Sunday, December 20, 2015

இயக்கமாய் மாற வேண்டிய இலவச இரவுப் பள்ளிகள்

ஒவ்வோராண்டும் தமிழக நிதி நிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடும் அளவு குறைந்து கொண்டே வருவதும், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டே குறைத்துக் கொண்டு வருவதும், காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்திக் கொண்டு வருகின்றது. இது யாருடைய கல்வியை பாதிக்கும் செயல் என்று என்றேனும் நாம் எண்ணிப் பார்த்திருப்போமா?

உண்மையில் நமது கல்வி முறை ஏழை மக்களுக்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் உள்ளது என்பதை அனைவரும் உணருவார்கள். அரசாங்கமே தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கின்ற விதத்தில்தான் உள்ளது. ஏழைகள் அதிகம் பயன்படுத்துகின்ற, அரசுப் பள்ளிகளிகளில் விளிம்பு மக்களின் குழந்தைகள்தான் அதிகம் படிக்கின்றனர்.
அவர்கள் தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களோடும், தேர்வு முறைகளோடும் போட்டி போடுகின்ற நிலையில்தான் இன்றும் உள்ளனர்.

மேலும் நமது வாழ்க்கை முறையில் திரைப்படங்களும், தொலைக்காட்சியும், கிரிக்கெட்டும் ஒரு அங்கமாகிப் போனதால், அரசு பள்ளியில் பயிலும் மாணவனுக்கு பள்ளிப் படிப்போடு வீடுகளில் படிக்க வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது, இது ஏழை மாணவர்களின்  தேர்ச்சி நிலையை பாதிக்கும் செயலாகவே இருந்து கொண்டு வருகின்றது.
குறிப்பாக சேரிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவனுக்கு இரவுகளில் தகப்பனின் குடியும், வீடுகளில் தொலைக்காட்சி நீள் தொடர்களின் ஒலிபரப்பும், மாணவனின் இரவு நேர படிப்பை பெருமளவில் பாதிப்பதால் அவனால் இரவு நேரத்தில் வீடுகளில் படிக்க முடிவதில்லை, இதனால் தாழ்த்தப்பட்ட மாணவனின் கல்வி நிலை உயரமுடியாமல் தேர்ச்சி பெற முடியாததாலும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியும், தோல்வியுறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றான் பின் ஆனாக இருந்தால்  அவன் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைமையும், பெண்ணாக இருந்தால் திருமணம் செய்து கொடுக்கும் நிலையும்தான் பெரும்பாலும் நிகழ்கின்றது நமது நாட்டில்,

இந்த நிலையை தவிர்க்க ஒவ்வொரு சேரிகள் தோறும், இலவச இரவுப் பள்ளிகளை ஆரம்பித்து அதில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சியும், படிக்க வாய்ப்பும் அளிக்க வேண்டும், இதனால் தலித்  கிராமப்புற மாணவ மாணவிகளின் கல்வித் தரம் உயரும். இதனை ஒரு இயக்கமாகவே செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

சேரிகளில் உள்ள அரசியல் இயக்கம் அல்லது கட்சிகள், சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசுப் பணியில் இருப்போர் கூட இதனை பொறுப்பேற்று செய்ய வேண்டும், இதனால் அரசியல் கல்வியும் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கிடைத்து தெளிவான அரசியல் புரிதலோடு வளர்வார்கள்.. கல்வி நிலையும் உயர்கின்ற வாய்ப்பு இயல்பாகவே அமைகின்றது.

வேலுார் மாவட்டத்தில் உள்ள தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்பு, வேலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள 25 கிராமங்களில் சேரிகள் தோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கென்று இலவச இரவுப் பள்ளியை நடத்தி வருகின்றது சுமார் 25 ஆண்டு காலமாக, இந்த பள்ளியில் படிக்கின்ற மாணவர்களே, பள்ளிப் படிப்பை முடிந்தது பள்ளி ஆசிரியர்களாக தன்னார்வத்துடன் பொறுப்பேற்று ஆர்வத்துடன் நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இதனை நானே நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன்.

