Thursday, August 22, 2019

சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் – 1


ஒரு போதும் வெட்டக்கூடாத தாவரங்கள்




இந்த நுாற்றாண்டுக்கு மனிதச் சமுகம் இந்த பூவுலகிற்கு தந்துள்ள முதன்மையான அச்சுறுத்தல்கள் இரண்டு, அவை,
புவி வெப்பமாதல் – Global Warming
பருவ கால மாற்றம் – Climate Change


தொழிற்புரட்சி (Industrial Revolution) 1750-1850 காலங்களில் கண்டறியப்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டுத் தேவைக்காவும், போக்குவரத்து கட்டுமானத்துக்காகவும், இயந்திரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கான பேக்கிங் பணிக்காவும், கட்டுமானப் பணிகளுக்காகவும், தளவாடப் பொருட்களுக்காகவும், உலகமெங்கும் காடுகள் அழிக்கப்பட்டு, அதன் மரங்கள் பெருமளவுப் பயன்பட்டன. இந்த புள்ளியிலிருந்தே துவங்குகின்றது புவி வெப்பமாதல் என்னும் செயல்.

தொழிற் புரட்சிக்குப் பிந்தைய நடப்பு மின் மற்றும் மின்னனு யுகத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சின் காரணமாக (கனிப்பொறி, கைபேசி, கால்குலேட்டர்,), பெட்ரோலியப் பொருட்கள், வாகனப் புகை, குளிர்விக்கும் பனிக்காகப் பயன்படுத்தப்படும், கார்பன் புளோரா குளோரைடு, போன்றவற்றின் தொடர்ச்சியான கதிர்வீச்சின் காரணமாக தொடர்ந்து புவி மேலடுக்கில் உள்ள வாயு மண்டலத்தில் வெப்ப வாயுக்களின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டிருப்பதே புவி வெப்பமாதலுக்கு  தொடர் காரணமாக இருந்து வருகின்றது.

புவி வெப்பமாதல் என்பது, புவியின் மேலடுக்கில் உள்ள வளி மண்டலத்தில் உள்ள வாயு அடுக்கில் உள்ள வெப்ப வாயுக்களின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டிருப்பதே, புவி வெப்பமாதலுக்கான அறிஞர்களின் பொதுவான விளக்கமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு என்னும் கரிவளி அதிகரிப்பினால் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்திலிருந்து நாம் வாழும் இப் புவி நுாறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சராசரியாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருவதாக புவி ஆய்வாளர்களும், வான் மண்டல அறிஞர்களும் தெரிவிக்கின்றனர்.[1]

இவ்வாறு புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதன் காரணமாகவே, நாம் வாழும் இந்த புவி கோளத்தில் உள்ள பனிப்பாறைகளும், வட மற்றும் தென் துருவங்களில்  மூன்று லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்துள்ள பனி அடுக்குகளின் உருகும் தன்மை அதிகரித்திருப்பதால், அதன் காரணமாக கடல் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்கின்றது.

கடல் நீர் மட்டம் அதிகரிப்பதன் விளைவாக, கடல் சார் வாழ்விடங்களின் நிலத்தடி நீராதாரத்தில் கடல் நீர்  உட்புகுந்து, நிலத்தடி நீர் குடிப்பதற்கு இயலாமல் உப்புத் தன்மை அதிகரிப்பதாகவும், நீர் ஆவியாதல் அதிகரித்து, அதன் விளைவாக மழை பொழிவு குறைவதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர். ஆய்வாளர்கள்.

பருவகால மாற்றம் – Climate Change

 நாம் வாழும் புவியினைச் சுற்றியுள்ள வளி அல்லது காற்றைக் குறிப்பிட வளி மண்டலம் அல்லது வளிக்கோளத்தை, (Atmosphere) என அழைக்கின்றோம், புவியிலுள்ள கடல் நீராதாரத்தைக் குறிப்பிட நீர்கோளம் அல்லது நீர் மண்டலம் (Hydrosphere) என அழைக்கின்றோம். புவியைச் சூழ்ந்திருக்கும் உறை பனிப்படலத்தைக் குறிக்க (Cryo sphere) என்கின்றோம். பூமியில் வாழும் உயிரினங்களைக் குறிக்க உயிர்க்கோளம் (Biosphere)  என்கின்றோம். புவியின் மையக் கரு மண்டலத்துக்கு மேல் உள்ள பாறைகளையும், பாறைத் தட்டுகளையும் குறிக்க Lithosphere ( பாறைக் கோளம்) என்கின்றோம். இவ்வாறு நாம் வாழும் புவியினைச் சுற்றியுள்ள
வளிக்கோளம், - (Atmosphere)
நீர்கோளம், - Hydrosphere)
பனிப்படலம் - (Cryo sphere)
உயிர்கோளம் - (Biosphere) 
பாறைக்கோளம் - Lithosphere
ஆகிய இந்த 5 கோளங்களின் சமநிலைக் குலையும் போது புவியின் இயற்கை சமநிலை ஒழுங்கு பாதிக்கப்படுவதால் ஏற்படுவதே புவியின் பருவ நிலை மாற்றம் என அழைக்கப்படும் பருவகால மாற்றமாகும்.  

