Sunday, November 23, 2014

சேரி ரெண்டு பட்டால்…




ர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்றொரு பழமொழி உண்டு. ஊரில் தன் பெருமையை காட்டிக் கொள்வதற்காக, இரண்டு குழுக்களும், அல்லது கோஷ்டிகளும் இரண்டு முறை ஊர் திருவிழாவினை நடத்துவார்கள். இரண்டு முறை கூழ் ஊற்றுவார்கள். இரண்டு முறை தெருகூத்து அல்லது நாடகம் நடத்துவார்கள். இதனால் இதையே வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற தெருக்கூத்து அல்லது நாடகக் கலைஞர்களுக்கு இருமுறை வாய்ப்பு கிடைக்கும்.


     அதைப்போலவே இன்று அரசியல் களத்திலும் தமிழகம் எங்கிலும் உள்ள சேரிகள் இரண்டு மூன்று என பல துண்டுகளாக துண்டு பட்டு கிடக்கின்றது. வரலாற்றில் தமிழகத்தில் உள்ள அணைத்து சமுக இயக்கத்திலும், மற்றும் அரசியல் கட்சிகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும், அனைத்திலும் தலித்துகளின் பங்களிப்பு மிகுதியாகவே இருந்திருக்கின்றது.
     1915 – ல்  துவங்கப்பட்ட பார்பனர் அல்லாதோர் இயக்கம் துவங்கி அதற்க்குப்பின் 1917 ல் துவங்கப்பட்ட நீதிக்கட்சி,  வெள்ளையர்களால் துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி என்று சொல்லப்படுகின்ற பேராயக்கட்சி, மற்றும் பொதுவுடமை கட்சி, திராவிட கட்சிகள் என அனைத்து கட்சிகளிலும், அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களை இணைத்து பணிசெய்து கொண்டிருந்தனர், இருக்கின்றனர்.
    

ஆரம்ப காலத்தில் நீதி கட்சியில் படித்த தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு பங்காற்றியிருக்கின்றனர்... அதற்கு பின் வந்த திராவிட இயக்கத்திலும், தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார்கள்...

    பேராய கட்சிக்கு ஒரு காலத்தில் தமிழகத்தில்  தீண்டத்தகாதவர்களின் கட்சி என்றே பெயர் இருந்திருக்கின்றது...  காந்தி, நேரு, பட்டேல், போன்ற பார்பன, பணியா தலைவர்கள்... சொல்லுக்கு செத்து மடிந்தது தலித்துகளாகவே இருந்திருக்கின்றனர்.... அவர்களுக்குப் பிறகு பொதுவுடைமை கட்சி வந்த போது, அதிலும் உயிர் நீத்தவர்களும் களப்பணி செய்து கடைசி வரை தொண்டனாக இருந்தவர்களும் தலித்துகள் தான், தலைவர்களாக பார்பணர்களும், பணியாக்களும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு நிறுவனமயமாக்கினர் அந்த கட்சிகளை.

    திராவிட முன்னேற்ற கழகத்தின், சின்னமே  ( மறைந்த தலித் தலைவர் திரு. கோவிந்தசாமி அவர்களின் உதயசூரியன் பத்திரிகையின் முகப்பு ) தலித்துகளின் சின்னம்தான்... அந்த கட்சியிலும் ஆரம்ப காலங்களில் பெருமளவு தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றியவர்களும் பலியானவர்களும் தலித்துகள்தான்... அதில் தலைவர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள்  பிற்படுத்தப்பட்ட சாதியினர்...
அடுத்து வந்த அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெருவாரியாக இணைந்ததும், இருப்பதும் தலித்துகள்தான்... ஆனால் அந்த கட்சிக்கு இப்போழுது  தேவர்களின் கட்சி என்ற  பெயரும் வந்து விட்டது...

      மதிமுக வில் முதல் பலியானதும் தலித்துதான்... ஆனால் அந்த கட்சியின் தலைவர் நாயுடு... அவர் தமிழர்களின் நலன் குறித்து பேசுவார், ஆனால் தலித்துகளின் நலன் குறித்து எதுவும் பேசமாட்டார்....தேமுதிகாவில் கூட முதல் பலி தலித்துதான்... அவருடைய கட்சியில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான்... ஆனால் அவருக்கு தலித்துகளின் பிரச்சனையே தெரியாது...


