Monday, October 16, 2017

என்னப் பாட்டுப் பாட

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5

என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட…

      இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுதவில்லை என தொலைபேசியிலும் நேரிலும் கேட்டுக் கொண்டிருந்த என் மகன் அ.கௌ.கதிரேசனுக்கும். பொருத்தமாக ஜென் கதையை பரிந்துரைத்த  எழுத்தாளர் அண்ணன், பேரா. இராமசுப்பு ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லி அடுத்த பாடலை துவங்குகின்றேன்.

ஜென் பௌத்தம்:

       ஜென் பௌத்தம் என்பது தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவ இளவரசரும், பௌத்த பிக்குவுமான போதி தர்மரால், சீனாவில் தோற்றுவிக்கப்பட்டது. சீனாவில் மகாயான பௌத்தத்தை பரப்ப சென்ற போதி தருமர், அப்போது அங்கு கோலோச்சிக் கொண்டிருந்த டவோ மதத்தின் சாரம், மற்றும் மகாயான பௌத்தத்தின் சாரம் இரண்டையும் இனைத்து உருவாக்கியவைதான் ஜென் பௌத்தம் என்பது.

       ஜென் என்பது சீன மொழிச் சொல் என்றே பலராலும் நம்பப்படுகின்றது, அதன் பொருள் தியானம் செய் என்பதாகும், இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதாயின், வாழ்வே தியானம், தியானமே வாழ்வு என்பதாகும். ஜென் மத தத்துவத்தின் படி, புத்தர் எங்கும் எல்லாவற்றிலும் நீக்க மற நிறைந்திருக்கின்றார், என்பதை உணர்ந்து வாழ்தலே ஜென் மத கோட்பாடு. இந்த உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு எளிய ஜென் கதை.

ஒரு ஜென் கதை,

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த  ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.அன்று இரவு  கடுங்குளிர்..கிழவரால்  குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களேஎன்று கோபத்தில் கதறினார்.உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,”நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?”கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.

மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,”புத்தம் சரணம் கச்சாமி,”என்று  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,”என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான்  புத்தரா?”என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ”மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?’ என்று சொல்லி, தலைமை குருவுக்கு ஞானத்தை போதித்தார், வயது முதிர்ந்த பெரியவர்.

      இந்த கதையின் நீதி, புத்தர் சிலையில் இல்லை, புத்தர் உனக்குள்ளும் இருக்கின்றார், எனக்குள்ளும் இருக்கின்றார், சக மனிதர்களின் துன்பங்களை துயரங்களை போக்குவதே நாம் செய்ய வேண்டிய உயர்ந்த பணி. அவ்வாறு செய்யாமல் வெறும் வார்த்தைகளில் புத்தர் என்று கூறிக்கொண்டிருப்பதால் பலனில்லை என்பதே.

      இந்த கதையிலிருந்தே நமது அடுத்த பாட்டை துவங்க வேண்டிய தேவையுள்ளது. ஒரு இசை அமைப்பாளருக்கு, இசை என்பது வாத்தியக் கருவிகளிலோ, இசைக் கருவிகளிலோ இல்லை, தன்னைச் சுற்றி நிகழும் எல்லா செயல்களிலுமே இசை நீக்கமற நிறைந்துள்ளது. என்னும் உண்மையை உணர்ந்து இருந்தாலே அவருக்கு இசை ஞானம் வாய்த்தவராகின்றார். அதனினும் கொஞசம் உயர்ந்து சொல்ல வேண்டுமெனில், “ காற்றிலிருந்து உருவாகும் இசை காற்றோடு கலக்கின்றது” என்பதே இசை குறித்த ஜென் ஞானம்.

