Wednesday, January 27, 2016

போளுர் வரதன் – நினைவு குறிப்பு

போளுர் வரதன் – நினைவு குறிப்பு
      
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம், கரிக்காத்துார் காலணியில் 25.02.1952 அன்று பிறந்தார். அவர் பிறக்கும் போது திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட வில்லை அப்பொழுது அது வட ஆற்காடு மாவட்டம்.  வசதியானவர்களின் வீட்டில் முதல் பிள்ளையாக பிறக்க வேண்டும், ஏழையின் வீட்டில் கடைசி பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று ஒரு பழ மொழி இருப்பது போல,  ஏழைக் குடும்பத்தில் கடைசி ஆண் மகனாக பிறந்தவர் திரு. வரதன் அவர்கள்.
வரதனின் தந்தை பெயர் திரு. மதுரை.  தாயார் பெயர். திருமதி. முனியம்மாள், தம்பதிகளுக்கு நான்கு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தனர். முதல் மகனுக்கு சுப்பிரமணி என்றும், இரண்டாவது மகனுக்கு இளங்கோவன் என்றும், மூன்றாவது மகனுக்கு ஏழுமலை என்றும், நான்காவதாய் பிறந்தவருக்கு வரதன் என்று தன் தந்தையாரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் மதுரை, முனியம்மாள் தம்பதியினர். இவரின் தாத்தா பாட்டியின் பெயர் திரு. வரதன் மற்றும் சின்னக்கண்னு என்பதாகும். இவருக்கு இரண்டு தங்கைகள் அவர்களின் பெயர். திருமதி. குப்பு ஆறுமுகம், மற்றொருவர். திருமதி. பார்வதி சின்னக்குழந்தை, தன் உறவுகளை எந்த நிலையிலும் கைவிடாத இயல்பு கொண்டவர் அவர். 
சமூக பின் புலம்:
     இந்தியாவை பிடித்த தீராத நோய் என வருணிக்கப்படும் சாதி மற்றும் ஏழ்மை இரண்டும் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் தான் பிறந்தார் அவர். அவர் பிறக்கும் போது பறையர்களுக்கு மேலாடை அணியும் உரிமை கூட இல்லாமல்தான் இருந்தது கரிக்காத்துாரில். வறுமை தலை விரித்து ஆடிய நிலையில் தான் அவரின் இளமைக்கால வாழ்வு இருந்தது. இதை பின்னாளில் அவர் பேசியும் போக்கியும் இருக்கின்றார்.
குடும்ப பின் புலம் :
     வரதனின் தந்தை திரு. மதுரை மிகச் சிறந்த மனிதர், நெடிய உயரமும் கனத்த உருவமும் கொண்டவர், செக்க செவேல் என்று இருப்பார், கெளுத்தி மீசை வைத்திருப்பார், எப்பொழுதாவது வெற்றிலை போடுவார். கரிக்காத்துார் ஊராட்சி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முதல் பிரதிநிதியாக வரலாற்றில் தம்மை பதிவு செய்து கொண்ட படிக்காத அரசியல் மேதை அவர். மேலும் தபால் நிலையத்தின் ஆயுள் கால சாட்சிய உறுப்பினர் இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கரிக்காத்துார் காலணியில் குடிநீர் தேவையை நிறைவு செய்ய இரண்டு கிணறு வெட்டினார், அதனை நினைவு கூறும் வித்தில் அந்த கிணற்றின் மீது மதுரை என்று ஆங்கிலத்தில் எழுதி 1959 என ஆண்டையும் எழுதியிருப்பார்.
     வரதனின் தந்தை மிக சிறந்த மதி நுட்பமும், சாதுர்யமும் கொண்டவர், வரும் காலத்தை நிகழ் காலத்திலேயே கனிக்கும் மதி நுட்பம் அவருக்கு இயல்பாய் இருந்தது, அதனால் அவர் கரிக்காத்துார் காலணி மக்களின் நாட்டாமையாக இறக்கும் வரையிலும் இருந்தார், அவருடைய தீர்ப்புகள் எவரையும் திருப்திபடுத்துவதற்காக எப்பொழுதும் இருந்தது இல்லை, அதே நேரத்தில் யாரையும் காயப்படுத்தும் விதத்திலும் இருக்காது. புகார் கொடுத்தவனும், எதிர் வாதி என இருவரும் மகிழும் விதத்தில் தீர்ப்பு சொல்லுவார் அவர். தகப்பனுக்கு கடைசி பிள்ளைமேல் பாசம் அதிகம், தாய்க்கு முதல் குழந்தையின் மேல் பாசம் அதிகம் என்று சொல்வதைப் போலவே மதுரைக்கும் இயல்பாகவே வரதன்  மீது பாசம் அதிகம் இருந்தது, அதற்கு காரணம் அவருக்கு அவரின் தந்தையின் பெயரை சூட்டியதும் ஒரு காரணம். வரதனின் எந்த செயலுக்கும் தடையோ முட்டுக் கட்டையோ எதிர்ப்போ வெளிப்பட்டதில்லை அவரின் தந்தையிடம் இருந்து.