அதே போல திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் ஒன்றியத்தில் உள்ள கரந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களில் 50 ஆண்டுக்கும் மேலாக இலவச இரவுப் பள்ளிகள் தன்னெழுச்சியாக  நடந்து கொண்டு வருகின்றது, இந்த கிராமங்களில் தலித் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கின்றது, கல்லுாரியில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது, மேலும் அரசு பணியில் உள்ள தலித்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.

கல்வி மட்டுமே சமத்துவத்தை கொண்டு வரும் கருவியாக இருக்கும், ஒரு சமூகம் கல்வியில் பின் தங்கியிருப்பது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் செயலாகவே இருக்கின்றது, எனவே இந்த நிலை நீடிக்காமல் இருப்பதற்கு, சேரிகள்தோறும் இலவச இரவுப் பள்ளிகளை இயக்கமாக கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கின்றது. அந்த பணி இன்றைக்கு முதன்மையாக பணியாக முன்னெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.

Tuesday, December 15, 2015

ஆயிரம் ரூபாய் இயக்கம்

இந்திய அரசு, குடிமக்களின் நலன் பேனும் அரசு என்னும் நிலையில் இருந்து மாறி முகவான்மை அரசாக முழுவதும் மாறிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், விளிம்பு நிலை மக்கள் இன்னும் ஏழைகளாக இருப்பதற்கான திட்டங்கள் ஏதும் இல்லாமலே ஏழைகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் அரசு மற்றும் அரசு திட்டங்களால், மற்றும் சாதிநாயகம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களால்.


ஏழைகள் சம்பாதிக்கும், பணம் குறைவாக இருந்தாலும் அதனை செலவழிக்கும் விதம் மிக வேகமாக இருப்பதால் அவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர் அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் முதல் காரணம். அவர்கள் நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் சிக்கி கொண்டுள்ளனர். தமக்கு வேண்டிய பொருள் எது என்பதை தீர்மானிக்கும் திறன் இல்லாமல் ஊடகங்களின் விளம்பரப்படுத்தப்படும்  பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் அத்தனையும் தமக்கான சுகவாழ்வுக்கு அவசியமான பொருள் என்றே கருதி வாங்குகின்றனர். இந்த நிலைப்பாடு தலித் மக்களின் மத்தியில் மிக அதிக அளவில் இருக்கின்றது,

இதன் விளைவாக அவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும் பெருநிறுவனங்களுக்கே சென்று சேர்கின்றது. இதனால் தலித்துகள் பொருளாதாரத்தில் உயர வழி இல்லாமல் போகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும். அதற்கான செயல்திட்டம் ஒவ்வொரு சேரியிலும் உருவாக வேண்டும். அதற்கான செயல்திட்டத்தின் பெயர்தான் “ ஆயிரம் ரூபாய் இயக்கம்” 

ஒவ்வொரு சேரியிலும் உள்ள குடும்பத்திலிருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் உறுப்பினர் கட்டணமாக வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்த பணத்தை கொண்டு ஒரு கூட்டுறவு கடையை உருவாக்க வேண்டும், அதன் உறுப்பினர்களாக சேரி மக்களுக்கு தேவையான பொருட்கள் அந்த கூட்டுறவு கடையில் விற்பனைக்கு வைக்க வேண்டும். அதன் விற்பனையில் கிடைக்கும் லாபம் மற்றும் முகவான்மை கழிவு, கூடுதல் லாபம் என அத்தனையும் தலித் மக்களுக்கே சென்று சேர வேண்டும். அதன்வழியாக தலித் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும், வணிக நிறுவனங்களும் உருவாகும். இது குறித்து மேலதிக விவாதத்தையும் கருத்துக்களையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

பேச. 9150724997

Monday, November 2, 2015

நாங்கள் தலித்துகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை - திராவிட கட்சிகள்

