Showing posts with label சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு - புதினம். Show all posts
Showing posts with label சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு - புதினம். Show all posts

Friday, February 27, 2026

சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு புதினம் அத்தியாயம் - 2


பத்து நாட்களுக்குப் பிறகு.

சேலம் பயணியர் விடுதியில் கதிரேசனும், மற்ற உயர் அதிகாரிகளும், தங்க வைக்கப்பட்டிருந்தனர், மேட்டூர் பயணியர் விடுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள், மேட்டூர் அணைகட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் களப்பணியாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் பழக்கமுடைய கதிரேசன், கண்களை மூடி இதுவரை நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். மேட்டூர் வந்து அகழ்வாய்வுப் பணிகளைத் துவங்கி 3 நாட்களாகின்றது. இன்று கதிரேசன் அகழ்வாய்வு நடக்கும் இடத்தைப் பார்க்க இயலவில்லை, மாநில தொல்லியல் துறையினரோடு தொடர்ந்த பேச்சு வார்த்தைகளும், அவர்களின் ஒத்துழைப்பை கோரி நடந்த கடிதப் போக்குவரத்துமே நான்கு நாட்களுக்கு மேல் ஆனதில் கதிரேசனுக்கு மிகுந்த வருத்தம்.

மூன்று மாதங்களில் 10 நாட்கள் ஓடிப் போனது, இருக்கும் நாட்களில் களப்பணியை முடிக்க வேண்டும் என்றால் நிறைய ஆட்களும், ஆய்வாளர்களும் தேவை மாநில அரசின் தொல்லியல் துறையை உதவிக்கு கேட்டிருந்தார். அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் கொஞ்சம் அயர்ந்து போனார் கதிரேசன். இருந்தும் தன்னால் இயலும் என்பதை மனதில் உறுதியாக சொல்லிக்கொண்டிருந்தார்.

காலை பத்து மணி அளவில், கதிரேசனின் கை பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது, அது பிரைவேட் நம்பர் என்று திரையில் காண்பித்தது, ஹலோ, சார் மேட்டரில் அகழ்வாய்வில் கண்டுபிடித்த பொருட்களை எல்லாம், அழித்துக் கொண்டிருக்கிறார்கள்,   என்று ஒரு உறுதிபடுத்தப்படாத செய்தி வந்தது, அதிர்ந்து போனார், கதிரேசன், பதறியடித்துக் கொண்டு மற்ற அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு வாகனத்தில் ஏறி மேட்டூர் வனப்பகுதியை வந்தடைந்த போது நேரம் பகல் 12 மணி,

கதிரேசனைப் பார்த்ததும், பப்பு ஓடி வந்து இங்கு எந்த பிரச்சனையும் இல்லை சார், யாரும் வரவில்லை, என்றதும், கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பினார் கதிரேசன். பப்பு கல்வெட்டுகள் ஏதாவது கிடைத்ததா என்றதற்கும் இல்லை என்றே பதில் வந்தது, பப்புவிடம், கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மெல்ல ஆய்வு நடைபெறும் பகுதியை பார்வையிட எழுந்திருக்க முயன்றபோது தமிழ்நாடு அரசு என்ற பெயர் பலகையை தாங்கிய மகிழுந்து வந்து நின்றது.

அதிலிருந்து ஒரு 30 வயதுடைய பெண்ணும், ஒரு டவாலியும் வந்து இறங்கினார்கள், டவாலி பப்புவிடம் வந்து மேடம் கதிரேசன் அய்யாவை பார்க்க வந்திருக்காங்க, என்றதும், கதிரேசன் நேரடியாக வாங்க என்ன விஷயம் என்று சொன்னதும், ஆறுதல் மூச்சு வந்தது அந்த பெண்ணிடமிருந்து, சார் என்பெயர் மலர்மதி, நான் தமிழ்நாடு தொல்லியல் துறையில் முதுநிலை களப்பணியாளர் , உங்களுக்கு உதவி செய்யவும், தேவையான தகவலை அளிக்கவும் மாநில அரசாங்கம் நியமித்திருக்கின்றார்கள் என்றதும். கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு வந்தது, கதிரேசனிடமிருந்து.