இங்கு சொல்ல வந்த செய்தி தலித்துகள் அந்த கட்சியில் இருப்பதல்ல, தலித்துகளைப் போலவே மற்ற சாதியினரும் அந்த அந்த கட்சிகளில் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டு ஆரம்ப காலங்களில் செயல்பட்டவர்கள்தான், காலப்போக்கில் அவர்களிடம் இரண்டு விதமான மாற்றங்கள் நிகழ்ந்தது... அவர்களில் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு தலைமைக்கு நெருக்கமானார்கள்... மாவட்ட செயலாளர்கள் ஆனார்கள்... மந்திரி ஆனார்கள்.. இது எதுவும் நடக்க வில்லை அல்லது அந்த கட்சியில் தங்களின் சாதிக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு தாவினார்கள்....

ஆனால் தலித்துகள் மட்டுமே தாங்கள் கட்சி மற்றும் தலைவர் மீது கொண்ட விசுவாசத்திற்காக, அந்த கட்சி தொடர்ந்து  தங்களுக்கு அநீதி இழைத்தாலும், பலியிட்டாலும் தொடர்ந்து  அதே கட்சியில் தொடர்வது  ஏன்...
இவர்களுக்கு ஏன் தலித் கட்சிகள் மீது நம்பிக்கை வருவதில்லை, இன்று மற்ற கட்சிகளில் இருக்கும் தலித்துகள்  தலித்கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டாலே 45 சட்ட மன்ற உறுப்பினர்களும் நமக்கானவர்களாக இருப்பார்களே... தலித் கட்சிகளுக்கு திரும்ப மறந்த தலித்துகளால் அவர்களுக்கும் அவர்களது சமுகத்துக்கும் என்ன பயன்...?
இந்த கேள்வியை தலித் சமூகத்தை பார்த்து தலித் கட்சிகளும், கட்சி தலைமையும் முன்வைக்கும் அதே நேரத்தில், ஒரு சாதாரண தலித்தாக இருந்து 3 கேள்விகளை தலித் அரசியல் கட்சிகள் மற்றும் தலித் தலைமையிடம் வைக்க வேண்டிய தேவையுள்ளது.
இன்றைக்கு தேர்தலில் பெரும்பான்மை கவனத்தை ஈர்த்த தலித் அரசியல் கட்சிகளாக இருப்பவை
1.   விடுதலைச் சிறுத்தைகள்
2.   குடியரசு கட்சி ( செ.கு. தமிழரசன்)
3.   புரட்சி பாரதம்
4.   சமூக சமத்துவப்படை
5.   பகுஜன் சமாஜ் பார்ட்டி ( தேசிய அங்கிகாரம் பெற்ற ஒரே தலித் கட்சி )
6.   புதிய தமிழகம்
7.   தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
8.   தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு ஆகிய பெரிய கட்சிகளுடன் உதிரிக்கு ஒன்றிரண்டு அரசியல் கட்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பட்டியலில் சில கட்சிகள் விடுபட்டும் போயிருக்கலாம், தலித் அரசியல் கட்சிகளை பட்டியலிடுவதல்ல இந்த கட்டுரையின் நோக்கம், தலித்துகளின் கனவான அரசியல்அதிகாரத்தை நோக்கி தலித் அரசியல் கட்சிகள் ஏன் நகர்வதில்லை, என்பதுவும், இத்தனை கட்சிகள் இருந்தும், ஏன் ஒரு தலித் கட்சியும் மாநில அளவில் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரத்தை பெற இயலவில்லையே ஏன் என்பதுதான்.
   2011 – தேசிய மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் தலித் மக்களின் சராசரி 16 சதமானத்திலிருந்து 19 சதமானம் வரை இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டுமே தேசிய சராசரி சதமானத்தை விட அதிகமான அளவில் தலித் மக்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் சொல்கின்றது. அவ்வாறு எனில் மற்ற பிற சாதி மக்களின் வாக்குகளை விட தலித்துகளின் வாக்கு அதிகமாக இருக்கின்றது என்றுதானே பொருள். இந்த பின்புலத்தில் ஏன் தலித் கட்சிகள் சிந்திப்பதில்லை,
