Saturday, September 14, 2013

வாழ்க்கை பயணம்...கடந்து போகும்
பாதையெல்லாம்
கடல் அலை
தாலாட்ட
நடப்பதோன்றும்
கடற்கரை அல்ல...

கல்லும் முல்லும்
காலுக்கு மெத்தை
என்று சொல்லி
நடக்க இது ஒன்றும்
சபரிமலை அல்ல..

நடந்த பாதையில்
நலமாய் திரும்ப
இது ஒன்றும்
மகிழுந்து பயணம் அல்ல...

வாழ்க்கைப் பயணம்....

அது எப்படி இருக்கும்...

ஆள் நடமாட்டம்
இல்லாத
அனுபவமில்லாத
காட்டை அழித்து
பாதை செய்வது....

முள் கிழிக்கும்,
கல் அடிபடும்...
கால் வைத்த இடமெல்லாம்...
நெருஞ்சி குத்தும்...

உடலெங்கும் காயம்
எஞ்சியிருக்க
மனம் எங்கும்
முள் குத்திய வலியும்
தனிமையின் தவிப்பும் தகிக்க
ஒரு வழி பாதையாய்
பயணம் தொடர
எனக்கு பின் வருபவனுக்கு
சுகமான பாதை
கிடைக்கும்....

பாதை போட்டவனக்கு
என்ன கிடைக்கும்...
அசிங்கம்...
அவமானம்...காயம்...
வலி... வேறென்ன...
இதுதானே வாழ்க்கை பயணம்...

யாரேனும் தப்ப இயலுமா என்ன
இந்த பயனத்திலிருந்து...

இன்று எனக்கு
எதுவோ அதே தானே,
நாளை எனக்கு பின் வருபவனுக்கும்...
இடமும், களமும் மாறுபடும்...
அவ்வளவுதானே...
அதுதானே வாழ்க்கை பயணம்...

Tuesday, August 20, 2013

குட்பை குப்பை

ஒவ்வொரு நகராட்சி, பேருராட்சி, மாநகராட்சி என அனைத்து ஊர்களிலும் தலையாய சிக்கலாக இருப்பது. சந்தேகமே இல்லாமல் குப்பைகள்தான், இந்த குப்பை என்றதும், இந்த தேசத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் இவற்றை நீக்குவது எல்லாம் தலித்துகளின் வேலை என்று,ஒரு பொதுபுத்தி மட்டும் இருக்கின்றது எல்லோருக்கும், அரசுக்கும்.  அதைப் போலவே இன்று தேசமெங்கும், மனிதக் கழிவு, மருத்துவக் கழிவு, மின்பொருள் கழிவு, என கழிவுப் பொருட்களை பல வகைப்படுத்தினாலும், எல்லாமே குப்பைதான். இரண்டு வரியில் சொல்வதென்றால், மக்கும் குப்பை, மக்கா குப்பை. இவைதான் நிதர்சனமான உண்மை.

இவைகளை அகற்றும் பணியை அரசு தலித்துகளுக்கு மட்டுமே வழங்குகின்றது. இதுவும் ஒரு வகையான சாதிய பாகுபாடுதான். குப்பைகளை அள்ளுவதால் தலித் சமுகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பும், உளவியல் பாதிப்பும். சொல்லி மாளாது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், தமது கழிசடை நாவலில் இவர்களது வலியை சொல்லி இருப்பார். ஆனால் இங்கு நான் சொல்ல வந்த செய்தி அதுவல்ல.

ஊர் சுத்தமாக இருக்க குப்பைகளை அள்ளும் தலித் தொழிலாளியின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. காலை விடிந்ததும், நமக்கு நமது தெரு சுத்தமாக பளிச்சென்று இருக்கும், அதற்காக துப்புரவு தொழிலாளி படும் துயரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இரவெல்லாம் தெருவை கூட்ட வேண்டும், பெரும்பாலும் பெண் பணியாளர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆண் பணியாளர்கள் வண்டியி்ல் சென்று குப்பைத் தொட்டியில் இருக்கும், குப்பைகளை எடுத்துக் கொண்டு குப்பையைத் கொட்டும் இடத்தில் கொட்டுவார்கள். இவர்களின் பணியும் விடியற்காலை நேரத்தில் இருக்கும். பகல்பொழுது இவர்களுக்கு நரகமாக இருக்கும். ஊதியமும் மிக குறைவாகவே இருக்கும். அதனால் இவர்களின் குடும்பங்ள் வறுமையில் உழலும்.
கழிவுநீக்கும் பணியில் உள்ள அணைத்து துப்புரவு தொழிலாளிக்கும் தமது இழி நிலையை எண்ணியும், குப்பைகள், கழிவுகளின் குமட்டலை குறைக்க மது பழக்கமும் இவர்களிடம் காணப்படும். நாளடைவில் இவர்களை இந்த தொழில் குடி நோயாளிகளாக உருமாற்றி, குடும்பத்தை குலைத்து, ஏழையாகவே இறந்து போவததான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது இந்த தேசத்தில்.
இவர்களின் ஏழ்மை நிலையை மாற்றி இம்மக்களையும் ஒரு பெரும் வணிகர்களாக உருவாக்க இயலும், சற்றே மாற்றி சிந்தித்தால் போதும்.
எந்ததொழிலை குலத்தொழிலாகவும், இழிவுத் தொழிலாக பொது சமுகம் கட்டமைத்து இருக்கின்றதோ, அதே தொழிலில் இருந்து நாம் நமக்கான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்..

முதலில் துப்புரவு பணியில் உள்ள அணைத்து தொழிலாளர்களும், தமக்கென ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும். குப்பைகள கொட்டுவதற்கு பதிலாகவும், அல்லது எரிப்பதற்கு பதிலாகவும் தங்களுக்கான வருமானத்திற்கான வாழ்வியல் ஆதாரமாக அந்த பணியையும், குப்பையையும் பயண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

அந்த சங்கம் இரண்டு வகையான பணிகளை செய்ய வேண்டும்.

 1. மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரங்களை தயாரிக்க வேண்டும், அதை அவர்களுடைய கூட்டுறவு சங்கங்கள் வழியாவே விற்பனை செய்ய வேண்டும். அதன் வழியாக வருகின்ற லாபம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
 2. அல்லது குப்பையில் இருந்து தயாரிக்கின்ற இயற்கை உரத்தை, விவசாயம், மற்றும். இயற்கை உரங்கள் தயாரிக்கின்ற உர நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். அவை இயற்கை உரங்களுடன் கலந்து தயாரிக்கப் பயன்படும். உதாரணம், வேப்பம் புண்ணாக்குடன் இத்தகைய உரங்களை கலந்து தயாரித்தால் உயிர் சத்து மிகுந்த உரமாக இருக்கும். பயிரும் நன்கு விளையும்.
இந்த தொழில் நுட்பத்தை இந்த மக்களுக்கு விவசாய கல்லுாரியினரும், மற்ற நபர்களும் கற்றுத் தர வேண்டும். அல்லது அவர்களாகவே கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள மாற்று வழியில் முயற்சிக்க வேண்டும்.
 1. இரண்டாவதாக,மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம்தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், வாய்ப்புகள் மற்றும் வசதிகளையும் அரசிடம் இருந்து கேட்டு பெற்று, அதன் வழியாக கிடைக்கின்ற மின்சாரத்தை அரசிற்கே கொடுக்கலாம். இதன் வழியாக பொருளாதாரம் கணிசமாக உயரும்.
 2. எந்த தொழிலை இந்த சமுகம் இழிவாக  நிணைக்கின்றதோ, அந்த தொழிலையே தமக்கான முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 3. இவ்வாறு நாடு முழுவதும் செய்யும் போது, எங்கும் குப்பைகள் இருக்காது. மாறாக குப்பைகளில் இருந்து துப்புறவு தொழிலாளிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்...
 4. இதை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் அணைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்கள், சமுக இயக்கங்கள் ஒருமித்து குரல் கொடுத்து செயல்படுத்த வேண்டும்..

Tuesday, August 13, 2013

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

மா. அமரேசனின் 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்' நூலை இயற்கை வளங்கள், சூழல், விளிம்பு நிலை மக்கள் என மூன்று தளங்களில் இயங்குவதாக வரையறுக்கலாம்.

பாலாறு குறித்தும், தண்ணீர் வியாபாரம் மற்றும் நீரை பற்றிய நான்கு கட்டுரைகளும், கவந்தி வேடியப்பன் மலை, சவ்வாது மலையின் பாதிப்புகள் என நான்கு கட்டுரைகளும், தலித் மக்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அரசியல் சார்ந்த கட்டுரைகள் என மொத்தம் 18 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.

சமூகத்தின் செயல்பாடுகள், சூழலியல் தன்மைகள் மற்றும் அதன் பாதிப்புகளை விளிம்பு நிலை மனிதனின் தெளிந்த பார்வையில், துணிவு மிக்க வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர்.

இன்றைய தமிழகத்தில் சமவெளி பிரதேசத்தில் மட்டுமல்லாது கடல், மலை சார்ந்த பகுதிகளில் வாழும் விளிம்பு நிலை மக்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

காடுகளின் பரப்பளவு 17%-ல் (சமன்நிலைக்கு 33% தேவை) ஆரம்பித்து, புலிகளின் அழிவு, யானைகளின் இறப்பு, பலவகை பறவைகளின் அழிவு மற்றும் அதன் வாழிட அழிப்பு, கிரானைட் என்ற பெயரில் மலைகளை தகர்த்தல், குவாரி என்ற பெயரில் ஆறு, ஏரிகளை சாகடித்தல், விளைநிலங்களை விட்டு விவசாயிகளை துரத்தியடித்தல், கடற்கரையை அழகு செய்தல் என்று மீனவ மக்களை வேரோடு பிடுங்கி எறிதல், கல்பாக்கம், கூடங்குளம் என 'அழிவுக்கான அறிவியலை' மக்கள் தலையில் திணித்தல், நீயூட்ரினோ ஆலை அமைத்து பேராபாய சங்கு ஊதுதல், 560-க்கும் மேற்பட்ட மீனவ சொந்தங்கள் இறந்தும் மயான அமைதி காத்தல், ஈழத்தில் இனப்படுகொலையில் 1.5 லட்சம் சொந்தங்கள் இறப்பு என தமிழகம் மற்றும் உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் அவல நிலை எட்டு திக்கும் தொடர்கிறது.