இதன் காரணமாக புவியின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு சீரான மழை பொழிவு குறைந்து, சீரற்ற மழை பொழிவும், சூறாவளியும், புயலும் உருவாகின்றது, இதன் விளைவாக பலத்த சேதமும் பொருளிழப்பும், உயிரிழப்பும் உருவாகின்றது. அன்மைய உதாரணங்களாக ஒக்கி புயலும், தானே புயலும் நம் கண்முன்னே நிற்கின்றது.


உண்மையில் புவி வெப்பமாதல் மற்றும் பருவகால மாற்றம்  ஆகிய இரண்டும் தானாக நிகழ்ந்தவைகள் அல்ல. மனிதர்களின் பேராசையாலும், இந்த புவியின் மீது முழு உரிமை கொண்டாட யாரும் இல்லாத காரணத்தாலும், பெரு முதலாளிகள், மற்றும் மனிதர்களால் புவியின் மீது தொடுக்கப்பட்ட வளச்சுரண்டல் தாக்குதலின் விளைவாக உருவானவைகள்.

நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம் :

 21 ஆம் நுாற்றாண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆண்டு என சிலர் சொல்கின்றனர். அவ்வாறு ஏன் சொல்கின்றனர் என கனிப்பது மிக எளிது. ஏனெனில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், மாசுபாடுகளும் உயிர்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கமும் உச்சபட்ச பாதிப்பை எட்டியது இந்த நுாற்றாண்டில்தான்.  அதன் விளைவாக மனிதனின் உடல்நலத்துக்கான பாதிப்பும் அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டிருப்பதும் இந்த நுாற்றாண்டில்தான்.

                நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்னும் முழக்கமும் ஆதரவும் 1992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நாடைபெற்ற புவி உச்சி மாநாடுக்குப் பின், [2]ஐக்கிய நாடுகள் அவை மற்றும் உலக நாடுகளின் ஆதரவும் சுற்றுச்சூழலை காப்பாற்ற பெருகிக் கொண்டிருக்கின்றன.  புவி உச்சி மாநாட்டில், புவியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல் குறித்தும்,  வரும் தலைமுறையினருக்கு அமைதி மற்றும் மகிழ்வான அனைவரும் விரும்பும் வகையிலான புவியை விட்டுச் செல்வதில் நமது பங்கு குறித்தும், பேசப்பட்டது.


புத்தச் சமயமும் சுற்றுச்சூழலும்:

பௌத்தம் சுற்றுச்சூழலைக் காப்பதில் அக்கறை கொண்டுள்ள மதம். சுற்றுச்சூழலை காப்பதற்கென்றே பல போதனைகள் (சூக்தங்கள்) சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தரின் போதனைகளை புத்த சமயத்தினர்  கடைபிடித்து வருகின்றோம். அதில் நாம் அண்டை அயலாரை நேசிப்பது போலவே சுற்றுச்சூழலையும் நேசிக்க வேண்டும் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.

புத்தரின் சிகாலாவாத சுக்தத்தில்[3] குடும்பஸ்த்தர்கள்  மலரிலிருந்து வண்டு தேன் எடுப்பதைப் போன்று செல்வம் சேகரிக்க வேண்டும் என உதாரணப்படுத்துகின்றார். அதாவது மலரிலிருந்து வண்டு தேன் எடுக்கும் பொழுது, வண்டுக்கும் மலருக்கும் எந்த பாதிப்பும் நிகழ்வதில்லை. சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் நிகழ்வதில்லை அதைப்போலவே இல்லறத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கும். தங்கள் உடல்நலனுக்கும், குடும்ப உறுப்பிணர்களுக்கும் தீங்கு ஏற்படாத வகையிலும், சுற்றுச்சூழலுக்கு எந்த வகையான பாதிப்பும் இல்லாத வகையிலும் செல்வம் சேகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழலை மையப்படுத்தியே செல்வம் சேரிப்பதற்கான உதாரணத்தை விளக்குகின்றார்.

