Sunday, November 17, 2013

ஏழைகளுக்கான மது கொள்கை


ஏழைகளுக்கான மது கொள்கை

அரசாங்கம் அதிகாரம் யாருக்கானது, இந்த கேள்வி எப்பொழுதும் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும், இன்று அரசு அரிசி முதல் அனைத்தையும் இலவசமாக கொடுப்பதன் நோக்கம் சலுகை என்பதல்ல, விளிம்பு மக்களின் வாழ்க்கை நிலை அரிசி வாங்க கூட இயலாத வகையில் இருப்பதுதான் யதார்தமான உண்மை.
கிராமப்புறங்களில் வயிற்றுக்குப் போராடும் மக்களை தனது ஓட்டு வங்கியாக்கி கொள்ள இலவச அரிசி திட்டம் என்றால், நகர்புறத்திலுள்ள உடலுழைப்பு மக்களை தன் வசமாக்கி கொள்ள அம்மா உணவகம் என்னும் பெயரில் மலிவு விலை உணவகங்களை அரசு திறந்திருப்பதன் நோக்கமும், ஏழை எளியவர்களை மனதில் வைத்துதான்.
அவ்வாறாயின் இந்த அரசாங்கம் ஏழை எளிய மக்களை மனதில் கொண்டு நடைபெறுகின்றதா, இது ஏழைகளின் அரசாங்கமா என்னும் கேள்வி உங்களுக்குள் எழுந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த அரசாங்கம் மட்டும் அல்ல, தமிழகத்தில் நடந்த எந்த அரசாங்கமும் ஏழைகளுக்கான அரசாங்கம் இல்லை.
ஏழைகள் என்பதை வேறு வகையாக சொல்வது என்றால், நிலமுடையவர்கள் பணக்காரர்கள், நிலமற்றவர்கள் ஏழைகள். அவ்வாறாயின், நிலமற்றவர்களின் வாக்குகளை பெற்று நிலஉடைமையாளர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். ஆட்சிக்கு வந்ததும், நில உடைமையாளர்களின் அரசாங்கமாக உருமாறுகின்றது எல்லா ஆட்சிகளும், அரசாங்கங்களும்.
நில உடைமையாளர்களின் தேவைக்கான திட்டங்களே இங்கு சட்டமாக்கப் படுகின்றது. உடன் பெரு முதலாளிகளும், சிறு முதலாளிகளும் கை கோர்த்துக் கொண்டு தனக்கான அரசை நிறுவுகின்றனர். தனக்கான லாபங்களை முன் வைத்தே அரசின் திட்டங்களை வரையறுக்கின்றனர். நான் சொல்வதற்க்கு நல்ல உதாரணம், வேண்டும் என்றால் அரசின் மதுக் கொள்கையை சொல்ல இயலும்.
500 நபர்கள் இருந்தால் அந்த பகுதியை ஒரு தனி ஊராட்சியாக அறிவிக்கலாம் என்னும் அரசின் சட்டத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனி பஞ்சாயத்துகளை இந்த அரசாங்கத்தால் உருவாக்க இயலவில்லை. 500 நபர்கள் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தால் அவர்களுக்கென பகுதி நேர நியாய விலை கடைகளை அரசாங்கத்தால் முழு அளவில் திறக்க இயலவில்லை. 500 நபர்கள் இருந்தால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்னெ அங்கன்வாடி பள்ளிகளை திறக்க இயலவில்லை,
500 நபர்கள் இருந்தால் அவர்களுக்கென ஒரு மேல்நிலை தொட்டி அமைத்து அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய இயலவில்லை,
ஒரே பகுதியில் 500 நபர்களுக்கு மேல் இருந்தால் அந்த பகுதி மக்களுக்கான ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை உருவாக்க இயலாத அரசு.. 500 நபர்கள் இருந்தால் ஒரு அரசு மதுக் கடையை திறப்பதை இலக்காக கொண்டு தனது மது விற்பனை கொள்கையை வகுத்திருப்பது யாருக்கு லாபம் தரக்கூடிய திட்டமாக இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 


