Showing posts with label புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள். Show all posts
Showing posts with label புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள். Show all posts

Thursday, August 8, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 4


குங் ஃபூ ஹஸ்டில் ( 2004 - ஆங்கிலம்):

குங் ஃபூ ஹஸ்டில் அதிரடி நகைச்சுவைப் படமாகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஸ்டீபன் சோவ் ஆவார். இது இவருக்கு இயக்கத்தில் 7 வது படமாகும். நடிப்பில்( தொலைக்காட்சி தொடர்கள் உட்பட) 61 வது படமாகும். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது கொலம்பியா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். தயாரித்தது, கொலம்பியா திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆசியா. ஸ்டார் ஓவர்சீஸ், பெய்ஜிங் பிலிம் ஸ்டுடியோ, தாய் பிலிம் இன்வெஸ்ட்மென்ட், சீனா திரைப்பட குழுமம், ஹீய் சகோதாரர்கள், ஆகியோர்கள் இனைந்து தயாரித்துள்ளனர். 



இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்:

ஸ்டீபன் சோவ் – சிங் கதாபாத்திரம், கோடாறிக் குழுவில் சேர்ந்து கெட்டவனாகத் துடிக்கும் நபர்.
யூயோன் வாவ் – தாய் சி சுவான் மாஸ்டர். பன்றி நகர குடியிருப்பின் உரிமையாளர்.  தாய் சி சென் மாஸ்டர்
சூ சியோன் – பன்றி நகர குடியிருப்பின் உரிமையாளர் மனைவி. சிங்க கர்ஜனை குங்பூ மாஸ்டர்.
சான் குவாக் குவென் – சாம் அண்ணன், கோடாறிக் கூட்டத் தலைவன்.
யங் சியாவ் லுங் – உலகின் அதிக கொலைகளைச் செய்த கொலைகாரன்
டங்சிவ் வாவ் – டோனட் – பேக்கரியாளர், ஓய்வு பெற்ற என் கோன கு ங்பூ மாஸ்டர்
சூ சி லிங் – டைலர். இரும்புக் கயிறு குங்பூ மாஸ்டர்.
சிங் யூ – கூலி – டாம் பள்ளியின் 12 குத்து குங்பூ மாஸ்டர்.
லிம் சி சௌங் – போன் - சிங்கின் உதவியாளர் மற்றும் பலரும் நடித்துள்ள வெற்றிப்படம் இது.

குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்:

இந்தத் திரைப்படத்தின் கதை 1940 ஆம் ஆண்டில் ஷங்காய் நகரத்தில் நடப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு ஷங்காய் நகரத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கும் சூழலில், ஷங்காய் நகரத்தில் இரண்டு பெரிய ரவுடிக் கும்பல் ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலைக் கூட்டம் மற்றும் கோடாரிக் கூட்டம். இதில் கோடாரிக் கூட்டத்தின் தலைவன் சாம் அண்ணன், முதலைக் கூட்டத்தின் தலைவன் மற்றும் அவரது அழகான மனைவியையும் கொன்று ஷங்காய் நகரம் முழுவதையும் கோடாரிக் கூட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றான்.

இந்நிலையில் சாம் மற்றும் அவரது உதவியாளர், ஷங்காய் நகரத்தில் உள்ள ஏழைகளின் குடியிருப்புப் பகுதியான பன்றி நகரக் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றனர், தாங்கள் கோடாரிக் கும்பலில் இருந்து வருவதாக கூறி மாமுல் வசூலிக்க முயற்சிக்கும் போது, பன்றி நகரக் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கூலி மாஸ்டர் மற்றும் டைலர் மாஸ்டர், பேக்கரி மாஸ்டர் ஆகியோரால் விரட்டியடிக்கப்படுகின்றனர். அந்தநேரத்தில் தற்செயலாக அங்கு வரும் கோடாரிக் கும்பலிடம் தாங்களும் கோடாரிக் கும்பல்தான், தங்களை இங்குள்ளவர்கள் அடித்துவிட்டதாக கூறுகின்றனர்.

நகரத்தில் உள்ள மொத்த கோடாரிக் கும்பலும் பன்றி நகரக் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றது. அவர்கள் அனைவரையும் அங்குள்ள குங்பூ மாஸ்டர்கள் அனைவரும் இனைந்து அவர்களை விரட்டியடிக்கின்றனர். இது கோடாரிக் கூட்டத்தலைவனுக்கு கௌரவப் பிரச்சனையாகின்றது, பன்றிநகரக் குடியிருப்புப் பகுதியில் உள்ள குங்பூ மாஸ்டர்களைக் கொலை செய்ய வாடகைக் கொலைகாரர்களை இசை வாத்தியக் கருவி இசைப்பாளர்களாக பன்றி நகர குடியிருப்புக்கு அனுப்புகின்றான். அவர்கள் கூலி மாஸடரை மட்டும் கொலை செய்கின்றனர், மற்றவர்களை அவர்களால் கொலை செய்ய முடியாமல் வாடகைக் கொலைகாரர்கள், பன்றி நகர குங்பூ மாஸ்டர்களால் கொல்லப்படுகின்றனர்.

கொதித்துப் போன சாம் அண்ணன், உலகின் அதிக கொலை செய்த கொலைகாரன் அடைபட்டிருக்கும், சிறையை சிங்கின் அபரிதமான திறனான பூட்டைத் திறக்கும் திறனைக் கொண்டு பீஸ்ட் அடைபட்டிருக்கும் மிகு திறன் கொண்டோருக்கான சிறைச்சாலையில் இருந்து தப்பிவிக்கப்படுகின்றான். பின்னர் பீஸ்ட்டுக்கும் பன்றி நகரக் குடியிருப்பு உரிமையாளரையும் அவர் மனைவியையும் கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்களுக்குள் சண்டை நிகழ்கின்றது, அந்த சண்டையில் சிங்க கர்ஜனையை புத்தரின் பெரிய மணியை ஒலிபெருக்கியாகப் பயன்படுத்தி பீஸ்டைத் தோற்கடிக்கின்றனர்.