மெத்தபாவனா தியானத்திலும்[4] தன்னைப்போலவே தனது சுற்றம் மற்றும் அண்டை அயலாரையும் நேசிக்கச் சொல்கின்றார். மரங்கள் தாவரங்களையும், நேசிக்கச் சொல்கின்றார், மெத்தகாருண்ய சுக்தத்தில்[5], அதேநேரத்தில் குதண்ட சுக்தத்தில்[6], மரங்களையும் தாவரங்களையும் காப்பது அரசின் கடமை என்கின்றார். அது இன்றைய சூழலில் அரசு இயந்திரத்துக்கும் சாலப்பொருந்தும், ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்றாகவே, நாட்டிலுள்ள மரங்களையும் தாவரங்களையும் காப்பாற்றச் சொல்லியிருக்கின்றார். அதே சுக்தத்தில், மக்களோடு சேர்த்து, நாட்டிலுள்ள 
விலங்குகளைக் காப்பாற்றுவதும் ஒரு அரசரின் தலையாயக் கடமையென்கின்றார்.


குதண்ட சுக்தத்தின் அடிப்படையிலேயே, மாமன்னர் அசோகரும், அவருக்குப் பின் வந்த புத்தச் சமய அரசர்களும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டனர், காடுகளை அழியாமல் பார்த்துக்கொண்டனர், விலங்குகளுக்காக கால்நடை மருத்துவமனைகளை ஆரம்பித்தனர் எனப் படிக்கும் பொழுது அவைகள் புத்தரின் குதண்ட சுக்தம் என்பதை நமது பாடத்திட்டத்தில் விளக்குவதில்லை, வெறுமனே அசோகர் மரங்களை நட்டார் எனப் படிப்பவருக்கு புத்தச் சமயம் சுற்றுசச்சூழலைக் காப்பாற்றும் சமயம் என்பது புரிவதில்லை.

குதண்ட சுக்தத்தில், புத்தச் சமயப் பிக்கு மற்றும் பிக்குணிகளின் கடமையாக புத்தர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார், ஒவ்வொரு பௌத்தர்களும் குறிப்பாக பிக்குகள். மூன்று விதமான தாவரங்களை தொடர்ந்து நட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றார். 1. மலர் தரும் தாவரங்கள் 2. பழம் தரும் தாவரங்கள் 3. நிழல் தரும் தாவரங்கள்தெற்காசியாவில் உள்ள நாடுகளின் பௌத்தர்கள் என்று தம்மை கூறிக் கொள்வோர் தங்கள் வீட்டிலோ பொது இடத்திலோ புத்தர் கூறிய 3 விதமான தாவரங்களை வளர்த்து சுற்றுச் சூழலை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதன் வழி பௌத்தத்தை வளர்த்தும் வருகின்றனர்.

புத்தர் தனது சுஹா சுக்தத்தில்[7] மற்றும் பல சுக்தத்திலும் மூங்கிலின் சிறப்பை கூறியிருக்கிறார் . வேறொரு சுக்தத்தில் ஒருபோதும் வேட்டக்கூடாத தவரங்கள் என சிலத் தாவரங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் அவை
1. மூங்கில்
2. அரசமரம்
3. பழம் தரும் மரங்கள்
4. நிழல் தரும் மரங்கள்
5. மருத்துவ குணம் உடையத்     தாவரங்கள்
6. நறுமணம் தரும் மலர்செடிகள்
7. குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வளரும் தாவரங்கள்
8. தனித்து நிற்கும் தாவரங்கள்
9. உங்கள் முன்னோர்கள் வைத்த தாவரங்கள்
10. மக்களின் பயன்பாட்டில் உள்ள மரம் செடி. கொடி வகைகள்.

இந்த பத்து வகையான தாவரங்களை மக்கள்  ஒருபோதும் வெட்டக்கூடாது என்கிறார். அதில் முதலில் பட்டியலிடுவது மூங்கிலைத்தான். எனவே பௌத்தர்கள் ஒருபோதும் வெட்டக்கூடாத தாவரம் மூங்கில். எனவே பௌத்தர்கள் என சொல்லிக் கொள்வோர் தங்களின் வீட்டிலும். நிலத்திலும் அவசியம் வளர்க்க வேண்டியத் தாவரம் மூங்கில் மட்டுமே.  புத்தரின் போதனையை தமிழில் சொல்லிய சங்க இலக்கியங்கள் கூட உயிர்காக்கும் மருந்துக்கு என்றாலும் மரங்களை வெட்ட வேண்டாம் என்றே நம்மை எச்சரிக்கின்றது.