பொதுவாக தேர்தலில் வெற்றி தோல்விகள் எதனடிப்படையில் நிகழ்கின்றது என்றால்,
1.   அனுதாப அலை
2.   ஆதரவு அலை
3.   எதிர்ப்பு அலை
4.   கூட்டணி பலம் ஆகிய காரணங்கள் சொல்லப்பட்டாலும்,
சொல்லப்படாத மற்றொரு முக்கியமான காரணம் தலித்துகளின் வாக்குகளை பிரிப்பது,
ஏன் என்றால் மக்கள் தொகையில் தனித்து அதிக எண்ணிக்கையில் தலித்துகள் உள்ளனர் என்றால் அவர்களின் வாக்கு எண்ணிக்கையும் தனித்து அதிக எண்ணிக்கையில்தான் இருக்கும், அத்தகைய தனித்து அதிக எண்ணிக்கையில் இருக்கும் தலித்துகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே மாநில அளவில் உள்ள கட்சிகளும், தேசிய கட்சிகளும் ஏதேனும் ஒரு தலித் கட்சியினை தங்களின் கூட்டணியில் எப்போதும் வைத்திருக்கும், அதனால் அந்த கட்சிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தலித்துகளின் பெரும்பான்மை வாக்கு வங்கியை தன் பங்குக்கு கூறுபோடும் ஆதாயமும், தேர்தல் காலத்தில் கட்சி பணி செய்யவும், கூட்டமாய் கூட வரவும், கொடி நாட்டவும் தலித்துகளை எடுபிடி ஏவலாளாக பயன்படுத்திக் கொள்ளும்
     அடிப்படையில் தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் 3 விதமாக புரிந்து கொள்ளலாம், தேசிய கட்சிகளின் அரசியல், திராவிட கட்சிகளில் அரசியல், மண்ணின் மைந்தர்களின் அல்லது தலித்துகளின்  அரசியல்,
தேசிய கட்சிகளின் அரசியல் என்பது வல்லான்மை அரசியல், இன்னும் எளிமையாய் சொல்வதென்றால், ஏகாதிபத்திய அரசியல், பெரு முதலாளிகளின் அரசியல், மாநில நலனோ, மக்களின் நலனோ அதில் முதன்மையாக இருப்பதில்லை, அவைகள் எப்பொழுதும் தேசத்தின் நலன் என்றே முழங்குவார்கள், தேசமென்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா அதில் வாழும் மக்கள் இல்லையா, (வனங்கள், மற்றும கடல், மலை கிடையாதா? என்றால் இல்லை என்பார்கள் இவையெல்லா வற்றையும் பணமாக்கும் நோக்கோடு செயல்படுவார்கள்,)  இது அவர்களுக்கு புரியாது, புரிய வைக்கவும் இயலாது.
திராவிட கட்சிகளின் அரசியல் என்பது வந்தேரிகளின் அரசியல் அல்லது வடுகர்களின் அரசியல், இன்னும் எளிமையாக சொல்வதென்றால் நிலவுடைமையாளர்கள் சிறு மற்றும் குறு முதலாளிகளின் அரசியல், மணல் அரசியல், மபியா அரசியல்  
தலித் கட்சி என்பது நிலமற்ற வாழ்வாதாரம் ஏதுமற்ற உடலுழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட ஏழை எளிய மக்களின் அரசியல், இன்னும் தமிழகத்தில் 80 சதமான அளவிலான தலித்துகள் கிராமங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
தேசிய கட்சிகளின் அடையாளமாக அல்லது வாக்கு வங்கிகளாக   பெருநகரங்களும், மாநகராட்சிகளும் உள்ளன, திராவிட கட்சிகளின் அடையாளமாக நகர்புறமும், சிறுநகரங்களும் உள்ளன, தலித் கட்சிகளின் அடையாளமாக கிராமப்புறங்கள் குறிப்பாக சேரிகள் மட்டுமே உள்ளன. இன்னும் எளிமையாக இதனை சொல்ல வேண்டும் என்றால், தேசிய கட்சிகளில்  பணக்காரர்களும், திராவிட கட்சிகளில் நடுத்தர மக்களும் தலித் கட்சிகளில் ஏழை, மிகவும் ஏழை மக்கள் மட்டுமே இருக்க இயலும்,
ஆனால் இன்றைய நிலையில் தலித் மக்கள் திராவிட கட்சிகளை தங்களின் முன்னோடியாக கொண்டு அவர்களைப் போலவே அரசியல் நடத்துகின்றனர், நிலவுடைமையாளர்களின் அரசியலை நிலவுடைமையாளர்கள்தான் நிகழ்த்த இயலும், நிலமற்றவர்களின் அரசியலை நிலமற்றவர்கள்தான் நிகழ்த்த இயலும்,
