Sunday, July 28, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 3



ஆங் பேக் ( Ong – Bak) ஆங்கிலம்

       ஆங் என்னும் தாய்லாந்து நாட்டின் சொல்லுக்கு உடல் உறுப்புகளில் தலை என்று பொருளாகும். பேக் என்னும் தாய்லாந்து சொல்லுக்கு பாதுகாத்தல் என்னும் பொருளாகும். ஆங் பேக் திரைப்படத்தின் முழுக்கதையும் அதன் தலைப்பிலேயே அடங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்.
·         டோனிஜா – டின்
·         பேட்சை ஓம்கம்லோம் – ஜார்ஜ் என்கின்ற அம்ளே
·         பும்முவாய் யோத்கமல் – மோதாய் மற்றும் பலர், நடித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் இந்த திரைப்படம், 21ம் தேதி சனவரி மாதம் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு பெயர்களிலும் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் டோனிஜாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையும் உலகெமெங்கும், வெற்றிகரமாக ஓடிய முதல் திரைப்படமாகும்.

ஆங் பேக் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்:
      
வடக்கிழக்கு தாய்லாந்தில் உள்ள பான் நாங் பிரது (Pan Nong Pradu) என்னும் கிராமத்தில் உள்ள மிகப் பழமையான புத்தர் விகாரில் உள்ள  புத்த வெண்கலச் சிலையின் பெயர் ஆங் பேக். புத்தர் சிலையின் தலையை திருடும் ஒரு கும்பல், ஆங்பேக் புத்தர் சிலையின் தலையை திருடுச் சென்றுவிடுகின்றது.  (அந்த புத்தர் சிலையின் முகத்தில் இருக்கும் தழும்பு, ஏற்கனவே நடந்த ஏதோ ஒரு கலவரத்தினால் வெட்டுக்காயம்பட்டு மீ்ட்க்கப்பட்ட விவரத்தை நமக்கு காட்சியாகவும். பின்னர், பல புத்தர் சிலைகளின் தலைகளில் இருந்து எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கின்றது)
       
திருடப்பட்ட புத்தரின் தலையை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் மீட்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்திலுள்ள டின் என்னும் இளைஞன் அந்த கிராமத்திலுள்ள புத்த பிக்குவிடமிருந்து முவாய் (Muay) தாய்லாந்து நாட்டின் கிராமப்புற தற்காப்புக் கலையை கற்றுத்தேர்ந்தவன். அவனே தன்னார்வத்துடன் அந்தச் சிலையை மீட்க தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங் கிளம்பிவருகின்றான். அவனுடைய பயணத்துக்கு அந்த கிராமத்து மக்கள் தங்கள் கைவசமுள்ள நகை, பணம், பொருட்களை கொடுத்து அனுப்புகின்றனர்.
       
அதே கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்றழைக்கப்படும் அம்ளே என்னும் இளைஞன் பாங்காங்கில் உள்ளதால் அவனை அவனுடையத் தந்தையின் கடிதத்துடன் சென்று சந்திக்கின்றான். அம்ளே ஆரம்பத்தில் டின்னை வைத்து பந்தயச் சண்டையில் போட்டியிட்டு பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கின்றான், பின்னர் மனம் திருந்தி, ஆங்பேக் சிலையின் தலையை மீட்க உதவிச் செய்கின்றான். உடன் அவனுடைய காதலியும் உதவி செய்கின்றாள்.
     
பின்னர் புத்தர் சிலையின் தலையை திருடும் கும்பல் தலைவன் கொம்துவன் ஆங்பேக் சிலையின் தலையுடன் தாய்லாந்து பர்மா எல்லையில் உள்ள குகையில் இருப்பதை அறிந்து அங்குச் செல்கின்றனர். அந்தக் குகையில் உள்ள பிராமாண்டமான புத்தரின் கற்சிலையின் தலையை துண்டிக்கும் வேலை நடைபெற்றுக்கொண்டிருப்பதால்,  அந்தக் குகைக்குச் சென்று டின்னும், ஜார்ஜீம் சண்டையிடுகின்றனர். சண்டையின் போது, குகையில் உள்ள பிராமாண்ட கற்சிலையின் தலை உருண்டு விழுகின்றது, ஜார்ஜ் ஆங் பேக் சிலையைக் காப்பாற்றி டின் வசம் தந்துவிட்டு, தனது அன்பை தன் ஊர்காரர்களுக்கும் அப்பாவிடமும் தெரிவிக்கச் சொல்லி உயிரிழக்கின்றான்.
       
இறுதியாக, ஆங்பேக் புத்தர் சிலையின் தலை பான் நாங் பிரது கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு புத்தர் சிலையுடன் தலை பொருத்தப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. ஜார்ஜின் அஸ்தி புத்த பிக்குவின் கரங்களால் யானையின் மீது கொண்டுவரப்பட்டு மரியாதைச் செலுத்தப்படுகின்றது. ஜார்ஜின் காதலியும் அந்த கிராமத்திலேயே தங்கிவிடுகின்றாள்.

