Friday, August 30, 2019

மணிமேகலையில் மனம்

மணிமேகலையில் மனம்


உலகின் பழம் பெருமை வாய்ந்த மொழிகள் 5 அவை, தமிழ், கிரேக்கம், இலத்தின் , பிரஞ்ச், மற்றும் வடமொழி என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதம், இவற்றுடன் உலகின் தொடர்பு மொழியாக விளங்குகின்ற ஆங்கிலம். இவற்றில் உலகின் வணிக மொழி என்ற சிறப்புப் பெயர் ஆங்கிலத்துக்கும், உலகின் வேத மொழி என்று சமஸ்கிருதத்துக்கும், அறிவியல் மொழி என்று பிரஞ்ச்கும், உலகின் காதல் மொழி என்ற சிறப்புப் பெயர் இலத்தினுக்கும், உலகின் சமய மொழி என்ற சிறப்புப் பெயர் தமிழுக்கும் உண்டு. இவற்றில் உலகம் வியக்கும் காவியங்களான
·         இலியட்
·         ஒடிசி 
·         ஒர்க்ஸ் அண்ட் டேஸ்
·        தியோகானி 

போன்ற இலக்கிய காப்பியங்களை முதலில் உலகிற்க்கு தந்ததனால் கிரேக்கம், உலகின் காப்பிய மொழி என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. 
       
உலகம் வியக்கும் வகையில் அதிகமான காதல் கவிதைகளையும், ஆழமான காதல் கதைகளையும் தந்துள்ள காரணத்தினால் உலகின் காதல் மொழி என்றே இலத்தின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது.
       
தொழிற் புரட்சிக்குப் பிறகு, பெரும் இயந்திரங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்து தமது மொழிப் பெயரிட்ட காரணத்தினால், பிரஞ்ச் மொழி உலகின் அறிவியல் மொழி என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. வேதங்களை, கொண்டிருப்பதால் சமஸ்கிருதத்துக்கு வேதமொழி என்ற சிறப்பு பெயர் உள்ளது. தமிழுக்கு எதன் அடிப்படையில் சமய மொழி என்ற பெயர் வந்தது என்பதை இங்கு விளக்க இயலாது. காரணம், தமிழில் மட்டுமே அனைத்து இலக்கியங்களும், சைவம் அல்லது வைணவம் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு அதைத்தவிர வேறு சமயங்கள் தமிழில் இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன இதுவரையிலும். 
       
தமிழிலக்கியம் இன்று வரையிலும் அறிவியல் வழி நின்று கற்பிக்கப்படுவதில்லை, எல்லா செய்திகளும், விவரங்களும், வர்ணணைகளாகவும் சமய நோக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அல்லது வெறும் தகவலாக விளங்கி கொள்ள வைப்பது இவை இரண்டும் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உதாரணமாக ஒரு சில..

அவ்வையாரின் “ ஆழ அழுக்கினும் ” என்னும் மூதுரை பாடலில் இருப்பது அறிவியல் அடிப்படையில் பாஸ்கல் விதி என்னும் கோட்பாடு, ஆனால் இன்று வரையிலும் தமிழறிஞர்கள் எவரும், தமிழிலக்கியத்தில் அவ்வையார் இந்த கருத்தை எங்கிருந்து எடுத்து கையாண்டார், அந்த கருத்து எப்படி வந்தது என்ற ஆய்வு நோக்கில் விளக்கம் அளிக்க வில்லை,

அதைப்போலவே, கம்பர், “ அனுவிலும் உளனே, அனுவை சத கூறக்கினும் உளனே, என்று தனது கம்பராமாயனத்தில் கூறியுள்ளார், அனு என்னும் கோட்பாடும், அனுவை பிளக்க இயலும் என்ற கருத்தும் இருபதாம் நுாற்றாண்டில் மட்டுமே உலகிற்க்கு தெரியவந்த கருத்துக்கள், ஆனால் அதற்க்கு முன்பே கம்பர், தனது நுாலில் அனு மற்றும் அனுவை நுாறாக பிளப்பது போன்ற அறிவியல் கருத்துக்களை முன் மொழிந்திருக்கின்றார் என்றால், கம்பரால் அந்த கருத்து எங்கிருந்து எப்பொருளில் எடுத்துக் கையாளப்பட்டது, கம்பர் கையாளுவதற்க்கு முன்பு அந்த வாக்கியம் எங்கிருந்தது வேறு எவரெல்லாம் அந்த பொருள் குறித்து விளக்கியுள்ளனர்  என்ற நோக்கில் இன்றும் யாரும் விவரிக்கவில்லை, மாறாக பக்தி நோக்கில் அதை கொண்டுபோய் தட்டையானப் பார்வையை முன் வைக்கின்றனர், வாசகர்களுக்கும், கேட்பவர்களுக்கும், அவர்களும் இதை ஒரு தகவலாகக் கேட்டுக் கொண்டு எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமனைவரும் மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தையும் இது நாள் வரை வாசித்து வந்திருக்கின்றோம், அல்லது கடந்து வந்திருக்கின்றோம். உண்மையில் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரு கற்பனை காப்பியமாகும். எவ்வகையில் சொல்வதென்றால், தமிழர்களின் மரபு பாடல்கள் அல்லது கவிதைகளாகத்தான் இருந்திருக்கின்றது. அவர்கள் எந்த செய்தியையும் பாடல்களாக விவரித்து பழக்கப்பட்டவர்கள், காப்பிய மரபு அவர்களிடம் இல்லை,