     திரு. மதுரையின் நயத்தக்க பேச்சுக்காகவும், மதிநுட்பமான ஆலோசனைக்காவும், தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினர் கூட இவரிடம் ஆலோசனை கேட்டு செல்வார்கள், மேலும்  இவருடைய தீர்ப்புக்காவே, இவருக்கு மிகப்பெரும் புகழும் செல்வாக்கும் கரிக்காத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் இருந்தது. பேசும் பொழுது கம்பீரமாய் மீசையை வலது கையால் தடவிக்கொண்டே பேசும் பாணி இவருடையது.
 ( போளுர் வரதனின் தந்தை மதுரை மற்றும் தாய் முனியம்மாள், )
     தீண்டாமை கொடுமைகளில் ஒன்றான ஆண்களில் எனில் மேல் சட்டை போடாமலும், பெண்களாயின் ரவிக்கை அணியாமல் இருந்த காலம் அது, அதன்படி  கரிக்காத்துார் பறையர்களில் ஆண்கள் சட்டையணியும் பழக்கம் இல்லாததால் இவர் எப்பொழுதும் தோளில் துண்டுடனும் வெற்று மார்புடனும் கம்பீரமாக காட்சியளிப்பார். அவர் சட்டை அணிந்த ஓரே நிகழ்வு, வரதன் அவர்களின் திருமண நிகழ்வு மட்டுமே. அதுவும் அவர் கரிக்காத்துார் மற்றும் எட்டிவாடி காடுவரையிலும் சட்டையை மடித்து அக்குளிலே வைத்திருந்து பேருந்து ஏறியதும் மிக கட்டாயத்தின் பேரிலேயே சட்டையை அணிந்து இருக்கின்றார். திருமணம் முடிந்து எட்டிவாடியில் இறங்கியதும், முதல் வேலையாக சட்டையை கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டார் என உறவுகள் இன்றும் அவரைப் பற்றி பசுமையாக பேசிக் கொள்ளும். சாதிய பாகுபாடுகள் குறைய ஆரம்பித்ததும், அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேர்ந்ததால், ஜிப்பா அணிய ஆரம்பித்தார். 
வரதனின் தாயார், மிகுந்த குணவதி, பிள்ளைகளிடம் மிக பாசமானவர், அதே நேரத்தில் கணவரின் குறிப்பறிந்து நடந்து உறவுகளை கட்டி காப்பாற்றியவர். 
ஆரம்ப கல்வி :
     திரு. வரதன் அவர்கள், தனது ஆரப்ப பள்ளி கல்வியை கரிக்காத்துாரில் உள்ள கீற்றுக் கொட்டாய் பள்ளியில் படித்தார், அதன் பின் ஐந்தாம் வகுப்பில் இருந்து பியுசி வரை வடமாதி மங்கலம் அரசு பள்ளியில் படித்தார், தனது கல்லுாரி படிப்பை சென்னையில் உள்ள மாநில கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார். படிக்கும் காலத்தில் எம்.சி.ராஜா விடுதியில் தங்கி படித்ததால் இயல்பாகவே அரசியல் ஆர்வமும், தலித்திய நோக்கும் அவருக்குள் அதிகம் வேர்கொள்ள துவங்கியது. அதற்கு பின், சென்னை சட்ட கல்லுாரியில் சேர்ந்து சட்டம் படித்து தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து, கொண்டு வழக்கறிஞர் தொழிலும் பார்த்தார்.  படிக்கும் காலத்தில் மிகுந்த சுறு சுறுப்புடனும், புத்தி கூர்மையுடனும் இருந்தார் என்று சொல்லிக் கொள்வார்கள் ஊரில்