தீக நிகாயத்திலோ[8] ( தீக நிகாயம் 1 [9] 2007, பக்கம் 112) மரங்களின் வேர்களை ஒருபோதும் வெட்டக்கூடாது என்கின்றார். உதாரணத்துக்காக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி முளைத்து வேர் விட்டிருக்குமேயானாலும் அதைக்கூட வெட்டக்கூடாது என்கின்றார். ( அதை நட்டு வளர்க்க வேண்டும்) வேர்களை பாலி மொழியில் மூல பீஜம் என்கின்றார்நிழல் தரும் மரங்களின் கிளைகளை குறிப்பாக அரசமரத்தின் கிளைகளைக்கூட ஒருபோதும் வெட்டக்கூடாது என்கின்றார். இதை அவர் பாலிமொழியில், ஸ்கந்த பீஜா என்கின்றார், புல்வகைகளில் மூங்கிலை ஒரு போதும் வெட்டக்கூடாது என்கின்றார், இதனை அவர், பலுபுஜா புராக் என்கின்றார், இவ்வாறு வேர்களையும், கிளைகளையும், மூங்கிலையும் ஒரு போதும் வெட்டக்கூடாத தவரங்கள் என வரையறுத்து  சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற சமயமாக புத்தச் சமயம் விளங்குகின்றது.
               
புத்தச் சமய நோக்கில் சுற்றுச்சூழலைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் அனைவரும் மூங்கிலின் சிறப்பையும் உணர்ந்து  கொண்டால் மட்டுமே புத்தச் சமயத்தில் சுற்றுச்சூழல் அறவியலையும் அறிவியலையும் ஒரு சேர உணர்ந்து கொள்ள இயலும்.

மூங்கிலின் சிறப்புகள்:

பொதுவாகவே தாவரங்கள் பகலில் உயிர்வளி என்னும் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து, கரிவளியை வெளியேற்றும் செயலை செய்கின்றன. இரவில் கரிவளி என்னும் கரியமில வாயுவை சுவாசித்து உயிர்வளியை வெளியேற்றும் செயலை செய்கின்றன. சில குறிப்பிட்ட தாவரங்கள் மட்டுமே, இருபத்து நான்கு மணிநேரமும் உயிர்வளியை வெளியிட்டு, மனிதர்களுக்கும், பூமியில் வாழும் விலங்குகளுக்கும் ஆகசிறந்த நன்மை புரிகின்றன.

இவ்வாறு 24 மணிநேரமும் உயிர்வளியை வெளியிடும் தாவரங்களில் முன்னிலை வகிப்பது, அரசமரம், வேப்பமரம், இலுப்பைமரம், புங்கை மரம் மற்றும் மூங்கில் ஆகும். இந்த மரங்கள் உயிர்வளியை புவி முழுவதும் பரப்பும் வளிபரப்பாளர்களாக செயல்படுகின்றன. பட்டியலிட்டுள்ள தாவரங்களை விட மூங்கி்ல் மட்டுமே எப்போதும் தான் இருக்கும் இடத்தில் உள்ள மற்ற தாவரங்களை விட 35 சதவிகிதம் அதிகமான உயிர்வளியை வெளியேற்றி புவியை குளுமைபடுத்துகின்றது என தாவரவியல் ஆய்வாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர். இதனை புத்தர் நன்கு உணர்ந்து நமக்கு கட்டளையாகவே 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவித்துள்ளார்.