இளவரசன் படுகொலை அதையொட்டிய சேரிகளின் எரிப்பு, அன்மையில் கோகுல்ராஜ் கொலை , மற்றும் சேரிகள் எரிப்பு, கௌரவ கொலைகள் போன்ற நிகழ்வுகளில் கவனம் குவியாமல் இருப்பதன் மூலம் ஆளும் கட்சி தான் தலித்துகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்னும் நிலைப்பாட்டை முன் மொழிந்து இடைசாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வாக்கு வங்கியை குறிவைத்து செயல் படுவதைப் போலவே,
நமக்கு நாமே என்னும் பயணத்திட்டத்தை முன்னெடுத்து தேர்தல் பணிகளை முடக்கிவிடும் இளைய தளபதியோ, இதுவரைக்கும் ஒரு சேரி பகுதியில்யில் கூட தண்ணீர் குடித்ததில்லை,சேரிக்குள் சென்று வாக்கு சேகரித்தது இல்லை, அவர்களின் பிரச்சனை என்ன என்று கேட்டதில்லை,  குடிசையைப் போய் பார்த்ததில்லை, சேரி மக்களின் பிரச்சனையை பேசவில்லை, ஏன் இதுவரையிலும் அவர் அம்பேத்கர் சிலைக்கோ, இமானுவேல் சேகரன் சிலைக்கோ, ராவ்பகதுார் எல்.சி. குருசாமி சிலைக்கோ மாலை அணிவித்தது இல்லை. 
ஆளும் கட்சியையொட்டி, ஆளும் கட்சியாக துடிக்கும் திராவிட முன்னேற்ற கழகமும் தாங்கள் தலித்துகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்னும் செய்தியைத்தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் இடைச்சாதி ஏன் தமிழ் சாதி சமூகத்துக்கு சொல்கின்றார். ஏனெனில் தலித்துகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், பிற்பட்ட மற்றும் மிக பிற்பட்ட சாதியினர் தன் கட்சிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். அவ்வாறாயின்  அது தன் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அஞ்சுகின்றார்.
இந்நிலையில் தலித் அரசியல் கட்சிகள் கூட்டணி அரசியல் பற்றி பேசுவதும், அதற்கான முயற்சிப்பதும், அதற்கென வெற்றிபெறும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று தங்களை தாங்களே மன அமைதி படுத்திக் கொள்வதும்,  தங்கள் மக்களை இந்த கட்சிகள் புறக்கணிக்கின்றன என்பது தெரிந்தேதான் நடக்கின்றது. அவ்வாறாயின் எப்படி தலைநிமிர்ந்த வாழ்வை நாம் எதிர்பார்க்க இயலும். ஒடுக்கபட்டவர்களின் கையில் எப்படி அரசியல் அதிகாரம் வரும். 
தமிழ்நாட்டின் மொத்த வாக்கு வங்கியில் 21 சதவிகிதம் வாங்கி வங்கியை வைத்திருக்கும் தலித் மக்களை திராவிட பேராய கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் இருக்கும் போது, தலித் அரசியல் கட்சிகளால் ஏன் திராவிட கட்சிகளை புறக்கணித்து  தங்களின் மக்களிடம் உள்ள வாக்கு வங்கியை ஒருங்கினைத்து தேர்தலை சந்திக்கும் திராணி இல்லை என்றே நிணைக்கத் தோன்றுகின்றது தற்போது .

Sunday, October 11, 2015

தலித்துகளின் வாக்கு மட்டும் வேண்டும் அவர்கள் வாழ வேண்டாமா?


நாட்டில் இன்றுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு வகையில் ஒருமித்து செயல்படுகின்றன. அது தலித்துகளின் வாழ்க்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. அது தலித்து மக்கள் இந்த நாட்டில் எந்த வகையிலும் தலைநிமிர்ந்து வாழகூடாது ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். என்னும் எண்ணம் மட்டும் இருக்கின்றது அனைத்து அரசியல் கட்சிகளிடமும், இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி.