சரி வாங்க இடத்தைப் பார்க்கலாம் என்ற கதிரேசன் நேரடியாக அகழ்வாய்வு நடக்கும் இடத்திற்கு நடந்தே அழைத்துச் சென்றார். அவர்கள் அகழ்வாய்வு நடக்கும் இடத்தை அடைய முப்பது நிமிடங்களுக்கு மேலாகும். அதற்குள் மலர் மதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். மலர் மதி, திராவிடப் பாரம்பரியத்தில் வந்த குடும்பம், தொல்லியலில் முதுகலை படித்தவர். தேர்வு எழுதி முதுநிலை களப்பணியாளரானவர். கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம், சொந்த ஊர் மேட்டூர் என்பதால் சுற்று வட்டாரங்கள் மிக நன்றாகத் தெரியும். வயது 30க்கு மேல் இருக்கும். மிக சிவந்த நிறம், ஒடிசலான தேகம், முதலில் யார் பார்த்தாலும் இவள் எந்த திரைப்பட நடிகையோ என்று சொல்ல வைக்கும் அழகு.. இன்று திருமணம் ஆகவில்லை, வீட்டில் இந்த தொல்லை தாங்காமல் களப்பணிகளுக்கு சென்று விடுவாள், மனதிற்கு பிடித்தவர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பவள்.

அகழ்வாய்வு நடைபெறும் இடத்திற்க வந்ததும், கிடைத்தப் பொருட்களை எல்லாம், எடுத்து தனியாக வைத்திருந்தனர். அப்போது ஒரு களப்பணியாளர் வந்து ஒரு  பாறை செடி கொடிகள் , மண்ணால் மூடப்பட்டிருந்தது . சுத்தம் செய்ய சில மணி நேரம் . ஆனது . சுத்தம் செய்திருக்கின்றோம் வந்து பாருங்கள் என அழைத்ததும், கதிரேசனும் மலர்மதியும் ஓடிச்சென்று அந்த கல்வெட்டைப் பார்த்தனர். பிராமி எழுத்துகள் வெளிவந்தன . கதிரேசனுக்கு ஆச்சரியம் இல்லை ஆயிரம் முறை பார்த்தவர் . ஆனால் இவை வேறு . பொதுவாக கல்வெட்டுகள், அரச கட்டலையாக இருக்கும், அரசரின் புகழ் பாடுவதாக இருக்கும், ஆனால் இந்த கல்வெட்டு வேறு மாதிரியாக இருந்தது. அதில் அரசு கட்டளை இல்லை , புகழ் பாடல் இல்லை . ஒரு வரி தெளிவு : " இங்கே இருந்து ஏழு சகோதரிகள் தம்மத்திற்காகப் புறப்பட்டனர் ."    

கதிரேசன் மெதுவாக வாசித்தார் . “ ஏழு சகோதரிகள் .” ' சகோதரிகள் ' க்குக் கீழ் அழுத்தமான கோடு மீண்டும் மீண்டும் இழுக்கப்பட்டது . “ இவர்கள் சகோதரிகள் அல்ல என்று யாரோ சொல்ல முயன்றது போல . ' ஏழு ', ' தம்மம் ', ' புறப்படுதல் ' – பௌத்த சங்க வரலாறு நினைவுக்கு வந்தது . எனில் இந்த இடம் பண்டைய காலத்தில் பௌத்த சங்கமாக இருந்திருக்கலாம், அல்லது விகாரமாக இருந்திருக்கும், தம்மம் பறப்ப பயணம் செய்த ஏழு பிக்குனிகளை வரலாற்றில் யாரோ சகோதரிகள் என்று பாறையெழுத்தின் வழியாக ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். ஆனால் ' ஏழு சகோதரிகள் ' இல்லை . இது மறந்தது இல்லை மறைத்தது ,” என்று கதிரேசன் முனகினார் .

மலர்மதியும், ஓரளவுக்கு கல்வெட்டுகளில் பரிச்சியம் உள்ளவர் என்பதால், கதிரேசன் என்ன சொல்கின்றாரோ அதை ஒப்புக்கொண்டார். இது ஒரு புது விதமாக அகழ்வாய்வு என்பதை மட்டும் அவர் மலர் மதியிடம் கூறினார்.  இரவு அறைக்கு திரும்பியது இதுவரையில் கண்டெடுத்த பொருட்களின் பட்டியல், அவற்றின் காலம், அவை யாருடைய ஆட்சிகாலம், எந்த சமயம் என எல்லாவற்றையும் ஒரு சிறு குறிப்பாக எழுதி பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தூங்கிப் போனார்.

Monday, February 16, 2026

சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு

 சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு - புதினம் 

அத்தியாயம் - 1

டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 

தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமை அலுவலகம் (தரோஹர் பவன்' (தரோஹர் பவன்), 24, திலக் மார்க், புது தில்லி - 110001 )




டில்லியில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகம் எப்போதும் போல் கனத்த அமைதியோடு இயங்கிக் கொண்டிருந்தது. தென் மண்டல இயக்குனர் கதிரேசன் தனது அறையில் சத்தமில்லாமல் தொலைக்காட்சியில் பாராளுமன்ற கூட்டத்தொடரை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய களப்பணியாளர் பப்பு சூடான சமோசா மற்றும் தேனீரோடு கதிரேசன் அறைக்கு வந்து மேஜை மீது வைத்தார். சாயா கடையில் கூட்டம் அதிகம், ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கி வந்தேன். சூடு ஆறுவதற்குள் சாப்பிடுங்கள் என இந்தியில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதிரேசன் அமைதியாக இரு என்று கைகளைக் காட்டிக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். 


