Tuesday, September 10, 2019

விக்கரமசீலா பல்கலை கழகம்.

விக்கரமசீலா பல்கலை கழகம்.
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம், கால்கான் ஒன்றியத்திலுள்ள அந்திசாக் கிராமத்தில் அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்டது. இந்தப் பல்கலைகழகம், நேபாளப் வரலாற்றில் விக்கிரமசீலா பல்கலைக் கழகம் என அழைக்கப்படுகின்றது. இந்திய வரலாற்றில் இராஜ்கிரகா பல்கலைக் கழகம் என பதியப்பட்டுள்ளது. இது வஜ்ஜிராயான புத்தச் சமயத்தினருக்கான பல்கலைக் கழகமாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் நாளந்தா பல்கலைக் கழகமும், இந்த பல்கலைக் கழகமும் இனைந்தே செயல்பட்டிருக்கின்றது. நாளாந்தா பல்கலைக் கழகத்திலிருந்து உயர் கல்விக்காக மாணவர்கள், பிக்கு மறறும் பிக்குனிகள் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்துள்ளதாக பதிவுகள் சொல்கின்றது.
வரலாற்றில் இந்தப் பல்கலைக் கழகத்தை அரசர் தர்மபாலா ஆதரித்து இருக்கின்றார். கி.பி. 8மற்றும் 9 ஆம் நுாற்றாண்டில் இந்தப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டிருக்கலாம் என தகவல் சொல்கின்றது.
அமைப்பு
இந்தப் பல்கலைக் கழகம் 100 ஏக்கருக்கும் மேல் அமைந்திருக்கின்றது, தற்போது 26 ஏக்கர் அளவே அகழ்வாய்வு செய்யப்பட்டு மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றது.
இதில் மாணவர்களுக்கான அறை, ஆசிரியர்களுக்கான அறை, பிக்கு மற்றும் பிக்குனிகளுக்கான அறை, புத்தரின் அஸ்தி, மற்றும் உயர் பிக்குகளின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடம் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேல்தளம் நான்கு சம கோணங்களாகப் பிரிக்கப்பட்டு, நான்கு ஸ்துாபங்கள் நிறுவப்பட்டுள்ளது. அதனின் கீழ் தளம் 6 கோணங்களாக பிரிக்கப்பட்டு சுடுமண் சிற்பங்கள் அதன் சுற்றுச்சுவரில் பதியப்பட்டிருக்கின்றது.
அதனின் கீழ் தளமோ ஐந்து சமகோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. குடிநீர் தொட்டி, கல் ஜன்னல், போன்ற சிறப்பம்சங்களையும் காண முடிகின்றது.
கார்த்திகேயன், நடராஜர், பார்வதி, கிருஸ்ணன், மற்றும் சுதாமா ( குசேலன்), தாரா, புத்தர், அஸ்வகோசர், நவக்கிரகம் போன்ற கற்சிலைகளும், சுடுமண் சிற்பங்களும் இதன் அருகில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தச் சமய ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய இடங்களுள் ஒன்று. விக்கிரமசீலா பல்கலைக் கழகம்.

கீழே உள்ள படங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள படங்கள்.

கணபதி 

சித்தார்த்தர்

புத்தரின் தலை

கௌதம புத்தர்

பூமி ஸ்பரிச முத்திரையுடன் புத்தர்


நவகிரகங்கள்


தாரா தேவியின் சிலை

Gowtham Buddha


சுடுமண் சிற்பம் கௌதம புத்தர்



தாரா தேவி

ஒரு தலை இரண்டு உடல் கொண்ட சிங்கத்தின் சிற்பம். 

Thara Devi


































































Monday, September 2, 2019

கிராமங்களில் புத்த விகார்.



கிராமங்களில் புத்த விகார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இந்திய நாட்டு மக்களுக்கு இன்னும் சமத்துவம் வந்து சேரவில்லை. இரண்டாயிரத்து ஐறுாறு ஆண்டுகளுக்கு முன் மனு மையப்படுத்திய பிறப்பின் அடிப்படையிலான சாதிய மற்றும் குல பாகுபாடுகள் அப்படியே நீடித்து இந்திய சுதந்திரம் என்னும் வார்த்தையின் பொருள், சாதிய அடுக்கில் கடை நிலையில் உள்ளவர்களை போய்ச் சேராமல் இன்னும் அன்னியப்பட்டுத்தான் நின்று கொண்டிருக்கின்றது இன்று வரையிலும். 

இந்திய சுதந்திரம் என்பது இன்று வரையிலும், பார்பணர்களுக்கும், அவர்களின் ஆளுமையை ஏற்றுக் கொண்ட இடைநிலைச் சாதிகளின்  அதிகார குவிப்பாகவே இருக்கின்றது.  அவ்வாறு அரசியல் அதிகார குவிப்பை கொண்டவர்கள் தங்களின் அதிகார குவிப்பைத் சோதித்து கொள்வதற்காகவும், பாதுகாத்து கொள்ளவும், பட்டியல் இன மக்களின் மீது தாக்குதல் தொடுப்பதும், பெண்களை வன்புனர்வு செய்வதும், சேரிகளில் உள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்துவதும், கைகளால் மலம் அள்ளச் செய்வதும், செத்த பிணத்தை துாக்கச் செய்வதும், தோட்டி வேலை செய்வதும், என இந்த இருபதாம் நுாற்றாண்டிலும், மனித மாண்புகளுக்கு ஒவ்வாத வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.