ஆனால் வட இந்தியர்களுக்கோ, காப்பிய மரபு உண்டு, அவர்கள் எந்த செய்தியானாலும் பாடல் வடிவிலே காப்பியமாக்குவர், அதில் அந்த காப்பிய பாத்திரங்களுடன், தானும் ஒரு பாத்திரமாக வந்து போவார்கள், இந்த மரபில் எழுதப்பட்ட கற்பனைக் காப்பியங்கள்தான், இராமாயணம், இதில் இந்த காப்பியத்தை எழுதிய வால்மிகி, ஒரு பாத்திரமாக வந்து போவார்,


அதைப்போலவே, மகாபாரதமும், இவற்றை எழுதிய வியாசரும் ஒரு பாத்திரமாக வந்து போவார், வட இந்தியாவின் இந்த மரபின் தாக்கத்தில் முகிழ்ந்த மொட்டுக்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வடஇந்திய காப்பிய மரபின்படியே இதை இயற்றிய இளங்கோவடிகள், மற்றும் சீத்தலை சாத்தனார் ஆகிய இருவருமே ஒரு பாத்திரங்களாக வந்து போகின்றனர், இந்த காப்பியங்களில், இதன் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது, வட இந்திய மரபுப்படி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் காவியம்தான் சிலம்பும் மணிமேகலையும்.

பொதுவில் எழுத்து என்பது, “ வாழ்வியற் சம்பவங்களின் பாதிப்பாகும். அந்த வகையில் இளங்கோ அடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார் ஆகிய இருவரும், கண்டுணர்ந்த, கேட்டுணரந்த, அல்லது வாசித்துணர்ந்த சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்தவைதான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

மணிமேகலை காப்பியத்தை நாம் சிலப்பதிகாரத்தில் இருந்தே தெரிந்து கொள்ள இயலும், சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில், வாழ்த்துப் பாடலில், காப்பியத்தில் உள்ள, பெரும் பாத்திரங்கள் தவிர்த்த சிறு பாத்திரங்களின் முடிவையும் சொல்லியிருப்பார் நுாலாசிரியர். அதன்படி, கோவலணின் தந்தை சமண மதத்தையும், கண்ணகியின் தந்தை ஆசிவகத்தையும், தழுவுகின்றார்கள். கோவலணின் தாயாரும், கண்ணகியின் தாயாரும் தங்களின் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் தாங்காமல் இறந்து போகின்றனர். மாதவியும் கண்ணகியும் பௌத்தம் தழுவுகின்றனர்.

உண்மையில் இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தமிழ் சமுகத்துக்கு இலக்கியத் தளத்தில் நின்று நிகழ்த்தியிருப்பது சமயங்களின் அறிமுகம் அல்லது வட இந்தியாவில் உள்ள சமயத்துக்கும், அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த வைதீக சமயங்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்.


காப்பியத்தில் உள்ள பிற கதாபாத்திரங்கள் தழுவுகின்ற மதத்தின் அடிப்படையில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமணம் ( அல்லது ) ஜைணம், பௌத்தம் அல்லது புத்த மதம், ஆசிவகம் இவை 3 மதங்களுமே வட இந்தியாவில் தோன்றியவை, அறிவைக் கற்பிக்கும் மதங்களாகும்.  அறிவின் அடிப்படையில் நின்று எதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் மதங்களாகும்.  இதைத்தவிர அப்போது தமிழ்நாட்டில் இருந்த மதங்கள் (இருக்கும்) மதங்கள் யாவும் நம்பிக்கையை போதிக்கும் மதங்களாகும். எதையும் நம்ப வேண்டும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏன் எதற்க்கு என்ற கேள்விகள் எழகூடாது அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகள் மதத்திற்க்கு எதிரானவை என்ற கோட்பாடுகளை உடையவை.