பொதுவாகவே உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமே தனது உடல் வலிக்காககவும்,  காலந்தோறும் கஷ்டப் பட்டும் தங்களின் சமுக நிலை உயராத மன அழுத்தம் ஆகிய காரணங்களுக்காக மது அருந்துகின்றனர். ஆனால் தற்போதுள்ள அரசின் மது கொள்கையானது, ஏழைகளுக்கான மது திட்டமாக இல்லாமல் பணக்காரர்களின் மது திட்டமாக உள்ளது.
இதனால் ஒரு ஏழை தனது உடலுழைப்பில் ஈட்டும் வருமானத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் மதுவுக்கு என செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. வருமானத்தில் பாதிக்கு மேல் குடிக்காகவே செலவிட வேண்டிய தேவையிருக்கின்றது ஒரு உடலுழைப்பாளிக்கு.
மேலும் தற்போது அரசின் மது கடைகளில் கிடைக்கின்ற மது வகைகள் யாவும் உடல் நலத்தை அழித்து, மது அருந்தும் மக்களை குடி நோயாளியாக்கும் வகையில் இருக்கின்றது. இதனால் மது அருந்தும் மக்களின் உடல் நலம் கெட்டு, ஒரு சமுகத்தின் அல்லது ஒரு தலைமுறையின் ஆரோக்கியத்தை கேள்வி குறிக்குள்ளாக்குகின்றது இந்த அரசாங்கம்.

 ஆனால் அரசின் தற்போதைய மது கொள்கை ஏழைகளுக்கானதாக இல்லை. மது விலக்கை பற்றி பேசுவது ஒரு வகை இது என்ன ஏழைகளுக்கான மது கொள்கை என்று ஒரு வகை யான திட்டத்தை பற்றி இந்த கட்டுரை பேசுகின்றதே என்ற வினா உங்களுக்குள் வருமாயின் அது உண்மைதான்,
ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும், தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து வாங்கும் அல்லது பயன்படுத்தும் உரிமை இருக்கின்றது அல்லது இருக்க வேண்டும் இதுதான் நுகர்வோருக்கான உரிமை.
மது அருந்து வோருக்கு அத்தகைய உரிமை இருக்கின்றதா என்றால் உறுதியாக இல்லை, ஏன் என்றால் இன்று அரசின் மதுக் கடைககளில் கிடைப்பது யாவும் IMFL ( Indian Made Foreign Liquor )அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அயல் நாட்டு மது  வகையை சார்ந்த மது மட்டுமே கிடைக்கின்றது.  
அதிலென்ன என்போருக்கு, அயல் நாட்டு மது வகை என்றால், அயல்நாட்டு மக்களின் உணவு பழக்கம் அங்கு நிலவும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ற வகையில்தானே அந்த மது வகைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும். சமுக நிலையிலும் உடல் நலத்தை பொருத்த வகையிலும் அது அயல்நாட்டு குறிப்பாக குளிர் பிரதேசத்து மக்களின் உடல்நலம் மற்றும் சமுக நலத்தை தானே பிரதி பலிக்கும்.
பொதுவாகவே நமது பழக்கம், உணவே மருந்து, மருந்தே உணவு என்பதுதான், அதனால்தான் நம் வீட்டு சமையலறையில் நாம் சமைக்கப்ப பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் ஒரே நேரத்தில் உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு நமது உடல் நலத்தை காப்பாறுகின்றன.
இந்த இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகள் என்பது ஒரு உணவு பொருளும் அல்ல. மருந்து பொருளும் அல்ல, அது ஒரு போதை பொருள், பழங்கள், கோதுமை, பார்லி, போன்ற பொருட்களை நொதிக்கச் செய்து. அதாவது கெட்டு போகச் செய்து பின் அதற்க்கு போதை ஊட்டப்படுகின்றது.
பொதுவாக நாம் நமது குழந்தைகளுக்கும் அல்லது நமக்கும் அழுகிப் போன பழங்களை சாப்பிட கொடுப்பதில்லை,  நாமும் சாப்பிட மாட்டோம், ஆனால் நமக்கு அரசின் மது கடைகளில் கிடைக்கும், இந்திய தயாரிப்பு அன்னிய மதுவகை அழுகிப்போன பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, கரும்பு, கோதுமை, பார்லி, போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு உருவாக்க கூடியது. இந்த வகையான மதுவை தொடர்ந்து அருந்து வோருக்கு இரைப்பை கல்லீரல், இரத்த குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம், ஆகிய உடல் உறுப்புகளும் பகுதிகளும் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இளமையிலேயே மரணம் ஏற்பட்டு தனது வாழ்வை முடிக்கச் செய்ய கூடியது.
எனவே தமிழகத்தை போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் மனிதனுக்கு எந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற அயல்நாட்டு மது வகை உடல் அளவிலும், சமுக அளவிலும் ஒத்து போகும். என்ற கேள்வியோடும், ஏன் ஒரு குடிநோயாளிக்கு அல்லது குடிமகனுக்கு தனக்கு வேண்டிய அல்லது தனக்கு விருப்பமான மது வகைகளை தேர்ந்தெடுத்து அருந்தும் வாய்ப்பை வழங்காமல், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகளை இந்த அரசாங்கம் கட்டாயப்படுத்தி திணிக்கின்றது என்பதே எனது கேள்வி..
நம்நாட்டுக்கு தேவையான மக்களின் சமுக பொருளாதார நிலையோடு ஒத்து போன கள் மது வகையை சார்ந்தது என்றாலும் அதனை தொழிற்சாலை அமைத்து உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில்லை, ஒரு பணைமரமோ, தென்னை மரமோ, அல்லது ஈச்ச மரமோ இருந்தாலே போதும், கள் உற்பத்தி செய்ய இயலும், இதனால் மேற்கூறிய மரம் புவைத்திருக்கும், சிறு மற்றும் குறு விவசாயிகள் பலன்பெறுகின்றனர். கள் உற்பத்தியாளர்களாக இவர்களும், மரமேறிகளும் நேரிடையாக பலன் பெறுகின்றனர்.
கள்ளின் விலையோ மிகவும் குறைவு, மேலும், அயல்நாட்டு மது வகைகளைப் போல பாதிப்பும் மிக குறைவு. கள் என்பது இந்த மண்ணுக்கு ஏற்ற ஒரு உணவு அது மருந்து வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் எளிய போதை பொருள். இதை சார்ந்திருப்பவர்களும், பயன்படுத்துபவர்களுமே எளிய மக்கள்தான்.
இன்று நவின இளைஞர்கள் டின்னில் கோக், டின் பீர் ஆகியன அருந்து வது போல் டின்னிலும் கள் கிடைக்கின்றது இலங்கை மற்றும் சிங்கப்புர் ஆகிய நாடுகளில் இதுதான் ஏழைக்கு ஏற்ற மது கொள்கை.
நான் கள்ளுக்கு வக்காலத்து வாங்க இதனை எழுதவில்லை, மாறாக ஒரு குடிமகனுக்கு தனக்கு விருப்பமான ஒன்றை, அல்லது தன் வருமானத்துக்கு ஏற்ற ஒரு மது வகையை தேர்ந்தெடுத்து குடிக்கும் உரிமை வேண்டும். அத்தகைய உரிமையின் வெளிப்பாடாக அரசு மதுபான கடைகளிலும், கள், பட்டை சாராயம் போன்ற மது வகைகள் விற்பனைக்கு வர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
சமுக நிலையில் இந்த கோரிக்கை பொருளற்றதாகவும், அர்த்தமில்லாததாகவும் தோன்றும், உண்மை அதுவல்ல, இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கின்ற இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் நமக்கு கிடைத்துக் கொண்டிருப்பதுதான் பொருளற்றதாகவும், சமுகத்துக்கு ஒத்து போக இயலாததாகவும் உள்ளது. இதன் உள்ளே சென்று பார்த்தால்,
குடிப்பவர்கள் நிலமற்றவர்கள், சமுக நிலையில் தாழ்ந்து கிடப்பவர்கள் என்பதாலும், மது வகைகளை உருவாக்குவோர்கள், பெரு முதலாளிகள் என்பதாலும் தேர்தல் செலவுகளுக்கு கட்சிகளின் பண தேவைக்கு புரவலர்களாக இருப்பவர்கள் இந்த இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகள் உற்பத்தியாளர்களே. மேலும் இந்த வகை உற்பத்தியாளர்கள், பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் மந்திரிகளே ஆகவும் இருப்பதால் கட்சிக்கும் அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களுக்கு மட்டுமே இலாபம்.