தெலைக்காட்சியில் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர், மேட்டூர் வனப்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சப்த கன்னியர்கள் ஆலயம் இருக்கும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து அதன் பண்டையத் தன்மை, வரலாறு ஆகியவற்றை தொல்லியல் துறை கண்டுபிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்த வேலையை ஒன்றியத் தொல்லியல் துறை ஏன் செய்யவில்லை, என்றும் மாநில தொல்லியல் துறையை இந்த வேலை செய்ய ஏன் அனுமதிக்கவில்லை என்றும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பார்த்துக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார். இந்த ஒளிபரப்பை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன், பப்பு வாங்கி வந்த சமோசாவை மறந்தே போனார்

உள்துறை அமைச்சர், இந்திய தொல்லியத்துறை மேட்டூர் வனப்பகுதியில் அகழ்வாராய்சி செய்து சப்த கன்னிகள் கோயில் பற்றிய உண்மை நிலையை வெளிக் கொண்டு வருவோம் என்று உறுதிமொழி சொல்லியதும், கதிரேசனுக்கு சுவாரசியம் குறைந்து, சமோசாவின் மீது கவனம் வந்தது. டெல்லி குளிருக்கு சுமாரான சூட்டில் இருந்த சமோசவை எடுத்து கடித்துக் கொண்டே, பப்புவைப் பார்த்து இரண்டு தேநீரை சூடாக வாங்கி வரச் சொன்னார் ஒன்று கதிருக்கும் இன்னொன்று பப்புவுக்கும். 

பப்பு போன சிறிது நேரத்திற்கெல்லாம் அலுவலக உதவியாளர் வந்து அய்யா உங்களை பொது இயக்குனர் அழைக்கின்றார் என்றதும், கதிரேசன் யோசித்துக் கொண்டே அவர் அறையை அடைந்தார்... அதற்குள் நாம் கதிரேசனைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

கதிரேசனுக்கு தொல்லியல் துறை மிக விருப்பமான படிப்பு என்பதால் தொல்லியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை பல்கலை கழகத்திலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்திலும், வாசிப்பும், ஆழ்ந்த யோசிப்பும் கதிரேசனின் விருப்பமான விஷயங்கள். அவருடைய மேசையில் பலவகையான புத்தகங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பாலி மொழி நூல்கள், பெண்கள் வரலாறு, ஆய்வுக் கட்டுரைகள் சிதைந்த ஓலைச்சுவடிகளின் புகைப்படங்கள். இவை எல்லாம் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டிருந்தன. 

அவர் ஒரு சாதாரண தொல்லியலாளர் அல்ல. அரசின் பெரிய திட்டங்களில் அவர் பெயர் அடிக்கடி அடிபடும். பத்திரிகைகள் பேசும் முக்கிய அகழ்வாய்வுகளில் பட்டியலியலிலும் அவர் எப்போதும் இடம் பெறுவார். ஆனால் அவருக்கு ஒரு தனி தேடல் இருந்தது. பெண்கள் வரலாறு ஜைன சுவடுகள், பௌத்த சுவடுகள், ஆசிவகத் தேடல்கள், சாங்கியத் தத்துவங்கள் போன்ற துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். 


அழிக்கப்பட்ட நினைவுகள் , வரலாற்றில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்ட அல்லது மெதுவாக மறைக்கப்பட்ட பாதைகள், அவற்றைத் தேடுவதில்தான் அவர் தன் வாழ்வை செலவிட்டுக் கொண்டிருக்கின்றார். அது குறித்து ஒன்றிரண்டு நூல்களையும் எழுதியிருக்கின்றார் அவர். அவைகள் இந்தியாவை விட வெளிநாட்டில் அதிக வாசகர்களை் கொண்டிருந்ததுதான் அவருக்கே விளங்காத ஆச்சர்யம். 


இயக்குனர் அறையில் , அவரைப்போல உள்ள பிராந்திய இயக்குனர்களோடு பொது இயக்குனர் சமோசாவோடு கதிரேசனை வரவேற்றார்... வா கதிர் உனக்காகத்தான் நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அழகான ஆங்கிலத்தில் பேசினார்... அவர் எப்போதும் கதிரேசனோடு ஆங்கிலத்தில் உரையாட ஆர்வம் காண்பிப்பார். காரணம் கதிரேசனுக்கு ஏழு மொழிகள் தெரியும் ஏழு மொழிகளையும் பிற மொழி கலப்பில்லாமல் உரையாடுவார். எழுதுவார்... அவருடைய ஆங்கிலம் ஆங்கிலேயன் பேசுவதைப் போலவே இருக்கும். கதிரேசனோடு உரையாடி அவர் தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வார்..