இவற்றில் இருந்து தமிழ்ச் சமூகம் எப்படி மீள்வது? என புரியாத ஒரு நிலையே இன்று அனைத்து தளங்களிலும் உள்ளது. இந்த அடிப்படையிலேயே அமரேசனின் நூலை நோக்க வேண்டியுள்ளது.


இன்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிகவும் முதன்மையானது 'தண்ணீர்' பிரச்னை. இதனை, 1. அண்டை மாநிலங்கள் நியாயமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடாமல் துரோகமிழைப்பது, 2. தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கத் தவறுவது மற்றும் கழிவு நீர் குட்டைகளாக மாற்றுவது, 3. ஆறு, ஏரி, குளங்களை வீட்டு மனைகளாக (Real Estate) மாற்றுவது, 4. நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

ஒரு பொருளைத் தயாரிப்பதில் இருந்து அதனை சந்தைப்படுத்துவது வரையிலான தொடர் செயல்பாடுகளின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர், 'புலப்படாத தண்ணீர்' என்ற புதிய கருத்தாக்கத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் கேரளாவுக்கு நம் மாநிலத்தில் இருந்து தினந்தோறும் செல்லும் அரிசி, முட்டை, காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும், உற்பத்தியில் ஈடுபடும் போது செலவாகும் தண்ணீரையும் சேர்த்து விலை நிர்ணயிக்க 'புலப்படாத தண்ணீர்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் செல்கிறது. அவர்களுக்கு அதனை தயாரிக்கும் போது ஏற்படும் தண்ணீர் இழப்பு மற்றும் செலவு இதனால் மிச்சமாகிறது. அப்போது நமது தயாரிப்பு செலவுடன் தண்ணீருக்கான அடக்க விலையையும் சேர்த்து சொல்வது சரியான முடிவாகவே இருக்கும் என்பதை நூலாசிரியர் முன்வைக்கிறார். இந்த செயல்முறையை சர்வதேச நாடுகள் நடைமுறைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார். நமது அரசியல்வாதிகள் இதனை கருத்தில் கொண்டால் நல்லது.


இயற்கை வளங்களில் ஒன்றான, பல்லாயிரம் வருடங்களில் உருவான மலைகள், இன்று கனிம வளத்திற்காகவும், கிரானைட் கற்களுக்காகவும் முற்றாக அழிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கவுந்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு ஒப்படைத்து கொள்ளைக்கு துணை போகும் அரசின் கயமையை 'வெடிக்கும் வேடியப்பன் மலை...' என்ற கட்டுரையில் தோலுரித்துக் காட்டுகிறார்.

சுற்றுலா என்பது சுரண்டலுக்கு முதல்படி. பெரு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு குழுமங்களுக்கும் நமது இயற்கை வளங்களை சுரண்ட கிடைத்திருக்கும் துருப்பு சீட்டுதான் 'சுற்றுலா' என்ற வார்த்தை. காடு, மலை சார்ந்து பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு யாருக்காக 'சுற்றுலா' பகுதியாக மாற்றுகிறார்கள் என்ற உள் அரசியலை 'சுரண்டலுக்கு முதல் வழி சுற்றுலா' என்ற கட்டுரையில் பதிவு செய்கிறார் நூலாசிரியர் மா. அமரேசன்.

சுற்றுலாவினால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், சூழல் சீர்கேடுகளை பட்டியலிடுகிறார். நம்முடைய பண்பாடு சீரழிவதையும் சுட்டிக் காட்டுகிறார்.


பஞ்சமி நிலங்கள் மீட்பது குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உண்மை முகம் குறித்தும் தனது கூர்மையான அறிவாற்றல் மூலம் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

வியாபார உலகில் அன்னை தினமும் ஒன்று தான், காதலர் தினமும் ஒன்று தான். சந்தையை குறிவைத்து இயங்கும் இத்தகைய கூட்டத்திற்கு இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து பலியாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடத்தின் அத்தனை நாட்களையும் ஏதாவதொரு நாளாக கொண்டாட தயாராகி உள்ள பெரு நிறுவனங்களை எதிர்த்தும் குரலெழுப்பியுள்ளார் ஆசிரியர்.

சூழலில் தொடங்கி நூலின் பயணம் காடு, மலை, சமவெளி பிரதேசம் என பயணப்பட்டு பெண்ணியத்தை தொட்டு இளைஞர்களின் நலன் பேசி முடிகிறது.

எளிமையான எழுத்து நடையால் வாசகரிடம் நெருங்கி சென்று தன் கருத்தை அவர்களின் மனதில் விதைக்கிறார்.

நூலின் அட்டை வடிவமைப்பும், உள்ளடக்கமும் சிறந்த முறையில் அமைந்துள்ளது. அதே வேளையில் நூல் முழுதும் நிறைந்துள்ள எழுத்து பிழையை நீக்கியிருந்தால் நூல் வாசிப்பு முழுமையடைந்திருக்கும். மா. அமரேசனிடம் இருந்து இன்னமும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்'.நூலின் பெயர் - நடுங்கும் நிலம் நடுங்கா மனம்-(நிலம், வனம், சூழலியல்-தலித்தியப் பார்வை)

ஆசிரியர் - மா. அமரேசன்

வெளியீடு - நெய்தல் வெளி
153C, ஈத்தாமொழி சாலை, நாகர்கோவில் - 629002.

தொலைபேசி - 04652-265655.
(0) 9442242629

பதிப்பு - டிசம்பர் 2011.

மின்னஞ்சல் - neidhalveli2010@gmail.com

விலை . ரூ. 85.00


ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.

நன்றி

திரு.ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.
http://www.thadagam.com/index.php/books/bookscategories/bookreviews/827-nadungumnilamnadungamanam

தடாகம் இணையத் தளம் 

Thursday, August 8, 2013

தலித் கூட்டுறவு விற்பனை மையம்.

இன்றுள்ள தாராள மயம், தனியார் மயம், யாரையும் பணக்காரர்களாக விடாது. அவ்வாறு யாராவது பணக்கார்களாக தம்மை காட்டிக் கொண்டால், அது நேர்மையான வழியில் வந்த பணமாக இருக்க இயலாது. அவ்வாறு திடிர் பணக்காரர்களின் பணத்துக்குப் பின்னால் நிச்சயம், ஒரு குற்றம் அல்லது பல குற்றங்கள் மறைந்திருக்கும். அந்த பணத்தில் இரத்தக்கறை படிந்திருக்கும். இது யாரே ஒரு அறிஞர் பணம் குறித்து சொல்லும் போது சொன்னது.

அவரின் கூற்று அப்படியே தலித் சமுகத்துக்கும் பொருங்தும், தலித் சமுகத்தில் ஆணுக்கு நிகராக, பெண்ணும், பெண்ணுக்கு நிகராக, ஆனும் சேர்ந்தே உழைக்கின்றனர். ஆயினும் பொருளாதார நிலையில் அவர்களால் முன்னேற்றம் காண இயலவில்லை.

இன்று கணவன் மணைவி இருவருமே சேர்ந்து உழைத்தாலும், சேமிக்க முடிவதில்லை, மிச்சம் பிடிக்க முடியாமல், பற்றாக்குறைக்கு ஆளாகி, கடன் வாங்க வேண்டிய தேவையில் உள்ளோம். இந்த நிலை பொருளாதாரத்தில் மிக பின்தங்கி உள்ள தலித் மக்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்று இம்மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, பணம் ஒரு வழியில் வந்தால் பல வழிகளில் செலவாகின்றது. முதலில் நாம் செலவழிக்கும் பணம் எங்கு செல்கின்றது, ஏன் செலவாகின்றது என்று பார்க்க வேண்டும்... இன்று நாம் செலவழிக்கும் பணம் யாவுமே, பண்ணாட்டு நிறுவனங்களிடம் சென்று சேர்கின்றது. அவர்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு அழகழகாய் அடுக்கி வைக்கின்றார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதால் அந்த பணம் அவர்களிடம் சென்று குவிகின்றது. அந்த பணம் மீண்டும் நம்மிடம் திரும்ப வராது. எனவே நாம் மீண்டும் மீண்டும் ஏழைகளாக்கப்படுகின்றோம்.

அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் வாங்குவதால், இடைகழிவு, விற்பனை லாபம் யாவும் கடையின் உரிமையாளருக்கு சென்று சேர்கின்றது. எந்த வகையிலும் ஒரு பொருளை கடையில் இருந்து வாங்கும் போது, ,நாம் நட்டமடைகின்றோமே ஒழிய, லாபம் அடைவதில்லை . இந்த நிலை மாறி கடையில் இருந்து ஒரு பொருளை நாம் வாங்கும் போது நாம் லாபம் அடையும் வகையில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இயலுமு்.

உண்மையில் மக்கள் பணம் மக்களிடமே சுழல வேண்டும், அல்லது உழல வேண்டும். அப்போதுதான் மக்களிடம் வறுமை அண்டாது. மாறாக மக்களின் பணம் அனைத்தும் ஒரே இடத்தில் குவியும் போது. தனிநபர்  பணத்தில் குளிக்கலாம், ஆனால் ஒட்டு மொத்த சமுகம் ஏழை சமுகமாக இருக்கும். இதைத்தான் இன்றைய இந்திய பொருளாதார மேதைகளும், அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் செய்கின்றனர். மக்களால் பொருளாதார மேம்பாடு அடைய முடியமல் தவிக்கின்றனர்.

இந்த நிலை தலித் சமுகத்துக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே இவற்றை தவிர்க முதலில் மக்கள் பணத்தை மக்களிடமே, சுழலச் செய்ய வேண்டும்.