அன்மைய நிகழ்வுகள் இதை நிருபிக்கின்றன. இளவரசன் மரணம், அதற்க்கு முன் நிகழ்ந்த சாதிய வெறியாட்டத்தில் 3 கிராமங்கள் அழிந்தது, கோகுல்ராஜ் மரணம் அதற்கு காரணமானவர்களின் அரசியல் பின்புலம் மற்றும் கொங்கு மண்டலத்திலுள்ள வெள்ளால கவுண்டர்களின் வாக்கு வங்கியை காப்பாற்ற அரசு கடைபிடிக்கும் மெத்தனம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது தலித்துகள் இன்னும் தங்களின் வாக்கை அரசியலாக்கும் யுக்தி தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.

இல்லையெனில் மற்ற சாதியினரின் வாக்கு வங்கியை காப்பாற்ற துடிக்கும் அரசியல் கட்சிகள் தலித்துகளின் வாக்கு வங்கி விஷயத்தில் மட்டும் அக்கறை காட்ட மறுப்பதற்க்கு காரணம், அனைத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் தலித்துகள் எந்த நிலையிலும் தங்களின் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.


ஆக தலித்துகள் தங்களை பிற அரசியல் கட்சிகளில் இனைத்துக் கொண்டிருக்கும் வரை தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் 

Saturday, October 10, 2015

அரசியல் அதிகாரம் மட்டும் போதுமா?

இப்பொழுது அனைத்து அரசியல் கட்சியும் தேர்தல் காய்ச்சல் பிடித்து தனக்கான அணி, தனக்கான வாக்கு வங்கியை தக்க வைக்கும் அல்லது அதிகரிக்கும் யுக்தியை  பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சியாக எதுவும் இல்லை.

எல்லா அரசியல் கட்சிகளுமே உள்ளுர் முதலாளியில் இருந்து பண்ணாட்டு முதலாளிக்கு ஆதரவாகத்தான் ஆட்சியை நடத்துகின்றனரே ஒழிய தன் நாட்டு மக்களுக்கு ஆதராவாக ஆட்சியை நடத்தவில்லை, வறுமையை ஒழிக்க எந்த செயல்திட்டமும் இல்லை, 

கனினிமயம், காவிமயம் இரண்டும்தான் இன்றைக்கு முக்கிய முழக்கமாக இருக்கின்றது. இரண்டுமே ஏழைகளுக்கு எதிரானவை. இவை பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை, நாடே இன்று கொள்ளை போய்கொன்டிருக்கின்றது, நாட்டில் உள்ள வளங்கள் யாவும் வெள்ளையர் ஆட்சியில் இருந்ததை விட அதிக அளவில் உலகமயத்தால் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாமல் ஆட்சி அதிகாரம் பற்றியே அனைத்து அரசியல் கட்சிகளும் கனவு கான்கின்றன. 

தண்ணீர் வளம் குடிநீர் வணிகமாகிக்கொண்டிருக்கின்றது அதற்கான மாற்று திட்டம் இல்லை, இயற்கை வளம் அனைத்தும் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன, அதற்கான எதிர்புகள் கவனம் ஈர்க்கும் வகையில் இல்லை, மன்னையும் மக்களையும் அழிக்கும் 
 • கூடங்குளம் அனுமின் திட்டம்
 • கல்பாக்கம் அனுமின் திட்டம்
 • நியூட்ரினோ ஆய்வு திட்டம்
 • காவிரி படுகை மீத்தேன் திட்டம்
 • சேது கால்வாய் திட்டம்
 • கெய்ல் குழாய் திட்டம்  என எத்தனையோ வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்தாலும் இவற்றிற்கான பலன் மக்களுக்கானதா,  என்றால் இவற்றிற்கு பின் இருக்கும் பெரு நிறுவனங்களின் சுரண்டல்  என்பது அணைவருக்கும் தெரியும்.

