Tuesday, September 13, 2016

தமிழர் மருத்துவம் நுால் விமர்சனம்

ரலாறு என்பதன் வடிவங்களும், வழமைகளும் வெவ்வேறானவையாக இருந்தாலும் அதன் விவரிப்பும் விளக்கமும் இரண்டு வகைப்பாடுகளை கொண்டதாகவே இருந்திருக்கின்றது இதுவரையிலும்.
முதலாவதாக ஆட்சியாளர்களின் வராலாறு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அருமை பெருமைகளை பேசும் வரலாறு, இதில் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோபுரத்தை கட்டியது முதல் போஜராஜன் விக்கிரமாதித்யன் அரியாசனையில் அமர்ந்தது வரை பழம் பெருமைகளை பேசுவது.
இரண்டாவது வகை என்பது உழைக்கும் மக்களின் வரலாற்றை அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருந்து அன்னியப் படுத்தப் பட்டவர்களின் வரலாற்றை பேசுவது. இந்த வகையான வரலாறு என்பது மக்களின் பார்வையில் இருந்து எழுதுவது, இவைகள் பெரும்பாலும் வாய்மொழிப் பதிவுகளாகவோ, கதைப்பாடல்களாகவோ காலம் காலமாக மக்களின் மத்தியில் பேச்சு வழக்கில், கதை வழக்கில், பாடல்களின் வடிவில் இருந்து கொண்டிருப்பதை எழுத்து வடிவமாக கொண்டு வருகின்ற வகையாகும்.
இவை இரண்டு வகையிலும் இல்லாமல் மூன்றாவதாக ஒரு வகையான வரலாற்றை நமக்கு தெரியப்படுத்தும் இன்னும் கூடுதலாக சொன்னால் தெளிவுபடுத்தும் ஒரு புத்தகம்தான் “தமிழர் மருத்துவம்”  