அவ்வாறு அந்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் மீதும், பழக்கப்படுத்தாமல் பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை எதிர்த்து எழும் பட்டியல் இனத்தவர்கள் என இருவரின் மீதும் இந்து மத அரசியல் அதிகாரம் பாகுபாடில்லாமல் வன் கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இன்னும் இந்தியாவில்.
 பொதுவாகவே, எந்த ஒரு செயலுக்கும் பின்புலமாக
·         சமூக ஆதரவு
·         அரசியல் ஆதரவு
·         சமய ஆதரவு -  ஆகிய மூன்று சக்திகளின் ஆதரவின் அடிப்படையில் அமையும்.

அந்த வகையில் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இந்த மூன்று வகையான பின்புலத்தின் ஆதரவும் மிக எளிதாகவே கை கோர்த்துக் கொள்கின்றன. குறிப்பாக, இந்து சமயத்தின் ஆதரவு மிக எளிதாக இடைநிலை சாதிகளுக்கும் பார்ப்பணர்களுக்கும் கிடைத்து விடுகின்றது, இதன் அடிப்படையிலேதான் அம்பேத்கரும், “ சாதி இந்துக்களும் பார்ப்பணர்களும், நாவிலே இராமனையும், கையிலே கூர் வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப் போன்று பேசுவார்கள், ஆனால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள் என்றார். 

       உலகம் முழுமைக்கும் உள்ள பொதுவான அரசியல் மற்றும் மத ஆதரவு என்பது, ஒரு வரையறையைக் கொண்டிருக்கின்றது, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமயமும், அரசியலும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இனைந்து செயல்பட்டு  தாக்கத்தை உருவாக்க வல்லவை, அதே நேரத்தில் ஒன்றின் வளர்ச்சிக்கு ஒன்று எப்பொழுதும் துனையாய் நிற்கும்.

 மதத்தை ஆதரிக்காத அரசியல் வெற்றியடையாது, அரசியலை ஆதரிக்காத சமயத்திற்கு அதிகாரம் கிடைக்காது என்பதுதான் அனைத்து மதம் மற்றும் அரசியலுக்கான அடிப்படை சட்டமாக இருக்கின்றது. எவ்வாறெனில் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் அது ஏதாவது ஒரு பெருவாரியான மக்கள் திரளைக் கொண்ட சமயத்தை ஆதரிக்க வேண்டும், அப்பொழுதுதான் அது வெற்றி பெற இயலும், அல்லது எந்த சமயமாக இருந்தாலும் அது ஒரு பெரும்பான்மை கூட்டத்தைக் கொண்ட அரசியலை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல ஒன்றையொன்று தழுவியும் ஆதரித்துமே வளர்ந்து வந்திருக்கின்றன வரலாற்றில் இன்று வரையிலும்.

இன்னும் சற்று விரிவாகச் சொல்வதென்றால், தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, மதம், மடம், மற்றும் கோயில் இவைகளைச் சார்ந்து இருக்கும் எப்பொழுதும், மாநிலக் கட்சிகளின் அரசியல் என்பது, வழிபாட்டு முறைகள் ( கோயில்களில் ஆடு, சேவல், மற்றும் உயிர்பலி தருதல்) மற்றும் வழிபாட்டு உரிமைகளைச் ( அனைத்து சாதியினரும் அர்சகர் ஆவது, கோயில் உள்ள தெருவில் அக்கிரகாரத்தில் நடப்பது) சார்ந்து இருக்கும்,

மதத்தின் அடிப்படையில் அரசியலைப் பிரிப்பதாயின், திராவிடக் கட்சிகளின் அரசியல் என்பது, கோயில் நுழைவு உரிமையைக் கோருகின்ற அரசியலாகவே இருக்கின்றது, அவர்களின் நோக்கம் எப்பொழுதும் பார்ப்பணர்களின் இடத்தை பிற்படுத்தப்பட்ட சாதிகள் பங்கிட்டுக் கொள்வது, அதே நேரத்தில் பார்ப்பணர்களின் அதிகாரத்தையும் பங்கிட்டுக் கொள்வது, இதை அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையில்லாமல் சமாதானமாகவே செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் போராடி பெறுகின்ற உரிமையை தங்களுக்குள் மட்டுமே பங்கிட்டுக் கொள்கின்றனரே ஒழிய, தங்களை விட கீழ்நிலையில் இருக்கும் பட்டியலின சமூகத்தோடு பங்கிட்டுக் கொள்வதும், அல்லது அவர்களையும் இணைத்துக் கொள்வதும் இல்லை, ஏனெனில், பார்பபணர்களுக்கு கீழ் தாங்கள் இருப்பதை எப்படி பெருமையாக கருதுகின்றனரோ, அதைப் போலவே, தங்களுக்கு கீழ் பட்டியலின சாதிகளும் இருப்பதைப் அம்மக்கள் பெருமையாக கருதவேண்டும் என நினைக்கின்றனர், அல்லது அவ்வாறு நினைக்க கட்டாயப்படுத்துகின்றனர். இத்தகைய கட்டாய சாதிய ஆதிக்கத்தை பட்டியலினத்தவர்கள் எதிர்க்கும் பொழுதுதான், சாதியக் கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

இன்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சேரிகளிலும், குடிதண்ணீர் பிரச்சனை இருக்கின்றது. சுடுகாட்டு பதை ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, பல கிராமங்களில் சுடுகாடே ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, சேரிகளுக்கான பாதைகள் இல்லாமல் இருக்கின்றது, தெருவிளக்கு இல்லாமல் இருக்கின்றது, பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது, ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினத்தவர் இருந்தால் அவர் உட்காருவதற்கு கூட இருக்கை தராத ஊராட்சிகள் இருக்கின்றது, ஊர்பகுதியில் வாழ இயலாத மற்றும் வேலை செய்ய இயலாத சூழ்நிலைதான் இருக்கின்றது. இதைப் போல எத்தனையே வன்கொடுமைகளைச் சொல்லிக் கொண்டு போகலாம், ஆனால் கட்டுரையின் பொருள் மாறிவிடும் என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். இத்தகைய வன்கொடுமைகளை உரிமையின்மையை எதிர்த்து பட்டியலினத்தவர் எவராவது குரல் கொடுத்தால் அதை சாதிய கலவரத்தை உருவாக்கி அழிக்கின்றனர்.