ஆங் பேக் திரைப்படத்தின் சிறப்புகள்:
       
திரைப்படத்தின் துவக்கத்தில் காண்பிக்குப்படும் மரத்தின் மீது கொடியேற்றி அதனை கைப்பற்றுவதற்காக நடக்கும் சண்டை விளையாட்டு ஒவ்வொரு நாட்டிலுள்ள கிராமத்திலும் நடக்கின்ற விளையாட்டாகும். இதனை காட்சிபடுத்தியிருப்பது இந்தப் படத்தின் சிறப்பாகும். இந்தப் படத்திலுள்ள சண்டைக் காட்சிகள் முழுவதும் முவாய் சண்டைக் கலையைப் பயன்படுத்தி எடுக்கப்ட்டதாகும். தாய்லாந்து நாட்டின் பராம்பரியச் சண்டைக் கலையை முதன்முதலாகத் திரையில் பயன்படுத்தி உலகமெங்கும் அதற்கென ரசிகர்களை ஏற்படுத்தியதும் மற்றொரு சிறப்பாகும்.

தாய்லாந்து நாட்டின் புத்தச் சமய வரலாறு:
       
தாய்லாந்து நாடு புத்தச் சமயத்தில் தேரவாதத்தைப் பின்பற்றும் நாடாகும். தாய்லாந்து நாட்டின் புத்தசமய வரலாற்று நுாலின் படி புத்தரே, தாய்லாந்து நாட்டிற்குச் சென்று, புத்தச் சமயத்தைப் பரப்பியதாக தகவல் அளிக்கின்றது. ஸ்ரீலங்கா நாட்டின் மகாவம்சம் நுாலின்படி, பேரரசர் அசோகர், தாய்லாந்து நாட்டிற்கு புத்தச் சமயத்தைப் பரப்புவதற்காக சேனா தேரோ மற்றும் உத்தர தேரோ ஆகிய இரண்டு புத்தப் பிக்குகளிடம் புத்தரின் அஸ்த்தி மற்றும் புனிதமான சிலப் பொருட்களையும் தந்து அனுப்பியதாக சொல்கின்றது. அவ்வாறு புத்தர் தந்த புனிதப் பொருட்கள் இன்றும் தாய்லாந்து நாட்டின் நக்கோன் பத்தோம் (Nakon Pathon) ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும், அசோகரின் துாதர்கள் வந்த  இடத்தில் அசோகரின் நினைவுத் துான் வைக்கப்பட்டுள்ளது.
       
தற்போதைய நிலையில் தாய்லாந்து நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 94 சதவிகிதத்தினர் புத்தச் சமயத்தை பின்பற்றுவதாகவும், 4.6 சதவிகிதத்தினர் முஸ்லீம் சமயத்தையும் பின்பற்றுகின்றனர். இதர பிரிவுகளாக, சீக்கியர்கள், கிருத்துவர்கள், மற்றும் இந்துக்கள் வாழ்கின்றனர்.
       
தாய்லாந்து நாட்டில் உள்ள, புத்தச் சமயக் கோயில்களில், 310 கோயில்களை தாய்லாந்து நாட்டின் அரசர் பரம்பரையினர் வழிபடுவதற்காகவும், 39,883 கோயில்கள் தனியார் வசமிருப்பதாகவும் 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிவரம் சொல்கின்றது. 2,98,580 புத்த பிக்குகள் உள்ளனர். தாய்லாந்து நாட்டில் உள்ள அனைவருமே எப்போது வேண்டுமானாலும் குறுகிய கால பிக்குவாக மாறுவதற்கு வழியுள்ளது. இதனை ஆங் பேங் திரைப்படத்தில் ஜார்ஜின் கதாப்பாத்திரம் வழியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் கதாநாயகன் டோனி ஜாவும் 28 மே மாதம் 2010 ஆம் வருடம் தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் புத்த தேவாலயத்தில் புத்த பிக்குவாக தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படியான புத்த பிக்குவாக மாறினார்.


ஆங்பேக் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்தியல்கள்:
       
ஆங் பேக் திரைப்படத்தில் புத்தச் சமயக் கருத்தியல்கள் எதுவும் இடம்பெறவில்லை, மாறாக, இந்தியாவில் புத்தச் சமயத்தை அழித்த வரலாற்றை  நவீன பானியில் சித்தரிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், மகாபாரதத்தில் உள்ள கர்ணன், மற்றும் துரியோதனன் நட்பை நடப்புக் காலத்துக்கு மாற்றி தளபதி படமாகத் தந்ததைப் போல், இந்திய புத்தச் சமயத்தின் வீழ்ச்சியை நடப்புக் காலத்துக்கு ஏற்ற வகையில் சொல்லியிருப்பார்கள்.