     புத்தரின் போதனைகளில் ஒன்றான, “ மனிதர்களின் பயமே, அவர்களின் பேராசைக்கு காரணமாக இருக்கின்றது” அதனை யார் புரிந்து வைத்திருக்கின்றார்களோ, இல்லையோ, பன்னாட்டு நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் இலுமிணாட்டிகள் மிகச் சரியாகவும், நுட்பமாகவும் புரிந்து வைத்திருக்கின்றனர். 
      அதனால்தான், பன்ணாட்டு நிறுவனங்களின் பொருளை விற்பதற்காக, விளம்பரங்கள் என்னும் பெயரால் நம்மை பயமுறுத்துகின்றனர். உண்மையில் எல்லா விளம்பரங்களின் மையக் கருத்தும் நம்மை அச்சுறுத்துவதாகவே அமைந்திருக்கும், இதனை நாம் மேலோட்டமாக கவனித்தாலே தெரியும், அந்த பயத்தின் அடிப்படையிலேயே, நாம் அவர்கள் சொல்லும் பொருளை வாங்கத் துவங்குகின்றோம்.
      இது ஒரு சிறிய உதாரணத்திற்காக சொல்லப்பட்டது, இத்தகைய பயத்தின் அடிப்படையில் பன்ணாட்டு நிறுவனங்களின் முதலாளிகள், நமது வாழ்வை, கலாச்சாரத்தை, மனோபாவத்தை, மருத்துவத்தை எப்படி மாற்றினார்கள், மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அழுத்தத்தோடும், ஆதங்கத்தோடும் பதிவு செய்யும் நுால்தான் தமிழர் மருத்துவம்.
      நுகர்வு கலாச்சாரத்தின் பின்னே கண்களைக் கட்டிக் சென்று கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை சற்றேனும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற ஒரு புத்தகம் என சொன்னால் அது “ தமிழர் மருத்துவம்” புத்தகம் மட்டுமே, நேர்காணலாகவும் இல்லாமல், செவ்வி வகையாகவும் இல்லாமல், மருத்துவர். திரு. மைக்கேல் செயராசுடன், ஒரு இயல்பான உரையாடலாக தொடங்கி, வரலாறாக விரிகின்றது இந்நுால்.
      இந்நுாலின் மொத்த பக்கங்கள், 95, இவற்றில் மருத்துவருடன் உரையாடும் போது கேட்கப்பட்ட விளக்கங்களாக உள்ளவை மொத்தம் 81 கேள்விகள்.
·         மூலிகைகள் குறித்து – 03
·         இயற்கை குறித்து    - 10
·         குளியல் குறித்து     - 03
·         ஆளுமைகளை குறித்து – 03
·         இலக்கியம் குறித்து    – 06
·         உணவு முறைகள் குறித்து – 12
·         சித்தர்கள் குறித்து        - 02
·         மருத்துவரது குடும்பம் குறித்து – 02
·         சித்த மருத்துவம் குறித்து – 40 கேள்விகள் என மொத்தம் 81 கேள்விகளுக்கான விடையாக இந்த புத்தகம் இருந்தாலும், இதன் உள்ளடக்கம் என்னவோ தமிழர் மருத்துவம் மற்றும் வாழ்வியலின் மீட்டுருவாக்கமாகவே இருக்கின்றது.
o    சித்த மருத்துவம் தொடர்பான 40 கேள்விகளின் உட்கூறாக
§  மருத்துவ முறைப்பாடுகள் குறித்து – 06
§  மருந்து செய்முறைகள் குறித்து – 05
§  நாட்டு மருத்துவர் என்போரைக் குறித்து – 02
§  போலி மருத்துவர்களைக் குறித்து – 03
§  சித்த மருத்துவர்களைக் குறித்து – 06
§  சித்த மருத்துவம் குறித்து – 18  ஆகிய வினாக்களுக்கான விடைகளாக இல்லாமல் வரலாறாக பதிலளித்திருக்கின்றார் மருத்துவர். மைக்கேல் ஜெயராஜ்.
அறிஞர். கார்ல்டு வெல், மற்றும் மொழிஞாயிறு. தேவநேயப் பாவாணர், ஆகிய இருவருக்குப் பின் அண்மைக் காலத்தில் மருத்துவர். மைக்கேல் செயராசு அவர்கள் மட்டுமே அழுத்தம் திருத்தமாக, இந்திய வரலாற்றை இமய மலையில் இருந்து பார்க்க வேண்டாம், தென் குமரியில் இருந்து பாருங்கள் என சொல்கின்றார். முன்னவர்கள், மானுடவியல் மற்றும் மொழியியல் நோக்கில் கூறியிருக்கின்றனர். ஆனால் மருத்துவர் செயராசு அவர்கள், தாவரவியல் நோக்கிலும், மருத்துவத்தின் அடிப்படையிலும் இந்த கருத்தை ஆணித்தரமாக சொல்லுகின்றார்.
   சுற்றுச்சூழல் நோக்கில் இல்லாமல் தாவரவியல் அடிப்படையில், உயிர்சூழல், பல்லுயிர் மண்டலம், ஆகியவற்றை மரங்கள், ஆறுகள், மூலிகைகள் அடிப்படையில் ஒன்றை ஒன்று சார்ந்து தங்களுக்குள் தாமே எவ்வாறு கட்டமைத்துக் கொண்டன என்பதை இவர் விவரிக்கும் போக்கு படிப்பவர்களையும் தாவரவியல் ஆய்வாரளர்களாகவும் மருத்துவர்களாகவும் உருவாக்கும் வகையில் இருக்கின்றது என்றால் அது துளியும் மிகையில்லை.
இந்தியா முழுமையும் ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்த அரசியாருக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் அனுப்பிய  மாதாந்திர பணி அறிக்கை  (Monthly Work Reports)  மற்றும் தேவை கண்டறியும் அறிக்கை     ( Need Assessment Report)  பிரச்சனைகளுக்கான காரணம் குறித்தான அரசின் நடவடிக்கைக்காக அனுமதி கோரும் அறிக்கை (Special Report with the Issue based)  ஆகிய அறிக்கைகளை தொகுத்த விவரங்களைத்தான் நாம் இன்றும் மெக்காலே கல்வி திட்டத்தில் வரலாறாக படித்துக் கொண்டிருக்கின்றோம்.
   அதையும்தான்டி, 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மெய்யியல், மெய்மையியல் அறிவை சுதந்திரத்திற்கு பின்பும் மீட்டெடுக்க முனையாமல் அடிமைகளை தக்க வைத்துக் கொண்டு ஆட்சியாளர்களை மாற்றி விட்டு சென்றாதால் வந்த வினையிது என்பதையும் லேசாகத் தொட்டுக் காட்டுகின்றார்.
   நம்மை விட பாரம்பரியமும், வரலாறும் குறைவுபட்ட நாட்டினரும், மொழியினரும், தனக்கான மெய்யியல் அறிவையும் மெய்மை கோட்பாட்டையும், மருத்துவ மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தையும், தலைமுறை தலைமுறையாக காப்பாற்றிக் கொண்டு வரும் போது, நாம் மட்டும் அவ்வாறு காப்பாற்ற தவறியதன் காரணம் என்ன என்ற கேள்வி அனைவரையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்ற கேள்வியாக உள்ளது. இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு அனைவருக்கும் தோன்றும் வினாவாக இது உள்ளது.
உதாரணமாக மருத்துவர் சொல்கின்ற பிரண்டையின் வகைகள், மரங்களின் வகைகள், ( சந்தனம், கடம்பு, ) செடிகளின் வகைகள் ( துளசி, நொச்சி) ஆகியவற்றின் தன்மை, மற்றும் பெயர்காரணத்தை நாம் விளங்கிக் கொண்டாலே, நமது பாராம்பரிய தாவரவியல் மதி நுட்பத்தையும் பயன்பாட்டையும் நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.
   இந்த நுாலின் மையக்கருத்தாக அமைந்துள்ள விவரங்கள்
·         இயல் தாவரங்கள்
·         அயல் தாவரங்கள்
·         தமிழர் மெய்யியல்
·         தமிழர்களின் தாவரவியல் அறிவு
·         ஐம்பூதக் கோட்பாடு
·         பழங்குடிகளின் மருத்து அறிவு
·         ஆசிவகம்
·         தமிழர்களின் உரிமை கோரும் மனப்பான்மையின்மை ( எனது ஊர் என் மக்கள், என் வரலாறு)  ஆகிய விவரங்களைத் தமது உரையாடல் வழியாகத் தொட்டுச் செல்கின்றார்.
இயல் தாவரங்கள் என்னும் வகைப்பாட்டில் இந்த மண்ணில் இயல்பாக தோன்றிய தாவரங்களை வகைப்படுத்துகின்றார், அதிலும் பெரும்பாலும் தென் பொதிகை மலைச்சாரலில் உள்ள மரம், செடி கொடிகளை முன்னிலைப்படுத்துகின்றார், ஏனெனில் அவைகள் பல்லுயிர் சூழல் பெருக்கத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் மிகுதியாகப் பயன்படுவதால்.
   அயல் தாவரங்கள் என்னும் வகைப்பாட்டில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இந்த மண்ணில் நடப்பட்டு வளர்ந்துவரும் மர வகைகளான, யூகலிப்பட்ஸ், சீமை கருவேலம், பார்த்தீனியம் செடி ஆகியவற்றையும் அவற்றால் இந்த மண்ணும் மக்களும், எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, என்பதையும் மிகுந்த வேதனையோடு சுட்டிக் காட்டுகின்றார். அதிலும் இந்துக்கள் அதிகம் வழிபடும் மூலிகை மலையாகக் கொண்டாடப்படும் சதுரகிரி மலையில் உள்ளது யாவும் பார்த்தீனியம் செடிதான் என்றும், அதை கவனிப்பவரும் , களைபவரும் யாரும் இல்லை என்றும் ஆதங்கப்படுகின்றார்.