அதற்காக சேரிகள் தோறும் உள்ள வீடுகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று அந்த தொகையை முதலீடாகவும், முலதனமாகவும் கொண்டு ஒரு கூட்டுறவு விற்பனை மையத்தை தொடங்க வேண்டும், அதில் தற்போதுள்ள எல்லா பன்னாட்டு வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி, உள்ளுர் வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி நாம் விற்பனைக்கு வைக்கவேண்டும், நம் மக்களும் குண்டுசி முதல் அனைத்து பொருட்களையும் அந்த கடையிலேதான் வாங்க  வேண்டும்.

கிராம அளவில் தலித் மக்கள் உற்பத்தி செய்யும் காற்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை கூட தலித் கூட்டுறவு விற்பனை மையத்திலே விற்று தனக்கு வேண்டிய பொருட்களை அந்த விற்பனை மையத்திலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதன் வழியாக பொருளாதார மேம்பாடு அடைய எளிமையான வழி கிடைக்கும். இதை ஒரு பெரும் நிறுவனமாக வளர்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

 உள்ளுர் விற்பனை விலை, சில்லறை விற்பனை விலைக்கே பொருளைக் கொடுத்தாலும், ஒவ்வொரு பொருள் விற்க்கும் போதும் கடைக்காரருக்கு ஒரு லாபம் உண்டு, அந்த லாபம் முழுவதும் அந்த கடையை நடத்தும் மக்களுக்கு செல்லும், ஆண்டு இறுதியிலோ, அல்லது, ஆண்டிற்கு இரு முறையோ கடை யில் பொருட்களின் விற்பனை வழியாக கிடைத்த லாபம் மக்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

இதன் முலம் ஒரு பொருளை வாங்கும் போது கடைக்காரருக்கு கிடைக்கும் லாபம் தலித் மக்கள் அணைவருக்கும் கிடைக்கும். மேலும், காலப்போக்கில், பன்னாட்டு வியாபாரிகளின் பொருட்கள் விற்பனையை நிறுத்தி, அல்லது குறைத்து, உள்நாட்டு வியாபாரிகளின் பொருளை விற்கலாம். அல்லது. தலித்துகள் உற்பத்தி செய்யும் பொருளை தலித் மக்களிடமே, கூட்டுறவு விற்பனை மையத்தின் வழியாக எளிதில் விற்பனை செய்யலாம், இந்த மக்களின் பணம் இவர்களிடமே உழன்று பலருக்கு வேலை வாய்ப்பையும், பொருளாதார மேம்பாடும் அடைய வழி பிறக்கும்.

இதை சேரிகள் தோறும் செய்ய வேண்டும். அப்போதுதான் தலித் மக்களுக்கென விற்பனை நிலையங்கள் உருவாகும். தலித் கூட்டுறவு விற்பனை மையம் என்பது தலித் மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு நிறுவனமாக உருவெடுக்கும். நமக்கான பொருளாதாரத்தை நாமே கட்டமைக்க இயலும்.

Tuesday, July 23, 2013

மரம் வெட்ட வாருங்கள்.

மரம் வெட்ட வாருங்கள்.

கேரளாவை கடவுளின் நிலம் என்று எப்படி வர்ணிக்கின்றார்கள் என்றால், அதன் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், அங்கும் நம்மைப் போலவே, வறட்சியும், நீர் பற்றாக்குறையும் இருந்திருக்கின்றது ஒரு காலத்தில்....

அவர்கள் அதற்கான காரணத்தை ஆய்ந்து பார்த்ததில், அங்கு அதிகமாக முளைத்திருந்து, சீமை கருவேலம், முள்வேலி, தைல மரம் இவைகள்தான், நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி, மழை பொழிவை தடுக்கின்றன என்று கண்டறிந்தனர்...

உடனே ஒரு சமுக இயக்கமாகவே அங்குள்ள மக்கள் அனைவரும் மாறி அவர்கள் நிலம், மற்றும் அவர்களின் ஊரில் இருந்த சீமை கருவேலம், முள் வேலி மரம், தைலமரம் ஆகியவற்றை வேறோடும் ,வேறடி மண்ணோடும் வெட்டி பெயர்தெடுத்தார்கள்

அத்துடன் மண்ணுக்கேற்ற மரத்தை நட்டு பயிரிட்டுடார்கள் இன்று கேரளம் சுற்றுச்சூழல் வளத்துடன், கடவுளின் நிலம் என்ற பெருமையோடு அழைக்கப்படுகின்றது 6000 நதிகள் ஓடுகின்ற மாநிலமாக திகழ்கின்றது...
நான் இதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன்... நான் மட்டும் அல்ல சபரி மலைக்கு போகின்ற அணைவருமே பார்க்கலாம்... கேரள எல்லையில் ஒரு முள்வேலி மரத்தையோ, சீமை கருவேல, கருவேலம் மரத்தையோ பார்க்க முடியாது... ஆனால் தமிழ்நாட்டு எல்லையில் இருந்து இதை நீங்கள் பார்க்க முடியும்...

இதையே நாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முள்வேலி மரம் இல்லாத கிராமம் கிடையாது... சீமை கருவேலம், கருவேலம் மரம் இல்லாத ஏரிகளே கிடையாது... தைலமரம் வளர்காத விவசாயிகளே இல்லை....ஏன் இந்த நிலை... நமக்கு இதன் விளைவுகள் தெரியாதா? எல்லாம் தெரியும், தெரிந்திருந்தும் நான் வளர்பதால் மட்டும் தமிழ்நாட்டுக்கு மழை பொழிவு குறைவுபடுமா என்ன என்னும் இருமாப்பும் , ஆனவம், மற்றும் அக்கரையின்மை, அறியாமை எல்லாமே சேர்ந்து ஆட்டு விக்கின்றது...

உண்மையில் கோடை காலங்களில் வெயில் கொளுத்துவது எப்படி என்பதை நாம் உணர்ந்து பார்த்தால் தெரியும்.. கோடைதோறும் வேலுரில் வெயில் 100 பாகையை தாண்டும், அதே அளவு விருதுநகரிலும் வெயில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் முள்வேலி, மற்றும் சீமை கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகம் அதனால் வெயிலின் தாக்கமும் அதிகம். நிலத்தடி நீர்மட்டமும் குறைய இந்த மரங்களும் ஒரு காரணம்...

நமக்குள் என்று ஒரு இயக்கமாய் மாறி ஒழிக்கப்பட வேண்டிய மரத்தை ஒழிக்கப் போகின்றமோ தெரியவில்லை... 

Monday, July 22, 2013

இங்கு நடப்பதெற்கெல்லாம் யார் காரணம்...

இங்கு நடக்கும்
கொலைகளுக்கெல்லாம்
யார் காரணம்...

சாதி வெறி கொலைகளுக்கும்.
அரசியல் கொலைகளுக்கும்.
சொத்து கொலைகளுக்கும்,

பெண் பித்து கொலைகளுக்கும்
சுதந்திர கொலைகளுக்கும்.
வறுமை கொலைகளுக்கும்

மத கொலைகளுக்கும்
மர்ம கொலைகளுக்கும்
கௌரவ கொலைகளுக்கும்...
யார் காரணம்...

வல்லவன் வகுத்ததே
வாய்கால் என்ற மரபு
இப்போது இயக்கி
கொண்டிருக்கின்றது
அனைவரையும்...

பணம் இருந்தால்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
சட்டத்தை சட்டைப் பைக்குள்
வைத்துக் கொள்ளலாம்
என்னும் மனோபாவம்
வந்து விட்டது எல்லோருக்கும்.

அரசியல் வாதிகளை
அடிமையாக்கி வைத்திருக்கின்றது
பன்னாட்டு நிறுவனங்கள்
தரும் கழிவு பணம்,
சுவிஸ்வங்கியில்
துாங்குது லஞ்சப் பணம்
வெள்ளை அழகிகளோடு உல்லாசம்
இதற்க்குத்தான் அரசியல் வாதிகளின்
அயல் நாட்டுப் பயணம்...

தலைவர்களே தறிகெட்டு
சுயநலத்தை தேடும் போது
தொண்டன் மட்டும்
துாய்மையாய் இருந்து
என்ன செய்ய போகின்றான்...

தலைவருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....

தொண்டருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....

கடவுளையும்
கர்த்தரையும்
நம்பிக்கொண்டிருப்போம்....
இறுதிநாள் வரை
ஏழையாய்...

ஏழைகளை மயக்க
எல்லாவற்றையும்
உருவாக்கி கொண்டிருக்கின்றது
கடவுளிருந்து
கவர்சி கன்னிகள் வரை

உலகமயம்,
தாரள மயம்,
தனியார் மயம்...

Sunday, July 7, 2013

மண்டகொளத்துார் கிராமம்

எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஓர் கிராமம் மண்டகொளத்துார். அங்கு வண்ணியர்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல், தலித்துகளின் எண்ணிக்கை. 150க்கும் குறைவாகவே இருக்கும். அந்த கிராமத்தில் இரட்டை குவலை முறை நடைமுறையில் இருக்கின்றது இன்றும்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் திரு. ஏழுமலை என்னும் அந்த கிராமத்தின் முதல் கல்லுாரி மாணவர் இந்த இரட்டை குவலைக்கு எதிராக எதிர்குரல் எழுப்பினார். அதனால் அந்த ஊரின் நுாலகத்துக்கு முன்பு அவரை அடிக்கவும், சாதி பெயரைச் சொல்லி திட்டவும், செய்தனர் வன்னியர்கள்.

அவர் அந்த பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாமல், காவல் நிலையம் சென்று வழக்கு கொடுத்தார்.பின்னர் ஊர் முழுவதும் ஏழுமலைக்கு எதிராக செலவு செய்வது என்று அவர்களின் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏழுமலையின் குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர்ந்தது.  வழக்கு பத்து ஆண்டுகள் நடந்தது. தாழ்த்தப்பட்டோர் வண்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை திரும்ப பெற ஏழுமலைக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்கும் அளவேயில்லை...