அவ்வாறு உருவாக்கப்படும் சாதிய  கலவரங்களில் பட்டியலின மக்களின்  வாழ்வாதரத்தை அழித்து, உயிர்பலி நிகழ்த்தி, குடிசைகளையும், வீடுகளையும் கொளுத்தி அம்மக்களை அனாதைகளாக்கும் பொழுது,  அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு யாரும் இல்லை, தங்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் வாழ இயலும் என்னும் மனோபாவத்தை பட்டியலின மக்களிடம் உருவாக்குவதற்காகவே சாதிய கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

மேலும், அரசாங்கம் என்பதே, இடைநிலை சாதிகளின் கையில்தான் எப்பொழுதும் இருக்கின்றது, இத்தகைய சாதிய கலவரங்கள் நடக்கும் பொழுது, எல்லா அரசாங்கமும், சாதிய கலவரங்களுக்கு துனை போகின்ற ஒரு அமைப்பாகத்தான் இருக்கும் செயல்படும். அதற்கான அன்மைய உதாரணம், ஆணவக் கொலைகள்,

பொதுவாகவே, இடைநிலைச் சாதிகள் தாங்கள் அனுபவித்து வரும் பொதுச் சொத்துகள், மற்றும் அரசு, அரசியல் அதிகாரத்தில் பட்டியலின மக்களுக்கான பங்கேற்ப்பை விரும்பாதவர்களாக இருக்கும் பொழுது, காதல் திருமணத்தின் வழியாக, தங்களுடைய குடும்பத்திலும், குடும்பச் சொத்திலும் பங்கேற்பதை எப்படி விரும்புவார்கள் அல்லது ஏற்றுக் கொள்வார்கள், அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தை தனது கைகளில் வைத்திருப்பவர்களால் இந்த ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தற்பொழுது முன்னின்று நடத்தப்படுகின்றது.

சாதியம், மதம் மற்றும் அரசியல் இந்த மூன்று கூட்டணியின்  அனுகுமுறைகளின் வழியாகவே நாம் எதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் பட்டியல் சாதியினரின் அரசியல் மற்றும் சமய அனுகுமுறையை அலச வேண்டியுள்ளது. பட்டியல் இனத்தவர்களின் அரசியல் மற்றும் சமயம் என்பது மதம் மற்றும் அரசியல் பினைப்பை உணராத நிலையிலேயே உள்ளதாகவேத் தெரிகின்றது. மேலும் அது தான் சார்ந்த மக்களுக்கான தொலை நோக்கு கொண்ட இயக்கமாகவும் இயங்கவில்லை. உணர்வு அரசியலாகவும், ஒப்பாரி அரசியலாகவுமே தம்மை இது வரையிலும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன, அனைத்து பட்டியலின சாதி கட்சியினரும்.

எப்படி பார்ப்பணர்கள் கோயிலை அதிகார மையமாகக் கொண்டு அரசியல் செய்கின்றார்களோ, எப்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், கோயில் நுழைவு, வழிபடும் உரிமை என்ற பின்புலத்தில் அரசியல் தளத்தில் பங்கெடுக்கின்றார்களோ, அதைப் போலவே பட்டியலின மக்களுக்கும் குலசாமி, மற்றும் சோலைக் காடுகள் என உண்டு இதன் அடிப்படையில் இந்த பின்புலத்தில் பட்டியலின சாதியினரின் அரசியல் கட்டமைக்கப்படாமல், இந்து மதத்தின் உதிரிகளாகவே தமது கட்டமைப்பை தொடர்ந்து கொண்டிருப்பது, வடிவேலுவின் வசனமாகச் சொல்வதென்றால், பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மென்ட் வீக்காகவே இருக்கின்றது.

குலசாமி, சோலைக் கோயில்கள் என்பனவற்றிற்கு மூலதாரமாக பௌத்தம் வந்து நிற்க்கும், இந்த பின்புலத்துடன், பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடே, சகோதரத்துவம் மற்றும் சமத்துவம். ஆகிய இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் பொதுச் சமூகத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே தன்னை கட்டமைத்துக் கொண்டது பௌத்த சமயம்.