இந்தியாவில் புத்தச் சமயம் வீழ்ந்த வரலாறு:
       
கி.மு. 185 ஆண்டில் மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி பேரரசரான, பிரகதர்த்தா விடம் தளபதியாக இருந்த பிராமணரான புஷ்யமித்ர சுங்கன், ஒரு இரானுவ அணிவகுப்பின்போது, பிரகதர்த்தா மௌரிய அரசரைக் கொன்று, இந்திய வரலாற்றில் சுங்க வம்சத்தின் ஆட்சியை துவக்கினார். புஷ்யமித்ர சுங்கன் சுங்க வம்சத்தின் முதல் பேரரசராக முடிசூடிக் கொண்டார்.
தனது பெயர் வரலாற்றில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என புஷ்யமித்ர சுங்கன் தனது பிராமண குருக்களிடம் கேட்டபோது, அசோகர் புத்த சமயத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய புத்த சமயத்தையும், நிறுவிய 84,000 ஸ்துாபிகளையும் அழித்தால் வரலாற்றில் நீங்கள் நீங்கா இடம் பெறுவீர்கள் என சொன்ன அறிவுரையை ஏற்று, அசோகர் உருவாக்கிய புத்தச் சமய நினைவுத் துாண்களை அழிக்கின்றார்.
       
எல்லாவற்றிற்கும் மேலாக, புத்த பிக்குகளின் தலையை கொண்டுவருவோருக்கு 100 தினார்கள் ( தங்க நாணயங்கள் ) பரிசலிக்கப்படும் என அரசாங்கத்தால் அறிவிப்பும் செய்கின்றார். இதன் காரணமாக மக்களும், பணத்துக்கு ஆசைப்பட்டும், அரசியல் லாபமடையும் பொருட்டும், பாதுகாப்புக்காகவும், புத்த பிக்குகளின் தலையைக் கொன்று தங்க நாணயங்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். மேலும்  அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நமது வீடுகளில் கல்யாணப் பூசனியை பலிகொடுக்கும் நிகழ்வை சுபச் சடங்கு மற்றும் அசுபச் சடங்கின் போது நிகழ்த்துகின்றோம்.
       
இந்த வரலாற்ற நிகழ்வையே டோனிஜா ஆங்பேக் திரைப்படத்தில் கதைக்களனாக்கியிருப்பார். புஷ்யமித்ரன் பேச்சுத்திறன் இல்லாத அரசன் என்பதை உருவகப்படுத்தவே, வில்லனுக்கு குரல் இல்லாமல் செயற்கைக் கருவிகளின் வழியாகப் பேசுவதாக நவீன குறியீட்டை வைத்திருப்பார். மேலும் இறுதிக் காட்சியில் இடம்பெறும் பிரமாண்ட புத்தர் சிலையின் தலை தகர்ப்பு மற்றும், புத்தரின் சிலைகளின் தலையை விற்பனை செய்வது என புஷ்யமித்திரன் வரலாற்றில் செய்த அனைத்தையும் வில்லன் செய்வதாகவே உருவகப்படுத்தியிருப்பார். 

இந்திய புத்தச் சமய வீழ்ச்சியை துணிச்சலாக படம் பிடித்த திரைப்படம் ஆங் பேக் ஆகும்.

ஆங் பேங் திரைப்படத்தின் தமிழ் லிங்க்




Wednesday, July 24, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 2



குங்பூ பான்டா -1 (2008 ஆங்கிலம்)

குங்பூ பான்டா அமெரிக்க கணிணி – இயங்கு (Animation)  வகைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை உலகம் முழுவதுமுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பிப் பார்க்கின்றனர். இது டிரீம்வொர்க்  இயங்கு (அணிமேசன்) திரைப்படமாகத்  தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ்ஆல் வெளியிடப்பட்டது. முதல் பாகம் ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது.


இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களுக்கு ஆங்கிலத்தில் குரல் வழங்கியவர்களின் பட்டியல்:

·         ஜேக் பிளாக்,(  போ – பான்டா கரடி)  
·         டஸ்டின் கொப்மான், ( மாஸ்டர். ஷீபூ - முயல்)
·         ஏஞ்சலினா ஜோலி, (மாஸ்டர். டைகர்ஸ் - பெண் சிங்கம் –)  
·         இயன் மக்கசென், ( தை லாங்க் – பனிச்சிறுத்தை )
·         சேத் ரோகன்,  ( மாஸ்டர்.மன்டிஸ் – வெட்டுக்கிளி)
·         லூசி லியு, (மாஸ்டர். வைப்பர். பச்சைப்பாம்பு)
·         டேவிட் கோஸ், (மாஸ்டர். கிரேன். கொக்கு)
·         ராண்டல் டுக் கிம்,( கிராண்ட் மாஸ்டர் ஊக்வே - ஆமை)  
·         ஜேம்ஸ் காங்,( திருவாளர். பிங்க். போ வின் வளர்ப்புத் தந்தை – வாத்து)
·         ஜாக்கி சான்  (மாஸ்டர். மங்கி – குரங்கு)
·         மைக்கேல் கிளார்க் டங்கன் (கமாண்டர். வசீர் – பனிச்சிறுத்தையை அடைத்திருந்த சிறையின் காவல் அதிகாரி) ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஆங்கிலத்தில் குரல் அளித்தவர்கள்.