இறுதியில் ஏழுமலைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. வன்னிய சாதி இந்துக்கள் ஏழுமலை மற்றும் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டனர். மற்றும் அபராதம் கட்டினர். மீண்டும் அவரது குடும்பம் சொந்த ஊருக்கு வந்தது.  அதன் பிறகு அவர்கள் தாழ்த்தப்பட்டோரை தாக்குவதில்லை. பொது இடங்களில் சாதி பெயரை சொல்லி திட்டுவதில்லை.

 இந்த நிகழ்விற்க்கு அந்த பகுதியில் இருந்த ” அம்பேத்கர் விடுதலை முன்னனி” உறுதுணையாக இருந்தது. திரு. ஏழுமலை அவர்களுக்கு... இன்று ஏழுமலை ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கின்றார்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர் வண்முறையில் இறங்கினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே பாதுகப்பு ” தாழத்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்புச் சட்டம்” மட்டுமே.

இந்த நிலையில் ”பாட்டாளி மக்கள் கட்சியின் ” தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்பு சட்டத்தை திருத்தம் வேண்டும் என்று மற்ற சாதிகளை அனியப்படுத்திய நிகழ்வின் உள்நோக்கமாக இருப்பது தலித் மக்களின் மீது தொடுக்க இருக்கும் தொடர் தாக்குதலுக்கான திட்டமே.

Friday, June 28, 2013

இலவச அரிசி இட்லி வேண்டாம்... தண்ணீர் வேண்டும்...

ிதமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று முந்தைய ஆட்சியில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அடுத்து வந்த தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி வழங்குவோம் என்று மார்தட்டினர். உண்மையில் தற்போதுள்ள அரசு ஆட்சிக்கு வந்ததும் கையெழுத்திட்ட முதல் கோப்பு ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி திட்டத்திற்க்குத்தான்.
முந்தைய ஆட்சியிலிலும் சரி, தற்போது இந்த ஆட்சியிலும் சரி, இந்த திட்டத்தின் பெரும் பயன் போய் சேர்ந்தது என்னவோ, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டட மக்களுக்குத்தான், ஏனெனில் ஏழைகளாக இருக்கும் தலித் மக்கள் இந்த திட்டத்தில் ரேசன் கடைகளில் போரடித்தான் அரிசி வாங்க வேண்டியுள்ளது.
ஏழைகள் தங்களின் உணவுத் தேவைக்காக அரிசியை பயன்படுத்தும் போது, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் பால் பெருக்கத்திற்க்கு இலவச அரிசியை பயன்படுத்தினர். தங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறுக்ககு வழியில் வாங்கப்பட்ட இலவச அரிசி கொண்டு, தங்களின் பசு மாட்டிற்க்கு பால் பெருக்கத்திற்காக கஞ்சி காய்ச்சி ஊற்றினர்.
உண்மையில் இலவச அரிசிக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பால் பெருக்கம் மிக அதிகமானது. இது கிராமங்களில் நடக்கும் நிகழ்வு....
நகரங்களில் மலிவு விலை உணவகம். இவையெல்லாம் எதை காட்டுகின்றது, இந்த நாட்டில் இந்த அளவுக்கு ஏழ்மை தலைவிரித்தாடுகின்றது. என்பதைத்தானே ஒழிய வேறு ஒன்றும் இ்ல்லை.

இந்த திட்டங்களை எல்லாம் ஏழ்மை நோக்கில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும்... இதிலுள்ள சில ஒட்டைகளையும் நாம் சுட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பு...
இப்படி எல்லாவற்றையும் ஏழைகளின் நிலையில் இருந்து நோக்கும் அரசு... திடிரென்று, மலிவு விலை தண்ணீர் விற்பனை என்று, அறிவித்து ஏழைகளின் வயி்ற்றில் அடித்துள்ளது. இது மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கும் திட்டமாகும்... 
இதன் மூலம், தண்ணீர் விற்பனையை அரசு ஊக்கப்படுத்துகின்றது. தண்ணீரை தனியார்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதை நீயாயப்படுத்துகின்றது... மறைமுகமாக ஊக்குவிக்கின்றது...
சராசரி ஒரு மனிதனின் தேவைக்கு வேண்டியது நாளென்றுக்கு 250 லிட்டர் தண்ணீர் என்றால், தற்போதுள்ள தமிழ்நாட்டின் 4000 தண்ணீர் வியாபாரிகள் அவர்களின் தேவைக்கு என்று உள்ள தண்ணீரைத்தான் பாட்டிலில் அடைத்து விற்கின்றான். அரசும் அதைத்தான் செய்கின்றது. தற்போது தமிழக மக்களின் சராசரி பயன்பாட்டு தண்ணீரின் அளவு 175 லிட்டராக குறைந்து உள்ளது.. இது மிக மோசமான விளைவுகளை உருவாக்குமே.. தண்ணீர் சிக்கல் உயிர் சிக்கல் புரிந்து கொள்ளத்தான் ஆட்சியாளர்கள் இல்லை்....
அரசுக்கு வருமானம்  வேண்டும் என்ற நோக்கத்திற்க்குத்தான் இந்த திட்டம் என்றால், இதை விட மிகுந்த லாபம் கிடைக்கும் வழியும் இருக்கின்றது... 
தற்போது தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளில்இருந்து கிடைக்கும் வருமானம் என்று சொல்லிக் கொள்வது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம்தான். மாறாக டாஸ்மார்க் கடைகளில் விற்க்கப்படும் மது வகைகளை தமிழக அரசே உற்பத்தி செய்து விற்றால் அரசுக்கு தேவைக்கு அதிமாகவே லாபம் கிடைக்கும்... 
தற்போது விற்க்கும் மது வகைகளின் உற்பத்தி செலவு குறைவுதான், விளம்பரம், கமிசன், போக்குவரத்து போன்ற வற்றிற்க்கான செலவும் குடி்பவனின் தலையில்தான் விழுகின்றது... அப்படி இருந்தும் அந்த மது வகைகளை வாங்கி குடிக்கும் குடிமகனானிடம் அரசு தனியார் மது வகைகளை விற்ககும் விற்பனையாளனாகத்தானே இருக்கின்றது. அந்த வருமானத்திற்காக மட்டும்தானே இன்றைக்கு தமிழகத்தில் 97 சதமான மக்களை குடிகாரர்களாக ஆக்கி இருக்கின்றது...விறபனையாளருக்கே ஆயிரத்து ஐநுாறு கோடி லாபம் என்றால் உற்பத்தியாளருக்கு எத்தனை கோடிகள் லாபம் கிடைத்திருக்கும் அந்த லாபம் ஏன் தனியாருக்குப் போக வேண்டும்... நாமே மது வகைகளை உற்பத்தி செய்வோம், நாமே குடிப்போம், மொத்த பணமும் நமக்கே வரட்டும்... வந்த பணத்தை குடி நோயாளிகளின் குடும்பத்திற்க்கு இலவச அரிசி, இலவச காலணி, இலவச மிதி வண்டி, இலவச மடி கணிணி. இலவச நோட்டு புத்தகம், கர்பிணிகளுகக்கு ஊக்கத் தொகை. இலவச தாலி. என இன்னும் இலவசங்களை வாரி வழங்கலாம்... மக்களும் ஓட்டு போடுவார்கள்... ஆனால் மதுபான உற்பத்தியாளரிடம் இருந்து கட்சிக்கு வரும் நிதி போகும். கட்சியை நடத்த பணம் இல்லையென்றால் என்ன கட்சிக்கு வாக்களிக்க மக்கள் இருக்கின்றார்களே... இனி வரும் காலத்தில் இலவச தண்ணீர் என்பது சாத்தியமில்லை என்ற அறிவிப்பை செய்தி தாளில் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை... இலவச தண்ணீர் தருகின்ற கட்சிக்கே எங்கள் ஓட்டு என்ற சுவரொட்டியையும் பார்க்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை...Friday, June 21, 2013

தமிழர்களின் இசை கருவியா பறை?பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால்  பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த கேள்வி 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே எனக்குள் உருவானது. விடை தேடியலைகின்றேன்.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் தகவல் சொல்லுவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது. அப்போது அதற்க்கு முரசு என்ற பெயரும் இருந்திருக்கின்றது. போர் குறித்த தகவல் பரிமாற்றத்திற்க்கு முரசு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பொதுவாக நடக்கும் ஊர் திருவிழாக்கள், மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்ச்சியில் பறை இசையின் சத்தம் ஒரு செய்தியின் அடிப்படையில் இருக்கும். பறை இசைக்கப்பட்டால் அங்கு ஓர் நிகழ்வு நடக்கின்றது, நாம் அணைவரும் அங்கு செல்ல வேண்டும் என்ற புரிதலை உருவாக்குவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது.
அண்மை காலத்தில் கூட அரசினர், தங்களின் அறிவிப்பை செய்வதற்க்கு கிராமந்தோறும் தண்டோரா போடுவார்கள். அந்த தண்டோராவை வருவாய்துறையின் கடைநிலை ஊழியராக இருக்கும் சிப்பந்தி போடுவார். பெரும்பாலான சிப்பந்திகள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பர். இந்த தொழில் செய்ய மற்ற சாதியினர் விரும்ப மாட்டார்கள் காரணம் அந்த தொழிலில் தண்டோரா என்னும் பறை இசை கருவியை இசைக்க வேண்டியிருக்கும். அரசு பணியில் ஓளிந்திருக்கும் சாதிய மனோபாவம் இது.
அரசரின் ஆணைகளை பரப்புவதால் கூட பறையன் என்ற சொல்லால் குறிக்கப்ட்டிருக்கலாம். ஆனால் அது பறை என்னும் தொழில் கருவின் நிமித்தமாக வந்த பெயராக கூட இருந்திருக்கலாம். பறை என்பது ஒரு தொழில் கருவி. அந்த தொழில் கருவி பிற்காலத்தில் சாதியத்தை கட்டமைக்கும் இழிவுக்கு பயன்படுத்தப்பட்டு இன்று இழிநிலை கருவியாக கட்டமைக்கப்ட்டிருக்கின்றது.
தமிழ் நாட்டின் புவியியல் அடிப்படையில் 5 வகை நிலமாக பிரித்து அதற்கென ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி சொல்லும் தமிழ்
கூட பறை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவை
குறிஞ்சி நிலத்தில் ,
1.   தொண்டகச் சிறு பறை
2.   சிறை பறை முரகியம்
முல்லை நிலத்தில்,
1.   தடாரிப் பறை
2.   ஆகோள் பறை
மருத நிலம்,
1.   திணைப் பறை
2.   வைகறைப் பறை
நெய்தல் நிலம்,
1.   ஆரிப்பறை
2.   சாப்பறை
பாலை நிலம்,
1.   ஆரெறிப்பறை
2.   சேக்கோள் பறை
போன்ற பறை இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்று இந்த பறை இசை கருவிகளில் பல இல்லாது வழக்கொழந்து போய் இருந்திருக்கலாம்.
தற்ப்போது இசைக்கப்டும் பறை இசை கருவிகள்,
1.   சிறுபறை
2.   கிடுகட்டி
3.   சட்டிப்பறை
4.   ஒரு புறப் பறை
5.   இரு புறப் பறை
6.   தமுக்கு
7.   பெரும்பறை
8.   முரசு. இவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
பறையில் அடிக்கப்படும் அடி நிகழ்வுக்கு நிகழ்வு மாறுபடும் அவை
1.   சாமி புறப்பாட்டு அடி
2.   சப்பாத்து அடி
3.   சாவு அடி
4.   கோடி வாழ்த்து அடி
5.   நக்கல் அடி
6.   நையான்டி அடி
7.   உருட்டு அடி என்ற வகையில் அடி வகைகளும் இருக்கின்றன.
இவற்றில் இருந்து பறையிசைக்கென்று ஒரு தனி வரலாறு உண்டு என்ற செய்தி எல்லோருக்கும் புரிந்தாலும், தோலிசை கருவிகளில் முதல் கருவி , மூத்த கருவி பறை என்று வகைப்படுத்தப்பட்டாலும், பறையன் இசைப்பதாலே இந்த கருவிக்கு பறை என்று பெயர் வந்த்து என கருதி இழிவாகப் பார்க்கும் மனோபாவம்தான் இங்கு அதிகம்.