அதே போல், போதிசத்வா. அம்பேத்கர் அவர்களும் சமத்துவத்தை கற்பிக்காத இந்து மதத்தில் இனியும் இருந்து பயனில்லை என்ற முடிவின்படி,  இந்தியாவில் தோன்றிய மதங்களில் வயது முதிர்ந்ததும் முழுமையானதுமான பௌத்தம் ஏற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், பட்டியல் இன மக்கள் இன்னும் அம்பேத்கரை பின்பற்றி, பௌத்தம் தழுவி பிறப்பின் அடிப்படையிலான இந்து மத சாதியக் கட்டமைப்பான தீண்டத்தகாத சாதியினர் என்னும் நிலையினையும் மாற்றாமல், இந்து மதம் கட்டமைத்த இழி சாதியினன் அல்லது தீண்டத்தகாதவன் என்னும் நிலையோடு இன்றும் தங்களின் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் தோல்வி மற்றும் அம்பேத்கரின் பௌத்த சமய மாற்றம் ஆகிய இரண்டையும் நாம் இணைத்துப் பார்க்கத் தவறிவிட்டோம்.  இன்றைக்கு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குத் தோன்றுகின்ற உணர்வான, நாட்டு மக்களை சமப்படுத்தி, ஒற்றுமை உணர்வுடன் வாழ பழக்கப்படுத்ததாத இந்திய சுதந்திரம் என்பது, அதிகார மாற்றமே தவிர. சமூக மாற்றம் இல்லை என்தை  போதிசத்வா அம்பேத்கர் அப்பொழுதே தெளிவாக சொன்னார்.
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் அரசியல் பின்னடைவுக்கான காரணங்களாக இருப்பவை.
·         சமூக ஆதரவின்மை
·         சமய ஆதரவின்மை
·         அரசியல் ஆதரவின்மை ஆகிய முப்பெரும் சக்திகளின் ஆதரவை இழந்து அரசியல் களத்தில் எதை சாதிக்க இயலும் என நம்பிக் கொண்டிருக்கின்றனரோ தெரியவில்லை.
1.   தேசிய மற்றும், மாநில கட்சிகளில் இருக்கும் பட்டியலினத்தவரையும், பட்டியலின மக்களின் தலைமை கொண்ட கட்சிக்கு கொண்டு வருவதிலும் அது இன்னும் வெற்றியடையவில்லை. இது அந்த கட்சிகளுக்கு தான் சார்ந்த சமூகத்தின் ஆதரிவில்லை என்பதை காட்டுகின்றது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்சிகளில் பிரிந்திருந்தாலும் அவர்களுக்கு சமய ஆதரவு மற்றும் சமூக ஆதரவு இருப்பதால், இந்த பிரிவினையும் தங்களுக்கான வளர்ச்சியாகவே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாகவே அது அமைகின்றது.
2.   தமிழகத்தில் பட்டியல் இன அரசியல் குழுக்கள், தங்களின் சமய நெறியாக பௌத்தத்தை ஏற்காமல், தாங்கள் தனித்து நின்று வெற்றிபெற இயலாது என்ற உண்மையை  இதுவரையிலும் உணரவில்லை. மேலும் தனது மக்களை இந்து மதத்தில் இருந்து முழு அளவில் வெளியேற்றி பௌத்தம் ஏற்கச் செய்யும் செயல்திட்டம் எதுவும் இல்லை.

3.   இந்து மதத்தில் இருந்து கொண்டே தனது செயல்திட்டமான அதிகாரப் பங்கீடு, என்பதில் வெற்றியடைய இயலாது என்பதையும் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் இந்து மதம் என்பது வருணாச்சரமத்தை அடிப்படையாகக் கொண்டதால், பார்பணிய, சத்திரிய, வைசிய மற்றும் சூத்திரர்களின் அங்கிகரிக்கப்பட்ட மதமாக இருக்கின்றது, இந்த பட்டியலில் இனையாத பஞ்சமர்களின் மதமாக இந்து மதம் எப்பொழுதும் இருந்ததில்லை.

4.   தங்களுக்கான சமயமாக அம்பேத்கர் காட்டிய பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்த சமயத்தின் பின் புலத்தில் அரசியல் நிகழ்த்த வேண்டும் என்னும் சமய அரசியல் கூட்டணியை இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

5.   பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு சிதறலும், பட்டியலின மக்களின் வாக்கு குவியமும் வெற்றிக்கான முக்கிய காரணிகள் என்பதையும் இன்னும் உணரவில்லை, இதை உணர்ந்து இருந்தால், சேரிகள் தோறும் வாக்கு குவியத்தை உருவாக்கி, பெருமளவில் ஊராட்சி மன்ற தேர்தலில், சட்டமன்ற, பாராளுமன்ற தேல்தலில்  வெற்றி பெற்றிருக்க இயலும்.

இறுதியாக, இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில், பட்டியலின சாதியினரும், பட்டியலின சாதிக்கட்சியினரும், தங்களின்
·         சமூக ஆதரவு
·         சமய ஆதரவு
·         அரசியல் ஆதரவு என்னும்  மூன்று நிலைப்பாடுகளையும் வலுவாக்கி கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதன் அடிப்படையில் தங்களின் முதன்மை பணியாக, இந்துக்களாக இருக்கின்ற பட்டியலினத்தவரையும், சேரி மக்களையும், போதிசத்வா. அம்பேத்கர். முன் மொழிந்த பௌத்தத்தை ஏற்கச் செய்து, பட்டியலின மக்களுக்கான சமய ஆதரவை உருவாக்கும் தளமாக பௌத்தத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு சேரிகளிலும் ஒரு பௌத்த விகாரை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கான சமய அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியமான பணியாகும்.

சமயம் என்பதே சமூகங்களின் ஒருங்கினைப்பு என்பதால், சமயத்தின் வழி, சமூக ஆதரவு எளிதாக கிடைக்க செய்ய இயலும், அதன் அடிப்படையில் அரசியல் ஆதரவு என்பது மிக எளிதாக கிடைக்கும். இத்தகைய பின்புலத்தை உணராத பட்டியலின சாதியினரின் அரசியல் என்பது பகல் கனவாகத்தான் முடியும்.

இதை முழுமையாக உணர்ந்த பின்னரே அம்பேத்கரும், இம்மக்களின் சமயமாக பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அவருக்கு முன்னரே, பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை, பண்டிதர். அயோத்திதாசர், பேராசிரியர். லட்சுமி நரசு, பன்மொழிப் புலவர். கா. அப்பாதுரையார், தந்தை சிவராசு,  போன்றோரும் அவர்காலத்தில் வாழ்ந்த பல பட்டியலின தலைவர்களும், பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை முன் நிறுத்தினர், மேலும் பௌத்த சமயத்தின் ஆதரவு என்னும் பின்புலத்தில் தங்களின் அரசியலையும் வடிவமைத்துக் கொண்டனர்.