( போ மற்றும் பியூரியஸ் 5 குழுவினர்)

இந்த திரைப்படம் முதலில் அமெரிக்காவில் 6 ஜீன் 2008 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு பின் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டபின் குங்பூ பான்டா திரைப்படத்தை அமெரிக்காவில் மேலும் 4,114 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்குப் பின் அதே மாதத்தில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து உலக மொழிகளிலும் வசூலை வாரிகுவித்தது இந்த திரைப்படம். சீனாவிலும் இந்தத் திரைப்படம் சீனர்களின் கலாச்சாரத்தை உயர்த்திபிடித்த காரணத்தால் வெகுவான வரவேற்பைப் பெற்று வரலாறு படைத்தது.
அமெரிக்காவில் திரையிட்ட முதல் வாரத்தில் 60.2. மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வசூலை வாரிகுவித்தது. இரண்டாவது வாரத்தில் 4,114 திரையரங்குகளில் திரையிட்ட பிறகு 14,642 மில்லியன் அமெரிக்க டாலரை சராசரியாக வசூலித்தது. சீனாவிலும் இந்த திரைப்படம் வெளியிட்ட காலத்தில் இருந்து, 110 மில்லியனுக்கும் அதிகமான யென் வசூலித்தது. சீனாவில் இந்த திரைப்படம், 100 மில்லியன் யென்னுக்கும் அதிகமாக வசூலித்த முதல் அனிமேசன் திரைப்படம் என்னும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

விருதுகள்:

குங்பூ பான்டா திரைப்படம் 14 அன்னி ( Academy Award for Best Animated Feature) விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுக் குவித்தது.

கதைச் சுருக்கம்:

பன்டையச் சீனாவின் அமைதிப் பள்ளத்தாக்கில் தன் தந்தையுடன் நுாடுல்ஸ் விற்பனை செய்துகொண்டிருக்கும் போவுக்கு, தலை சிறந்த குங்பூ வீரனாக வேண்டும்( டிராகன் வாரியர்) என்னும் கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அமைதிப் பள்ளத்தாக்கில் நடைபெறும் டிராகன் வீரருக்கான தேர்வில் போவும் கலந்து கொள்கிறார்.  

(ஊகவே ஷீபூவிடம் போவுக்கு குங்பூ பயிற்சி தரச் சொல்லுதல்)
மூத்த தலைமை ஆசிரியரான ஊக்குவே போவை டிராகன் வாரியராகத் தேர்வு செய்யப்கின்றார். அதன் மூலம் அமைதிப் சமவெளி மற்றும் அதன் மடம், மக்களையும் காப்பாற்றும் பொருப்பும் போ வை அடைகின்றது.
இருந்தும் போவுக்கு குங்பூ தெரியாத காரணத்தால், துடிப்பான 5 வீரர்களிடமும், ( Furious Five) ஷீபூ மாஸ்டரிடமும், அவமரியாதைக்கு உள்ளாகின்றார், இருந்தும், தான் குங்பூ கற்றுக்கொண்டேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். கொழுத்தப் பாண்டாவகை கரடியான போ எவ்வாறு குங்பூ கற்றுக்கொள்ள முடியும் என்ற அவநம்பிக்கையோடு மாஸ்டர் ஷீபூ குங்பூ கற்றுத்தருவதை ஊக்வே கண்டித்து, சிறந்த ஆசிரியரான உங்களால் ஒரு கொழுத்த பாண்டா கரடிக்கு குங்பூ கற்றுத்தர முடியும் என்னும் நம்பிக்கையில்லாமல் பயிற்சியளித்தால், நீங்களும் கற்பிக்க முடியாது. போவும் கற்றுக்கொள்ள இயலாது, எனவே நம்பிக்கையுடன் போவுக்கு குங்பூ கற்றுத்தரச் சொல்கின்றார். அதற்குப் பின், ஷீபூ போவுக்கு ஏற்ற வகையில் குங்பூ கற்றுத்தருகின்றார், போவும் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றார்,

( குங்பூ பயிற்சியின் போது பான்டா)
கொடுமனம் கொண்ட தாய்லாங் அமைதி பள்ளத்தாக்கில் உள்ள மடத்தையும் டிராகன் சுருளை ( Dragon Scroll) கைபற்றத் துடிக்கின்றார், தன்னை டிராகன் வாரியராக தெரிவு செய்யாததற்காக ஷிபூ மாஸ்டரிடம் கடுஞ்சினம் கொண்டு அவரை தாக்குகின்றார், அதற்குப் பின் போ, தாய்லாங்கிடமிருந்து அமைதி சமவெளியையும், மடத்தையும் டிராகன் சுருளையும் காப்பாற்றுவதே இந்த திரைப்படத்தின் கதை, போவும் மடத்தில் உள்ள மற்ற குங்பூ வீரர்களும் துடிப்பான ஐவர் ( Furious Five) இவர்களைச் சுற்றி நிகழ்வதே கதைகளமாகும்.