அதன் பின் அவர்களை ஏமாற்றி பீஸ்ட் கடுமையாகத் தாக்கும் போது சிங் பீஸ்டை கட்டையால் தாக்க, பீஸ்டின் ஒட்டு மொத்த கோபமும் சிங்கின் மீது திரும்பி, சிங்கை படு மோசமாகத் தாக்க பின் பன்றி நகர உரிமையாளர்களான கணவன் மனைவி இருவருமே சிங்கை காப்பாற்றுகின்றனர். அவர்களே மருத்துவமும் செய்கின்றனர். தாய்சியின் மருத்துவத்தால் சிங் விரைவாகக் குணமடைந்து அவருக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து நல்வழிக்கு திரும்பகின்றார்.

இறுதியாக பீஸ்டுக்கும் சிங்குக்கும் பன்றி நகரக் குடியிருப்பில் சண்டை நிகழ்கின்றது, பீஸ்ட் சிங்கை தாக்கி மேலே துாக்கி வீசியெறிய சிங் மேகக் கூட்டத்தையும் தாண்டி புத்தரை மேக வடிவில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்று புத்தரின் உள்ளங்கை குங்பூ கலையைக் கற்றுத் திரும்புகின்றான். அதனைக் கொண்டு பீஸ்டை தோற்கடிக்கின்றான். தோற்றுப் போன பீஸ்ட் இதை எப்படிக் கற்றுக்கொண்டாய் எனக் கேட்க்க சிங் உடனே, சொல்லித்தரட்டுமா எனக் கேட்க பீஸ்ட் சிங்கை மாஸ்டராக ஏற்றுக் கொள்கின்றான்.

குங் ஃபூ ஹஸ்டில் படத்தின் வேறு சில சிறப்புகள்

இந்தத் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளியான The House of 72 Tenants திரைப்படத்தின் தழுவலாகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள குங்பூ மாஸ்டர்கள் அனைவரும் 1970 களில் குங்பூ படங்களில் கதாநாயகனாக நடித்தவர்களாவார்கள். இந்த திரைப்படத்திற்கு முதலில் சண்டைக் காட்சிகளை அமைத்தவர், ஆரம்பகாலங்களில் ஜாக்கிச்சான்வுடன் நடித்த சமோ ங் ஆவார். இடையில் சமோ ங் உடல் நலிவுற்றதும், இந்த படத்தின் சண்டைக்காட்சிகளை அமைக்க Yuen Woo – Ping ஐ நியமிக்கின்றார் ஸ்டீபன் சோவ், இவர் ஏற்கனவே வெற்றித் திரைப்படங்களான, Crouching Tiger, Hidden Dragon, மற்றும் The Matrix ஆகியப் படங்களுக்குச் சண்டைக்காட்சிகளை அமைத்தார்.

அதனால்தான், இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் சண்டைக்காட்சிகள், The Matrix திரைபபடத்தில் உள்ளதைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருபபதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இசை பழமையான சீன இசைக்கருவிகளைக் கொண்டு அமெரிக்க பாணியில் அமைக்கப்பட்டதாகும். இதனால் இதன் இசை சீனா, தாய்லாந்து, மலோசியா போன்ற நாடுகளில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் வரவேற்பை பெற்றது. மேலும் திரையிட்ட எல்லா நாடுகளிலும், வசூலை வாரிகுவித்தது. பல விருதுகளையும் வாரி குவித்தது. அதையெல்லாம் விவரித்து எழுதினால் இந்த கட்டுரையின் போக்கு மாறும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்துகள்:

புத்தர் பரிநிபானம் ( உடலைத் துறத்தல்)அடைந்து 283 ஆண்டுகளுக்கு பிறகு அரியனையேறிய மாமன்னர் அசோகர். புத்தச் சமயத்தைப் பரப்ப பல நாடுகளுக்கும் புத்த பிக்ககளை அனுப்பியதைப் போலவே சீனாவுக்கும் புத்தச் சமயத்தைப் பரப்ப தனது மகள் சங்கமித்ராவை அனுப்பியதாக அசேகரின் பெஷாவர் கல்வெட்டும், அசோகவந்தனா நுாலும் குறிப்பிடுகின்றது. அதைப் போலவே, புத்தர் பரிநிபானம் அடைந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியவர், பல்லவ வம்சத்தைச் சேர்ந்த அரசர். போதி தர்மர். இவருடைய சமய குருவாக இருந்தவர். புத்தச் சமய பிக்குனி. பிரக்யதாரா அவருக்கு வந்த சீன தேசத்து அழைப்பை ஏற்க முடியாமல் அவர் பரிநிப்பானம் அடைந்த போது அவருடைய அனுக்கச் சீடரான, போதிதர்மாவிடம் சீன தேசத்துக்கு புத்தச் சமயத்தை பரப்ப செல்லுமாறு ஆனையிட, அதனையேற்ற புத்த பிக்கவான போதி தர்மா கி.பி.520 ஆம் ஆண்டு சீனா சென்றார். சீன புத்தச் சமய மகாயான மரபில் போதிதர்மர் 28 வது தலைமை பிக்குவாக பட்டியலிடப்படுகின்றார்.
மற்ற குங்பூ திரைப்படங்களுக்கும் குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்துக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே, மற்ற திரைப்படங்களில் போதி தர்மர் சீனத்தைச் சேர்ந்த புத்தச் சமயப் பிக்குகளுக்குக் கற்பித்த 72 வகையான குங்பூ முறைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வகையானவற்றை மட்டுமே பயன்படுத்தியிருப்பர், ஆனால் இந்தத் திரைப்படத்தில் மட்டுமே போதி தர்மர் போதித்த 72 வகையையும் பயன்படுத்தியிருப்பர். அவற்றில் புத்தரின் உள்ளங்கை (Buddha’s Palm) முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பார்.