மெய்யியல் என்பது, நமது உடலுக்கும், இயற்கை சூழலுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து ஒத்திசைந்து வாழ்வதாகும், அவ்வாறாக தமிழர் மெய்யியல் என்று மருத்துவர் குறிப்பிடுவது ஆசிவகத்தை பேராசிரியர். நெடுஞ்செழியன் நுால் வழியாக முன் மொழிகின்றார், ஆசிவகம், சமணம், மற்றும் பௌத்தம் ஆகிய மதங்கள் மட்டுமே அறிவியல் நோக்கில் எழுந்த மதங்களாகும், மற்ற வைதீக மதங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தவைகளாகும்.
 அடிப்படையில் ஆசிவகம், மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களில் நோய் எனப்படுவது நம் உடலில் உள்ள ஐம்பூதங்களின் குறைபாடுகளே ஆகும். ஐம்பூதங்களை சமப்படுத்துதல் என்பதே இந்த மதங்களின் மருத்துவ முறையாக உள்ளது. சித்த மருத்துவம் என்பதும் ஐம்பூத கோட்பாடு என்பதன் வழியாக சித்த மருத்துவத்தின் பூர்வீகம் சைவ சமயம் அல்ல என்பதையும் விளக்குகின்றார்.
மேலும் பொதிகை மலை பௌத்ததுடன் தொடர்புடைய மலை என்பதையும் ஐயத்திற்கு இடமின்றி சொல்லும் மருத்துவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். இறுதியாக சித்த மருத்துவம் பயிலுவோருக்கும், மருத்துவத்தின் மீது ஆர்வமுடையயோருக்கும் இந்த நுால் ஒரு நுனுக்கமான கையேடாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கேள்விகளை கேட்ட திரு. சண்முகானந்தம், மற்றும் தயாளன் அவர்களை பாராட்டுவதோடு, பதிப்பித்த தடாகம் பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.
நுாலின் பெயர்  - தமிழர் மருத்துவம் – மருத்துவர் மைக்கேல் செயராசு நேர்காணல்,
பக்கங்கள் 95
விலை 70
பதிப்பகம் – தடாகம் வெளியீடு

  • மருத்துவர் மைக்கேல் செயராசு கை பேசி எண் 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்