Tuesday, August 20, 2013

குட்பை குப்பை

ஒவ்வொரு நகராட்சி, பேருராட்சி, மாநகராட்சி என அனைத்து ஊர்களிலும் தலையாய சிக்கலாக இருப்பது. சந்தேகமே இல்லாமல் குப்பைகள்தான், இந்த குப்பை என்றதும், இந்த தேசத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் இவற்றை நீக்குவது எல்லாம் தலித்துகளின் வேலை என்று,ஒரு பொதுபுத்தி மட்டும் இருக்கின்றது எல்லோருக்கும், அரசுக்கும்.  அதைப் போலவே இன்று தேசமெங்கும், மனிதக் கழிவு, மருத்துவக் கழிவு, மின்பொருள் கழிவு, என கழிவுப் பொருட்களை பல வகைப்படுத்தினாலும், எல்லாமே குப்பைதான். இரண்டு வரியில் சொல்வதென்றால், மக்கும் குப்பை, மக்கா குப்பை. இவைதான் நிதர்சனமான உண்மை.

இவைகளை அகற்றும் பணியை அரசு தலித்துகளுக்கு மட்டுமே வழங்குகின்றது. இதுவும் ஒரு வகையான சாதிய பாகுபாடுதான். குப்பைகளை அள்ளுவதால் தலித் சமுகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பும், உளவியல் பாதிப்பும். சொல்லி மாளாது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், தமது கழிசடை நாவலில் இவர்களது வலியை சொல்லி இருப்பார். ஆனால் இங்கு நான் சொல்ல வந்த செய்தி அதுவல்ல.

ஊர் சுத்தமாக இருக்க குப்பைகளை அள்ளும் தலித் தொழிலாளியின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. காலை விடிந்ததும், நமக்கு நமது தெரு சுத்தமாக பளிச்சென்று இருக்கும், அதற்காக துப்புரவு தொழிலாளி படும் துயரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இரவெல்லாம் தெருவை கூட்ட வேண்டும், பெரும்பாலும் பெண் பணியாளர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆண் பணியாளர்கள் வண்டியி்ல் சென்று குப்பைத் தொட்டியில் இருக்கும், குப்பைகளை எடுத்துக் கொண்டு குப்பையைத் கொட்டும் இடத்தில் கொட்டுவார்கள். இவர்களின் பணியும் விடியற்காலை நேரத்தில் இருக்கும். பகல்பொழுது இவர்களுக்கு நரகமாக இருக்கும். ஊதியமும் மிக குறைவாகவே இருக்கும். அதனால் இவர்களின் குடும்பங்ள் வறுமையில் உழலும்.
கழிவுநீக்கும் பணியில் உள்ள அணைத்து துப்புரவு தொழிலாளிக்கும் தமது இழி நிலையை எண்ணியும், குப்பைகள், கழிவுகளின் குமட்டலை குறைக்க மது பழக்கமும் இவர்களிடம் காணப்படும். நாளடைவில் இவர்களை இந்த தொழில் குடி நோயாளிகளாக உருமாற்றி, குடும்பத்தை குலைத்து, ஏழையாகவே இறந்து போவததான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது இந்த தேசத்தில்.
இவர்களின் ஏழ்மை நிலையை மாற்றி இம்மக்களையும் ஒரு பெரும் வணிகர்களாக உருவாக்க இயலும், சற்றே மாற்றி சிந்தித்தால் போதும்.
எந்ததொழிலை குலத்தொழிலாகவும், இழிவுத் தொழிலாக பொது சமுகம் கட்டமைத்து இருக்கின்றதோ, அதே தொழிலில் இருந்து நாம் நமக்கான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்..

முதலில் துப்புரவு பணியில் உள்ள அணைத்து தொழிலாளர்களும், தமக்கென ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும். குப்பைகள கொட்டுவதற்கு பதிலாகவும், அல்லது எரிப்பதற்கு பதிலாகவும் தங்களுக்கான வருமானத்திற்கான வாழ்வியல் ஆதாரமாக அந்த பணியையும், குப்பையையும் பயண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

அந்த சங்கம் இரண்டு வகையான பணிகளை செய்ய வேண்டும்.

  1. மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரங்களை தயாரிக்க வேண்டும், அதை அவர்களுடைய கூட்டுறவு சங்கங்கள் வழியாவே விற்பனை செய்ய வேண்டும். அதன் வழியாக வருகின்ற லாபம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
  2. அல்லது குப்பையில் இருந்து தயாரிக்கின்ற இயற்கை உரத்தை, விவசாயம், மற்றும். இயற்கை உரங்கள் தயாரிக்கின்ற உர நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். அவை இயற்கை உரங்களுடன் கலந்து தயாரிக்கப் பயன்படும். உதாரணம், வேப்பம் புண்ணாக்குடன் இத்தகைய உரங்களை கலந்து தயாரித்தால் உயிர் சத்து மிகுந்த உரமாக இருக்கும். பயிரும் நன்கு விளையும்.
இந்த தொழில் நுட்பத்தை இந்த மக்களுக்கு விவசாய கல்லுாரியினரும், மற்ற நபர்களும் கற்றுத் தர வேண்டும். அல்லது அவர்களாகவே கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள மாற்று வழியில் முயற்சிக்க வேண்டும்.
  1. இரண்டாவதாக,மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம்தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், வாய்ப்புகள் மற்றும் வசதிகளையும் அரசிடம் இருந்து கேட்டு பெற்று, அதன் வழியாக கிடைக்கின்ற மின்சாரத்தை அரசிற்கே கொடுக்கலாம். இதன் வழியாக பொருளாதாரம் கணிசமாக உயரும்.
  2. எந்த தொழிலை இந்த சமுகம் இழிவாக  நிணைக்கின்றதோ, அந்த தொழிலையே தமக்கான முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. இவ்வாறு நாடு முழுவதும் செய்யும் போது, எங்கும் குப்பைகள் இருக்காது. மாறாக குப்பைகளில் இருந்து துப்புறவு தொழிலாளிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்...
  4. இதை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் அணைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்கள், சமுக இயக்கங்கள் ஒருமித்து குரல் கொடுத்து செயல்படுத்த வேண்டும்..

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்