இந்தத் திரைப்படத்தில் உள்ள அனைவருமே சண்டைக் காட்சிகளின் போது வெவ்வேறு விதமான குங்பூ முறைகளில் சண்டையிடவர். கோடாறிக் கும்பலில் உள்ள நபர்கள் கூட வெவ்வேறு முறைகளில் சண்டையிடுவதாகக் காண்பிக்கப்படுகின்றனர். சிலகாட்சிகளில்.

புத்த உள்ளங்கை: (தியானம்)

புத்தரின் உள்ளங்கை என்பது இரண்டு விதமானப் பொருளையும் பயன்பாட்டையும் குறிக்கும் ஒரு சொல்லாடலாகும்.
முதல் வகையான சொல்லாடல், தியானத்துடன் தொடர்புடையது, புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பும் பின்பும், தியானத்தின் போது பயன்படுத்திய முத்திரைகளைக் குறிக்கும் பொழுது பொதுவாக புத்தரின் உள்ளங்கை எனக் குறிக்கப்படுவதுண்டு. இந்திய வரலாற்றில் பகவான் புத்தர், 1888க்கும் அதிகமான முத்திரைகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் சீனாவில் புத்தர் 2800க்கும் அதிகமான முத்திரைகளைப் கண்டுபிடித்ததாக குறிப்பு உள்ளது. ஜப்பானில் 3800க்கும் அதிகமான முத்திரைகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பு உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் முத்திரைகள் என்பது பகவான் புத்தரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதே இங்கு நான் பதிவிட விரும்பும் தகவல்.

இருப்பினும் புத்தர் குறித்த எழுத்துக்களிலும், சித்திரங்கள், சிற்பங்கள், சிலைகள், என பலவற்றிலும் பெரும்பாலும் புத்தர் கீழ்கண்ட பத்து வகையான முத்திரைகளோடு மட்டுமே காட்சித் தருகின்றார். அவை

1.   அஞ்சலி முத்திரை
2.   உத்ரபோதி முத்திரை
3.   அபய முத்திரை
4.   விட்ராக் முத்திரை
5.   வஜ்ரா முத்திரை
6.   கர்ண முத்திரை
7.   வரத முத்திரை
8.   பிம்பிசார முத்திரை
9.   தியான முத்திரை
10.  தம்ம சக்ர முத்திரை இவைகள் புத்தரின் தியான முத்திரைகள் என அழைக்கப்படுகின்றது. இவற்றிலும் புத்தரின் உள்ளங்கைக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

புத்தரின் உள்ளங்கை( Buddha Palm) (குங்பூ)

புத்தரின் உள்ளங்கை முறைக்கு, ரு லாய் உள்ளங்கை அல்லது செலிஸ்டியல் உள்ளங்கை என வேறுசிலப்  பெயர்களும் உள்ளன. புத்தரின் உள்ளங்கை என்பது குங்பூ சண்டையில் பயன்படுத்தும்  பல சண்டை நுட்பங்களைப் போன்றது, மற்ற சண்டை முறைகளில் எதிராளியின் மீது கைகளால், முஸ்டிகளால், விரல்களால், கை ஓரங்களால் தாக்குதல் நிகழ்த்துவோம். ஆனால், புத்தரின் உள்ளங்கை முறைய எதிராளியை தொடாமலேயே தாக்கும் முறையாகும்.
கராத்தேவில் ஷூட்டோ, டேக்வாண்டோவில் நம்முடைய கை கத்தியைப் போன்று செயல்படும். ஆனால் புத்தரின் உள்ளங்கை முறையில் உள்ளங்கை கத்தியைப் போன்று அல்லது கூர்மையான ஆயுதம் போலச் செயல்படும்.  இந்த முறையில் ஒருவர் நிபுனத்துவம் பெற்றிருப்பாரெனில் அவரது உள்ளங்கை எதிராளியைத் தொடராமலேயே அவரை தாக்கும் வல்லமை பெற்றிருக்கும். மேலும் அது எத்தகைய கடினமானப் பொருளாக இருந்தாலும் அதை துாள் துாளாக்கும் அளவுக்கான வலிமையுடன் செயல்படும்.

இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளும் ஒருவர், ஆரம்ப நிலையில் மென்மையானப் பொருள்களில் துவங்கி, பின் மரக்கட்டைகளில் பயிற்சியெடுத்து, அதன் பின்னர் பாறைகளின் மீது பயிற்சி செய்து, இறுதி நிலையாக அதாவது மிகு நிபுணத்துவம் பெற்றவராக ( மாஸ்டர்) நிலை எய்தும் போது ஒரு பாத்திரத்தில் உள்ள சிறு துகளை அல்லது துரும்பை இரு சம பகுதியாகப் பிளக்க வேண்டும். இந்த நிலையை அடைய ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.

இதைத்தான் சிங் சிறுவயதில்  ஊமை பெண்னை ரவுடிக் கும்பலிடம் இருந்து காப்பாற்றும் பொழுது காட்சிப் படுத்தப்படும். கற்றுக் கொள்ள கடினமானதாகத் தோன்றினாலும் புத்தரின் உள்ளங்கை முறையைப் பயிற்சி எடுக்க உடல் பலமாக இருக்க வேண்டும் என்னும் தேவையில்லை. மாறாக பஞ்சபூத சக்திகளை தன் உடல்வழியாக வெளியேற்றும் அதே வேலையில் பிரபஞ்சத்திலுள்ள பஞ்சபூத ஆற்றலோடு இனைத்து எதிராளியைத் தாக்கும் நுட்பம் தெரிந்திருந்தாலே அவர்தான் புத்தரின் உள்ளங்கை முறையில் மாஸ்டர் எனப் போற்றப்படுகின்றார். குங் ஃபூ ஹஸ்டல் திரைப்படம் இந்த புத்தரின் உள்ளங்கை முறையை பிரமாண்டமான சக்தியாகப் பயன்படுத்தமுடியும் என்னும் நம்பிக்கையை இந்த முறையை பயில்பவர்களுக்குள் ஆழமாகக் கொண்டுச் சென்ற படமாகும்.  