இன்று சேரிகளில் உள்ள பெருந்தெய்வ கோயில்கள் பார்பணிய, இடைச்சாதிகளின் ஆதிக்கத்தின் அடையாளங்கள் என்பதை சேரி மக்களுக்கு உணர்த்தி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான புத்தரின் விகாரை சேரிகளில் கட்டமைக்க வேண்டும். அல்லது, புத்தர் ஞானம் பெற்றதற்க்கு அடையாளமாக உள்ள அரச மரத்தின் கீழ் இருக்கும் பிள்ளையார் சிலைகளைப் போல, சேரிகள் தோறும் அரச மரத்தின் கீழ் புத்தரின் சிலைகளை வைத்து வழிபாடும், தியானமும் நடைபெற வேண்டும்,

சேரியிலுள்ளவர்கள் வழிபட ஒரு கடவுள் அல்லது சமயத்தை காண்பிக்காதவரை, அம்மக்கள் இந்து மதத்தின் பெருந்தெய்வங்களையும், சிறு தெய்வங்களையும் தனக்கான கடவுளாக பாவித்து வழிபடத்தான் செய்வார். அவ்வாறு வழி படச் செய்யும் போது அவர் இயல்பாகவே பட்டியலின மக்களின் அரசியல் ஆதரவு என்னும் நிலையில் இருந்து இந்து மதம் வழியாக கட்டமைக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஆதரவாளராகத்தான் தம்மை அடையாளப்படுத்துவார். அவ்வாறுதான் அடையாளப்படுத்த இயலும்.

எனவே இந்த நிலை மாற பட்டியலினத்தவர்கள் தனக்கான சமயமாக பௌதத்தையும், கடவுளாக புத்தரையும் ஏற்க செய்ய வேண்டியது பட்டியலின சாதியினரின் அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாக மாற வேண்டிய காலத்தேவையும் தற்போது உள்ளது.
  

Saturday, August 31, 2019

இளையராஜாவின் இசைப் பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் - 9

சதா சதா உன்னை நினைந்து

பாடல் பிறந்தகதை :

      இளையராஜாவுடன் சேர்ந்து தன்ராஜ் ஆசிரியரிடம் வயலின் கற்க சென்றவரும். பழம்பெரும் இசையமைப்பாளர் திரு. சுதர்ஸன் அவர்களின் மகனான திரு.சதானந்தம் அவர்கள்  இளையராஜாவின் குழுவில் நீண்டகாலமாக இருப்பவர் பெங்களுரில் நடைபெற்ற இசை ஒலிப்பதிவின் போது, சதானந்தம் அவர்கள் ஏதோ ஒன்றை சரியாக வாசிக்காத போது அவரது தவறை சுட்டிக்காட்ட அழைத்த போது அவர் அதனை கேட்காதவராய் மெய்மறந்து வாசித்திருந்த நிலையில் உருவானதுதான் இந்த பாடல் என இளையராஜா அவர்கள் சென்னையில் ஒரு பெண்கள் கல்லுாரியில் மாணவிகளின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவராகவே தெரிவித்தக் கருத்து. 












இத்தகைய இனிமையான பாடல் உருவாக காரணமாக இருந்த சதானந்தம் அய்யாவுக்கு நன்றி சொல்லுவோம். இனி பாடலைக் குறித்து பேசுவோம். 

இந்தப் பாடலில் பலச் சிறப்புத் தன்மைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, ஒரு பாடலைப் எப்படிப் பாட வேண்டும், என பாடக் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இளையராஜா கற்றுக் கொடுத்தது போல இருப்பது இந்தப் பாடலின் முதல் சிறப்பு. எந்த இடத்தில் முச்சுவிடாமல் பாடவேண்டும், எங்கே முச்சு விடவேண்டும், எந்த இடத்தில் ஏற்றம் இறக்கத்தோடு பாட வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் இளையராஜா பாடியப் பாடல்களிலேயே மிகச் சிறந்தப் பாடலாக இசை விமர்சகர்களால் போற்றப்படுகின்றது. 

இந்தோளம் ராகம் 

இந்த பாடல் இந்தோளம் ராகத்தில் அமைந்தப் பாடலாகும். இந்த ராகம் பொதுவில் நள்ளிரவில் பாடவேண்டியராகம் என்றும், வாயுக்கோளாறுகள் நீங்கப் பாடவேண்டிய ராகமென்றும், இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் ( தகவல் உதவி: இந்தோளம் - விக்கிப்பீடியா)

ஒரு வகையில் இந்த ராகம் இளையராஜாவிற்கு மிகப் பிடித்தமான ராகம் என்றும் சொல்லாம். எந்த வகையில் என்றால், மெல்லிசை மன்னர் இசையமைத்து  


இராஜாவின் ரமணமாலை 

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்ட ராஜாவின் ரமணமாலையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனிமையானப் பாடல்தான் 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய்
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா

சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய்

சதா சலித்து சளைத்த மனதினிலே
சதா சளித்து சளைத்த மனதினிலே 
சதாசிவா என்றுனை ஓர் நொடி பொழுதும் இடைவிடாது ( சதா சதா)