குங்பூ பான்டா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்துகள்:

குங்பூ பான்டா முழுக்க முழுக்க நகைச்சுவையும் வீரமும் நிரம்பியத் திரைப்படம் என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் நன்கு புரியும். இருந்தாலும் அந்தப் படம் முழுவதும் புத்தச் சமயக் கருத்துகளால் நிரம்பி வழிகின்ற திரைப்படமாகும்.
திரைப்படத்தின் வசனங்கள், காட்சிகள், குறியீடுகள் என அனைத்தும் புத்தச் சமயக் கருத்துக்களால் நிரம்பியப் படம் குங்பூ பான்டா ஆகும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் அவரவர்களுக்கென கற்றுக்கொள்ள ஒரு தகவலையும் செய்தியையும் வைத்திருப்பது இந்த திரைப்படத்தில் உள்ள புத்தச் சமயத தத்துவ இயல் சிறப்பாகும்.
அடிப்படையில் சீனாவிலும், ஜப்பானிலும் மகாயான புத்தச் சமயப் பிரிவு ஆதிக்கம் செலுத்துவதால், இந்த திரைப்படம் மகாயான புத்தச் சமயப் பிரிவைச் சார்ந்த திரைப்படமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகாயானப் பிரிவில் உள்ள நிச்சிரென் புத்த சமய (Nichiren Buddhism) கருத்துகளை உள்ளடக்கியதாகும் இந்தத் திரைப்படம்.

நிச்சிரென் புத்தச் சமயம்:

நிச்சிரென் ஜப்பானிய நாட்டில் வாழ்ந்த மகாயானப் புத்த துறவியாவார். ( 1222 -1282) 13ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். மைத்ரேய புத்தர் மீண்டும் பிறப்பெடுத்து தாமரை சூக்தத்துக்கு ( Lotus Sutra) உரையெழுதுவார் என நம்பும் மகாயான புத்தச் சமயப் பிரிவைச் சேர்ந்தவராக நிச்சிரென் இருந்ததால், தாமரை சூக்தத்துக்கு அவரே உரையெழுதினார். அதனை ஜப்பானிய பிக்குகளும் ஏற்றுக் கொண்டனர்.  தாமரை சூக்தத்தின் கருத்துக்களையே நிச்சிரென் புத்தச் சமயமாக போதித்தார்.
நிச்சிரென் புத்தச் சமயம், ஜப்பான் நாட்டின் புத்தச் சமய இயக்கமாகும். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் சமயமாகும். அமெரிக்காவில் 6 நபர்களில் ஒருவர் புத்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருக்கின்றார், என புள்ளிவிவரம் சொல்கின்றது. இந்த நிச்சிரென் புத்தச் சமயம் அமெரிக்காவிலும் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



(ஜப்பானிலுள்ள நிச்சிரென் வெண்கலச் சிலை)


தனிநபரின் ஞானமடைதலும், மன அமைதி பெறுவதுமே உலக அமைதிக்கான வழியாக நிச்சிரென் புத்தச் சமயத்தினர் நம்புகின்றனர்.  மேலும் அவர்களின் நம்பிக்கை இந்த உலகத்திலுள்ள அனைவருக்குள்ளும் புத்தரின் ஞானக் கருத்துகள் உள்ளுனர்வாக உள்ளதால் இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் முழு ஞானம் அடைவது அனைவருக்கும் சாத்தியமே என்பதே நிச்சிரென் புத்தச் சமயத்தினரின் முழு நம்பிக்கையாகும். நிச்சிரென் புத்தச் சமயத்தினரின் கோட்பாடான உடனடி ஞானம் ( Instant Enlightment) த்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமே குங்பூ பான்டா.

குங்பூ பான்டா 1 திரைப்படத்தில் உள்ள நிச்சிரென் புத்தச் சமயக் கருத்துகள்:

இந்த திரைப்படத்தில், தேரவாத புத்தச் சமயத்தினரின் கருத்துகள், குறிப்பாக தம்மபதத்தின் கருத்துகள், ஷீபு போவுக்கு பயிற்சி அளிக்க தயார்படுத்தும் போது இடம்பெறுகின்றன. அதைத்தவிர, நிச்சிரென் புத்தச் சமயத்தின் 3 கோட்பாடுகள் திரைப்படத்தின் கருத்தோட்டத்திலும், திருப்புமுனையிலும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றது.