நிறைவாக, புத்தரின் உள்ளங்கை தியான முறைக்கும், குங்பூ முறைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குவது பொருத்தமாக கூடுதல் புரிதலை உண்டாக்கும் என்பதால் விளக்க விரும்புகின்றேன். பொதுவில் தியானம் என்பது, பிரபஞ்ச ஆற்றலை ( Cosmic Rays) ஈர்க்கும் ஊடகமாக உள்ளங்கையை பயன்படுத்தும் முறையாகும். தியானிக்கும் போது நமது  உள்ளங்கை பிரபஞ்ச ஆற்றலை ஈர்பதால் நமது உடலும் உள்ளமும் இயக்கச் சமநிலை அடைகின்றது. ஆனால் குங்பூ முறையான புத்தரின் உள்ளங்கை முறையில், நமது உடலில் உள்ள பிரபஞ்ச ஆற்றலை நமது உள்ளங்கைகளில் இருந்து முதலில் வெளியேற்றி, அதனோடு பிரபஞ்ச ஆற்றலையும் சேர்த்து பேறாற்றலாக மாற்றி எதிராளியை தொடாமல் தாக்குதல் நிகழ்த்துவதாகும். இந்த கலையைப் கற்றுக் கொள்ள தாய்சி அடிப்படைப் பயிற்சியும் அவசியமாகும்.
தாய்சி கலை குறித்தும் போதி தர்மரின் போதனைகள் மற்றும் அவரின் புத்தச் சமயப் பங்களிப்பு குறித்து லங்கவாத சுக்தத்தில் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


Sunday, July 28, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 3



ஆங் பேக் ( Ong – Bak) ஆங்கிலம்

       ஆங் என்னும் தாய்லாந்து நாட்டின் சொல்லுக்கு உடல் உறுப்புகளில் தலை என்று பொருளாகும். பேக் என்னும் தாய்லாந்து சொல்லுக்கு பாதுகாத்தல் என்னும் பொருளாகும். ஆங் பேக் திரைப்படத்தின் முழுக்கதையும் அதன் தலைப்பிலேயே அடங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்.
·         டோனிஜா – டின்
·         பேட்சை ஓம்கம்லோம் – ஜார்ஜ் என்கின்ற அம்ளே
·         பும்முவாய் யோத்கமல் – மோதாய் மற்றும் பலர், நடித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் இந்த திரைப்படம், 21ம் தேதி சனவரி மாதம் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு பெயர்களிலும் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் டோனிஜாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையும் உலகெமெங்கும், வெற்றிகரமாக ஓடிய முதல் திரைப்படமாகும்.

ஆங் பேக் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்:
      
வடக்கிழக்கு தாய்லாந்தில் உள்ள பான் நாங் பிரது (Pan Nong Pradu) என்னும் கிராமத்தில் உள்ள மிகப் பழமையான புத்தர் விகாரில் உள்ள  புத்த வெண்கலச் சிலையின் பெயர் ஆங் பேக். புத்தர் சிலையின் தலையை திருடும் ஒரு கும்பல், ஆங்பேக் புத்தர் சிலையின் தலையை திருடுச் சென்றுவிடுகின்றது.  (அந்த புத்தர் சிலையின் முகத்தில் இருக்கும் தழும்பு, ஏற்கனவே நடந்த ஏதோ ஒரு கலவரத்தினால் வெட்டுக்காயம்பட்டு மீ்ட்க்கப்பட்ட விவரத்தை நமக்கு காட்சியாகவும். பின்னர், பல புத்தர் சிலைகளின் தலைகளில் இருந்து எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கின்றது)
       
திருடப்பட்ட புத்தரின் தலையை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் மீட்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்திலுள்ள டின் என்னும் இளைஞன் அந்த கிராமத்திலுள்ள புத்த பிக்குவிடமிருந்து முவாய் (Muay) தாய்லாந்து நாட்டின் கிராமப்புற தற்காப்புக் கலையை கற்றுத்தேர்ந்தவன். அவனே தன்னார்வத்துடன் அந்தச் சிலையை மீட்க தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங் கிளம்பிவருகின்றான். அவனுடைய பயணத்துக்கு அந்த கிராமத்து மக்கள் தங்கள் கைவசமுள்ள நகை, பணம், பொருட்களை கொடுத்து அனுப்புகின்றனர்.
       
அதே கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்றழைக்கப்படும் அம்ளே என்னும் இளைஞன் பாங்காங்கில் உள்ளதால் அவனை அவனுடையத் தந்தையின் கடிதத்துடன் சென்று சந்திக்கின்றான். அம்ளே ஆரம்பத்தில் டின்னை வைத்து பந்தயச் சண்டையில் போட்டியிட்டு பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கின்றான், பின்னர் மனம் திருந்தி, ஆங்பேக் சிலையின் தலையை மீட்க உதவிச் செய்கின்றான். உடன் அவனுடைய காதலியும் உதவி செய்கின்றாள்.
     