காம குரோத மத மாச்சர்யமும் எனை விட்டு விலகிடவும்
காம குரோத மத மாச்சர்யமும் என்னை விட்டு விலகிடவும்
சாம காண நிகர் வாசகம் என் நாவில் துலங்கிடவும்
காம குரோத மத மாச்சர்யமும் எனை விட்டு விலகிடவும்
சாம காண நிகர் வாசகம் என் நாவில் துலங்கிடவும்
நின் சிறுமலர் பதம் என் சிரமதில் திகழ்ந்திட
குருவருள் துனை வர திருவருள் தனை பெற ( சதா சதா)


அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
அலைந்து அலைந்து மனம் கலைந்து குலைந்து
நிலை கலங்கி தினம் தவிக்குதே
தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே
அருகினில் ஒளி வீசு நீ இருக்கும் கரை சேர ( சதா சதா)


சதா சதா என விளிப்பது, திருவாசகத்தின் உள்ள இமைப்பொழுதும் என் நெஞ்சத்தில் நீங்காதான் தாள் வாழ்க என்னும் அடியில் உள்ள இமைப்பொழுது என்பதன் தாக்கத்திலிருந்து வந்தவைதான் சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா என்னும் பாடல் வரிகளின் துவக்கம்.

Friday, August 30, 2019

மணிமேகலையில் மனம்

மணிமேகலையில் மனம்


உலகின் பழம் பெருமை வாய்ந்த மொழிகள் 5 அவை, தமிழ், கிரேக்கம், இலத்தின் , பிரஞ்ச், மற்றும் வடமொழி என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதம், இவற்றுடன் உலகின் தொடர்பு மொழியாக விளங்குகின்ற ஆங்கிலம். இவற்றில் உலகின் வணிக மொழி என்ற சிறப்புப் பெயர் ஆங்கிலத்துக்கும், உலகின் வேத மொழி என்று சமஸ்கிருதத்துக்கும், அறிவியல் மொழி என்று பிரஞ்ச்கும், உலகின் காதல் மொழி என்ற சிறப்புப் பெயர் இலத்தினுக்கும், உலகின் சமய மொழி என்ற சிறப்புப் பெயர் தமிழுக்கும் உண்டு. இவற்றில் உலகம் வியக்கும் காவியங்களான
·         இலியட்
·         ஒடிசி 
·         ஒர்க்ஸ் அண்ட் டேஸ்
·        தியோகானி 

போன்ற இலக்கிய காப்பியங்களை முதலில் உலகிற்க்கு தந்ததனால் கிரேக்கம், உலகின் காப்பிய மொழி என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. 
       
உலகம் வியக்கும் வகையில் அதிகமான காதல் கவிதைகளையும், ஆழமான காதல் கதைகளையும் தந்துள்ள காரணத்தினால் உலகின் காதல் மொழி என்றே இலத்தின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது.
       
தொழிற் புரட்சிக்குப் பிறகு, பெரும் இயந்திரங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்து தமது மொழிப் பெயரிட்ட காரணத்தினால், பிரஞ்ச் மொழி உலகின் அறிவியல் மொழி என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. வேதங்களை, கொண்டிருப்பதால் சமஸ்கிருதத்துக்கு வேதமொழி என்ற சிறப்பு பெயர் உள்ளது. தமிழுக்கு எதன் அடிப்படையில் சமய மொழி என்ற பெயர் வந்தது என்பதை இங்கு விளக்க இயலாது. காரணம், தமிழில் மட்டுமே அனைத்து இலக்கியங்களும், சைவம் அல்லது வைணவம் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு அதைத்தவிர வேறு சமயங்கள் தமிழில் இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன இதுவரையிலும். 
       
தமிழிலக்கியம் இன்று வரையிலும் அறிவியல் வழி நின்று கற்பிக்கப்படுவதில்லை, எல்லா செய்திகளும், விவரங்களும், வர்ணணைகளாகவும் சமய நோக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அல்லது வெறும் தகவலாக விளங்கி கொள்ள வைப்பது இவை இரண்டும் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உதாரணமாக ஒரு சில..

அவ்வையாரின் “ ஆழ அழுக்கினும் ” என்னும் மூதுரை பாடலில் இருப்பது அறிவியல் அடிப்படையில் பாஸ்கல் விதி என்னும் கோட்பாடு, ஆனால் இன்று வரையிலும் தமிழறிஞர்கள் எவரும், தமிழிலக்கியத்தில் அவ்வையார் இந்த கருத்தை எங்கிருந்து எடுத்து கையாண்டார், அந்த கருத்து எப்படி வந்தது என்ற ஆய்வு நோக்கில் விளக்கம் அளிக்க வில்லை,

அதைப்போலவே, கம்பர், “ அனுவிலும் உளனே, அனுவை சத கூறக்கினும் உளனே, என்று தனது கம்பராமாயனத்தில் கூறியுள்ளார், அனு என்னும் கோட்பாடும், அனுவை பிளக்க இயலும் என்ற கருத்தும் இருபதாம் நுாற்றாண்டில் மட்டுமே உலகிற்க்கு தெரியவந்த கருத்துக்கள், ஆனால் அதற்க்கு முன்பே கம்பர், தனது நுாலில் அனு மற்றும் அனுவை நுாறாக பிளப்பது போன்ற அறிவியல் கருத்துக்களை முன் மொழிந்திருக்கின்றார் என்றால், கம்பரால் அந்த கருத்து எங்கிருந்து எப்பொருளில் எடுத்துக் கையாளப்பட்டது, கம்பர் கையாளுவதற்க்கு முன்பு அந்த வாக்கியம் எங்கிருந்தது வேறு எவரெல்லாம் அந்த பொருள் குறித்து விளக்கியுள்ளனர்  என்ற நோக்கில் இன்றும் யாரும் விவரிக்கவில்லை, மாறாக பக்தி நோக்கில் அதை கொண்டுபோய் தட்டையானப் பார்வையை முன் வைக்கின்றனர், வாசகர்களுக்கும், கேட்பவர்களுக்கும், அவர்களும் இதை ஒரு தகவலாகக் கேட்டுக் கொண்டு எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமனைவரும் மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தையும் இது நாள் வரை வாசித்து வந்திருக்கின்றோம், அல்லது கடந்து வந்திருக்கின்றோம். உண்மையில் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரு கற்பனை காப்பியமாகும். எவ்வகையில் சொல்வதென்றால், தமிழர்களின் மரபு பாடல்கள் அல்லது கவிதைகளாகத்தான் இருந்திருக்கின்றது. அவர்கள் எந்த செய்தியையும் பாடல்களாக விவரித்து பழக்கப்பட்டவர்கள், காப்பிய மரபு அவர்களிடம் இல்லை,