ஆனால் தலித்து அரசியல் கட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில்  நிலவுடைமையாளர்களின் அரசியலை நிலமற்றவர்களிடம் நிகழ்த்துகின்றனர், இந்த போக்கு தங்களின் வாக்கு வங்கியிடம் இருந்து தங்களை அன்னியப்படுத்தும் போக்கு என்பது அவர்களுக்கு புரிவதில்லை, காரணம் பெருமுதலாளியிடம் எடுபிடி வேலைசெய்யும் ஏவலனும் தன்னை பெருமுதலாளியாகவே கருதிக்கொள்வான் ஏழை எளியவரை சந்திக்கும் போது என்பார்களே அதைப்போலத்தான், இந்த போக்கும்.
மாநில அளவில் ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் வேண்டும் எனில், அந்த கட்சி சட்டமன்றத்தில் தனது வேட்பாளராக 15 நபரை கொண்டிருக்க வேண்டும் பாராளுமன்றத்தில் 2 நபரை கொண்டிருக்க வேண்டும்,அல்லது  வாக்கு சதமானத்தில் மாநில அளவில் 6 சதமானமும், தேசிய அளவில் 2 சதமானமும் கொண்டிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவுற்றும் தமிழகத்தில் ஒரு தலித் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் மாநில அங்கிகாரத்தை ஏன் பெற இயலவில்லை என்றால் தனக்கான நண்பன் யார் எதிரியார் என்ற அரசியல் புரிதல் தலித் அரசியல் கட்சிகளுக்கு இல்லை எனவே அவர்களால் அரசியல் தளத்தில் சாதிக்க இயலவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது.
உதாரணமாக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் மனோபாவமும். கிராமங்களில் உள்ள ஆண்டைகளின் மனோபாவமும் ஒன்றாகவே இருக்கும், அது தலித்துகள் தாங்கள் கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும், தங்களுக்கான உரிமை என்றோ, சம பங்கு என்றோ எப்போதும் பேசக்கூடாது என்ற போக்கு அது, ஏன் எனில் ஆண்டைகளில் இருந்துதான் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் வருகின்றனர், இவர்களுடன் கூட்டணி வைக்கும் தலித் அரசியல் கட்சிகளிடமும் அவர்கள் இதே போக்கில்தான் இருப்பார்கள், இத்தனை தொகுதி, இந்த இடம், விருப்பமாக இருந்தால் பெற்றுக்கொள்ளுங்கள் என்று, கூட்டணி பேசும் போதே நிபந்தனையுடனும் அதிகாரத்துடனும் பேசுகின்ற நிலை என்றால்,
தேர்தல் களத்தில் தலித்துகளுக்கு  கூட்டணி கட்சி  எதுவும் தேர்தல் பணியாற்றாது, தலித்துகள் மட்டுமே தேர்தல் பணி செய்ய வேண்டும், அதே தலித் மற்ற தொகுதியிலும் கூட்டணி கட்சிக்காக தேர்தல் பணி செய்ய வேண்டும், தலித்துகளை வெற்றி பெற வைக்ககூடாது என்ற உள்ளடி அரசியலில் எதிர்கட்சிக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைப்பதும் நடக்கும் வெற்றி பெறுவதற்க்கே இவ்வளவு போராட்டம் என்றால் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்பது எல்லாம் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகத்தான் அமையும் வேறு ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை,
இவ்வாறு ஆண்டைகளிடம் அடிமைப் பட்டு தலித் கட்சிகள் கூட்டணி வைப்பதை விட மாற்று சேரி மக்களிடம் கூட்டணி வையுங்கள் தலித் அரசியல் கட்சி தலைவர்களே, உங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்,
எவ்வாறு எனில் தற்போதுள்ள சட்டமன்ற தனி தொகுதிகள் 46 அவை,
1.       பொன்னேரி – திருவள்ளுர்
2.       பூந்தமல்லி – திருவள்ளுர்