இன்றும் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும், கவனிக்கப்படாமலும் இருக்கின்றன. 
 • விவசாயம் அழிந்து கொண்டிருப்பது
 • விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு குத்தகை தருவத
 • பட்டியலின சாதி மக்களுக்கான சலுகைகளும், வேலை வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பது,
 • கவுரவ கொலைகள் பெருகிக் கொண்டிருப்பது, 
 • வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பது,
 • ஏழைகள் ஏழைகளாகிக்கொண்டிருப்பது,
 • மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருப்பது
 • குடிநீர் தட்டுப்பாடு
 • வன வளம் குறைந்து கொண்டிருப்பது
 • போன்ற முக்கிய பிரச்சனைகளைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளும் இதுவரைக்கும் தமது நிலைப்பாடு என்ன என்று கூறவில்லை. 
மாறாக தமக்கு அதிகாரத்தில் இருக்கும் ஆசையை மட்டும் பல்வேறு வழிகளில் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. மக்கள் மட்டும் இவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் ஆனால் இவர்களின் பிரச்சனைகளை நாங்கள் தலையிடவேண்டும் என்னும் போக்கு அரசியல் கட்சிகளிடம் அதிகரித்து வருவது நல்லதில்லை. 

Wednesday, April 15, 2015

அண்ணலின் சிலைக்கு மாலை கொள்கைக்கு பாடை

அண்ணலின் சிலைக்கு மாலை கொள்கைக்கு பாடை
                                               
      ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்த நாளான ஏப்ரல் 14 மற்றும் நினைவு நாளான டிசம்பர் 6 ஆகிய இரு  நாட்களில் அண்ணலின் சிலைக்கு மாலை சூடும் நிகழ்வு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும், தலித் அரசியல் கட்சி தலைவர்களாலும், சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் அண்ணலின் மீது ஆர்வம் கொண்டவர்களாலும் நிகழ்த்தப்படும் நிகழ்வாகவே இந்தியா முழுமைக்கும் உள்ளது. தமிழகத்தில் மிக அதிகமான அளவில்
      அண்ணலின் சிலைக்கு மாலை சூடும் நிகழ்வு என்பது அரசியல், சமூக, தளத்தில் தனக்கான இருத்தலை உலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு எளிய சடங்காகத்தான் இங்குள்ள ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.    மாலையிடும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் மனோபாவமும் தனக்கான இருத்தலை உலகுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே                                                                
 உள்ளது.
      இதனை வேறு விதமாக சொல்வதென்றால் ஆண்டுக்கு இரு முறை அண்ணலை நினைத்துக் கொள்கின்றோம், மற்ற நாட்களில் அவரை வசதியாய் மறந்து விடுகின்றோம். அவர் சொல்லிச் சென்ற “ கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் ” இன்றைக்கு  தலி்த் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மனதில் இருந்தும் சமூக செயல்பாட்டாளர்கள் மனதில் இருந்தும், சமூக ஆர்வலர்கள் மனதில் இருந்தும்  மறைந்து போய் விட்டது.