கரிக்காத்துார் காலணியை சார்ந்த போளுர் வரதன்,  திரு. ரங்கன் மாமாவும், திரு. சின்ன குழந்தை சித்தப்பாவும்  மூவரும் சம வயதுள்ளவர்கள், இவர்கள் மூவரும்தான், கரிக்காத்துாரில் முதல் தலைமுறை கல்வியாளர்கள், இவர்களுக்கு முன்பு வரையிலும் யாரும் கல்லுாரிக்கு சென்று படித்தது இல்லை கரிக்காத்துாரில்.

அரசியல் ஆர்வம்
     கல்லுாரி படிக்கும் காலத்தில், மாணவர் காங்கிரஸில் மாவட்ட தலைவராக இருந்திருக்கின்றார், அதுதான் அவர் அரசியலில் வகித்த முதல் பதவி. அன்றைய காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பறையர்களின் கட்சி என்றே பெயர் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் அந்த அளவுக்கு பறையர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். காந்தியை தலைவராக ஏற்றுக் கொண்டாலும் அம்பேத்கர் மற்றும் அவரின் கொள்கையில் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் குறையாமல் இருந்தது. அதுவும் கல்லுாரி மாணவர்களுக்கு அந்த காலத்தில் மிக அதிகமாகவே இருந்த காலம் அது.

திரு வரதனுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட தந்தையின் ஆளுமை மிக முக்கிய காரணமாக இருந்தது. அவரைப் போலவே பேசவும், பிரச்சனையின் ஆழத்தையும் விளைவுகளையும் எளிதில் கணிக்கும் திரனும் இயல்பாகவே அவருக்கு தந்தையிடம் இருந்து வந்தது. தன் அரசியல் காலம் முழுவதும் மிகுந்த மதி நுட்பத்துடன் இருந்தார் என்றால் அதற்கு அவருடைய தந்தையின் ஆளுமை மிக முக்கிய காரணம். அதே நேரத்தில் யார் தவறு செய்தாலும் தவறு என்று தைரியமாக சுட்டி காட்டும் மனோதைரியம் அவருடன் கூட பிறந்த இயல்பாக இருந்தது அவரின் இறுதி காலம் வரையிலும்.
குடும்பம்
      சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார், அதுவும் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல அதில் அவருக்கு மிக ஆனந்தம். மற்றும் பெருமை, திருமதி. பிரேமா வரதன் அவருக்கு, சிறந்த வாழ்க்கை துணையாக இருந்து அவருடைய குடும்பம் மற்றும் அரசியல் பணிக்கு மிக சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். இவர்களுக்கு திரு. ராஜிவ் வரதன்  என்னும் ஒரே மகன் தற்போது அரசியலில் வளர்ந்து வரும் இளம் தலைவராக உருவாகிக் கொண்டு வருகின்றார்.