3.       திரு.வி.கா நகர். - சென்னை
4.       எழும்பூர் – சென்னை
5.       ஸ்ரீ பெரும்புத்துார் – காஞ்சிபுரம்
6.       மதுராந்தகம் – காஞ்சிபுரம்
7.       செய்யூர் – காஞ்சிபுரம்
8.       அரக்கோணம் – வேலுார்
9.       கே.வி.குப்பம் – வேலுார்
10.   குடியாத்தம் – வேலுார்
11.   ஊத்தங்கரை – கிருஷ்ணகிரி
12.   அருர் – தர்மபுரி
13.   செங்கம் – திருவண்ணாமலை
14.   வந்தவாசி – திருவண்ணாமலை
15.   திண்டிவனம் – விழுப்புரம்
16.   வானுார் – விழுப்புரம்
17.   கள்ளக்குறிச்சி – விழுப்புரம்
18.   கெங்கவள்ளி – சேலம்
19.   ஆத்துார் – சேலம்
20.   ஏற்காடு – சேலம் ( பழங்குடி)
21.   ராசிபுரம் – நாமக்கல்
22.   சேந்தமங்களம் – நாமக்கல்
23.   பவாணிசாகர் – ஈரோடு
24.   தாராபுரம் - ஈரோடு
25.   அவினாசி – திருப்பூர்
26.   கூடலுார் – நீலகிரி
27.   வால்பாறை – கோயம்புத்துார்
28.   நிலக்கோட்டை – திண்டுக்கல்
29.   கிருஷ்ணராயபுரம் – கருர்
30.   துறையூர் – திருச்சி
31.   பெரம்பலுார் – பெரம்பலுார்
32.   திட்டக்குடி – கடலுார்
33.   காட்டுமன்னார் கோயில் – கடலுார்
34.   சீர்காழி – நாகப்பட்டினம்
35.   கீழ்வேலுார் – நாகப்பட்டினம்
36.   திருத்துறைப்பூண்டி – திருவாருர்
37.   திருவிடைமருதுார் – தஞ்சாவூர்
38.   கந்தர்வ கோட்டை – புதுக்கோட்டை
39.   மானாமதுரை – சிவகங்கை
40.   சோழவந்தான் – மதுரை
41.   பெரியகுளம் – தேனி
42.   ஸ்ரீ வில்லிபுத்துார் – விருதுநகர்
43.   பரமகுடி – ராமனாதபுரம்
44.   ஒட்டபிடாரம் – துாத்துக்குடி
45.   சங்கரன்கோவில் – திருநெல்வேலி
46.   வாசுதேவநல்லுார் – திருநெல்வேலி
இந்த 45 தனித்தொகுதிகளில் தங்களுக்கென 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மாநில அங்கிகாரம் கிடைத்துவிடும்தானே, இந்த தொகுதிகளில் ஏதோ ஒன்றோ இரண்டோ அல்லது அதிகபட்சமாக ஒன்பதோ பத்தோ தானே திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்தால் கிடைக்கும், மாறாக பொது தொகுதியையா தலித் கட்சிகளுக்கு ஒதுக்கி வெற்றி பெற வைக்கப் போகின்றார்கள் திராவிட கட்சிகள்.
மேலே பட்டியல் இட்டுள்ள தலித் கட்சிகள்தானே தங்களுக்குள் ஒன்றையொன்று போட்டியாக கருதி இதே 45 தனித்தொகுதிகளிலும் தலித் மக்களிடம் தங்களுக்காக வாக்கு சேகரிப்பார்கள், அல்லது நிலவுமையாளர்களின் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தலித்துக்கு வாக்கு சேகரிப்பார்கள் மாறாக தலித் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி பேசி 45 தொகுதிகளையும் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் போட்டியிடாமல் புரிந்துணர்வோடும் ஆதரவோடும் போட்டியிட்டால் அந்த தொகுதியில் உள்ள மொத்த தலித்துகளின் வாக்கும் சிதறாமல் பிற தலித் கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகின்ற வேட்பாளருக்குத்தானே கிடைக்கும். இதைஏன் செய்வதில்லை தமிழகத்தில் உள்ள தலித் கட்சிகள், சொந்த சகோதரனோடு ஒத்துப்போவதை விட ஆண்டைகளின் அரசியல் கட்சி தலைவர்களிடம் விசுவாசம் காட்டுவது எளிதாக இருக்கின்றதா என்ன? பேசி தீர்க்க இயலாத பிரச்சனை ஏதேனும் உள்ளதா  சகோதர கட்சிகளிடம் தலித் தலைமைகளுக்கு.?