தவில், மிருதங்கம், உறுமி, பம்பை, போன்ற தோல் இசைக் கருவிகளுக்கு கற்பிக்கப்கப்படும் புணிதம் பறைக்கு கற்பிக்கப்படுவதில்லை. அரசு வழங்கும் சலுகைகள் வழங்குவதில்லை.
சிறந்த மிருதங்க இசை கலைஞனுக்கு கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. சிறந்த தவில் இசை கலைஞருக்கும் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது, உறுமி இசைக்கலைஞனுக்கும் அங்கிகாரம் இருக்கின்றது. பம்பை இசை கலைஞருக்கும் அங்கிகாரம் இருக்கின்றது. ஆனால் ஏன் ஒரு பறை இசை கலைஞனுக்கு கலைமாமணி பட்டமோ, லட்சம்ரூபாய் பொற்கிழியோ சுதந்திரம் அடைந்து 60  ஆண்டுகள் ஆன , அரசியல் சட்டத்தின் மூலம் சாதி ஒழிப்பை நிலைநாட்டிய அரசாங்கம் தரவில்லை என்றேனும் பறை இசை கலைஞர்கள் இதற்காக போராடியிருப்பார்களா?
பறைஇசை கலைஞர்களுக்காக எந்த அரசியல், சமுக இயக்கத்தின் தலைவர்கள் இதை முன்னெடுத்து இருப்பார்களா? ஏன் இதை செய்ய வில்லை.?
பறை இசை தவிர்த்த மற்ற தோல் இசை கலைஞர்களுக்கு அரசாங்கம் நலிந்த கலைஞர்களுக்கான மாத ஊதியம் தருகின்றது. ஆனால் பறைஇசை கலைஞர்களுக்கு ஏன் அது தர மறுக்கின்றது. மற்ற கலைஞர்கள் தங்களின் இசை கருவியோடு பயணம் செய்தால் பயணச் சலுகை வழங்குகின்றது. ஏன் பறை இசை கருவியோடு ஒரு பறை இசை கலைஞன் பயணம் செய்தால் அந்த சலுகை வழங்கப்படுவதில்லை.
பறை இசைக் குறித்தும், பறையர் சாதியைக் குறித்தும் பெருமை பேசுவோர் தமது சாதியின் இசை கருவிக்கு உரிய அங்கிகாரத்தை பெற்றுத் தர போராடுங்கள்.  அதை விடுத்து வீண் பெருமை பேசி, காலத்தை கழிக்க வேண்டாம்.

Thursday, May 23, 2013

புத்தரும் அவர் தம் வாழ்க்கை நெறியும்.

புத்தரின் பிறப்பு:

கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகையைச் சோ்ந்த சுத்தோதனா் என்ற அரசா் ஆண்டு வந்தார். இவா் சாக்கிய குலத்தைச் சோ்ந்தவா் அவருடைய கோத்திரம் ஆதித்ய ஆகும். சுத்தோதனா் சிறந்தவீரா் அவருக்கு இரண்டு மணைவிகள் இருந்தனா் முதல் மணைவியின் பெயா் மகாமாயா தேவி, இரண்டாவது மணைவி, மகாமாயாதேவியின் தமக்கையான மகாபிரஜாபதி. இவா்கள் இருவருமே கோலியா் குலத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா் சுத்தோதனா் பெரும் செல்வந்தராகவும், பெரும் நிலப்பரப்பும், பண்ணைகளும், உழவுக்காக மட்டும் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வைத்திருந்தா் வளமான வாழ்வும், அரண்மனையொத்த பல வீடுகளையும் கொண்டிருந்தா் அவா் .சாக்கியா்கள் வருடந்தோறும் ஆணி மாதத்தில் வரும் இளவேணில் பண்டிகையை ஏழு நாட்களுக்கு கொண்டாடுவா்கள். இந்த பண்டிகையை ஆண்கள், பெண்கள், முதியவா்கள், சிறுவா்கள் என அணைவருமே குடும்பத்தாரோடும், நண்பா்களோடும் மது அருந்தியும் புதிய ஆடை அறுசுவை உணவு அவற்றுடன் சிறப்பான கறிசோறு என விமரிசையாக கொண்டாடுவா்கள்.

கி.மு.562 - ஆம் ஆண்டு ஆணித்திங்களில் வந்த இளவேணில் கால கொண்டாட்டத்தை சுத்தோதனரின் மணைவி மகாமாயாதேவி வெகு விமரிசையாக சீரோடும் சிறப்போடும் கொண்டாட முடிவு செய்தா். அதன்படி சிறப்பாகவும் செழுமையாகவும்,நறுமணப்பொருள்களோடும் - மதுவகைகளை மட்டும் விலக்கி கொண்டாடினா்.  ஏழாம்நாள் அதிகாலை விழித்தெழுந்து, நறுமண நீராடி நாண்கு லட்சம் நாணயங்களை ஏழை எளியோருக்க நன்கொடையாக அளித்து, விரதநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு சிறப்பான உணவு உண்டு ஆடம்பரமான அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலில் படுத்துறங்க அந்தப்புறம் சென்றா் அன்றிரவு அவா் ஒரு கனவு கண்டா் அது அவா் உறங்கிய பஞ்சனையிலிருந்து திசை காவலா்கள் நால்வா் அவரை எடுத்து ஏந்தி இமயமலை சமவெளிக்கு எடுத்துச்சென்று அங்கிருந்த பெருத்த சால் மர நிழலில் கிடத்தி அவருடைய காவலுக்காக அருகே நிற்பது போலவும், பின்னா; திசை காவலா்களின் மணைவியா் நால்வரும்  வந்து அவரை மானசரோவா் ஏரிக்கு அழைத்துச் சென்று குளிக்கச் செய்து புதிய ஆடை அணிவித்து, நறுமண மலா்களால் அலங்கரித்தனா்.

அப்போது அங்கு வந்த சுமோதா் என்னும் போதி சத்துவா் மகாமாயாவிடம், என்னுடைய இறுதிப் பிறப்பை புவியில் எடுக்க விரும்புகின்றேன், எனக்குத் தாயாக இருக்க சம்மதிப்பீர்களா? என்றார். அப்படியே ஆகட்டும் அது எனக்கு மகிழ்ச்சியே என்றார் மகாமாயா. அத்துடன் கனவு கலைந்தது அவருக்கு. விடிந்ததும், தான் கன்ட கனவைப் பற்றி தன்னுடைய கணவா; சுத்தோதனரிடம் கூறினார் மகாமாயாதேவி, அவருக்கு அதற்கான பொருள் தெரியாத காரணத்தால் அதற்கான பலனை தெரிந்து கொள்ள எட்டு பிராமணா்களை அழைத்து அந்த கனவிற்க்கான விளக்கத்தை விளக்குமாறுக் கேட்டுக் கொண்டா்.

அதற்க்கு அவா்கள், தங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கப்போகின்றது. அந்தக்குழந்தை இல்லறத்தில் இருந்தால் இந்த தேசத்தை ஆளும் மிகப்பெரும் பேரரசனாகக வருவார் மாறாக துறவறத்திலே இருந்தால் உலக துன்பங்கனை ஒழிக்கின்ற புத்தராக இருப்பா் என்றனா். சுத்தோதனருக்கு மிகுந்த மகிழ்ச்சி உருவானது. காரணம், திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லாது இருந்தவருக்கு இந்தச் செய்தி காதில் தேன் பாய்வது போல் இருந்தது அவருக்கு. எனவே கருவுற்றிருந்த மகாமாயாதேவியை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். தனது தாய்வீடிருந்த தேவதகைக்கு செல்ல ஆசைப்பட்டா்  மகாமாயாதேவி, சுத்தோதனா் அவரை தங்கபல்லாக்கில் சேவகா்கள் புடைசூழ அனுப்பி வைக்கப்பட்டடா் .வழியில் லும்பினித்தோட்டத்தின் அழகு அவரை கவரவே அங்கே இளைப்பாற இறங்கினா் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது,  கி.மு.563 - ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் முழுமதி நாளில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சித்தார்த்தா் என பெயா; சூட்டினா்கள். அந்த குழந்தைதான் பின்னாளில் புத்தா் என்று உலகம் அறியப்பட்டது.