ஆனால் வட இந்தியர்களுக்கோ, காப்பிய மரபு உண்டு, அவர்கள் எந்த செய்தியானாலும் பாடல் வடிவிலே காப்பியமாக்குவர், அதில் அந்த காப்பிய பாத்திரங்களுடன், தானும் ஒரு பாத்திரமாக வந்து போவார்கள், இந்த மரபில் எழுதப்பட்ட கற்பனைக் காப்பியங்கள்தான், இராமாயணம், இதில் இந்த காப்பியத்தை எழுதிய வால்மிகி, ஒரு பாத்திரமாக வந்து போவார்,


அதைப்போலவே, மகாபாரதமும், இவற்றை எழுதிய வியாசரும் ஒரு பாத்திரமாக வந்து போவார், வட இந்தியாவின் இந்த மரபின் தாக்கத்தில் முகிழ்ந்த மொட்டுக்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வடஇந்திய காப்பிய மரபின்படியே இதை இயற்றிய இளங்கோவடிகள், மற்றும் சீத்தலை சாத்தனார் ஆகிய இருவருமே ஒரு பாத்திரங்களாக வந்து போகின்றனர், இந்த காப்பியங்களில், இதன் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது, வட இந்திய மரபுப்படி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் காவியம்தான் சிலம்பும் மணிமேகலையும்.

பொதுவில் எழுத்து என்பது, “ வாழ்வியற் சம்பவங்களின் பாதிப்பாகும். அந்த வகையில் இளங்கோ அடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார் ஆகிய இருவரும், கண்டுணர்ந்த, கேட்டுணரந்த, அல்லது வாசித்துணர்ந்த சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்தவைதான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

மணிமேகலை காப்பியத்தை நாம் சிலப்பதிகாரத்தில் இருந்தே தெரிந்து கொள்ள இயலும், சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில், வாழ்த்துப் பாடலில், காப்பியத்தில் உள்ள, பெரும் பாத்திரங்கள் தவிர்த்த சிறு பாத்திரங்களின் முடிவையும் சொல்லியிருப்பார் நுாலாசிரியர். அதன்படி, கோவலணின் தந்தை சமண மதத்தையும், கண்ணகியின் தந்தை ஆசிவகத்தையும், தழுவுகின்றார்கள். கோவலணின் தாயாரும், கண்ணகியின் தாயாரும் தங்களின் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் தாங்காமல் இறந்து போகின்றனர். மாதவியும் கண்ணகியும் பௌத்தம் தழுவுகின்றனர்.

உண்மையில் இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தமிழ் சமுகத்துக்கு இலக்கியத் தளத்தில் நின்று நிகழ்த்தியிருப்பது சமயங்களின் அறிமுகம் அல்லது வட இந்தியாவில் உள்ள சமயத்துக்கும், அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த வைதீக சமயங்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்.


காப்பியத்தில் உள்ள பிற கதாபாத்திரங்கள் தழுவுகின்ற மதத்தின் அடிப்படையில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமணம் ( அல்லது ) ஜைணம், பௌத்தம் அல்லது புத்த மதம், ஆசிவகம் இவை 3 மதங்களுமே வட இந்தியாவில் தோன்றியவை, அறிவைக் கற்பிக்கும் மதங்களாகும்.  அறிவின் அடிப்படையில் நின்று எதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் மதங்களாகும்.  இதைத்தவிர அப்போது தமிழ்நாட்டில் இருந்த மதங்கள் (இருக்கும்) மதங்கள் யாவும் நம்பிக்கையை போதிக்கும் மதங்களாகும். எதையும் நம்ப வேண்டும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏன் எதற்க்கு என்ற கேள்விகள் எழகூடாது அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகள் மதத்திற்க்கு எதிரானவை என்ற கோட்பாடுகளை உடையவை.

அறிவை கற்பிக்கும் மதத்திற்க்கும், நம்பிக்கையை போதிக்கும் மதத்திற்க்குமான ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்க்காக எழுதப்பட்ட காப்பியங்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இவற்றில் சிலப்பதிகாரம் மெண்மையாக இந்த சங்கதிகளைத் தொட்டுச் செல்கின்றது, மணிமேகலை மற்ற மதத்தினருடன் வாதம் புரிந்து நம்மை இட்டு செல்கின்றது இந்த நிலையில் இருந்துதான் அல்லது இந்த புரிதலில் இருந்துதான் நாம் இரு பெரும் காப்பியங்களையும் அனுக வேண்டிய தேவையுள்ளது.

இதன் அடிப்படையில்தான் இளங்கோ அடிகள், தன் கதை மாந்தர்களை ஆசிவகத்துக்கும், ஜைணத்துக்கும், பௌத்தத்துக்கும் பயணப்படுத்துகின்றார். இவற்றில், உயர்சாதியினராகிய கோவலனின் தந்தையும், கண்ணகியின் தந்தையும் ஜைணம், மற்றும் ஆசிவகம் தழுவுவதில் எந்த சிக்கலும் இல்லாததால் ஒரு பாடலின் வழி நின்று அந்த தகவலை சொல்லிச் செல்ல இயலுகின்றது.