பின்னர் புத்தர் சிலையின் தலையை திருடும் கும்பல் தலைவன் கொம்துவன் ஆங்பேக் சிலையின் தலையுடன் தாய்லாந்து பர்மா எல்லையில் உள்ள குகையில் இருப்பதை அறிந்து அங்குச் செல்கின்றனர். அந்தக் குகையில் உள்ள பிராமாண்டமான புத்தரின் கற்சிலையின் தலையை துண்டிக்கும் வேலை நடைபெற்றுக்கொண்டிருப்பதால்,  அந்தக் குகைக்குச் சென்று டின்னும், ஜார்ஜீம் சண்டையிடுகின்றனர். சண்டையின் போது, குகையில் உள்ள பிராமாண்ட கற்சிலையின் தலை உருண்டு விழுகின்றது, ஜார்ஜ் ஆங் பேக் சிலையைக் காப்பாற்றி டின் வசம் தந்துவிட்டு, தனது அன்பை தன் ஊர்காரர்களுக்கும் அப்பாவிடமும் தெரிவிக்கச் சொல்லி உயிரிழக்கின்றான்.
       
இறுதியாக, ஆங்பேக் புத்தர் சிலையின் தலை பான் நாங் பிரது கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு புத்தர் சிலையுடன் தலை பொருத்தப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. ஜார்ஜின் அஸ்தி புத்த பிக்குவின் கரங்களால் யானையின் மீது கொண்டுவரப்பட்டு மரியாதைச் செலுத்தப்படுகின்றது. ஜார்ஜின் காதலியும் அந்த கிராமத்திலேயே தங்கிவிடுகின்றாள்.

ஆங் பேக் திரைப்படத்தின் சிறப்புகள்:
       
திரைப்படத்தின் துவக்கத்தில் காண்பிக்குப்படும் மரத்தின் மீது கொடியேற்றி அதனை கைப்பற்றுவதற்காக நடக்கும் சண்டை விளையாட்டு ஒவ்வொரு நாட்டிலுள்ள கிராமத்திலும் நடக்கின்ற விளையாட்டாகும். இதனை காட்சிபடுத்தியிருப்பது இந்தப் படத்தின் சிறப்பாகும். இந்தப் படத்திலுள்ள சண்டைக் காட்சிகள் முழுவதும் முவாய் சண்டைக் கலையைப் பயன்படுத்தி எடுக்கப்ட்டதாகும். தாய்லாந்து நாட்டின் பராம்பரியச் சண்டைக் கலையை முதன்முதலாகத் திரையில் பயன்படுத்தி உலகமெங்கும் அதற்கென ரசிகர்களை ஏற்படுத்தியதும் மற்றொரு சிறப்பாகும்.

தாய்லாந்து நாட்டின் புத்தச் சமய வரலாறு:
       
தாய்லாந்து நாடு புத்தச் சமயத்தில் தேரவாதத்தைப் பின்பற்றும் நாடாகும். தாய்லாந்து நாட்டின் புத்தசமய வரலாற்று நுாலின் படி புத்தரே, தாய்லாந்து நாட்டிற்குச் சென்று, புத்தச் சமயத்தைப் பரப்பியதாக தகவல் அளிக்கின்றது. ஸ்ரீலங்கா நாட்டின் மகாவம்சம் நுாலின்படி, பேரரசர் அசோகர், தாய்லாந்து நாட்டிற்கு புத்தச் சமயத்தைப் பரப்புவதற்காக சேனா தேரோ மற்றும் உத்தர தேரோ ஆகிய இரண்டு புத்தப் பிக்குகளிடம் புத்தரின் அஸ்த்தி மற்றும் புனிதமான சிலப் பொருட்களையும் தந்து அனுப்பியதாக சொல்கின்றது. அவ்வாறு புத்தர் தந்த புனிதப் பொருட்கள் இன்றும் தாய்லாந்து நாட்டின் நக்கோன் பத்தோம் (Nakon Pathon) ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும், அசோகரின் துாதர்கள் வந்த  இடத்தில் அசோகரின் நினைவுத் துான் வைக்கப்பட்டுள்ளது.
       
தற்போதைய நிலையில் தாய்லாந்து நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 94 சதவிகிதத்தினர் புத்தச் சமயத்தை பின்பற்றுவதாகவும், 4.6 சதவிகிதத்தினர் முஸ்லீம் சமயத்தையும் பின்பற்றுகின்றனர். இதர பிரிவுகளாக, சீக்கியர்கள், கிருத்துவர்கள், மற்றும் இந்துக்கள் வாழ்கின்றனர்.
       
தாய்லாந்து நாட்டில் உள்ள, புத்தச் சமயக் கோயில்களில், 310 கோயில்களை தாய்லாந்து நாட்டின் அரசர் பரம்பரையினர் வழிபடுவதற்காகவும், 39,883 கோயில்கள் தனியார் வசமிருப்பதாகவும் 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிவரம் சொல்கின்றது. 2,98,580 புத்த பிக்குகள் உள்ளனர். தாய்லாந்து நாட்டில் உள்ள அனைவருமே எப்போது வேண்டுமானாலும் குறுகிய கால பிக்குவாக மாறுவதற்கு வழியுள்ளது. இதனை ஆங் பேங் திரைப்படத்தில் ஜார்ஜின் கதாப்பாத்திரம் வழியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் கதாநாயகன் டோனி ஜாவும் 28 மே மாதம் 2010 ஆம் வருடம் தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் புத்த தேவாலயத்தில் புத்த பிக்குவாக தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படியான புத்த பிக்குவாக மாறினார்.


ஆங்பேக் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்தியல்கள்:
       
ஆங் பேக் திரைப்படத்தில் புத்தச் சமயக் கருத்தியல்கள் எதுவும் இடம்பெறவில்லை, மாறாக, இந்தியாவில் புத்தச் சமயத்தை அழித்த வரலாற்றை  நவீன பானியில் சித்தரிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், மகாபாரதத்தில் உள்ள கர்ணன், மற்றும் துரியோதனன் நட்பை நடப்புக் காலத்துக்கு மாற்றி தளபதி படமாகத் தந்ததைப் போல், இந்திய புத்தச் சமயத்தின் வீழ்ச்சியை நடப்புக் காலத்துக்கு ஏற்ற வகையில் சொல்லியிருப்பார்கள்.