சாக்கிய குல வழக்கப்படி பிறந்த குழந்தைக்க ஐந்தாம் நாள் சித்தார்த்தா் என்ற பெயா் சூட்டினா்கள். கௌதம என்ற குடும்ப்ப பெயருடன் இணைந்து சித்தார்த்தர் கௌதமா் என அழைக்கப்பட்டடா் ஏழாம் நாள் அவருடைய தாய் இயற்க்கை எய்த்தினார். அதன்பிறகு அவருக்கு தாயாய் இருந்து வளா்த்தது அவருடைய பெரியம்மா பிரஐாபதி ஆவார் .                  

இளமைப் பருவம்: 

சித்தார்த்ருக்கு அணைத்து வேதங்கள், மற்றும் உபநிஷத்துக்ள், போர் கலைப்பயிற்சி, வில்வித்தை, தியான முறைகள் இவைகளை சிறந்த ஆசிரியா்களைக் கொண்டு அவரது தந்தை கற்ப்பித்தார். இருந்தும் அவா் உடலுழைப்பையும் செய்தார் ஏர் உழுதல், விதை விடுதல் போன்ற பணிகளையும் ஆர்வமுடன் செய்வார் பிறா் உழைத்து அதன் பலனை தாம் அனுபவிப்பதை அவா் எப்போதும் விரும்பியதில்லை. சித்தார்தருக்கு பதினாறு அகவை நிரம்பியதும், பன்னிரெண்டு வயதுடைய யதோதரை என்னும் பெயருள்ள அரசிளங்குமரியை அவருக்கு திருமணம் செய்து வைத்ததார்கள். அவருடைய இருபதாவது அகவையில் அவா் சாக்கிய சங்கத்தில் உறுப்பினராக சோ்க்கப்பட்டார். சித்தார்த்தரின் இருபத்தொன்பதாவது வயதில் அவருக்கு இராகுல் என்னும் பெயருடைய ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
சாக்கியநாட்டுக்கும் பக்கத்து நாடான கோலியத்  நாட்டுக்கும் இடையில் ரோகினி நதி ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி இரு நாட்டுக்கும் தண்ணீர் பங்கீட்டு பிரச்சனை வந்துகொண்டிருந்தது. ரோகினி நதி நீர் பிரச்சனைக்காக சாக்கிய சங்கத்தில் கோலியத் நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை சித்தார்த்தா் மட்டுமே எதிர்த்து குரல் கொடுக்கின்றார் சாக்கிய சங்க தீர்மானத்தை எதிர்ப்பவர்களுக்கு 4 விதமான தண்டனைகளை அந்த சங்கம் வழங்கிக் கொண்டிருந்தது.
1. தீர்மானத்தை எதிர்ப்பவரை துாக்கிலிடுவது.                        
2. நாடு கடத்துவது.                                                     3. அவர் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்துக்களை சங்கமே பறிமுதல் செய்வது.                                                     
 4. அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாட்டிலிருந்து விலக்கி வைப்பது.
ஆனால் சித்தார்த்தா் கோலியா்களும் எனது சகோதாரா்களே அவா்களை எதிர்த்து நான் சண்டையிடமாட்டேன், இது பேசி தீர்க்க கூடிய பிரச்சனை இதற்காக போர் தேவையில்லை, போர் அமைதியை தேடி தராது, இன்னொரு போருக்கே வழி வகுக்கும் என உறுதியாக இருந்ததால், சங்கம் இவரை 4 விதமான தண்டனைகளுக்குள் எதை நீங்கள் தோ்வு செய்கின்றீர்கள் என கேட்டபோது, எனக்காக என் குடும்பத்தை தண்டிக்காதீர்கள், நான் கோழையை போல் துாக்கில் தொங்கவோ, தவறு செய்தவர்களைப் போல் நாடு கடத்தவோ, நான் உடன் படமாட்டேன், மாறாக நானே விரும்பி முற்றும் துறந்த துறவியாக போகின்றேன். என்றார். அவ்வாறாயின் உன் குடும்பத்தினரின்  முழு சம்மதத்ததுடன்இதை செய்வீர்களா நீங்கள் என சங்கத்தின் தலைவராக இருந்த சாக்கிய நாட்டு படைத்தளபதி கேட்ட போது , சித்தார்த்தா் என் குடும்ப உறுப்பினரின் சம்மதத்துடனே நான் துறவியாகப் போகின்றேன். என உறுதியளித்தா் அவரின் குடும்ப உறுப்பினா்களின் சம்மதத்துடனே அவா் அனைத்தையும் துறந்த துறவியாக சம்மதித்ததார்.

போரினால் தன் மக்கள் அழியாமல் காப்பதற்காகவே தனது மக்களுக்காக அமைதியாய் துறவறத்தை  ஏற்றுக் கொண்டார் அன்றிரவே அவா் தனது அழகான மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை ஆகிய இருவரையும் விட்டு யாருக்கும் தொரியாமல் தன்னுடைய குதிரை கந்தகம் மீதேறி பயணப்பட்டார். தனது விசுவாசமான வேலையாள் சன்னா தொடா்ந்து வந்து கொண்டிருந்தார். விடியல் பொழுது நெருங்கியதும் அநோமா நதியில் குளித்து தனது அரசவுடை, உடைவாள், மற்றும் குதிரை ஆகியவற்றை அவாரிடம் ஒப்படைத்து தன்னை பின் தொடரவேண்டாம் என கூறிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகின்றார். பின்னர் கடுந்தவத்தால் இவ்வுலகம் உய்ய அரியதோர் உண்மையை கண்டறிந்து அவற்றை உலகுக்கு பறை சாற்றினார்.

50 ஆண்டுகளாக புத்தார் தமது போதனையை மக்களுக்கு போதித்தார். பெருந்தொகையான மக்கள் அவரது போதனைகளை பின்பற்றினா் பல்லாயிரக்கணக்கானோர் அவருடைய சீடா்கள் ஆயினா் புத்தர். அவற்றுள் அவருடைய தாய், தந்தை, மனைவி, மகள் இராகுல், மற்றும் தனது பெரியன்னை ஆகியோரும் அடக்கம். 

உலகின் முதல் பெண்ணியவாதியாக புத்தரைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெண் துறவிகளுக்கான சட்ட திட்டங்கள் குறித்துப் பேசும் போது, தான் பெண்ணில்லை, எனவே பெண்ணுக்குரிய பிரச்சனைகளும், சிக்கல்களும், உடல்ரீதியான துண்பங்களும் எனக்குத் தெரியாது, எனவே பெண்களுக்கான சட்ட திட்டங்களை அவர்களே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கான முழு உரிமையை தந்த முதல் தலைவராக, வழிகாட்டியாக ஞானியாக புத்தரை பார்க்க வேண்டும்.

தனது எண்பதாவது ஆண்டில் கி.மு483-ல் ருசி நகரத்தில் வைசாக முழு நிலா நாளில்  நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் அவா் உடலுக்கு இறுதி கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எட்டு பகுதிகளாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் அவைகள் புதைக்கப்பட்டு அவற்றின் மேல் நினைவாலயங்கள் கட்டப்பட்டன.

பௌத்தம் :

ஒரு தனி மனிதன் தன் சக மனிதா்கலோடு சோ்ந்து வாழ்தலின் பொருட்டு வகுக்கப்பட்ட நண்ணெறியே பவுத்தம்.
இந்நெறி அய்வகை ஒழுக்கத்தையும், எண்வழி மார்க்கத்தையும், நான்கு உண்மைகளையும், பத்து நெறிகளையும் அடிப்படையாகக் கொண்டது.

தம்மம்:

தம்மம் என்பது பகுத்தறியும் தன்மையையும், பகுத்தறிவையும், அர்த்தமுள்ள கருணையையும் தன்னுடைய அங்கங்களாகக் கொண்டுள்ளது. தம்மம் என்பது மக்களைச் சார்ந்ததாகும். தம்மம் இன்றி சமுகம் இயங்காது. தம்மத்தின் மையம் மனிதா்களோ. மனிதா்கள் எவ்வாறு மற்ற மனிதா்களுடன் சோ்ந்தும், இயைந்தும் வாழ்வது என்ற நெறிமுறையே தம்மம்.

சங்கம்:

புத்தரின் போதனையை ஏற்று அதன்படி வாழ உருவாக்கப்பட்டது சங்கம். வரலாற்றில் முதன் முறையாக ஆண்களுக்கென தனி சங்கமும், பெண்களுக்கென தனி சங்கமும் புத்தராலே மட்டுமே உருவாக்கப்பட்டது.

நான்கு உண்மைகள்:

1. வாழ்க்கை துக்கமானது
2. துக்கத்திற்கான காரணமிருக்கிறது
3. துக்கத்திற்கான நிவாரணம் இருக்கிறது.
4. துக்கம் நீக்கம் பெறுகிறது.