பிற சாதியினரின் வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெற இயலும் என்போருக்கு, தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், நிறுத்தும் தலித் வேட்பாளருக்கு பிற சாதியினரின் வாக்கு வங்கி பிரிந்து பிரிந்து  வாக்குகளாக மாறுகின்றது, ஆனால் தலித் கட்சிகளின் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு, தலித்  வாக்குகள் பிரியாமல் விழுவதால் பெரும்பாண்மை கிடைக்கும், அல்லது குறைந்தது 6  சதமானத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்பது எளியவர்களுக்கும் புரியும் உண்மையில்லையா? இது ஏன் தலித் அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை.
தொகுதி சீரமைப்பு என்னும் பெயரில் தலித்துகளின் வாக்கு வங்கியை சிதைக்கும் விதமாக அரசு முடிவெடுத்து செயல்பட்டாலும், 500 வாக்குகள் ஒரு கிராமத்தில் உள்ளது என்றால் அவறறில் 100 வாக்குகள் சேரி மக்களின் வாக்குகளாகத்தான் இன்னமும் இருக்கின்றது. 400 வாக்குகளை மாநில கட்சிகள், தேசிய கட்சிகள், பிற சாதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் பிரிக்கும் போது சேரி மக்களின் 100 வாக்குகளை பிரிக்காமல் பெறும்  தலித் கட்சிகளே வெற்றி பெற பெரு வாய்ப்பு உள்ளது என்பது ஏன் புரிவதில்லை?
மூன்றாவதாக இதுவரை தனித்தொகுதிகளில் நிறுத்தப்படும் நிலவுடைமையாளர்களின் கட்சி வேட்பாளர்கள் யாராவது தலித்துகளுக்காக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சட்டமன்றத்திலோ, பொது வெளியிலே குரல் கொடுத்து இருக்கின்றனரா? அவர்களால் தலித்துகளுக்கு எள்முனையாவது நன்மை நிகழ்ந்து இருக்கின்றதா? இந்த நிலையில் பொது கட்சிகளில் இருந்து தனித்தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்துவதை சட்டத்தின் வழி நின்று தடைசெய்வதற்க்கு தலித் கட்சிகள் ஒன்றினைந்தோ அல்லது தனித்தோ ஏன் போராடவில்லை.? குறைந்தபட்சம் தனித்தொகுதிகளிலாவது தலித் கட்சிகள் மட்டும் போட்டியிட்டு தனக்கான பெரும்பான்மை, நிருபிக்கலாம், அல்லது திட்டங்களி்ல் முன்னுரிமை பெற இயலும் அல்லவா? இதை ஏன் செய்வதில்லை, ?
கூட்டணி கூட்டணி என்று மீண்டும் மீண்டும் நிலவுடைமையாளர்களின் அரசியல் கட்சிகளையே சார்ந்து இருப்பது ஏன்? திராவிட கட்சிகளின் அல்லது மாநில கட்சிகள் தலித் கட்சிகளின் கூட்டணி வைப்பது என்பது சேரிமக்களின் வாக்குகளை பிரிக்கும் சூழ்ச்சியில்லையா? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த உண்மை தெரிந்தும் தெரியாதது போல இருக்கப்போகின்றனவோ தலித் அரசியல் கட்சிகள்.

இரவல் செருப்பை விட வெறுங்காலில் நடப்பது சுயமரியாதை மிகுந்தது என்று தமிழகத்தின் சேரிகளில் இருக்கும் ஏழைகளுக்கு புரிகின்றது, தலித் தலைமைகளுக்கு எப்போது புரியுமோ? இறுதியாக ஒன்று, ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள், அதைப்போலவே சேரி ரெண்டு பட்டால் நிலவுடைமை அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமாக அமைகின்றது. இதை புரிந்து கொண்டு சேரிகளெல்லாம் ஒன்றுபட்டு நிலமற்றவர்களுக்கு கொண்டாட்டம் நிகழ்வது வரும் சட்டமன்ற தேர்தலில் தலித் அரசியல் கட்சிகளின் தலைமையின் கைகளில்தான் உள்ளது.



அம்பேத்கரின் பொன்மொழிகள்















இதையும் படியுங்கள்