இந்தியாவில் புத்தச் சமயம் வீழ்ந்த வரலாறு:
       
கி.மு. 185 ஆண்டில் மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி பேரரசரான, பிரகதர்த்தா விடம் தளபதியாக இருந்த பிராமணரான புஷ்யமித்ர சுங்கன், ஒரு இரானுவ அணிவகுப்பின்போது, பிரகதர்த்தா மௌரிய அரசரைக் கொன்று, இந்திய வரலாற்றில் சுங்க வம்சத்தின் ஆட்சியை துவக்கினார். புஷ்யமித்ர சுங்கன் சுங்க வம்சத்தின் முதல் பேரரசராக முடிசூடிக் கொண்டார்.
தனது பெயர் வரலாற்றில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என புஷ்யமித்ர சுங்கன் தனது பிராமண குருக்களிடம் கேட்டபோது, அசோகர் புத்த சமயத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய புத்த சமயத்தையும், நிறுவிய 84,000 ஸ்துாபிகளையும் அழித்தால் வரலாற்றில் நீங்கள் நீங்கா இடம் பெறுவீர்கள் என சொன்ன அறிவுரையை ஏற்று, அசோகர் உருவாக்கிய புத்தச் சமய நினைவுத் துாண்களை அழிக்கின்றார்.
       
எல்லாவற்றிற்கும் மேலாக, புத்த பிக்குகளின் தலையை கொண்டுவருவோருக்கு 100 தினார்கள் ( தங்க நாணயங்கள் ) பரிசலிக்கப்படும் என அரசாங்கத்தால் அறிவிப்பும் செய்கின்றார். இதன் காரணமாக மக்களும், பணத்துக்கு ஆசைப்பட்டும், அரசியல் லாபமடையும் பொருட்டும், பாதுகாப்புக்காகவும், புத்த பிக்குகளின் தலையைக் கொன்று தங்க நாணயங்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். மேலும்  அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நமது வீடுகளில் கல்யாணப் பூசனியை பலிகொடுக்கும் நிகழ்வை சுபச் சடங்கு மற்றும் அசுபச் சடங்கின் போது நிகழ்த்துகின்றோம்.
       
இந்த வரலாற்ற நிகழ்வையே டோனிஜா ஆங்பேக் திரைப்படத்தில் கதைக்களனாக்கியிருப்பார். புஷ்யமித்ரன் பேச்சுத்திறன் இல்லாத அரசன் என்பதை உருவகப்படுத்தவே, வில்லனுக்கு குரல் இல்லாமல் செயற்கைக் கருவிகளின் வழியாகப் பேசுவதாக நவீன குறியீட்டை வைத்திருப்பார். மேலும் இறுதிக் காட்சியில் இடம்பெறும் பிரமாண்ட புத்தர் சிலையின் தலை தகர்ப்பு மற்றும், புத்தரின் சிலைகளின் தலையை விற்பனை செய்வது என புஷ்யமித்திரன் வரலாற்றில் செய்த அனைத்தையும் வில்லன் செய்வதாகவே உருவகப்படுத்தியிருப்பார். 

இந்திய புத்தச் சமய வீழ்ச்சியை துணிச்சலாக படம் பிடித்த திரைப்படம் ஆங் பேக் ஆகும்.

ஆங் பேங் திரைப்படத்தின் தமிழ் லிங்க்




Wednesday, July 24, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 2



குங்பூ பான்டா -1 (2008 ஆங்கிலம்)

குங்பூ பான்டா அமெரிக்க கணிணி – இயங்கு (Animation)  வகைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை உலகம் முழுவதுமுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பிப் பார்க்கின்றனர். இது டிரீம்வொர்க்  இயங்கு (அணிமேசன்) திரைப்படமாகத்  தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ்ஆல் வெளியிடப்பட்டது. முதல் பாகம் ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது.


இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களுக்கு ஆங்கிலத்தில் குரல் வழங்கியவர்களின் பட்டியல்:

·         ஜேக் பிளாக்,(  போ – பான்டா கரடி)  
·         டஸ்டின் கொப்மான், ( மாஸ்டர். ஷீபூ - முயல்)
·         ஏஞ்சலினா ஜோலி, (மாஸ்டர். டைகர்ஸ் - பெண் சிங்கம் –)  
·         இயன் மக்கசென், ( தை லாங்க் – பனிச்சிறுத்தை )
·         சேத் ரோகன்,  ( மாஸ்டர்.மன்டிஸ் – வெட்டுக்கிளி)
·         லூசி லியு, (மாஸ்டர். வைப்பர். பச்சைப்பாம்பு)
·         டேவிட் கோஸ், (மாஸ்டர். கிரேன். கொக்கு)
·         ராண்டல் டுக் கிம்,( கிராண்ட் மாஸ்டர் ஊக்வே - ஆமை)  
·         ஜேம்ஸ் காங்,( திருவாளர். பிங்க். போ வின் வளர்ப்புத் தந்தை – வாத்து)
·         ஜாக்கி சான்  (மாஸ்டர். மங்கி – குரங்கு)
·         மைக்கேல் கிளார்க் டங்கன் (கமாண்டர். வசீர் – பனிச்சிறுத்தையை அடைத்திருந்த சிறையின் காவல் அதிகாரி) ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஆங்கிலத்தில் குரல் அளித்தவர்கள்.