அய்வகை ஒழுக்கம்:

1. பொய் சொல்லாமை
2. திருடாமை
3. வீண் கொல்லாமை
4. கள்ளுண்ணாமை
5. கூடா ஒழுக்கம் மேற்கொள்ளுாமை


எண்வழி மார்க்கம் :

1. நன் நோக்கு       -     (சரியாகப் புரிந்து கொள்ளுதல் )
2. நற் கருத்து       -     (சரியான சிந்தனை)
3. நல் வாய்மை     -     (சரியான பேச்சு)
4. நற் செயல்        -     (சரியான செயல்)
5. நல் வாழ்க்கை    -     (சரியான வாழ்க்கை)
6. நன் முயற்சி      -     (சரியான முயற்சி)
7. நற் கடைபிடி     -     (சரியான மனது)
8. நல் அமைதி     -     (சரியான கவனம்)


பத்து நெறிகள் :

1.  ஒழுக்கம்
2.  பிறா்  தேவைக்கான தானம்
3.  விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.  துன்பத்திலும் இன்பத்திலும் சுயக்கட்டுப்பாடு
5.  விடா முயற்சி
6.  சகிப்புத் தன்மை
7.  வாய்மை
8.  உள்ள உறுதி
9.  அன்பு
10. மைத்திரி ( உயிர் வாழ்வன அனைத்தின் மீதும் அன்பு கொள்ளல்)


பௌத்த வாழ்முறை:
 1. அவாவினாலோ அல்லது காமத்தினாலோ ஆட்கொள்ளப்பட   வேண்டாம்.
 2. துன்பமிழைக்காதீர்கள். தீய விருப்பம் கொள்ளாதீர்கள்.
 3. சினத்தை வளா்க்காதீர்கள். உங்கள் பகைமையை மறந்து விடுங்கள். அன்பால் பவைரையும் வெல்லுங்கள்.
 4. மனத்தின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படியாகும். இதுவே பவுத்த வாழ்முறையின் முதன்மையான போதனையாகும்.
 5. ஒருவனுக்கு சுயஉணா்வு இருப்பின் அவன் தன்னை வெல்லப் பயில வேண்டும்
 6. போரில் ஒருவன் ஆயிரமாயிரம் மனிதா்களை வெல்ல வேண்டியிருப்பினும் தன்னைத்தான் வெல்பவனே வெற்றி வீரா்களின் தலைவனாகிறான்.
 7. அறிவுற்றிருங்கள் நீதியாயிருங்கள் நல்லரோடிணங்கியிருங்கள்.
 8. விழித்திருப்பவனுக்கு இரவு நெடியது. களைத்திருப்பவனுக்கு ஒரு கல் தொலைவே நெடுந்தொலைவு. மெய்ஞானத் தம்மத்தை அறியாத அறிவிலிக்கு வாழ்க்கை நெடியது.
 9. அணைத்திலும் ஆழ்ந்த சிந்தனைக் கருத்தாழம் உடையவனாயிரு. அணைத்திலும் கவனம் மிக்கவனாயிரு. அணைத்திலும் நோ்மையாய்த் துணிவுடையவனாயிரு.
 10. வாழ்க்கை இன்பமளிப்பதாய் அமைவதில்லை. ஆயினும் பண்புகள் இன்பமளிப்பதாய் அமையும்.
 11. வெற்றி வெறுப்பை உருவாக்கும். ஏனெனில் தோல்வியுற்றவன் துன்புறுகின்றான். வெற்றி, தோல்வி இரண்டையும் கடந்தவன் நிறைவடைகின்றான் அவனே இன்புறுவான்.
 12. செல்லியதை செய்பவரும், செய்ததை சொல்பவருமே நிறைவடைந்தவராவா;.
 13. நல்வழியை தெரிவுசெய் அதனை விட்டுவிலகாதே. நல்வழியை தொடா்வதென்பது பவுத்த வாழ்முறையை பின்பற்றுவதாகும்.
 14. சிறந்த வழி எண்வழி மார்க்கமாகும். உண்மைகளில் சிறந்தவை நற்சொல்லாகும். நல்லொழுக்கங்களில் சிறந்தது பற்றற்றிருத்தலேயாகும். மனிதர்களில் சிறந்தவன் தொலைநோக்கு உடையவனாவான்.
 15. ஆக்கப்பட்ட அனைத்தும் அழியும். இதைக் கண்டறிபவன் எவனோ அவன் துன்பத்திலும் அமைதியாய் இருப்பான்.
 16. உலகில் குறை கூறப்படாதவன் ஒருவனுமில்லை
 17. எப்போதும் இகழப்படுவனாகவோ, எப்போழுதும் புகழப்படுவனாகவோ ஒருவரும் இருந்ததில்லை. இருக்கப்பவோதுமில்லை.
 18. சரியாக வேயப்படாத கூரைவீட்டுக்குள் மழைநீh; புகுவதுபோல சரியாக பயிற்சி பெறாத மனத்தினுள் அவா நுழைகிறது.
 19. பற்றுக்களுக்கு இரையாவதலேயே மனிதன் துன்புறுகிறான்.
பௌத்தம் இன்னும் புரியாதவா்களுக்காக ஒரு சென் கதை.

“ ஒரு ஊரில் மிகப் புகழ்பெற்ற ஒரு சென் துறவியிருந்தார் அவா் மிகவும் எளிமையானவா். அவரிடம் சென் கற்றுக்கொள்ள நிறைய மாணவா்கள் இருந்தனா்.  ஒருநாள் அவா்கள் அனைவரும் பனிசூழ்ந்த மலை பகுதியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாரத்தில் அனைவருக்கும் போதுமான இடம் இல்லை. எனவே துறவி மாணவா்களை விறகு கொண்டுவந்து தொடா்ந்து எரிய வைத்துக் கொண்டு இருக்கச் சொல்லிவிட்டு தியானம் செய்ய சென்று விட்டார்.      
      
மாணவர்களும் முடிந்த அளவு விறகை கொண்டு வந்து சோர்த்து தொடா்ந்து கணலை மூட்டிக்கொண்டு இருந்தனா் மாணவா்களுக்கு விரல் விரைத்து போகும் நிலை வந்ததும் அனைவரும் நெருப்பை சுற்றி வந்தமா்ந்து தங்களுடைய உடலை சூடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது துறவி சொல்லித்தந்தவைகளைப் பற்றி மாணவார்கள் ஒவ்வொருவரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

தியானம் கலைந்து துறவி வந்தார் வந்தவரிடம் மாணவா்களின் ஒருவன் குருவே ” சீக்கிரம் விடிந்தால் நன்றாக இருக்கும் ” என்றான். உடனே துறவி மாணவா;களைப் பார்த்து “ எப்போது விடியும் என்றார் ”
மாணவன் ஒருவன். நான் விறகு பொறுக்கப்போகும் போது என் கண்ணில் படுவது சுள்ளிகளா பாம்பா என்று தொரிந்தால் விடியும் என்றான்.
இன்னொருவன் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்தால் விடியும் என்றான்.
மற்றொருவன். எதிரே உள்ள மரத்தின் இலைகள் எல்லாம் கண்ணுக்குத் தொரிந்தால் விடியும் என்றான். இன்னொருவன். எதிரே உள்ள மரத்தில் கட்டியிருப்பது குதிரையா கழுதையா என்பது தெரிந்தால் விடியும் என்றான் ஒருவன். மற்றொருவனோ, சேவல் கூவினால் விடியும் என்றான். எல்லோரும் அவரவர்க்குத் தோன்றியதை கூறிக்கொண்டே இருந்தனர். அவ்வாறு பேசிக்கொண்டே இருப்பதும் அவா்களது குளிருக்கு இதமாகவே இருந்தது. பொழுதும் விடிந்தது. எல்லோரும் அமைதியாய் துறவியை  பார்த்த்துக் கொண்டிருந்தனார். துறவி அணைவரையும் ஒரு கணம் அமைதியாய் பார்த்துவிட்டு சொன்னார். 
“ எப்பொழுது நமக்கு எதிரில் வருவது நம் சகோதரன் அல்லது சகோதரி என்று எண்ணத் தோன்றுகின்றதோ அப்போழுதுதான் தோன்றுகின்றதோ அப்போழுதுதான் விடியும் ”

Friday, May 17, 2013

மாற்றுப் பாதை - பிப்ரவர் 12 தலித் முரசு இதழில் திரு. யாழன் ஆதி அவர்கள் என்னைக் குறித்து எழுதியது.

- பிப்ரவர் 12 தலித் முரசு இதழில் திரு. யாழன் ஆதி அவர்கள் என்னைக் குறித்து எழுதியது.


மாற்றுப்பாதை - மா.அமரேசன்

யாழன் ஆதி செவ்வாய், 21 பெப்ரவரி 2012 14:59

அதி சிறந்த ஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன் அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். "நடுங்கும் நிலம் நடுங்கா மனம்' என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள் பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன.

தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் கற்றிருக்கிறார். இவருடைய தீவிர வாசிப்பு, பொதுவாக இவரை மற்றவர்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கிறது. இவர் பணியாற்றிய நிறுவனத்திலும் இறக்குமதியாகும் எந்திரங்களைக் குறித்த அதிகமான செய்திகளை அவர் தெரிந்து வைத்திருந்ததால், தனது மேலதிகாரிகளிடம் கெட்டபெயர் வாங்குபவராகவே இருந்திருக்கிறார். இதுவே, அவரை மக்கள் பணிக்கு அழைத்து வந்தது.

அமரேசனின் கட்டுரைகள் மிகவும் அவசியமானவை. "புலப்படாத் தண்ணீர் வணிகம்' என்னும் கட்டுரை பல்வேறு தரவுகளைக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் நடப்பது "அரிசி அரசியல்'; ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவற்றில் நடப்பது "நீர் அரசியல்' என்று அவர் குறிப்பிடும் சொற்றொடர்களிலிருந்தே நாம் அக்கட்டுரையின் சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பொருளை ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றால் அதை மட்டும் நாம் ஏற்றுமதி செய்யவில்லை; மாறாக அப்பொருளை உற்பத்தி செய்யப்பயன்படும் நீரையும் ஏற்றுமதி செய்கிறோம்.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய நாம் 2000 லிட் தண்ணீரை செலவழிக்கிறோம்; ஒரு கிலோ மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 20,000 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு கிலோ முட்டையை உற்பத்தி செய்ய 3300 ரூபாய் தேவைப்படுகிறது. ஆகவே, ஒரு பொருளின் மதிப்பில் புலப்படாத் தண்ணீரின் மதிப்பையும் சேர்க்க வேண்டும் என்னும் கருத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என்று அக்கட்டுரை பேசுகிறது.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "புலப்படா நீர் வணிகம்' என்ற தத்துவம் இன்று உலகளவில் பேசப்படுகிறது. ஆனால், தலித்துகளாகிய நாம் புலப்படாத மக்களாக இருக்கிறோம். நம்முடைய உழைப்பு நம்முடைய பங்கு என்று எதுவும் நமக்கு இல்லை. அவற்றைக் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது என்றார். இது குறித்து தலித் அறிவுலகம் விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

அவருடைய நூலில் இருக்கும் இன்னொரு கட்டுரை "தவற விடக்கூடாத தருணம்'. இது, தலித்துகள் நிறுவனமயமாகுவதைப் பற்றியது. அமரேசனின் முனைவர் பட்ட ஆய்வு நுண் நிதியம் தொடர்பானது. "மைக்ரோ பைனான்ஸ்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அத்தகைய நுண் நிதியத் தத்துவத்தின் மூலம் தலித்துகளுக்கான வங்கியை நிறுவ வேண்டும் என்பதும் சிறிய அளவுகளில்கூட அத்தகைய நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதும் அதற்கான நிதிக்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகைகளும் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிகள் அனைத்திற்கும் வங்கிகள் செயல்படுகின்றன. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஆதாரத்தை ஏன் செயலாக்க முடியாது என்று அவர் வினவுகிறார்.