ஃபாக்ஸ் வந்திருக்கின்றது. நம்துறை தமிழ்நாட்டில் மேட்டூர் வனப்பகுதியில் அகழ்வாய்வு செய்து சப்த கன்னியர் ஆலயத்தை குறித்து அறிக்கை தர வேண்டும் என்று சொன்னதும், கதிரேசன் அமைதியாக இருந்தார். பொது இயக்குனரே தொடர்ந்தார், தென் மண்டல இயக்குனர் என்பதால் உங்களுடைய கருத்தும் ஆலோசனையும் எங்களுக்குத் தேவையென்பதால் உங்களை அழைத்தேன், எனவே என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்கள் என்றார்... 


கதிரேசன் அமைதியாக இருக்கையில் கண்களை மூடி யோசித்து, முதலில் நாம் இதை மாநில அரசின் கைகளில் ஒப்படைத்து விடுவோம், அவர்களே இதை செய்து கொள்ளட்டுமே என்றார். இல்லை மாநில அரசின் கைகளில் இந்த ஆய்வு செல்வதைமத்திய அரசு விரும்பவில்லை, மத ரீதியாக தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தை கையிலெடுக்காது அவர்கள் தொண்மை, தமிழர் நாகரீகம், பண்பாடு என்று வேறு கோணத்தில் கொண்டு செல்வார்கள் அதை ஒன்றிய அரசு விரும்பவில்லை, அப்படியென்றால் ஒன்றிய அரசு எதைத்தான் விரும்புகின்றது என்று சற்று வேகமாக கேள்வியெழுப்பினார் கதிரேசன். 


இதே வேகத்தில்தான் நானும் கேள்வி கேட்டேன், அவர்களிடம்... இந்த அகழ்வாய்வை இந்து சமயத்தின் ஆதிக்கத்துக்குட்பட்ட  இடமாக மாற்றி அதிலிருந்து இந்து சமய எழுச்சியை தமிழ்நாட்டில் உருவாக்க நினைக்கின்றது ஒன்றிய அரசு என்றார் பொது இயக்குனர், அப்படியே செய்யலாமே அதற்கு அவர்களிடம் எத்தனையோ வசதிகள் இருக்கும் போது நம்மை எதற்கு இதற்குள் இழுக்க வேண்டும் என்றார் கதிரேசன். 


சிறிது மௌனம் நிலவியது. பின் பொது இயக்குனரே பேசினார். கதிரேசன், நாம் இதில் இறங்குவோம், உறுதியாக இறங்குவோம். உண்மை நிலவரம் என்னவோ அதை மட்டும் சொல்லுவோம். எதையும் மறைக்க வேண்டாம். எந்த முடிவையும் யாருக்காகவும் மாற்ற வேண்டாம் என்று தீர்க்கமாக சொன்னதும் எல்லோரும் ஆச்சர்யமாக அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்... 


எனக்காக நீங்கள் உங்கள் ஒட்டுமொத்த டீமோடு போய் அகழ்வாய்வை நடத்திவிட்டு உண்மை நிலவரத்தை எனக்கு அறிக்கையாகத் தருங்கள் மக்களுக்குச் சொல்வோம் என்றதும்...சார் என்று கதிரேசன் மெல்ல இழுத்தார். 


கதிரேசன்... அங்கெல்லாம் எந்த அழுத்தமும் இல்லை.. இங்கு அரசியல் அழுத்தமும் மத அழுத்தமும் போட்டிப் போடுகின்றது .. நீங்கள் போனால்தான் உண்மை நிலவரம் தெரியும். நீங்கள் 3 மாத காலத்திஅகழ்வாய்வை முடித்துவிட்டு, அறிக்கை கொடுங்கள் என்று பொது இயக்குனர்  சொல்லி முடிக்கவும் அவரது உதவியாளர் ஏதோ ஒரு தாளை கொண்டுவந்து கொடுக்கவும் சரியாக இருந்தது. 

வாங்கிப் படித்தனர், கையொப்பமிட்டு அதை கதிரேசனிடம் நீட்டினார். வாங்கிப் படித்துப் பார்த்தார் கதிரேசன், அதில் 3 மாத காலம் மேட்டூர் வனப்பகுதியில் அகழ்வாய்வுக்கு தன்னையும் தனது அணியையும் அனுப்புவதாகவும் இருந்தது. நகல்கள் துறை சார்ந்தவர்களுக்கும் ஒன்றிய மாநில அரசுகளுக்கும் இருந்தது. இது என்ன புது தலைவலி வந்து சேர்ந்திருக்கின்றதே என்று நெற்றியை தேய்த்துக் கொண்டார் கதிரேசன். 

இதையும் படியுங்கள்