1.   ஷீபுவும் ஊக்வேயும் போவை டிராகன் வாரியராக தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறித்து உரையாடும் போது, ஷீபூ போ டிராகன் வாரியராக தெரிவு செய்யப்பட்டது ஒரு விபத்து என்பார். அதனை மறுத்து உக்வே இந்த உலகத்தில் விபத்து என எதுவும் இல்லை.  விபத்து என எதுவும் இல்லை, விபத்தென எதுவும் இல்லை என 3 முறை குறிப்பிடுவார். அதாவது, இந்த உலகம் பிரபஞ்ச ஒழுங்கு விதிகளின்படி இயங்குகின்றது. அதன்படியே நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் நமக்கும் மற்றவர்களுக்கும் நடக்கின்றது. என்பதை நாம் அதை உணர்ந்து கொண்டோமென்றால், எதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவோம். இதனை விளக்கவே விபத்து( தற்செயல் நிகழ்வு) என எதுவும் இல்லை எனக் குறிப்பிடுகின்றார்.

2.   போவின் வளர்ப்புத் தந்தையான திருவாளர். பிங்க். தனது மிகச் சிறந்த சுவையான சூப்பின் ரகசியத்தை போவிடம் சொல்லுவார். ரகசியம் என எதுவும் கிடையாது. அதாவது இந்த உலகத்தில் சிறந்ததென எதுவும் இல்லை, நமக்கு கிடைக்கின்ற எல்லாமே சிறப்பானது என நம்பவேண்டும் என்பார்.
(போ தாய்லாங்கை ஸ்கட்டுஸ் முறைப்படி சிறைக்கு அனுப்புதல்)

3.   இதனை போ ஷீபு மாஸ்டர் தனக்கு அளித்த டிராகன் ஸ்குரோலுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பார். மிகச் சிறந்த ரகசியம் என்று தன்னிடம் அளித்த டிராகன் ஸ்குரோல் காலியாக இருந்ததையும், அதில் தன் முகம் தெரிந்ததையும் வைத்து, தான் சிறந்தவன் என நம்ப வேண்டும், என்றும், அதை உணர்த்துவதே டிராகன் ஸ்குரோல் ரகசியம் என்பதை உணர்ந்து, தன்னால் டிராகன் வாரியராக முடியுமா என்னும் ஐயத்தைக் கலைந்து, தான் டிராகன் வாரியர் என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் பனிச்சிறுத்தையான தாய்லாங்குடன் சண்டையிட்டு ஸ்கட்டுஸ் முறையைப் பயன்படுத்தி மீண்டும் அவரை சிறைக்கு அனுப்புவது.
(போவும் ஷீபூவும் இறுதியில் மன அமைதி பெறுவது)

இவையாவுமே, உடனடி ஞானம் என்னும் நிச்சிரென் புத்தச் சமயக் கருத்துகள் ஆகும். இந்த கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே குங்பூ பான்டா திரைப்படம்.

#Buddhistconceptmovies
#Kungufuponda1
#Magayanabuddhism
#Nichirenbuddhism
#Instantenlightment
#maamaresan






சுற்றுச்சூழல் புத்தச் சமயம்

Tuesday, July 23, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 1


புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 1

ரங்கா (1982) தமிழ்த் திரைப்படம்

ரங்கா 1982 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 75 ஆவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் அவருடன் ராதிகா, புன்னகையரசி கே.ஆர். விஜயா, கரத்தே ஆர்.வி.டி. மணி, சில்க் சுமிதா, ரவீந்திரன், தேங்காய் சீனிவாசன் ஏ. ஆர். எஸ் இவர்களுடன் மாஸ்டர் சுரேஷ் மற்றும் பலரும் நடித்துள்ள திரைப்படமாகும். இந்தப் படத்திற்கு இசையமைத்தது, கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் ஆகும். தயாரித்தது சி. தண்டாயுதபாணி, இயக்கியது ஆர். தியாகராஜன். கதை தேவர் பிலிம்சின் கதை இலாகா, வசனம் எழுதியது. திரு. துாயவன்.பொதுவில் ரங்கா திரைப்படம் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், என அனைத்துத் தரப்பு மக்களும் எப்போது பார்த்தாலும் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையான திரைப்படமாகும். இதனை ஆங்கிலத்தில் சொல்வதென்றால் கல்ட் மூவி என்று சொல்லாம். ரங்கா திரைப்படத்திற்கு தனிக்கை குழு, வயது வந்தோர்களுக்கான திரைப்படம் என சான்றிதழ் அளித்திருந்தாலும், அந்தத் திரைப்படம் குழந்தைகளையும், பெண்களையும் மிக கவர்ந்து அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்யததே அதன் வெற்றிக்கான காரணம்.


கதைச் சுருக்கம் :

ரங்கநாதன் என்கின்ற ரங்கா என்னும் இளைஞன் ( ரஜினி) வேலைத்தேடி சென்னைக்கு வருகின்றார், அவரும் சென்னையில் உள்ள சிறு சிறு திருட்டுகளைச் செய்து வரும் ராஜீவும் ( கரத்தே மணி) ஒரு இரவு ராஜீவின் வீட்டில் தங்குகின்றார், அப்போது இரவில் திருடனாய் இருப்பதன் காரணத்தை ராஜீவும், நல்லவனாய் வாழ்வதில் கிடைக்கும் மன அமைதியை ரங்காவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்கின்றனர், விடிந்ததும், ராஜீவின் பேச்சைக் கேட்டு ரங்கா திருடனாகவும், ரங்காவின் பேச்சைக் கேட்டு ராஜீ நல்லவராகவும் மாறி இருப்பார்கள். இதில் கூடுதலாக, ரங்கா தனது முதல் திருட்டை ராஜீவின் வீட்டிலேயே துவங்கியிருப்பார். அதற்குப் பின் அவர் பணத்துக்காக, அடிதடி, திருட்டு. ஆள்கடத்தல் என எதையும் செய்யும் நபராக மாறியிருப்பார்.


