நூல் முழுதும் நிறைந்துள்ள எழுத்து பிழையை நீக்கியிருந்தால் நூல் வாசிப்பு முழுமையடைந்திருக்கும். மா. அமரேசனிடம் இருந்து இன்னமும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்'.நூலின் பெயர் - நடுங்கும் நிலம் நடுங்கா மனம்-(நிலம், வனம், சூழலியல்-தலித்தியப் பார்வை)

ஆசிரியர் - மா. அமரேசன்

வெளியீடு - நெய்தல் வெளி
153C, ஈத்தாமொழி சாலை, நாகர்கோவில் - 629002.

தொலைபேசி - 04652-265655.
(0) 9442242629

பதிப்பு - டிசம்பர் 2011.

மின்னஞ்சல் - neidhalveli2010@gmail.com

விலை . ரூ. 85.00


ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.

நன்றி

திரு.ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.
http://www.thadagam.com/index.php/books/bookscategories/bookreviews/827-nadungumnilamnadungamanam

தடாகம் இணையத் தளம் 

Thursday, August 8, 2013

தலித் கூட்டுறவு விற்பனை மையம்.

இன்றுள்ள தாராள மயம், தனியார் மயம், யாரையும் பணக்காரர்களாக விடாது. அவ்வாறு யாராவது பணக்கார்களாக தம்மை காட்டிக் கொண்டால், அது நேர்மையான வழியில் வந்த பணமாக இருக்க இயலாது. அவ்வாறு திடிர் பணக்காரர்களின் பணத்துக்குப் பின்னால் நிச்சயம், ஒரு குற்றம் அல்லது பல குற்றங்கள் மறைந்திருக்கும். அந்த பணத்தில் இரத்தக்கறை படிந்திருக்கும். இது யாரே ஒரு அறிஞர் பணம் குறித்து சொல்லும் போது சொன்னது.

அவரின் கூற்று அப்படியே தலித் சமுகத்துக்கும் பொருங்தும், தலித் சமுகத்தில் ஆணுக்கு நிகராக, பெண்ணும், பெண்ணுக்கு நிகராக, ஆனும் சேர்ந்தே உழைக்கின்றனர். ஆயினும் பொருளாதார நிலையில் அவர்களால் முன்னேற்றம் காண இயலவில்லை.

இன்று கணவன் மணைவி இருவருமே சேர்ந்து உழைத்தாலும், சேமிக்க முடிவதில்லை, மிச்சம் பிடிக்க முடியாமல், பற்றாக்குறைக்கு ஆளாகி, கடன் வாங்க வேண்டிய தேவையில் உள்ளோம். இந்த நிலை பொருளாதாரத்தில் மிக பின்தங்கி உள்ள தலித் மக்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்று இம்மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, பணம் ஒரு வழியில் வந்தால் பல வழிகளில் செலவாகின்றது. முதலில் நாம் செலவழிக்கும் பணம் எங்கு செல்கின்றது, ஏன் செலவாகின்றது என்று பார்க்க வேண்டும்... இன்று நாம் செலவழிக்கும் பணம் யாவுமே, பண்ணாட்டு நிறுவனங்களிடம் சென்று சேர்கின்றது. அவர்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு அழகழகாய் அடுக்கி வைக்கின்றார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதால் அந்த பணம் அவர்களிடம் சென்று குவிகின்றது. அந்த பணம் மீண்டும் நம்மிடம் திரும்ப வராது. எனவே நாம் மீண்டும் மீண்டும் ஏழைகளாக்கப்படுகின்றோம்.

அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் வாங்குவதால், இடைகழிவு, விற்பனை லாபம் யாவும் கடையின் உரிமையாளருக்கு சென்று சேர்கின்றது. எந்த வகையிலும் ஒரு பொருளை கடையில் இருந்து வாங்கும் போது, ,நாம் நட்டமடைகின்றோமே ஒழிய, லாபம் அடைவதில்லை . இந்த நிலை மாறி கடையில் இருந்து ஒரு பொருளை நாம் வாங்கும் போது நாம் லாபம் அடையும் வகையில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இயலுமு்.