அறிவை கற்பிக்கும் மதத்திற்க்கும், நம்பிக்கையை போதிக்கும் மதத்திற்க்குமான ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்க்காக எழுதப்பட்ட காப்பியங்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இவற்றில் சிலப்பதிகாரம் மெண்மையாக இந்த சங்கதிகளைத் தொட்டுச் செல்கின்றது, மணிமேகலை மற்ற மதத்தினருடன் வாதம் புரிந்து நம்மை இட்டு செல்கின்றது இந்த நிலையில் இருந்துதான் அல்லது இந்த புரிதலில் இருந்துதான் நாம் இரு பெரும் காப்பியங்களையும் அனுக வேண்டிய தேவையுள்ளது.

இதன் அடிப்படையில்தான் இளங்கோ அடிகள், தன் கதை மாந்தர்களை ஆசிவகத்துக்கும், ஜைணத்துக்கும், பௌத்தத்துக்கும் பயணப்படுத்துகின்றார். இவற்றில், உயர்சாதியினராகிய கோவலனின் தந்தையும், கண்ணகியின் தந்தையும் ஜைணம், மற்றும் ஆசிவகம் தழுவுவதில் எந்த சிக்கலும் இல்லாததால் ஒரு பாடலின் வழி நின்று அந்த தகவலை சொல்லிச் செல்ல இயலுகின்றது.

ஆனால், ஆடல் பெண்டிர், கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியும், மணிமேகலையும், பௌத்தம் தழுவுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் சமூக முரண்பாடுகளை சொல்லிச் செல்ல எழுதப்பட்ட காப்பியம்தான் மணிமேகலைக் காப்பியம். ஏன் கணிகையர் குலத்தி்ல் பிறந்த மணிமேகலையும், மாதவியும் பௌத்தம் ஏற்றார்கள் என்றால், உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட பௌத்தம் மட்டுமே யாரையும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதில்லை,

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கின்ற வழிமுறையாக இருந்தது. அன்பையும் அறிவையும் போதிக்கின்ற மதமாக இருந்தது. இந்த அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் இழிவான குலமாக கருதப்பட்ட அவர்கள் இருவரையும் பௌத்தம் சம நோக்கோடு ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவர்களால் பௌத்தம் ஏற்க  முடிந்தது. பௌத்த மதத்திலும் அவர்களுக்கு இடமிருந்தது.

பௌத்தம் இரண்டு வகையான மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தும், அது முதலில் தன்னை மாற்றும், தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தின் வழியாக இந்த சமூகத்தை மாற்றும் இந்த இரு பணியையும் பௌத்தம் ஒருங்கே நிகழ்த்தும் இதுதான் பௌத்த வாழ்க்கை முறை.

மாதவி மற்றும் மணிமேகலையிடம் முதலில் தங்கள் கணிகையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மாற்றுவது, பின்னர் அவர்களையும் பொது சமூகத்தவரின் வாழ்க்கையையும் பொது சமூகத்தினரோடு  சேர்ந்து  வாழ வைப்பது ஆகிய இரண்டு பணிகளையும் புத்தரும் அவரின் போதனைகளின் வழியாக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளே மணிமேகலை காப்பியத்தில் விரித்துரைக்கின்றது.

இந்த முயற்சியில் அவர்கள் சந்தித்த பேராட்டங்களையும் போர்களங்களையும் விளங்கி கொள்வோமேயோனால் மணிமேகலையின் மனத்தையும் விளங்கிக் கொள்ள இயலும். மணிமேகலை காப்பியத்தில் கதை புரியும், ஆனால் அதனுள் வரும் பௌத்தம் குறித்த சங்கதிகளும் செய்திகளும் புரிவதில்லை எளிதில் எவருக்கும்.

அதற்க்கு காரணம் தமிழக நிலம்சார் அரசியல் சூழலில், தமிழகத்தின் மேலே இருக்கும் ஆந்திர மாநிலத்தில் நிலவிய பௌத்தம் மகாயாண பௌத்தமாக இருந்தது, கீழிருந்த இலங்கையில் இருந்த பௌத்தம் ஈனயான பௌத்தமாக இருந்திருக்கின்றது, இவை இரண்டுக்கும் இடையில் இருந்த தமிழ்நிலப்பகுதியில் இந்த மண்ணுக்கு ஏற்ற நிலையில் ஒரு பிரிவு பௌத்தம் இருந்திருக்கின்றது.

அது ஆந்திரம் மற்றும் இலங்கையில் இருந்த பௌத்தத்திற்கான ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கின்றது, இந்த இரு நிலப்பரப்பில் நிகழ்ந்த பௌத்தங்களின் பின்புலத்தில் நின்று மணிமேகலையில் வரும் சமய உரையாடல்களை கவனிக்கும் போது நமக்கு புரியும்.