சில ஆண்டுகள் கழித்து, ரங்கா, ஒரு வீட்டில் உள்ள குழந்தையை கடத்தி வந்தால், தனது சிறு வயதில் தொலைந்து போன அக்கா (கே.ஆர். விஜயா) எங்கிருக்கின்றார் என சொல்வதாக கூறி ரங்காவை குழந்தைக் கடத்தலுக்கு சம்மதிக்க வைக்கின்றார் ரவி ( ரவீந்திரன்) முதன் முறை குழந்தை கடத்தலுக்கு முயற்சிக்கும் பொழுது, அந்த வீட்டில் அந்தக் குழந்தைக்கு ( மாஸ்டர். சுரேஷ்) காவலாக இருப்பது ராஜீ என அறிகின்றார். எனவே ராஜீவிடம் நண்பராகப் பழகி, தனது அக்காவின் வீடு என அறியாமலேயே அக்காவின் வீட்டிலேயே ராஜீவின் மூலமாக வேலைக்குச் சேர்ந்து, தனது அக்காவின் குழந்தையை கடத்த முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகின்றார்.

இறுதியில் தான் கடத்தியது தனது சொத்த  அக்காவின் குழந்தையைத்தான் என்றும், அந்த குழந்தையைக் கொன்று தனது அக்காவின் சொத்துக்களை அடைய ரவீ திட்டமிட்டிருப்தையும், தான் அதற்கு பலியாக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்து தனது காதலி ( ராதிகா) மற்றும் தேங்காய் சீனிவாசன் மற்றும் ராஜீ ஆகியவர்களின் உதவியோடு ரவியின் திட்டத்தை முறியடித்து, தனது அக்காவுக்கும் உண்மையை உணர்த்தி அக்காவோடு இனைவதே ரங்கா திரைப்படத்தின் கதை சுருக்கமாகும்.

ரங்கா திரைப்படத்திலுள்ள புத்தச் சமயக் கருத்தியல்:

திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ரங்கா, ராஜீவின் வீட்டில் தங்கும் அந்த  ஒரே இரவும், அவர்களுக்குள் நிகழ்கின்ற உரையாடலும் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சிகள். அந்த காட்சியில் வரும் வசனங்கள் புத்தச் சமய கருத்தியலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட  மிக முக்கியமான வசனங்களாகும்.  இந்த படத்தின் ஒரு வரிச் செய்தியான “ திருடாதே” முதல் கொண்டு “ மது அருந்தாதே” என்பது வரை அனைத்தும் புத்தச் சமயக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டடது ஆகும்.


மேலும் அந்த காட்சியில் இடம்பெறும் வசனங்கள் மது அருந்துவோரின் எண்ணிக்கை 92% விழுக்காட்டிற்க்கும் மேலாக உள்ள இன்றைய தமிழகச்சூழலுக்கும் மிகப் பொருந்தும் வகையில் இருப்பதும் அந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு. அதற்கு முன்னதாக புத்தர் போதித்த 5 ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும் என்பதால் கீழே 5 ஒழுக்கக் கோட்பாடுகளைப் பட்டியலிடுகின்றேன்.

       ஒரு மனிதன் கீழ் கண்ட செயல்களை தனது வாழ்கையில் தவிர்த்து வாழ்வதே 5 ஒழுக்க கோட்பாடுகள். இந்த செயல்களை தவிர்த்து வாழும் மனிதன் துன்பமில்லாமல் மன நிறைவுடன் வாழ்வான் என்பது பகவான் புத்தரின் போதனையாகும். அடைப்புக் குறிக்குள் இருப்பது பாலி மொழிச் சொல். இதைத்தான் புத்தச் சமயத்தினர் தங்கள் வழிபாட்டின் போது பயன்படுத்துவதால் புரிதலுக்காக இனைத்துள்ளேன்.

1.   கொல்லாமை  - ( சிக்காபதம்)
2.   திருடாமை     - ( அதின்னதானா)
3.   பிறன் மனை விழையாமை – ( காமேசு மிக்காரா)
4.   பொய் சொல்லாமை – (மூசாவாதா)
5.   மது அருந்தாமை -    (மஜப்பமாடத்தானா)
     
பொதுவில் இந்த 5 ஒழுக்க கோட்பாட்டில், சமுகத்தில் மிக அரிதாக நடைபெறுகின்ற
உயிர்கொலை என்னும் கருத்தை முதலில் வைத்து, மிக இயல்பாக, வெகு மக்களால்
விரும்பி செய்யப்படுகின்ற “ மனதினை மயக்கும் மது குடி வெறியை” 5வதாக ஏன் புத்தர்
சொன்னார் என சிந்திக்க வேண்டும்.

