பொதுவில் கதை என்பது புனைவு. சில நேரங்களில் நிகழ்வுகளையும், நிகழ்வுக்குரிய பின்னனியை விவரிப்பதையே கதை என்கின்றோம். இத்தகைய நிகழ்வின் பின்னனியை நகைச்சுவையோடு விவரித்தால் அது நகைக்சுவை கதை என அடையாளப்படுத்தபடுகின்றது. அதுவே, குடும்ப பின்புலமாக இருந்தால், குடும்பக் கதை என்று அழைக்கப்படுகின்றது. சம்பவங்களை சரித்திரப் பின்புலத்தில் விவரிக்கும் பொழுது சரித்திரக் கதை என அடையாளப்படுத்தப்படுகின்றது. பொதுவில் கதைகளுக்கான கருப்பொருள் இவ்வகையிலே அமைகின்றது அல்லது அமைக்கப்படுகின்றது.
மேலும், கதை என்பது ஒரு தலைவன், தலைவி, அல்லது குழு, மக்கள் என்று எவரையேனும் ஒருவரை சுற்றிலும் நிகழும் சம்பவங்களால் விவரிக்கப்பட வேண்டும் என்னும் கதைக்கான வரைவிலக்கணத்தை உடைத்துள்ள கதைதான் நத்தையைக் கொன்ற பீரங்கிகள்.
கதையின் இலக்கணத்தின் படி பார்த்தால், திருவள்ளுவர் மாவட்டத்து சேரி மக்கள்தான் கதை தலைவன், தலைவி, மற்றும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த 50 ஆண்டுகால வரலாறுதான் கதைகளம். இதை கோபி விவரிக்கும் விவரனைதான் இதுவரையிலும் தமிழ் சமூகம் கடைபிடித்து வந்த கதைக்கான கட்டமைப்பை உடைக்கின்றது.
பொதுவில் தலித்துகளுக்கான அடையாளமாக சொல்லப்பட்டிருப்பதை இங்கு நினைக்கத் தோன்றுகின்றது. ஒரு தலித் என்று தம்மை உணர்பவர், இந்த சமூகம் தலித்துகளின் மீது நிகழ்த்தும் அல்லது , உருவாக்கியுள்ள மதம் மற்றும் சாதி, பொருளியல் , அரசியல் சார்ந்த அனைத்து கட்டமைப்புகளையும் உடைப்பவராக இருக்க வேண்டும், அல்லது கேள்விக்கு உட்படுத்துபவராக இருக்க வேண்டும். என்பதே கௌதம புத்தர் தொடங்கி, புரட்சியாளர் அம்பேத்கர் வரை கற்பித்து சென்றுள்ள பாடமாக இருக்கின்றது.
கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது, கட்டமைத்தவர்களின் ஆளுகையையும் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் மாறி விடுகின்றோம், அவ்வாறு கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக, நாம் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் கருத்தியலான, சாதி மற்றும் மதம் குறித்தான கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்களாகின்றோம், எனில் நாம் தீண்டத்தகாதவர்கள் என்பதை நாமே ஒப்புக் கொண்டு பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகளின் ஆதிக்கத்துக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்கின்றோம். என்பதே இங்கு நம்மைச் சுற்றிலும் உள்ள கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது நிகழும் யதார்தமான உண்மையாக இருக்கின்றது.