எளிய நடையில் இருக்கும் பௌத்தமாக மணிமேகலை இருந்ததற்க்கு காரணம் எளியமக்களின் வாழ்வில் கலந்த பௌத்தமாக அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த பௌத்தம் இருந்தது என்பதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் நிலவிய பௌத்த சூழலின் பிரதிபலிப்பாகத்தான் பண்டிதர் அயோத்திதாசர், லட்சுமி நரசு, ஆகியோரின் பௌத்தத்தை கணிக்க வேண்டும், பௌத்தம் என்பதே பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளை பாவிக்காமல், சமத்துவத்தை நிலை நிறுத்துவதே, அதே அடிப்படையில்தான், பிறப்பின் அடிப்படையில் கணிகையான மணிமேகலையை, பெண் என்னும் நிலையில் சமத்துவத்தை நோக்கி நகரச் செய்ததே மணிமேகலை காப்பியத்தின் ஒற்றை வரி செய்தி,

இதில் மணிமேகலையின் மனம், எந்த நிலையில் இருந்தது, என்று நோக்கும் பொழுது, பெதும்பை பருவத்தில் இருக்கும் காலத்தில் இருந்தே, பிறப்பின் அடிப்படையில் தனது சமுகத்தின் மீது வெறுப்பும், தன் சமூகம் தனக்கு கற்ப்பித்த வாழ்வை எந்த நிலையிலும் வாழ கூடாது என்ற போராட்ட குணம் நிரம்பியவளாகத்தான் காட்டப்படுகின்றது, அதனால்தான் தன் தாய் இந்திர விழாவில் நாட்டியமாட சென்றதையும் கண்டிக்கின்றாள்,

பின்னாளில் உதயகுமாரன் தன் மீது கொண்ட காதலை நினைத்து. காதல் உணர்வு வருவதற்க்கு எந்த வகையில் தான் காரணமாக இருந்தோம், இருக்கின்றோம் என்பதை நினைத்து தன்மீதே கழிவிறக்கம் கொள்கின்றாள், உதயகுமாரணின் மரணத்திற்க்கு தான்தான் காரணமாக இருந்து விட்டோம் என்ற எண்ணம் மேலிட குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றாள், இவ்வாறு மணிமேகலை மனநிலையில் பழிக்கு அஞ்சும் எண்ணமும், குற்ற உணர்ச்சியும் மேலிடும் போதெல்லாம் பௌத்தம் அவளை அரணாக நின்று காக்கின்றது என்பது மணிமேலையை படிப்பவர்களுக்கு புரியும்.

சிறையில் அடைபட்டு கொடுமைகள் அடையும் பொழுது மிகுந்த மன உறுதியும் மனத்தெளிவும் கொண்டவளாக சித்தரிக்கப்படுகின்றாள், அந்நிலையில் பௌத்தம் அந்த உணர்வை அனைவருக்குள்ளும் உருவாக்கும் என்ற செய்தியும் உணர்த்தப்படுகின்றது. இன்றைய நிலையில் மணிமேகலை என்னும் பெயரும், மணிமேகலை காப்பியமும் ஒரு குறியீடாகத் திகழ்கின்றது, அது சமூக தளத்தில்
·         தலித்துகள்
·         அறவாணிகள்
·         மீணவர்கள்
·         பழங்குடிகள் –
போன்ற சமூக தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை சமநிலைக்கு கொண்டுவருவதற்கான காரணியாகவே பௌத்தம் திகழ்கின்றது. மனித குலத்தின் மகத்தான பாதியாக இருக்கின்ற ஒடுக்கப்பட்ட பெண் குலத்தின் போராட்ட குணம் கொண்ட பெண் பிரதிநிதியாகவே மணிமேகலை உணர்த்தப்படுகின்றாள்.

இறுதியாக இன்றைக்கும் ஜைணமதம் உயிர்ப்புடன் இருக்கின்றது தமிழகத்தில் ஆனால் பௌத்தம் தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் இல்லை அதற்க்கு காரணம், கொல்லாமை, மற்றும் சைவத்தை போதிக்கும் சமயமாக மட்டுமே ஜைணம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நிலைத்து நின்றது, ஆனால்,

பௌத்தம் இன்றும் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் நிகழும் பாகுபாடுகளை களைந்து சமத்துவத்தை போதிக்கும் சமயமாக உள்ளதால், இந்தியாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் சமத்துவத்தை உருவாக்கும் பெண் குலத்தின் குறியீடாகவும், மனம் படைத்தவளாகவும் மணிமேகலை திகழ்கின்றாள். 

- 13. 09.2014 சென்னை எத்திராஜ் கல்லுாரியில் நடைபெற்ற மணிமேகலையில் தொன்மம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்