ஆனால் பிற சாதியினர் இந்த மூன்று கோட்பாடுகளையும் உள் வாங்கிக் கொண்டு தனக்கான இருத்தலை அம்பேத்கரை எதிர்த்துக் கொண்டு அவரின் முழக்கமான கற்பி, ஒன்றுசேர், கிளர்சி செய் என்பதை தாம் சார்ந்த சாதியிலுள்ளோரிடம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய சாதிய அரசியலிலும், சமூக அரசியலிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை நம்பியே தலித் குழந்தைகளின் கல்வி உள்ளது. ஆனால் இன்று அரசு பள்ளிகளை அரசே திட்டமிட்டு எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டு வருகின்றது. கல்வி மட்டுமே தலித் சமூகத்தில் மிகப்பெரும் சொத்தாக இன்றும் கருதப்பட்டு வருகின்ற சூழலில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அவற்றின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என என்றாவது நாம் அரசுக்கு கோரிக்கை வைத்திருப்போமா? அல்லது போராடித்தான் இருப்போமா?
தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மிகுந்துள்ள இன்றைய நிலையில் சேரியில் உள்ள குழந்தைகள் தங்களது வீட்டில் படிப்பதற்கான சூழல் மிக அருகிப் போய் உள்ளது, இதனை தவிர்க்கவும், தலித் குழந்தைகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், சேரிகள் தோறும் இலவச படிப்பு மையத்தை ஏன் இதுவரை எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும், சிந்தனையாளர்களும், அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தான் தலித் சமூகத்தில் மிகப்பெரும் ஓர் ஆளுமை என காட்டிக் கொள்ள முயற்சிக்கும் எவரும் செயல்படுத்தவில்லை,
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே உள்ளது பள்ளி கல்வித் துறையிலும், உயர் கல்வித் துறையிலும் அதை அதிகப்படுத்த இதுவரையிலும் யாரும் குரல் கொடுக்கவில்லை. பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவி, மாணவர்களுக்கென்று, தனி பள்ளிகள், விடுதிகள் இருப்பது போல பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் பட்டியல் இன மாணவ மாணவிகள் பயில்வதற்கென்று தனி கல்லுாரிகளோ, பல்கலை கழகங்களோ இல்லை, இதனால் பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் பயில்வதில் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பெரும் உளவியல் சிக்களும் சமூக நெருக்கடிகளும் நேர்கின்றது,
இதனை களைவதற்காக, பட்டியல் இன சாதி மக்கள் படிப்பதற்கென தனி கல்லுாரி மற்றும் பல்கலை கழகம் காலத்தின் கட்டாயமாகின்றது, இதை எந்த பட்டியல் இன சாதி தலைவரும், கட்சியும் இதுவரை கோரிக்கையாக்காமல் இருப்பது ஏன், கற்பதற்க்கும், கற்பிப்பதற்க்கும் யாரும் இல்லாமல், இடமும் இல்லாமல் பட்டியல் இன மாணவர்களின் எண்ணிக்கை கல்வி தரத்தில் எப்படி உயர இயலும்.
“ அடிமையிடம் போய் நீ அடிமை என்று சொல் மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான் ” என்னும் அண்ணலின் பொன்மொழிக்கு ஏற்ப இன்றைய சூழலில் உலகமயம், தாரளமயம், மற்றும் தனியார் மய கொள்கைகளால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை எளிய சேரி மக்களாக இருக்கின்றனர், இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவரவும், தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ளவும், தலித் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென நிறுவனங்கள் உருவாகாமல் இருப்பதால் தலித்துகள் பொருளாதாரத்தில் இன்னும் முன்னேற இயலவில்லை.
அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக காட்டிக்கொள்ள முனையும் தலைவர்கள் ஏன் தலித்துகளின் மேம்பாட்டுக்கென நிறுவனங்களை உருவாக்கி பொருளாதார உயர்வுக்கு வழிகாட்டவில்லை. சேரிகள் தோறும் அம்பேத்கர் சிலைகளை வைத்திருக்கும் தலித் மக்கள் இதுவரையிலும் தங்களை ஓர் அணியில் ஒன்றுபட்டு, ஒரு பெரும் அரசியல் சக்தியாக நிற்க்க இயலவில்லை தமிழ்நாட்டில் இதுவரையிலும். 
