Friday, March 8, 2013

ஏழைகளாக்கப்படும் ஏழைகள்



தமிழ்நாட்டில் தலித் மக்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு நடந்த 15வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.73 இலட்சம் மக்கள் தொகையாகும். பழங்குடிகள் மக்கள் தொகை 4.09 இலட்சம் ஆகும். சதமான கணக்கில் அட்டவணை சாதிகள் 24.26 % அட்டவணை பழங்குடிகள் 1.17 % . இவர்களின் தேசிய சராசரி மாத வருமானம், கிராமங்களில் உள்ள தலித்துகளுக்கு87.83 ரூபாயும், அதுவே மற்ற சாதிகளுக்கு 119.94 ரூபாயும் இதுவே நகர்புறத்தில் வாழ்ந்து வரும் தலித்துகளின் சராசரி மாத வருமானம். 113.50 ரூபாயும் அதே நகர்புறத்தில் வாழ்ந்து வரும்  மற்ற சாதியினரின் மாத வருமான சராசரி170.30 ரூபாயாகவும் உள்ளது.

தாழ்த்ப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கென மத்திய அரசும் மாநில அரசும் 1981 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றன. தற்போது இந்த திட்டம் சிறப்பு உட்கூறு துணை திட்டம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் படி மாநில அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்க்கு என ஒதுக்கீடு செய்யும் தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசும் தொடர்ந்து வழங்கும்.
இந்த தொகையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து அம்மக்களை பொருளாதார வளர்ச்சியடையச் செய்வதே நோக்கம். ஆனால் அரசும் அமைச்சர்களும் அதை முறையாக செய்வதில்லை. ஏனென்றால் மாநில அரசு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யும், தொகை சுமார் 2500 கோடி, அதற்க்கு ஈடாக மத்திய அரசும் 2500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்கின்றது. இவ்வாறு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் 5000 கோடி பணம் எங்கு செல்கின்றது என்பதே எவருக்கும் தெரிவதில்லை.
அரசும் அரசியல்வாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களை ஆளும் சாதியினரின் மனோபாவத்திலேயே பார்க்கின்றனர். ” அதாவது உனக்கு சலுகையை தருகின்றேன் பெற்றுக் கொண்டு செல். ஆனால் உன்னுடைய உரிமைகளை கேட்க்காதே” என்பதுதான் அது. அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றது. சலுகைகள் சிற்சில நபருக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடைக்கின்றது.

இன்று வரை சிறப்பு உட்கூறு துணை நிதி திட்டத்திற்கு வரும் நிதியை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கென தனி நிதியறிக்கை தேவை என்று எந்த தேசிய கட்சிகளும் கோரிக்கை வைத்த்தில்லை. மாநில கட்சிகளும் இது குறித்து யோசித்த்து கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சிகள் எதுவும் எங்களுக்கு வரும் நிதியை எங்களுக்கே பயன்படுத்துங்கள் அதற்க்கு வாய்ப்பாக சிறப்பு உட்கூறு துனை திட்டத்திற்க்கென தனி நிதி அறிக்கை தேவை என வாய்திறக்கவும் திராணியற்று இருக்கின்றார்கள். தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக வென்று சட்டசபைக்குச் செல்லும் 48 சட்ட மன்ற உறுப்பினர்களும் இது குறித்து குரலெழுப்பியதும் இல்லை.

பின் இந்த தொகை எங்குதான் செல்கின்றது. திட்டமில்லாத செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அரசின் ஆடம்பர விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மந்திரிகள் பெயரில் சுவிஸ் வங்கிக்குச் செல்கின்றது. ஆனால் இந்த மக்களுக்கு மட்டும் செல்வதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையானது நோயோடு போராடுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதுமான நிலையில் உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இந்த மக்களுக்கென பல நல்ல திட்டங்களை செய்யலாம்.
·         வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரலாம்.
·         உயர் கல்வி நிறுவனங்களை துவங்கலாம்.
·         பல்கலைகழகங்களை நிறுவலாம்
இந்த மக்கள் தொழில் துவங்க வங்கி கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. தற்போது. தாட்கோ மூலம் வங்கி கடனுக்கு முயற்சிச் செய்தாலும் அவர்கள் தள்ளுபடியினை மட்டுமே வங்கிகளுக்கு அனுப்புவதால் தொழில் துவங்க தேவைப்படும் நிதி பெறுதில் தற்போது பெரும் சிக்கல் நிலவுகின்றது.
ஒரு தேசிய வங்கியினை ஆரம்பிக்க தேவைப்படும் மூலதனம் வெறும் 500 கோடி ரூபாய் ஆகும். சிறப்பு உட்கூறு துனை திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 17 தேசிய வங்கிகளை ஆரம்பிக்கலாம்.
கிராமப்புற வங்கிகளை ஆரம்பிக்க 10 கோடி முதலீடு தேவைபடுகின்றது. சிறப்பு உட்கூறு துனை திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 500 கிராமப்புற வங்கிகளை (Regional Rural Bank) ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
ஏழை எளியவர்களுக்கு கடன் உதவி தரும் நுன்நிதி நிறுவனம் ஆரம்பிக்க 5 கோடி முதலீடு தேவைப்படுகின்றது. அரசு சிறப்பு உட்கூறு துனை திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 1000 நுன் நிதி நிறுவனங்களை (Micro Finance Institutions) ஆரம்பித்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு கடன் உதவி அளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
இவை தவிர சிறப்பு உட்கூறு துனை திட்டத்துக்கென தனி நிதி நிலை அறிக்கை (Budget) இயற்றி அதன் படி செயல்படும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கென உருப்படியான திட்டங்கள் வரும் திட்ட நிதிகளுக்கே அவற்றை செயல்படுத்த முடியும். பணம் எங்கு செல்கின்றது என்பதையும் கண்காணிக்க இயலும். இவைகளை யெல்லாம் தலித் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஏன் கேட்பதில்லை.? இவர்கள் சட்டமன்றத்தில் இதை கேட்க்காமல் வேறுயார் கேட்ப்பார்கள் என்பதையும் ஏன் இவர்கள் உணர்வதில்லை.,?
எப்பொழுதும் ஒரு சமுக மக்கள் இரந்து முன்னேற முடியாது. மாறாக முனைந்து முன்னேற முடியும். அவ்வகையான முனைந்து முன்னேறும் திட்டம் எதுவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களிடமும் இல்லை. தலைவர்களிடமும். இல்லை. இப்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் தலைவர்களுக்கும் தேவைப்படுவது இந்த மக்களை முனைந்து முன்னேற்ற தேவைப்படும் திட்டங்கள் மட்டுமே.  இல்லையெனில் எத்தனை நுற்றாண்டுகள் கடந்தாலும் இவர்கள் ஏழைகளாக்ப்படும் ஏழைகளாத்தான் இருப்பார்கள்.





No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்