ஏன் என்றால், மது அருந்தும் ஒருவன் நிச்சயம், மதுவினால் தனது செல்வத்தை இழந்திருப்பான், எனவே மீண்டும் குடிப்பதற்காக வீட்டிலோ, உறவிணர்களிடத்தோ, சமூகத்திலோ நிச்சயம் பொய் சொல்லுவான் ( மூசாவாதா) மேலும் மது அருந்திய ஒருவனுக்கு தனது கண்ணில் படுகின்ற பெண்கள் அனைவருமே அழகானவர்களாகவும், தன்னை உடலுறவுக்கு அழைப்பதாகவுமே தோன்றுவதால் ஆண்களாக இருந்தால், பிறரின் மனைவியின் மீதும் மோகம் கொல்வதும், பெண்களாக இருந்தால் பிறரின் கணவன் மீது மோகம் கொல்வதும் சாதாரணமாக நடக்கும் ஒன்றாகவே உள்ளது.

உதாரணத்துக்குச் சொல்வதானால், இன்றைக்குச் சமுகத்தில் நடைபெறுகின்ற பாலியல் சீர்கேடுகள், ஒழுக்க பிறழ்வுகள், வன்புனர்வுகள், பாலியல் கொலைகள் இவை அனைத்தையும் செய்யும் நபர், அதைச் செய்யும் முன்போ, அந்த செயலைச் செய்யும் போதோ நிச்சயம் மது அருந்தியவராகவே இருப்பார். இதனை பத்திரிகைச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

மது அருந்தியதால் செல்வத்தை இழந்த பின் நிச்சயமாக திருடுகின்றான், (அதின்னதானா) அதற்குப் பின் மது அருந்துவதற்காகவும், அதற்குத் தடையாக இருக்கும் நபர்களை கொலை செய்கின்றான் ( சிக்காபதம்) இந்தப் புரிதலின் காரணமாகவே 5 ஒழுக்கக் கோட்பாட்டில், சமூகத்தில் அரிதாக நடைபெறுகின்ற கொலையை முதலிலும், திருட்டுவை இரண்டாம் இடத்திலும், காமத்தை 3 ஆம் இடத்திலும் பொய் பேசுவதை நான்காம் நிலையிலும், இவை எல்லாவற்றிக்கும் அடித்தளமாக உள்ள மது அருந்துதலை 5ஆம் நிலையிலும் வைத்து நமக்கு 5 ஒழுக்க நெறியை போதித்தார் பகவான் புத்தர்.

இந்த உண்மை ராஜீவுக்கு, ரங்காவின் வழியாக ஒரு குட்டிக் கதையாக வெளிப்படுத்தப்படுகின்றது திரைப்படத்தில், அதாவது ஒருவனிடம் வந்து ஒருவன் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான், கூடாரத்திலுள்ள பொருளைத் திருட வேண்டும், குழந்தையைக் கொல்ல வேண்டும், பொய் சொல்ல வேண்டும், அழகானப் பெண்னைப் புனர வேண்டும், அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும், இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் உன்னை விட்டுவிடுவேன், இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அந்த ஒருவன்,

இவ்வாறாக யோசிக்கின்றான், குழந்தையைக் கொல்வது பாவம், கூடாரத்திலுள்ள பொருளைத் திருடுவது கேவலம், பெண்னை புனர்வது ஒழுக்கமில்லாதச் செயல், எதற்காக பொய் பேச வேண்டும், மது அருந்துவதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மொத்தப் பாதிப்பும் நமக்குத்தானே, சமூகத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என நினைத்து மது அருந்துகின்றான், மது அருந்தியபின், போதையில், அந்தப் பெண்னைப் புனர்கின்றாரன் ( வன்புனர்வு) அதற்குத் தடையாக உள்ள குழந்தையைக் கொல்லுகின்றான், பின் கூடாரத்திலுள்ள பொருளைத் திருடுகின்றான், இதை எதையுமே தான் செய்யவில்லை என்று பொய் சத்தியமும் செய்கின்றான்.

தனக்கு மட்டுமே பாதிப்பு, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என செய்யும் செயலான மது அருந்துதலால், தானும் பாதித்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பாதித்து சமூகத்துக்கும் பாதிப்பு உண்டாகின்றது என்பதே ராஜீவுக்கு ரங்கா சொல்லும் கதையின் நீதி.  அது புத்தச் சமயக் கோட்பாடான 5 ஒழுக்க நெறியினைச் உணர்த்துவதாகும்.

இந்த 5 ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கதைதான் ரங்கா திரைப்படத்தின் கதையாகும்…. 




-         #Ranga
#Buddhism
#MaAmaresan
#TamilCinema
#5Principles

இதையும் படியுங்கள்