அவ்வாறு கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது, இந்த சமூகம் கட்டமைத்துள்ள பிறப்பின் அடிப்படையிலான சாதிய பாகுபாடு மற்றும் இழி நிலைகளையும் ஒப்புக் கொண்டவர்களாக ஆகின்றோம், எனவே, தலித் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் பெரும்பாலும் கட்டமைப்புகளை உடைப்பவர்களாகவே அறியப்படுபவர்களாக இருப்பார்கள், அந்த வகையில்,
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள், கதை, இதுவரையிலும் சமூகத்தில் கதை குறித்தான கட்டமைப்பை எந்தவிதமான சமரசமும் இன்றி கட்டுடைக்கின்றது. ஐம்பது ஆண்டுகால வட தமிழகத்தின் ஒட்டுமொத்த சேரியின் வாழ்வியலை கதைக்களமாக கொண்டதால் ஒற்றை நபர்களையோ அல்லது கற்றையான நபர்களையோ சுற்றி கதை பின்னப்படாமல், சேரி மக்களின் வாழ்வியலை கதைகளமாகக் கொண்டதால் சம்பவங்களை எழுத்தின் வழி காட்சிப்படுத்துகின்றார் இயக்குனர். நா. கோபி.
சென்னை தமிழ் என்று மெத்த படித்தவர்களாளும், ஆதிக்க சாதிக்காரர்களாலும் அழைக்கப்படுவதன் உள்ளர்தமாக, தமிழ் மொழியின் இழிநிலைக் குறியீடாக உள்ள சென்னை தமிழ் அல்லது சென்னையின் மொழி நடையிலேயே இந்த கதை முழுவதும் அமைந்திருப்பது, இது வரையிலும் உள்ள பொதுப் புத்தியிலுள்ள தென்னக வட்டார வழக்கு உயர்ந்தது, வட வட்டார வழக்கு தாழ்வானது என்னும் கட்டமைப்பை உடைப்பதாகவே இருக்கின்றது.
உண்மையில் சென்னை தமிழ் அல்லது சென்னை மற்றும் அதை சுற்றிலுள்ள மக்களின் மொழி நடை என்பது மற்ற மாவட்டத்து மக்களின் மொழி நடையை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல. செமை என்று சொல்லப்படுகின்ற சொல், செம்மை என்னும் தமிழ் சொல்லின் மருவு. இஸ்த்துக்கோ எனும் சொல் இழு என்னும் தமிழ் சொல்லின் பேச்சு வழக்கு, இவ்வாறு விவரிப்பது வேறு ஒரு பொருளுக்கு சென்றுவிடும் என்பதால், இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன்.
அத்தகைய சென்னையின் மொழிநடையில் இந்த கதை முழுவதும் சொல்லப்பட்டிருந்தாலும், கதையின் முதல் வரியான அப்பா இதுதான் நத்தையா என்பதில் தொடங்கி, இதையெல்லாம் கேட்டுக் கொண்டு காலணி ஆட்கள் உட்கார்ந்து இருந்தாங்க, என்னும் இறுதி வரி வரையிலும் காட்சிகளாக நம்முன் விரியும் வகையிலேயே அந்த மொழி நடை உள்ளது.
ஒரு கதை என்பது நிகழ்வுகளின் காட்சி பின்னல் அதற்கான கருவிதான் எழுத்து அதில் கதை எழுதும் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்ற உண்மையை உணர்ந்து கதைக்கான புது இலக்கணத்தை வகுப்பதாகவே உள்ளது கோபின் மொழி நடை. கதையென்பது வார்த்தைகளின் பின்னல் என்னும் கட்டமைப்பையும் உடைக்கின்றது, கோபியின் எழுத்தும் அதன் காட்சியாக்கமும்.
இந்த கதையை படிக்கும் அனைவரும், கோபி சொல்கின்ற சம்பவங்களை நடைபெறும் இடங்களிலே உள்ள நபர்களுடன் தாங்களும் கை கோர்த்து நிற்பது போன்ற ஒரு உணர்வை கதையின் முதல் வரியிலேயே நமக்கு ஏற்படுத்தும் எழுத்து சூட்சுமம் கதையாசிரியர் கோபிக்கு மிக இயல்பாக வந்திருப்பதை இந்த கதையை படிக்கும் அனைவருமே ஒப்புக் கொள்வர் என்றால் அது மிகையில்லை.
இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை பட்டியலிடுவதன் வாயிலாக, வட தமிழகத்தின் சேரி மக்களின் 50 ஆண்டு கால வாழ்வியலை பட்டியல் இட இயலும் என நினைக்கின்றேன்
1. உறவு முறைகள் ( தாய் வழி சமூகத்து உறவு முறை)
2. பறையர்களின் வாழ்வியல்
a. பறையர்களுக்கான விவசாய அறிவு
b. பறையர்களின் இயற்கை அறிவு
c. பறையர்களின் மன பாவங்கள்
d. ஆண்டைகளின் அரசியலும், அனுகுதலும்,
e. பறையிசை
3. அம்பேத்கர் இயக்கங்கள் சேரிகளில் ஏற்படுத்திய தாக்கம்,
4. பணத்துக்கும் பொருளுக்குமான மதிப்பீடு
5. கூலி உழைப்பு மூலதன பெருக்கம்
6. சுற்றுசூழலுக்கு எதிரான மக்களும் அரசுகளும்
7. நத்தையை கொல்ல பீரங்கிகளை பயன்படுத்தும் அனுகுமுறை அவமானம்.
என்னும் வகையிலே அமைத்திருக்கின்றார் கோபி.
கதையென்னவோ திருவள்ளுவர் மாவட்டத்தை சுற்றி நிகழ்ந்தாலும், அது பொருந்தும் தளமாக வட தமிழ்நாட்டின் ஒவ்வொரு சேரியும் உள்ளது. இந்த கதையை ஒவ்வொரு சேரிக்கும் பொருத்திக் கொள்ளலாம், அதில் இந்த கதையில் வரும் ஒவ்வொரு மாந்தர்களும் உயிரோட்டத்துடன் கலந்து வாழ்ந்து மறைந்தவர்களாகவே அல்லது வாழ்கின்றவர்களாகவே இருப்பார்கள்.
சேரிகளில் பறையிசை எங்கு ஒலித்தாலும் இந்த கதையில் வரும் புத்தன் மற்றும் அவனுடைய பறையிசைப் பாடம் நிச்சயம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு காலணியிலும் சிவலிங்கம் அண்ணன்கள் வாழும் வரலாறாக நிற்கின்றனர். மாட்டுகறி என்று உச்சரிக்கும் அனைவருக்கும், மாடறுப்பது எவ்வளவு நுட்பமான வேலை என்பதை மிக நுனுக்கமாக காட்சிபடுத்தியிருக்கின்றார் இந்த கதையில்.
சேரி மக்களின் கதை என்று சொல்லப்படுகின்ற எதிலும் சேரி மக்களின் உணவு முறை குறித்தான விவரனைகள் இருந்ததில்லை. ஆனால் நத்தையைக் கொன்ற பீரங்கிகள் கதை முழுவதும் சேரி மக்களின் உணவு முறைகள் அதை தயாரிக்கும் முறைகள், அதன் சுவை குறித்தான விவரனைகள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை முறையை விவரித்துச் செல்கின்றார் கோபி.
அதிலும் மாட்டுக்கறி குறித்தான விவரனையும், அதை பயன்படுத்தும் முறை மற்றும் சமைக்கும் உத்தி சேரி வாழ் மக்களின் கதைகள் எதிலும் சொல்லாத செய்தியாகும். நத்தையை கொன்ற பீரங்கிகள் கதை வட தமிழகத்தின் சேரி மக்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை முறையை மிகத் துல்லியமாக பதிவு செய்திருக்கின்றது.
இன்னும் சற்று மிகையாகச் சொல்வதென்றால், திரமென்ஹர் எழுதிய செங்கல்பட்டு மாவட்ட பறையர் இன குறிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. கோபியின் நத்தையை கொன்ற பீரங்கிகள் கதை. எழுதிய கோபியையும், வெளியிட்ட தடாகம் பதிப்பகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
No comments:
Post a Comment