ஆனால் கள் உற்பத்தியால் மக்கள் அணைவருக்கும் லாபம், ஒரு மரமேறி கள் உற்பத்தி மட்டும் செய்வதில்லை, பனை வெல்லம், மற்றும் ஓலை அதை சார்ந்த பொருள் என பனை மரத்திலிருந்து கிடைக்க கூடிய 113 வகையான பொருட்களும் மக்களுக்கு எப்போதும் கிடைக்க காரணமாக இருக்கின்றார். பலபேருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்பை உறுதி செய்கின்றது, பனை, தென்னை மற்றும் ஈச்சமரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கள் வகைகளால், இத்தகைய மரத்தை வைத்துள்ள விவசாயிகளுகக்கும் இதனால் லாபம் கிடைக்கின்றது.
தமிழகத்தின் தேசிய மரமான பனை இன்று பராமரிப்பு இன்றி அழியும் மர வகைகளுள் ஒன்றாக உருமாறி வருகின்றது. எனவே கள் உற்பத்தி என்பது ஏழைகளுக்கான மது கொள்கையாக இருப்பதுடன், இயற்கைக்கும் சுற்றுசூழலுக்கும் ஏற்ற ஒன்று என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மது விலக்கு பற்றி பேசுவதறக்கு முன்னர் ஏழைகளுக்கான மது கொள்கைகளை பற்றி பேச முன் வர வேண்டும் நமது அரசியல் கட்சிகள்.

  

இதையும் படியுங்கள்