உலகெங்கும் மூங்கில் 1500 வகைகள் பயிரிடப்படுகின்றது. 87 பிரிவுகளாக அவை பகுக்கப்பட்டுள்ளன. [10] மூங்கில் காடுகள் ஆக சிறப்புவாய்ந்தவை, உலகெங்குமுள்ள வெப்ப மண்டல காடுகள் மற்றும் துனை வெப்ப மண்டல காடுகளில். தற்போதுள்ள உலக காடுகளில் பரப்பளவில் மூங்கில் காடுகள் 36[11] மில்லியன் எக்டேர் பரப்பளவாக உள்ளது.
உலக நாடுகளில் மற்ற மரங்களை கொண்ட காடுகளின் பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நேரத்தில் மூங்கில் காடுகளின் பரப்பளவு மட்டும் அதிகரித்து கொண்டு வருவது அதியசமான உண்மையாகும். உலகின் மூங்கில் வனப்பரப்பில் அமெரிக்கா கண்டத்தில் 7 சதவிகிதமும், ஆப்பிரிக்கா கண்டத்தில் 28 சதவிகிதமும் ஆசியாக் கண்டத்தில் 65 சதவிகிதமும் மூங்கில் காடுகளாக உள்ளது.[12]

உலகின் மழை பொழிவுக்கு மூங்கில் காடுகளே முக்கிய காரணிகளாக உள்ளன. அமேசான் காடுகளில் உள்ள மூங்கில்களே, அங்கு உலகின் மழை மொழிவில் 15 சதவிகிதத்துக்கும்[13] அதிகமான மழை பொழிவிக்கு காரணமாக உள்ளது. தெற்காசிய நாடுகளில் உள்ள காடுகளில் மூங்கில் காடுகளே பெரும் பரப்பில் உள்ளது. அதனாலே, தெற்காசிய நாடுகள் பெரும் மழை பொருகின்றன. உலகின் அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி ( மேகலாயாஇந்தியா) மூங்கில் காடுகள் நிறைந்த பகுதியாகும்.
               
இந்தியா மற்றும் சீனாவின் காடுகளிலும் மூங்கில் அதிக பரப்பளவில் உள்ளது. அதனாலேயே அங்கு பெரும் மழை பொழிகின்றது, ஜப்பான் நாடும் மூங்கில் பெருமளவில் நாட்டிலும் காட்டிலும் வளர்த்து வருகின்றது இரண்டு காரணங்களுக்காக, முதலாவதாக, ஜப்பான் நாட்டில் உள்ள புத்த விகார்கள் பெரும்பாலும் மூங்கிலைக் கொண்டே அமைக்கப்படுகின்றது, பின்னர் அதனைச் சுற்றிலும் மூங்கில் வனங்கள் உருவாக்கப்படுகின்றது.[14] புத்தரை வழிபடுபவர்களால். இரண்டாவதாக, மூங்கில் மிகச்சிறந்த அனுக்கதிர்வீச்சுத் தடுப்பானாக செயல்படுவதால், ஜப்பான் நாட்டில் வீடுகளைக்கூட முங்கிலைக் கொண்டே அமைக்கின்றனர். எரிமலை வீச்சின் வெப்பக் காற்றைத் தடுப்பதிலும் மூங்கில் முக்கியப் பங்கு வகிப்பதால், ஜப்பானில் பெரும்பாலான வீடுகள் முங்கிலைக் கொண்டேமூங்கில் மண் அரிப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்பதால், வனங்களின் மண் பாதுகாக்கப்பட்டு, பல்லுயிர்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மூங்கில் நல்ல வேர்பிடிப்பானாக செயல்படுவதால், மலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.

சமகாலப் பார்வையில் மூங்கிலும் புத்தச் சமயமும்:

புவி வெப்பமாதல், மற்றும் பருவகால மாற்றத்தால், பருவ மழை தவறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், உலகமெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த நிலையில் இந்த இரண்டு வகையான முக்கியப் பிரச்சனையை தீர்க்க புத்தர் போதித்தவற்றை நினைவில் கொண்டு இந்தியாவில் வாழும், அதிலும் குறிப்பாக தமிழக புத்தச சமயத்தினர் தங்கள் வாழிடம் மற்றும் விலைநிலங்களில் தொடர்ந்து மூங்கிலை நட்டு வளர்க்க வேண்டும். இந்து மதம் மூங்கிலை வளர்த்தால் விருத்தியடையாது என்னும் கருத்து தினிப்பை உழவர்களிடமும் தமிழக மக்களிடமும் தினித்துள்ளதால், நாம் மூங்கிலின் பயன்பாட்டை உணரவில்லை. அதை அதிகம் பயன்படுத்துவதுமில்லை.
இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பீகாரில் வனப்பரப்பு கிடையாது, ஆனால் அங்கு மழை பொழிவு சிறப்பாக உள்ளது. அதற்கான முக்கிய காரணம், மூங்கில் மட்டுமே. எப்படியெனில், பீகாரின் விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியில் தொடர்ந்து மூங்கிலைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் காற்றில் உயிர்வளியின் தன்மை அதிகரித்து மழை பொழிவு கிடைக்கின்றது என்பதை அவர்கள் மூங்கிலின் வழியாக உணர்ந்துள்ளனர்.