சேரிகள் தோறும் அரசியல் கட்சிகளாய் பிரிந்திருக்கும் தலித் மக்கள், இதுவரையிலும் தங்களின் வாக்கு வலிமையை உணர்ந்து ஓரணியில் திரண்டு நிற்க்க செய்ய இயலவில்லை எந்த தலித் தலைமையினாலும். ஒடுக்கு முறைகளுக்கு எதிராக திரண்டு ஒன்றுபட்டு நிற்க தெரியவில்லை.
எங்கு எந்த வண்கொடுமை நேர்ந்தாலும், நாளை அது நமக்கும் நேரிடும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். பின் பாதிக்கப்பட்டதும் புலம்புகின்றனர். தலித் மக்களிடையே தலித் அரசியல் கட்சி தலைவர்கள் நிகழ்த்துவது ஒப்பாரி அரசியலாக இருக்கின்றது. உரிமை அரசியலாக இல்லை. விழிப்புணர்வு அரசியலாக இல்லை.
சேரிகளில் படுகொலைகள் நிகழ்ந்த பின்புதான் அது அரசியல் ஆக்கப்படுகின்றது. படுகொலைகள் நிகழும் முன் தடுப்பதற்கான செயல்திட்டம் இல்லாமல் நாளொன்றுக்கு இரண்டு தலித்துகளை படுகொலைகளால் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற புரிதல்கூட இல்லாமல் சிலைக்கு மாலையிட்டு தங்களை பெரும் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் புகழ் போதை தலைமையை என்ன சொல்வது.
இறுதியாக, இந்துவாக பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன். என் சமூகத்தை இழிநிலையில் விட்டு செல்லமாட்டேன் என சூளுரைத்து, இந்து மதம் என்பது பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரித்து வைத்து இழிவுபடுத்துகின்ற மதம், எனவே அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சகோதரத்துவம் கிடைக்காது என்பதனால், பிறப்பின் அடிப்படையில் உயிரினங்களை பிரித்து பார்க்காமல், அனைத்து உயிர்களிடமும் அன்பை போதித்து. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கின்ற பௌத்த மார்கத்தை தேர்ந்தெடுத்து பௌத்தம் தழுவினார். எனது வாழ்வின் இறுதிவரைக்கும் நான் இந்த பணியை தொடர்ந்து செய்வேன் என்றும் சபதம் செய்தார்.
இந்து சமுய கோயில்களை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் பொருளாதாரத்தினால் நிலவுடைமை சாதிகள், மற்றும், பார்பணியர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். இந்து கோயில்களுக்கு செல்வதனால் தலித்துகளுக்கு எந்த பயனும் இல்லை, மாறாக அவர்கள் பாடுபட்டு சேர்த்த செல்வம் யாவும் கோயிலை மையப்படுத்திய சமய சடங்குகள் என்ற பெயரில் செலவழித்து விட்டு ஏழைகளாகவே தங்களது வாழ்வை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் ஐயப்பன் வழிபாட்டில் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு வரும் இலாபமாக கணிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றில் சேரிகளில் இருந்துதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவோர் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு, இவர்களுடைய இந்த பக்தியை புத்தரின் பேரில் திசை திருப்பவில்லை, அவ்வாறாக திசை திருப்பியிருந்தால் இருக்கும் இடத்திலிருந்தே தியானம், பௌத்த வழிபாடு மூலமாக மன அமைதிபெற்றிருப்பார். சேரி மக்களின் பொருளாதாரம் அவர்களின் வாழ்வியல் செயல்பாட்டிற்க்கு உதவியாக இருந்திருக்கும். இதைத்தான் அண்ணலும் “கடவுலுக்கு செலுத்தும் காணிக்கையை உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுங்கள்” என்றும் முன் மொழிந்திருக்கின்றார்.