( போ மற்றும் பியூரியஸ் 5 குழுவினர்)

இந்த திரைப்படம் முதலில் அமெரிக்காவில் 6 ஜீன் 2008 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு பின் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டபின் குங்பூ பான்டா திரைப்படத்தை அமெரிக்காவில் மேலும் 4,114 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்குப் பின் அதே மாதத்தில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து உலக மொழிகளிலும் வசூலை வாரிகுவித்தது இந்த திரைப்படம். சீனாவிலும் இந்தத் திரைப்படம் சீனர்களின் கலாச்சாரத்தை உயர்த்திபிடித்த காரணத்தால் வெகுவான வரவேற்பைப் பெற்று வரலாறு படைத்தது.
அமெரிக்காவில் திரையிட்ட முதல் வாரத்தில் 60.2. மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வசூலை வாரிகுவித்தது. இரண்டாவது வாரத்தில் 4,114 திரையரங்குகளில் திரையிட்ட பிறகு 14,642 மில்லியன் அமெரிக்க டாலரை சராசரியாக வசூலித்தது. சீனாவிலும் இந்த திரைப்படம் வெளியிட்ட காலத்தில் இருந்து, 110 மில்லியனுக்கும் அதிகமான யென் வசூலித்தது. சீனாவில் இந்த திரைப்படம், 100 மில்லியன் யென்னுக்கும் அதிகமாக வசூலித்த முதல் அனிமேசன் திரைப்படம் என்னும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

விருதுகள்:

குங்பூ பான்டா திரைப்படம் 14 அன்னி ( Academy Award for Best Animated Feature) விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுக் குவித்தது.

கதைச் சுருக்கம்:

பன்டையச் சீனாவின் அமைதிப் பள்ளத்தாக்கில் தன் தந்தையுடன் நுாடுல்ஸ் விற்பனை செய்துகொண்டிருக்கும் போவுக்கு, தலை சிறந்த குங்பூ வீரனாக வேண்டும்( டிராகன் வாரியர்) என்னும் கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அமைதிப் பள்ளத்தாக்கில் நடைபெறும் டிராகன் வீரருக்கான தேர்வில் போவும் கலந்து கொள்கிறார்.  

(ஊகவே ஷீபூவிடம் போவுக்கு குங்பூ பயிற்சி தரச் சொல்லுதல்)
மூத்த தலைமை ஆசிரியரான ஊக்குவே போவை டிராகன் வாரியராகத் தேர்வு செய்யப்கின்றார். அதன் மூலம் அமைதிப் சமவெளி மற்றும் அதன் மடம், மக்களையும் காப்பாற்றும் பொருப்பும் போ வை அடைகின்றது.
இருந்தும் போவுக்கு குங்பூ தெரியாத காரணத்தால், துடிப்பான 5 வீரர்களிடமும், ( Furious Five) ஷீபூ மாஸ்டரிடமும், அவமரியாதைக்கு உள்ளாகின்றார், இருந்தும், தான் குங்பூ கற்றுக்கொண்டேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். கொழுத்தப் பாண்டாவகை கரடியான போ எவ்வாறு குங்பூ கற்றுக்கொள்ள முடியும் என்ற அவநம்பிக்கையோடு மாஸ்டர் ஷீபூ குங்பூ கற்றுத்தருவதை ஊக்வே கண்டித்து, சிறந்த ஆசிரியரான உங்களால் ஒரு கொழுத்த பாண்டா கரடிக்கு குங்பூ கற்றுத்தர முடியும் என்னும் நம்பிக்கையில்லாமல் பயிற்சியளித்தால், நீங்களும் கற்பிக்க முடியாது. போவும் கற்றுக்கொள்ள இயலாது, எனவே நம்பிக்கையுடன் போவுக்கு குங்பூ கற்றுத்தரச் சொல்கின்றார். அதற்குப் பின், ஷீபூ போவுக்கு ஏற்ற வகையில் குங்பூ கற்றுத்தருகின்றார், போவும் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றார்,

( குங்பூ பயிற்சியின் போது பான்டா)
கொடுமனம் கொண்ட தாய்லாங் அமைதி பள்ளத்தாக்கில் உள்ள மடத்தையும் டிராகன் சுருளை ( Dragon Scroll) கைபற்றத் துடிக்கின்றார், தன்னை டிராகன் வாரியராக தெரிவு செய்யாததற்காக ஷிபூ மாஸ்டரிடம் கடுஞ்சினம் கொண்டு அவரை தாக்குகின்றார், அதற்குப் பின் போ, தாய்லாங்கிடமிருந்து அமைதி சமவெளியையும், மடத்தையும் டிராகன் சுருளையும் காப்பாற்றுவதே இந்த திரைப்படத்தின் கதை, போவும் மடத்தில் உள்ள மற்ற குங்பூ வீரர்களும் துடிப்பான ஐவர் ( Furious Five) இவர்களைச் சுற்றி நிகழ்வதே கதைகளமாகும்.

குங்பூ பான்டா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்துகள்:

குங்பூ பான்டா முழுக்க முழுக்க நகைச்சுவையும் வீரமும் நிரம்பியத் திரைப்படம் என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் நன்கு புரியும். இருந்தாலும் அந்தப் படம் முழுவதும் புத்தச் சமயக் கருத்துகளால் நிரம்பி வழிகின்ற திரைப்படமாகும்.
திரைப்படத்தின் வசனங்கள், காட்சிகள், குறியீடுகள் என அனைத்தும் புத்தச் சமயக் கருத்துக்களால் நிரம்பியப் படம் குங்பூ பான்டா ஆகும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் அவரவர்களுக்கென கற்றுக்கொள்ள ஒரு தகவலையும் செய்தியையும் வைத்திருப்பது இந்த திரைப்படத்தில் உள்ள புத்தச் சமயத தத்துவ இயல் சிறப்பாகும்.
அடிப்படையில் சீனாவிலும், ஜப்பானிலும் மகாயான புத்தச் சமயப் பிரிவு ஆதிக்கம் செலுத்துவதால், இந்த திரைப்படம் மகாயான புத்தச் சமயப் பிரிவைச் சார்ந்த திரைப்படமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகாயானப் பிரிவில் உள்ள நிச்சிரென் புத்த சமய (Nichiren Buddhism) கருத்துகளை உள்ளடக்கியதாகும் இந்தத் திரைப்படம்.