மேலும், மூங்கிலில் இருந்து 1500 வகையானப் பொருட்களை உற்பத்தி செய்ய இயலும், அதனால் மூங்கில் வளர்ப்பதன் வாயிலாக தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், வீட்டுக் கூரைகள், என பல தேவைகளுக்கு மூங்கில் அவர்களுக்குப் பயன்படுவதால், அவர்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படுகின்றது.


இறுதியாக புத்தச் சமய நோக்கில், மூங்கிலின் மரத்தின் கீழ்  புத்தரின் சிலையையும் வைத்து வழிபாடு நிகழ்த்த பௌத்தர்கள் முன் வரவேண்டும். ஜப்பானைப் போல மூங்கில் விகாரையும், அதனையொட்டி மூங்கில் காடுகளையும் கூட உருவாக்க முன் வர வேண்டும். பௌத்தம் ஏற்கும் நிகழ்வில் கூட மூங்கில் கன்றுகளை பௌத்தம் ஏற்போர்களுக்கு தானமாக தரலாம்.

சூழலிய நோக்கில் ஆக்சிஜனை 24 மணி நேரமும் வெளியேற்றும் தாவரம். மூங்கில்.  மூங்கில் இருக்கும் இடத்தில் தண்ணீர் பஞ்சம் வராது.மூங்கில் காடுகளே  அதிக மழை பொழிவுக்கு காரணமாகும். மூங்கில் சிறந்த காற்று அரண். இதையெல்லாம் அன்றே உணர்ந்து புத்தர் மூங்கில் வளர்க்க சொல்லியிருக்கிறார். நாம் அனைவரும் மூங்கில் வளர்ப்போம்.

- நன்றி . புதிய கோடங்கி - ஜீலை 2019



[1] . தமிழ் இந்து 26.11.2013
[2]  தென் ஆப்பிரிக்காவின் ரியோடி ஜெனிரோ நகரில் அக்கிய நாடுகள் அவையின் முதல் கருத்தரங்கு சுற்றுச்சூழல்  
  மற்றும் வளர்ச்சிக்கா 1992 ஆம் ஆண்டு ஜீன் 3 லிருந்து 14 ம் தேதி வரை நடை பெற்றது.
[3] . புத்தரின் நீண்ட பேருரைகளின் தொகுப்பான தீக நிகாயத்தில் உள்ள 31 வது  
  போதனையாகும் ( சூக்தம்) இது, சிகாளன் என்னும் குடும்பஸ்தனுக்கு, குடும்பத்தினரின்
  கடமைகள் குறித்து புத்தர் போதித்த போதனையாகும்.
[4] . அன்பும் கருனையும் தங்கள் நெஞ்சில் மலர்வதற்காக, தேரவாத புத்த சமய பிரிவினர்கள்
  கடைபிடிக்கும் தியானம் மற்றும் மந்திரமாகும். இந்த தியானத்தை புத்தர் தினந்தோறும்
  செய்தார் என வரலாறு கூறுகின்றது.
[5]   தேரவாத புத்த சமயத்தினருக்கான தியானம்
[6]  .தீக நிகாயத்தில் உள்ள 5 வது போதனையாகும். குதன்தன் என்னும் பிராமணன் செய்ய
  இருந்த பெரும் யாகத்தில் பலியிட இருந்த காளைகள் மற்றும் பசுக்களைக் காட்டிலும்
  உயர்வான உயிர்பலி மற்றும் தியாகம் ஏதேனும் உண்டா என புத்தரிடம் கேட்ட போது,
  அவர் சொன்ன அறிவுரையே குதன்ட சுக்தம்
[7]  அங்குத்தர நீகாயம்
[8] .  புத்தரின் நீண்ட பேருரைகளின் தொகுப்பு
[9] .  பிரம்மஜலா சுக்தா – பிக்கு, பிக்குனி, மற்றும் குடும்பத்தினர்கள் செய்ய வேண்டியவைகள்,
  மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய தொகுப்பு
[10].  Ecological Functions of Bamboo forest: Research and Application.
[11]  Ecological Functions of Bamboo forest: Research and Application
[12] . Resources of Bamboo forest – world
[13] . டிஸ்கவரி சேனல் நிகழ்சி
[14] . விக்கிபீடியா

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்