உண்மையில் மக்கள் பணம் மக்களிடமே சுழல வேண்டும், அல்லது உழல வேண்டும். அப்போதுதான் மக்களிடம் வறுமை அண்டாது. மாறாக மக்களின் பணம் அனைத்தும் ஒரே இடத்தில் குவியும் போது. தனிநபர்  பணத்தில் குளிக்கலாம், ஆனால் ஒட்டு மொத்த சமுகம் ஏழை சமுகமாக இருக்கும். இதைத்தான் இன்றைய இந்திய பொருளாதார மேதைகளும், அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் செய்கின்றனர். மக்களால் பொருளாதார மேம்பாடு அடைய முடியமல் தவிக்கின்றனர்.

இந்த நிலை தலித் சமுகத்துக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே இவற்றை தவிர்க முதலில் மக்கள் பணத்தை மக்களிடமே, சுழலச் செய்ய வேண்டும்.

அதற்காக சேரிகள் தோறும் உள்ள வீடுகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று அந்த தொகையை முதலீடாகவும், முலதனமாகவும் கொண்டு ஒரு கூட்டுறவு விற்பனை மையத்தை தொடங்க வேண்டும், அதில் தற்போதுள்ள எல்லா பன்னாட்டு வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி, உள்ளுர் வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி நாம் விற்பனைக்கு வைக்கவேண்டும், நம் மக்களும் குண்டுசி முதல் அனைத்து பொருட்களையும் அந்த கடையிலேதான் வாங்க  வேண்டும்.

கிராம அளவில் தலித் மக்கள் உற்பத்தி செய்யும் காற்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை கூட தலித் கூட்டுறவு விற்பனை மையத்திலே விற்று தனக்கு வேண்டிய பொருட்களை அந்த விற்பனை மையத்திலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதன் வழியாக பொருளாதார மேம்பாடு அடைய எளிமையான வழி கிடைக்கும். இதை ஒரு பெரும் நிறுவனமாக வளர்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

 உள்ளுர் விற்பனை விலை, சில்லறை விற்பனை விலைக்கே பொருளைக் கொடுத்தாலும், ஒவ்வொரு பொருள் விற்க்கும் போதும் கடைக்காரருக்கு ஒரு லாபம் உண்டு, அந்த லாபம் முழுவதும் அந்த கடையை நடத்தும் மக்களுக்கு செல்லும், ஆண்டு இறுதியிலோ, அல்லது, ஆண்டிற்கு இரு முறையோ கடை யில் பொருட்களின் விற்பனை வழியாக கிடைத்த லாபம் மக்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

இதன் முலம் ஒரு பொருளை வாங்கும் போது கடைக்காரருக்கு கிடைக்கும் லாபம் தலித் மக்கள் அணைவருக்கும் கிடைக்கும். மேலும், காலப்போக்கில், பன்னாட்டு வியாபாரிகளின் பொருட்கள் விற்பனையை நிறுத்தி, அல்லது குறைத்து, உள்நாட்டு வியாபாரிகளின் பொருளை விற்கலாம். அல்லது. தலித்துகள் உற்பத்தி செய்யும் பொருளை தலித் மக்களிடமே, கூட்டுறவு விற்பனை மையத்தின் வழியாக எளிதில் விற்பனை செய்யலாம், இந்த மக்களின் பணம் இவர்களிடமே உழன்று பலருக்கு வேலை வாய்ப்பையும், பொருளாதார மேம்பாடும் அடைய வழி பிறக்கும்.

இதை சேரிகள் தோறும் செய்ய வேண்டும். அப்போதுதான் தலித் மக்களுக்கென விற்பனை நிலையங்கள் உருவாகும். தலித் கூட்டுறவு விற்பனை மையம் என்பது தலித் மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு நிறுவனமாக உருவெடுக்கும். நமக்கான பொருளாதாரத்தை நாமே கட்டமைக்க இயலும்.

தற்போதைய பதிவு

ஆத்திசூடி மீள் வாசிப்பு

ஆத்திசூடி மீள் வாசிப்பு புத்தகம். விலை 240 + 50(கொரியர் செலவு) மொத்தம் 290. கூகுள் பே யிலும் தொகையை செலுத்தலாம். எண். Google pay no:9150...

பலராலும் படிக்கப்பட்ட கட்டுரைகள்