அவரின் மறைவுக்கு பிறகு நாம் யாரும் அந்த வேலையை செய்யவில்லை, சுயமரியாதை இல்லாத இந்து மத சகதியில் உழன்றுகொண்டு பெருமை பேசிக்கொண்டிருப்பது என்பது பௌத்த மார்க்கம் தீர்வு என்று சொன்ன அண்ணலை நாம் இழிவுபடுத்துவதற்கு சமம் என்பதை இங்கு யாரும் உணரவில்லை, தலித் மக்களுக்கும் உணர்த்தவில்லை. ஆனால் அண்ணல் உருவாக்கித்தந்த சட்டங்களின் மூலமும், இட ஒதுக்கீட்டின் மூலமும் பயனை அனுபவிக்கவும், மட்டும் நமக்கு அண்ணல் தேவைப்படுகின்றார் இதுதான் இன்றைக்கு யதரார்தமான உண்மை.
 அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை தலித் மக்களின் ஆகசிறந்த ஆளுமைகள் என காட்டிக் கொள்ளும் எவரும் முதலில், பௌத்தம் தழுவட்டும், அதற்கு பின் தன் சார்ந்தவர்களை பௌத்தம் ஏற்க வைக்கட்டும், இந்து மத கோட்பாட்டின் படி பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இழிவான நிலையில் இருந்து, பௌத்தம் தழுவுவது மட்டுமே நம்மை சம நிலைக்கு உயர்த்தும் என்பதாலே அண்ணல் பௌத்தம் ஏற்றார்.
இந்து மதத்தில் இருந்து கொண்டு ஒரு தலித் ஒரு மனிதனை நோக்கும் போது, அவர் நமக்கு மேல் உள்ள சாதியா அல்லது கீழ் உள்ள சாதியா என்ற  கேள்வியும் பாகுபாடான எண்ணமும் மட்டுமே நிலைத்து நிற்க்கும். ஆனால் பௌத்த மார்கத்தின்படி மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் சமமானவர்கள் என்ற எண்ணம் உருவாகும். அண்ணல் போதித்த அல்லது தழுவிய பௌத்த மார்கமே சமத்துவமானவர்கள் என்ற நிலைக்கு நம்மை உயர்த்தும், அதை ஏன் இங்கு செய்வதற்க்கு யாரும் இல்லை.
உலகின் மிகசிறந்த சிந்தனையாளர், அறிவாளி, படிப்பாளர் என்றெல்லாம் அயல்நாடுகளில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை மதித்துவிட்டு பிறர் போற்றவும், பராட்டவும் வேண்டும் என்பதற்கா அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை அடையாளப்படுத்துவது சுய போதையும் புகழ்போதையும் தலைக்கேறிய செயல்தானே.
ஆண்டுக்கு இருமுறை அண்ணலின் சிலைக்கு மாலையிடுவோர், ஏன் இதுவரை சேரிகள் தோறும்  ஆண்டுக்கு இருமுறை தான் சார்ந்தவர்களையும் தன் மக்களையும் இந்து மதத்தில் இருந்து வெளியேற்றி, பௌத்தம் தழுவச் செய்ய இயலவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இந்நேரம் இந்து மதம் என்கின்ற ஒரு மதமே இருந்திருக்காது. நம்மை பின்பற்றி சாதியக் கொடுமையையும் தீண்டாமை கொடுமையை அனுபவித்து வரும் அனைவரும் பௌத்தம் தழுவி சமத்துவத்தை நிலைநாட்டி இருப்பார்கள். பௌத்தம் தழுவுவதை ஒரு செயல்திட்டமாக ஏன் எந்த தலித் கட்சியும் இயக்கமும் முன்னெடுக்கவில்லை என்பதே எனது கேள்வி, அம்பேத்கரின் சிலைக்கு மாலைசூடுவது இல்லை. அவரின் பௌத்தம் ஏற்க்கும்  செயலை தொடர்ந்து செய்யாத அல்லது ஆதரிக்காத  எவருக்கும் அண்ணலின் சிலைக்கு மாலைசூடும் தகுதியில்லை.

      இறுதியாக அண்ணலை அவமானப்படுத்த வெளியில் யாரும் இல்லை இந்தியாவிலும் தமிழகத்திலும் இன்னும் இந்து மதத்தில் இருக்கும்.  தலித்துகளைத் தவிர என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. 

தற்போதைய பதிவு

ஆத்திசூடி மீள் வாசிப்பு

ஆத்திசூடி மீள் வாசிப்பு புத்தகம். விலை 240 + 50(கொரியர் செலவு) மொத்தம் 290. கூகுள் பே யிலும் தொகையை செலுத்தலாம். எண். Google pay no:9150...

பலராலும் படிக்கப்பட்ட கட்டுரைகள்