நிச்சிரென் புத்தச் சமயம்:

நிச்சிரென் ஜப்பானிய நாட்டில் வாழ்ந்த மகாயானப் புத்த துறவியாவார். ( 1222 -1282) 13ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். மைத்ரேய புத்தர் மீண்டும் பிறப்பெடுத்து தாமரை சூக்தத்துக்கு ( Lotus Sutra) உரையெழுதுவார் என நம்பும் மகாயான புத்தச் சமயப் பிரிவைச் சேர்ந்தவராக நிச்சிரென் இருந்ததால், தாமரை சூக்தத்துக்கு அவரே உரையெழுதினார். அதனை ஜப்பானிய பிக்குகளும் ஏற்றுக் கொண்டனர்.  தாமரை சூக்தத்தின் கருத்துக்களையே நிச்சிரென் புத்தச் சமயமாக போதித்தார்.
நிச்சிரென் புத்தச் சமயம், ஜப்பான் நாட்டின் புத்தச் சமய இயக்கமாகும். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் சமயமாகும். அமெரிக்காவில் 6 நபர்களில் ஒருவர் புத்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருக்கின்றார், என புள்ளிவிவரம் சொல்கின்றது. இந்த நிச்சிரென் புத்தச் சமயம் அமெரிக்காவிலும் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



(ஜப்பானிலுள்ள நிச்சிரென் வெண்கலச் சிலை)


தனிநபரின் ஞானமடைதலும், மன அமைதி பெறுவதுமே உலக அமைதிக்கான வழியாக நிச்சிரென் புத்தச் சமயத்தினர் நம்புகின்றனர்.  மேலும் அவர்களின் நம்பிக்கை இந்த உலகத்திலுள்ள அனைவருக்குள்ளும் புத்தரின் ஞானக் கருத்துகள் உள்ளுனர்வாக உள்ளதால் இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் முழு ஞானம் அடைவது அனைவருக்கும் சாத்தியமே என்பதே நிச்சிரென் புத்தச் சமயத்தினரின் முழு நம்பிக்கையாகும். நிச்சிரென் புத்தச் சமயத்தினரின் கோட்பாடான உடனடி ஞானம் ( Instant Enlightment) த்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமே குங்பூ பான்டா.

குங்பூ பான்டா 1 திரைப்படத்தில் உள்ள நிச்சிரென் புத்தச் சமயக் கருத்துகள்:

இந்த திரைப்படத்தில், தேரவாத புத்தச் சமயத்தினரின் கருத்துகள், குறிப்பாக தம்மபதத்தின் கருத்துகள், ஷீபு போவுக்கு பயிற்சி அளிக்க தயார்படுத்தும் போது இடம்பெறுகின்றன. அதைத்தவிர, நிச்சிரென் புத்தச் சமயத்தின் 3 கோட்பாடுகள் திரைப்படத்தின் கருத்தோட்டத்திலும், திருப்புமுனையிலும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றது.

1.   ஷீபுவும் ஊக்வேயும் போவை டிராகன் வாரியராக தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறித்து உரையாடும் போது, ஷீபூ போ டிராகன் வாரியராக தெரிவு செய்யப்பட்டது ஒரு விபத்து என்பார். அதனை மறுத்து உக்வே இந்த உலகத்தில் விபத்து என எதுவும் இல்லை.  விபத்து என எதுவும் இல்லை, விபத்தென எதுவும் இல்லை என 3 முறை குறிப்பிடுவார். அதாவது, இந்த உலகம் பிரபஞ்ச ஒழுங்கு விதிகளின்படி இயங்குகின்றது. அதன்படியே நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் நமக்கும் மற்றவர்களுக்கும் நடக்கின்றது. என்பதை நாம் அதை உணர்ந்து கொண்டோமென்றால், எதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவோம். இதனை விளக்கவே விபத்து( தற்செயல் நிகழ்வு) என எதுவும் இல்லை எனக் குறிப்பிடுகின்றார்.

2.   போவின் வளர்ப்புத் தந்தையான திருவாளர். பிங்க். தனது மிகச் சிறந்த சுவையான சூப்பின் ரகசியத்தை போவிடம் சொல்லுவார். ரகசியம் என எதுவும் கிடையாது. அதாவது இந்த உலகத்தில் சிறந்ததென எதுவும் இல்லை, நமக்கு கிடைக்கின்ற எல்லாமே சிறப்பானது என நம்பவேண்டும் என்பார்.
(போ தாய்லாங்கை ஸ்கட்டுஸ் முறைப்படி சிறைக்கு அனுப்புதல்)

3.   இதனை போ ஷீபு மாஸ்டர் தனக்கு அளித்த டிராகன் ஸ்குரோலுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பார். மிகச் சிறந்த ரகசியம் என்று தன்னிடம் அளித்த டிராகன் ஸ்குரோல் காலியாக இருந்ததையும், அதில் தன் முகம் தெரிந்ததையும் வைத்து, தான் சிறந்தவன் என நம்ப வேண்டும், என்றும், அதை உணர்த்துவதே டிராகன் ஸ்குரோல் ரகசியம் என்பதை உணர்ந்து, தன்னால் டிராகன் வாரியராக முடியுமா என்னும் ஐயத்தைக் கலைந்து, தான் டிராகன் வாரியர் என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் பனிச்சிறுத்தையான தாய்லாங்குடன் சண்டையிட்டு ஸ்கட்டுஸ் முறையைப் பயன்படுத்தி மீண்டும் அவரை சிறைக்கு அனுப்புவது.
(போவும் ஷீபூவும் இறுதியில் மன அமைதி பெறுவது)

இவையாவுமே, உடனடி ஞானம் என்னும் நிச்சிரென் புத்தச் சமயக் கருத்துகள் ஆகும். இந்த கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே குங்பூ பான்டா திரைப்படம்.

#Buddhistconceptmovies
#Kungufuponda1
#Magayanabuddhism
#Nichirenbuddhism
#Instantenlightment
#maamaresan






இதையும் படியுங்கள்