இத்தகைய இசை ஞானம் வாய்க்கப் பெற்றவர்தான் நமது இசை ஞானி, அத்தகைய இசை ஞானத்தை உலகுக்கு உணர்த்திய இசைதான். 1979 ஆம் ஆண்டு நம் இசைஞானியார் இசை அமைக்க கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் பாடல் எழுதிய என்னப் பாட்டுப் பாட என்னத் தாளம் போட என்னும் பாடல், அந்த பாடல் வரிகள் இதோ.  
என்ன பாட்டு பாட... ம்... என்ன தாளம் போட
            ஒண்ணும் புரியலியே ம்... ( இசை )

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட

            இசை               பல்லவி

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            ... வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
            வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
            மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொமப் ஆட்டுது
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட

            இசை               சரணம் - 1

            பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும்
            தே... ட்ர்ர்... ர்ர்...
            பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும்
            வண்டி பூட்டுனா சண்டி ஆகுற
            காப்பி ஓட்டல பாத்து நிக்கிற 
            தன்னானே னானா... ... தன்னானே னானா 
            தன்னானே னானா தன்னானே னானா
            வெக்காதே ஆச அது வெங்காய தோச
            வெக்காதே ஆச அது வெங்காய தோச
            அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வெக்காதே

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட

            இசை               சரணம் - 2

            கூத்து மேட ஏறினாக்கா நூறு வேஷம் போடலாம்
            ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹா
            கூத்து மேட ஏறினாக்கா நூறு வேஷம் போடலாம்
            மேடை இன்றியே வேஷம் போடுறான்
            ஆளப் போலவே தாளம் போடுறான்
            தன்னானே னானா... ... தன்னானே னானா 
            தன்னானே னானா தன்னானே னானா
            சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணா
            சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணா
            கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேக்காதே

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
            மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொமப் ஆட்டுது
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
     
      சக்களத்தி திரைப்படத்தில் துவக்க பாடலாக முகப்பிலேயே அமைந்துள்ளது. அப்பொழுதே, முகப்பு பாடலை இசைஞானியார் பாடினால் படம் வெற்றியடையும் என்னும் நம்பிக்கையின் பால் அமைக்கப்பட்ட பாடலாகும்.  தலைவனை ஒரு தலையாக காதலிக்கும் தலைவி, அவனோடு உரையாடிக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் ஆசையில், ஒரு பாடலைப் பாடச் சொல்லி கேட்க, தலைவனோ, தன்னோடு எப்போதும் பயணிக்கும் மாடுகளிடம் உரையாடிக் கொண்டு மாடுகளிடம் பாடுவது போலவும், பேசுவது போலவும் அமைக்கப்பட்ட பாடல் இது.

       உண்மையில் உழைக்கும் மக்கள் தங்களோடு உழைப்பில் பங்கெடுக்கும் கால்நடைகளோடு பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் பயணத்தைக் கடப்பதென்பது கிராமப்புறங்களில் இன்றும் நடக்கும். நிகழ்வு. அதற்கேற்றார் போல் நம் இசைஞானியார், மாடுகளின் கழுத்திலுள்ள சலங்கை, மாட்டுக் கொம்பிலுள்ள மணி, மற்றும் மாட்டின் வாலசைவு, உடலசைவு, வண்டிச் சக்கரத்தின் சுழற்சி இவைகளுக்கு ஏற்றவாறு எளிய இசை கருவிகளைக் கொண்டு, இசையமைத்து இருப்பார். உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளான, டிரிய், மற்றும், தன்னானே னேன, தே தே, போன்ற வார்த்தைகளையும் பாடல்களோடு பொருந்திப் போக செய்திருப்பதே இப்பாடல் உழைக்கும் மக்களை கிராமப் புற மக்களை வெகு எளிதில் சென்றடைந்து பட்டி தொட்டியெங்கும் பரவி பெரும் வெற்றி அடையக் காரணமாக இருந்தது.



       இந்தப் பாடலைக் காண்பவர்கள் மாடு தலையசைக்கும் போதே, தன்னையும் அறியாமல் தலையசைப்பதுதான் இப்பாடலின் இசை கோவைக்கு கிடைத்த வெற்றி. மாயா கௌலனை ராகத்தின் அடிப்படையில் அமைந்த இந்த பாடலை எளிய மக்களின் உணர்வுகளோடு பொருத்திப் பார்க்கும் போது, எல்லா உயிர்களையும் நேசிக்கும் பௌத்த உணர்வுக்கு நம்மை இட்டுச் செல்லும். 

இதையும் படியுங்கள்