சுற்றுச் சூழல் குறித்த கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஏரிகளையும் ஆறுகளையும் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து கிராம நிர்வாகத்திற்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நீர்வளம் பாதுகாக்கப்படும் என்னும் அவர் கருத்தும் மிகவும் ஆராயத்தக்கது. பாலாற்றின் அழிவுகுறித்த எச்சரிக்கை, வனங்களைக் காக்க வேண்டிய அவசியம், அதற்காக அவர் தரும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் முக்கியமானவை.

அமரேசன் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு திடீரென்று வேறொரு பயிற்சியில் சேர வேண்டி யிருந்தது. அனித்ரா அறக்கட்டளையில் அப்பயிற்சியை நடத்தியவர் இன்பக்குமார். அப்பயிற்சியில்தான் அவருக்கு சாதி மற்றும் அதன் இருப்பு குறித்த விரிவான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு வரை சாதிய ஆதிக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை அவர் உணரவில்லை. ஆதிக்கவாதிகளுக்கு எது பிடிக்குமோ அதையெல்லாம் செய்து வந்திருக்கிறார்.

"இந்து கடவுளர்களை வணங்கினால் அவர்களுக்கு பிடிக்கும் என்று எண்ணி இந்து கடவுளர்களை வணங்கினேன்.

அப்படியும் அவர்கள் என்னைத் தனியாகத்தான் பார்த்தார்கள். தமிழ் அடையாளம் நம்மைக் காக்கும் என்று எண்ணி என்னை ஒரு தமிழ்ப் போராளியாக்கிக் கொள்ள முனைந்தேன். ஆனால் அங்கேயும் இதே சாதியப் பார்வைதான் என்மீது விழுந்தது. கடைசியில் அம்பேத்கரைப் படித்து விடுதலைக்கான வழியைக் கண்டுகொண்டேன்'' என்கிறார்.

தலித் விடுதலை என்று எதைக் கருதுகிறீர்கள் என்னும் வினாவிற்கு, சட்டை இல்லாமல் போராடிய காலத்தில் சட்டை போடுவது நமக்கு விடுதலை. இன்று நமக்கு விடுதலை என்பது அடுத்த கட்டத் தேவையை நோக்கி நகர்வதுதான். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது ஆனால் சாதி ஒழியவில்லை. தலித்துகள் சாதி ஒழிப்பை முன்வைக்கிறோம். ஆனால், இந்த நவீன சமூகத்தில் தலித்தல்லாத எந்தச் சமூகமாவது சாதி ஒழிப்பைப் பற்றி பேசுகிறதா? இக்கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும்.

"நம்மிடையே உறவுமுறைச் சங்கங்கள் தோன்ற வேண்டும். ஒரு பகுதி தலித்துகள் இன்னொரு பகுதி தலித்துகளுக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். வசதியுள்ள தலித்துகள் முதலீடு செய்து புதிய பொருளாதார மேம்பாட்டினை உருவாக்க வேண்டும்'' என்கிறார் அமரேசன்.

"பட்ஜெட்டில் தலித்துகளுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தின்படி ஒதுக்கப்படும் நிதி குறித்து நம்முடைய தலைவர்கள் கேட்கிறார்கள். அது மிகவும் சரியே. ஆனால், அந்த நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்னும் திட்டங்களை அரசுக்கு நாம் தருவதோடு, சில நெருக்கடி களையும் உருவாக்க வேண்டும்'' என்கிறார்.

அமரேசனின் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் இன்னொரு குரல் பற்றி நாம் கூறித்தான் ஆகவேண்டும். அது இந்த இயற்கையைக் காக்க எத்தனிக்கும் அவருடைய மனம். அதுவும் ஒரு தலித் குரலாக சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் கூறுகின்ற காரணங்கள் ஆழமானவை. தமிழகத்தில் அண்மைக் காலங்களில் பூகம்பங்கள் பதிவான இடங்கள், அதற்கான காரணங்கள் மற்றும் இப்படிப்பட்ட பூகம்பங்கள் வருங் காலங்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் கட்டுரை, சுரண்டலுக்கான களமாக சுற்றுலா எப்படி அங்குள்ள பழங்குடி மக்களை சுரண்டுகிறது என்பதை அவருøடய கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன.

குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தாத சமூகம் வலுவற்றதாக மாறிவிடும். மேலும், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து என்பது ஏதோ சத்து மாத்திரைகளில் இல்லை; மாறாக அவர்கள் உண்ணும் உணவில் இருக்கிறது. ஆகவே, அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் பத்துவகையான பழமரக்கன்றுகளைத் தரவேண்டும். அதிலிருந்து வரும் பழங்கள் மிகச் சிறந்த ஊட்டமாகவும் அதே நேரத்தில் சூழலைக் காப்பதாகவும் அமையும் என்னும் கட்டுரை, மரங்களையும் மனிதர்களையும் இணைக்கும் முயற்சியாக இருக்கிறது. அது மட்டுமின்றி உணவே மருந்து என்னும் கோட்பாட்டையும் அது வளர்க்கிறது.

பஞ்சமி நிலமீட்பு தொடர்பான கட்டுரை, "ஆண்களின் உலகமடி' "தேவை தொலைநோக்குப் பார்வை' ஆகியவை தன்னம்பிக்கையை தரக்கூடியவையாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் கரிக்காத்தூர் கிராமத்திலிருந்து இன்றைக்கு எதிர்கேள்விகள் கேட்கும் கூர்மையும் தலித் அடையாளத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், பிரச்சினைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவும் ஒருங்கே இணைந்த அமரேசனின் கனவு என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, தலித்துகளுக்கான நிறுவனங்களை உருவாக்கு வதுதான் என்று அடித்துக் கூறுகிறார்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவக் கூடல் நிறைந்தவரான அமரேசன், தன்னுடைய திறமை, அறிவு ஆகியவற்றை தலித்துகளுக்காகப் பயன்படுத்தும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார்.

மக்கள் பணி செய்யும் மா. அமரேசனின் எழுத்துகள் இன்றைய தமிழ்ச்சூழலுக்குப் புதிய உரையாடல்களை உருவாக்குவதால் அமரேசன் எல்லா விதங்களிலும் போற்றுதலுக்குரிய வராகவே செயல்படுகிறார்.

அமரேசனைத்
தொடர்பு கொள்ள : 98659 76642 – யாழன்ஆதி

Thursday, April 11, 2013

சோள கொல்லை பொம்மைபசுமை படர்ந்த
வெளிதனில் 
சிலுவை 
சுமந்த 
சொலகொல்லை
பொம்மைக்கு 
தெரியும் 
தன்னை பற்றி 

சிலுவையில் 
அறைய பட்டதால் 
தான் இயேசு 
அல்லஎன்றும் 

பெரு வெலிக்கு 
காவல் 
நிற்பதால் தான் 
காவல்காரன் 
அல்ல என்றும் 

பறவைகள் 
பயப்பட 
அதனிடம் 
வலை இல்லை 

மனிதர்கள் 
பயப்பட 
அதனிடம் 
மனம் எல்லை 

மன்னர்கள்
பயப்பட 
அதனிடம் 
படையும் நாடும் இல்லை 

ஒன்றும் இல்லாத 
பொம்மைக்கு 
இவ்வளவு பயனா ?

தலைகனம் கொள்ள 
அதற்க்கு
தலை இல்லை 
உறுப்புகள் இல்லை 

அதன் 
அடையாளத்தை 
மட்டுமே கொண்ட 
உடலும் மனமும்
இல்லாத பொம்மை அது 

அதன் மேல்
மற்றவர்களுக்கு 
ஏன் இந்த
கோபமும் வெறுப்பும் 

தன்னைப்போல்
இருப்பதால் 
தன்னை புரிந்து
கொள்ளவில்லை 
என்று 
மனிதனுக்கும் 
மன்னன்க்கும் 

மனம் இல்லா 
பொம்மை 
மண் தானே 
அதை புரிந்து
கொள்வது 
அவ்வளவு கடினமா ?

புகழும் 
பாராட்டும் 
பழியும் 
பாவமும் 
வஞ்சமும் 
காமமும் 
மனம்
உடையவர்களுக்குதானே !

மனம் இல்லாத 
பொம்மை இடம் 
எதிர்பார்ப்பது 
சரியா ?

பொம்மையை 
பொம்மையாக 
பாருங்கள் 

பொம்மைக்கும் 
வாழ்க்கை உண்டு 

அதுவும் தான் வாழ 
இடி மின்னல் 
மழை வெயில் 
காற்று புயல் 
என எல்லாவற்றையும் 
எதிர்து நிற்கிறது 
வாழ்கிறது 

படைப்பின் 
நோக்கத்தை
 புரிந்து 
கொண்டதால் 
அதற்க்கு 
அச்சம்மில்லை 

பறவைகள் 
தன்னைக் கண்டு 
பயபடுவதால் 
பெருமையும் 
இல்லை 

மன்னர்களை
கண்டு 
மகிழ்வதும் இல்லை 


சோளக்கொல்லை பொம்மைகள் 
தங்கள் தொப்பியை 
கழற்றுவது 
இல்லை 
மாண்புமிகு 
மகாராஜாவுக்கு 
முன் ...

தற்போதைய பதிவு

அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...

பலராலும் படிக்கப்பட்ட கட்டுரைகள்