அரசியல் வாழ்வு

     திரு. வரதன் அவர்கள் முதன் முறையாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டடு அடைந்த முதல் வெற்றி 1991 ஸ்ரீ பெரும்புத்துார் தொகுதியில், அது ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்ந்த தொகுதி என்பதாலும், அந் நிகழ்வின் போது அவரும் உடன் இருந்தார் என்பதால், கரிக்காத்துார் கிராமத்தில் ராஜிவ் காந்தியுடன் போளுர் வரதனும் இறந்து விட்டார் என்றே பேசிக் கொண்டார்கள், மூன்று நாட்களுக்கு பிறகுதான் அவர் காயங்களுடன் தப்பித்தார் என்று தெரிந்து கரிக்காத்துார் நிம்மதியானது. 1991 தேர்தலில் 63,656 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதன் முறையாக சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதற்கு பிறகு 2001 – ல் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 53,366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், பின்னர் மீண்டும் 2006 –ல் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 54,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று 3 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் பொது செயலாளராக 3 முறை இருந்துள்ளார், தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் மாநில உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார். தாழ்த்தப்பட்டோர் மாநில பிரிவின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார்.  தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு இவரது பெயர் அடிபட்டு சாதியின் காரணமாக அது நிறைவேறாமலே போயிற்று.
     சுய மாரியாதை உணர்வு மிகுந்தவர் திரு. போளுர் வரதன், தன் சுயமரியாதை குறைவு படுவதை அவரால் எப்பொழுதும் தாங்கிக் கொள்ள இயலாது, கொதித்தெழுந்து விடுவார். ஒரு முறை  மாநில அளவில் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தன் சாதியை சொல்லி இழிவு படுத்தியதால் அவரை செறுப்பால் அடித்து விட்டு சிங்கம் போல் செறுக்குடன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறினார் என்று பெருமை பொங்க பேசுவார்கள் கரிக்காத்துாரில்.  
     அவர் சென்னையில் இருந்து கரிக்காத்துாருக்கு வந்தால், அன்று ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும், எல்லோரும் அவரை சென்று பார்ப்பார்கள், அனைவரையும் நலம் விசாரிப்பார். தான் ஊரில் இல்லையென்றாலும் ஊரில் உள்ளவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார், தந்தையைப் போலவே அதற்கான தீர்வையும் சொல்லுவார். அவர் தலைமையில் கரிக்காத்துார் காலணிக்கு மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு குட முழுக்கும் கம்பீரமாக நடத்தப்பட்டது. அதே போல் அவருடைய குல சாமியான மதுரைவீரன் சாமி கோயிலுக்கும் விழா கொண்டாடுவார் வருடந்தோறும். அவருடைய மறைவுக்குப் பின் அவர் மகன் ராஜிவ் வரதன் மதுரை வீரன் கோயிலை கட்டி  குட முழுக்கும் நிகழ்த்தினார். அவரும் வரதனைப் போலவே உறவுகளை ஆதரித்தும் அனுசரித்தும் நடந்து கொள்வது பராட்டுக்குரியதாக இருக்கின்றது. 

     ஊர் தலைவர்கள் மற்றும் மேட்டுக் குடிகளும் அவரை வந்து சந்திப்பார்கள், அவரிடம் உதவி கேட்பார்கள் செய்வார், ஆனால் கோயில், குட முழுக்கு போன்ற செயல்களுக்கு அவரிடம் உதவி கேட்டாலும் அவர் செய்தது இல்லை, காரணம் கேட்டால், என் மக்கள் வெளியே நின்று சாமி கும்பிடும் கோயிலுக்கு நான்  என் பணத்தை செலவு செய்ய மாட்டேன் என்று கறாராக பேசுவார்.
     அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் சலவை செய்தது போல் புத்தம் புதிதாக இருக்கும் ரூபாயைத்தான் தருவார், நான் கூட ஒரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன், எப்பொழுதும் புது ரூபாயாக தருகின்றீர்களே எப்படி மாமா என்று, அதற்க்கு அவர், நம்மிடம் பணம் என்று கேட்டு வருகின்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி கொடுத்தோம் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள், புது நோட்டாக இருந்தால் அது அவர்களை கௌரவ படுத்தியது போல இருக்கும் என்று சொல்லுவார்.
     செங்கம் தாலுக்காவில் இருந்த தண்டராம் பட்டு செங்கத்திலிருந்து மிகுந்த தொலைவு இருந்ததால், அவர்தான் அதற்க்கு தீர்வாக தண்டராம்பட்டுவை தனி தாலுக்காவாக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று முன் மொழிந்தவர், பின்னாளில் அதன் பெருமையை திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தண்டராம் பட்டுவை சேர்ந்த ஏ.வா. வேலு பெற்றுக் கொண்டார், அந்த வகையில் தண்டராம் பட்டு தாலுக்கா கோரிக்கையை முன் மொழிந்த திரு. வரதன் திராவிட முன்னேற்ற கழகத்தால் மறைக்கப்பட்டார்.
போளுரில் உள்ள செய்யாற்றின் குறுக்கே, தடுப்பனை கட்ட வேண்டும் என்று சட்ட சபையில் பேசினார், பின் அது குறித்து எதுவும் பேசாமல் அதைியாக இருந்து விட்டார், காரணம் கேட்டதற்க்கு, அணை கட்டுவதால், நிலவுடைமையாளர்களுக்கு பயன் போய் சேறும், நிலமற்றவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், மீண்டும் அவர்களின் நிலத்தில் போய் கூலி வேலை செய்ய வேண்டும், அது  என் சமூகத்தை தலை குனிய வைக்கும், அதை நான் செய்ய மாட்டேன் என்பார்.
     ஒரு முறை போளுரில் வன்னியர்கள் தெருவில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது மிக துணிச்சலாய், நான் பறையன்தான், என் அப்பா மாட்டு கறி கொண்டுவருவார், அதை சாப்பிட்டுத்தான் நான் வளர்ந்தேன், எனவே என்னிடம் தைரியமும், துணிச்சலுமும்  அதிகம் என்று பேசியிருக்கின்றார், அதை கேள்வி பட்டதும், அந்த தாலுக்காவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் அவரை கொண்டாடி இருக்கின்றனர்,
     அதே போல், கரிக்காத்துார் ஏரிக்கரையில் கீழ் உள்ள நிலம் முழுவதும் தனது சொந்தகளுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அதை நிகழ்த்திக் காட்டினார், அது அவரை பெருமை கொள்ளும் நிகழ்வு. அதே கரிக்காத்துார் ஏரியில் இரண்டு ஏரிகள் கலக்கும் இடத்தில் வெள்ளையர்கள் காலத்தில் கட்டிய பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலத்தை இடித்து, மீண்டும் புது பாலத்தை கட்ட ஆதிக்க சாதியினரும், அரசு அதிகாரிகளும் ஒப்பந்த காரர்களும் திட்டம் தீட்டிய போது அதனை தடுத்து, கரிக்காத்துார் சேரி மக்களுக்கு ஏரி தண்ணீர் கிடைக்க காரணமாக இருந்தவர். அவர். செங்கம் தொகுதியில் பழங்குடிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு பல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டார். பழங்குடிகள் அவரை மிக பெருமையாக பேசியதை கேட்டும் இருக்கின்றேன். 


  ( செங்கம் தொகுதியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பிணர்களுக்கு நிதி உதவி அளித்த போது )
     அவருடைய சட்ட அறிவு மிக நுட்பமானது, மிக சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதாக அதே நேரத்தில் நுனுக்கமான தீர்வுகளையும், பலருக்கும் சொல்லியிருக்கின்றார். அதை அனைவருமே பெருமையாக சொல்லுவார்கள்.
     திருவண்ணாமலை, வேலுார் மாவட்டத்தில், காங்கிரஸ் அடிமட்ட தொண்டன் வரைக்கும் அவரோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவர்மீது மிகுந்த மரியாதையும் இருந்தது. சேரி மக்களிமும், பிற சாதியினரிடமும் அவர் கட்சி ரீதியாக நெருக்கமான உறவு வைத்திருந்தார். அவரிடம் திருமண அழைப்பிதழ் கட்சிகாரன் கொடுத்தால் அவசியம் திருமணத்திற்கு வருவார். அதை போல நிறைய நிகழ்வை சொல்லிக் கொண்டு போகலாம். 

     இறுதியாய், ஒரு சிறு கிராமத்தில் இருந்து , விளிம்பு நிலை மக்களில் இருந்து அரசியல் வானில் நட்சத்திரமாய் ஜொலித்த, போளுர் வரதன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கின்றார். அவரின் மரணம் 27.01.2011 அன்று நிகழ்ந்தது. அதுவரையிலும் அவர், தன் மக்களின் தலை நிமிர்ந்த வாழ்வுக்காவே வாழ்ந்தார். அந்த வகையில் கரிக்காத்துார் மக்களை பெருமை படுத்திய முக்கியமான மற்றும் முதல் அரசியல் ஆளுமை திரு. போளுர் வரதன். 
( இந்த கட்டுரைக்கான பெரும்பாலான தகவல்கள் கரிக்காத்துார் சேரி மக்களின் வாய்மொழி பதிவு மற்றும் போளுர் வரதனின் மகன் திரு. ராஜிவ் வரதன், அவரது அண்ணன் மகன் திரு. கமலநாதன் அவரிடம் இருந்து பெறப்பட்டது. புகைப்படங்களை தந்தவரும் திரு. கமலநாதன் தான் இவர்களுக்கு நன்றி.)

இதையும் படியுங்கள்