ஆனால், ஆடல் பெண்டிர், கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியும், மணிமேகலையும், பௌத்தம் தழுவுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் சமூக முரண்பாடுகளை சொல்லிச் செல்ல எழுதப்பட்ட காப்பியம்தான் மணிமேகலைக் காப்பியம். ஏன் கணிகையர் குலத்தி்ல் பிறந்த மணிமேகலையும், மாதவியும் பௌத்தம் ஏற்றார்கள் என்றால், உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட பௌத்தம் மட்டுமே யாரையும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதில்லை,

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கின்ற வழிமுறையாக இருந்தது. அன்பையும் அறிவையும் போதிக்கின்ற மதமாக இருந்தது. இந்த அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் இழிவான குலமாக கருதப்பட்ட அவர்கள் இருவரையும் பௌத்தம் சம நோக்கோடு ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவர்களால் பௌத்தம் ஏற்க  முடிந்தது. பௌத்த மதத்திலும் அவர்களுக்கு இடமிருந்தது.

பௌத்தம் இரண்டு வகையான மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தும், அது முதலில் தன்னை மாற்றும், தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தின் வழியாக இந்த சமூகத்தை மாற்றும் இந்த இரு பணியையும் பௌத்தம் ஒருங்கே நிகழ்த்தும் இதுதான் பௌத்த வாழ்க்கை முறை.

மாதவி மற்றும் மணிமேகலையிடம் முதலில் தங்கள் கணிகையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மாற்றுவது, பின்னர் அவர்களையும் பொது சமூகத்தவரின் வாழ்க்கையையும் பொது சமூகத்தினரோடு  சேர்ந்து  வாழ வைப்பது ஆகிய இரண்டு பணிகளையும் புத்தரும் அவரின் போதனைகளின் வழியாக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளே மணிமேகலை காப்பியத்தில் விரித்துரைக்கின்றது.

இந்த முயற்சியில் அவர்கள் சந்தித்த பேராட்டங்களையும் போர்களங்களையும் விளங்கி கொள்வோமேயோனால் மணிமேகலையின் மனத்தையும் விளங்கிக் கொள்ள இயலும். மணிமேகலை காப்பியத்தில் கதை புரியும், ஆனால் அதனுள் வரும் பௌத்தம் குறித்த சங்கதிகளும் செய்திகளும் புரிவதில்லை எளிதில் எவருக்கும்.

அதற்க்கு காரணம் தமிழக நிலம்சார் அரசியல் சூழலில், தமிழகத்தின் மேலே இருக்கும் ஆந்திர மாநிலத்தில் நிலவிய பௌத்தம் மகாயாண பௌத்தமாக இருந்தது, கீழிருந்த இலங்கையில் இருந்த பௌத்தம் ஈனயான பௌத்தமாக இருந்திருக்கின்றது, இவை இரண்டுக்கும் இடையில் இருந்த தமிழ்நிலப்பகுதியில் இந்த மண்ணுக்கு ஏற்ற நிலையில் ஒரு பிரிவு பௌத்தம் இருந்திருக்கின்றது.

அது ஆந்திரம் மற்றும் இலங்கையில் இருந்த பௌத்தத்திற்கான ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கின்றது, இந்த இரு நிலப்பரப்பில் நிகழ்ந்த பௌத்தங்களின் பின்புலத்தில் நின்று மணிமேகலையில் வரும் சமய உரையாடல்களை கவனிக்கும் போது நமக்கு புரியும்.

எளிய நடையில் இருக்கும் பௌத்தமாக மணிமேகலை இருந்ததற்க்கு காரணம் எளியமக்களின் வாழ்வில் கலந்த பௌத்தமாக அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த பௌத்தம் இருந்தது என்பதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் நிலவிய பௌத்த சூழலின் பிரதிபலிப்பாகத்தான் பண்டிதர் அயோத்திதாசர், லட்சுமி நரசு, ஆகியோரின் பௌத்தத்தை கணிக்க வேண்டும், பௌத்தம் என்பதே பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளை பாவிக்காமல், சமத்துவத்தை நிலை நிறுத்துவதே, அதே அடிப்படையில்தான், பிறப்பின் அடிப்படையில் கணிகையான மணிமேகலையை, பெண் என்னும் நிலையில் சமத்துவத்தை நோக்கி நகரச் செய்ததே மணிமேகலை காப்பியத்தின் ஒற்றை வரி செய்தி,

இதில் மணிமேகலையின் மனம், எந்த நிலையில் இருந்தது, என்று நோக்கும் பொழுது, பெதும்பை பருவத்தில் இருக்கும் காலத்தில் இருந்தே, பிறப்பின் அடிப்படையில் தனது சமுகத்தின் மீது வெறுப்பும், தன் சமூகம் தனக்கு கற்ப்பித்த வாழ்வை எந்த நிலையிலும் வாழ கூடாது என்ற போராட்ட குணம் நிரம்பியவளாகத்தான் காட்டப்படுகின்றது, அதனால்தான் தன் தாய் இந்திர விழாவில் நாட்டியமாட சென்றதையும் கண்டிக்கின்றாள்,

பின்னாளில் உதயகுமாரன் தன் மீது கொண்ட காதலை நினைத்து. காதல் உணர்வு வருவதற்க்கு எந்த வகையில் தான் காரணமாக இருந்தோம், இருக்கின்றோம் என்பதை நினைத்து தன்மீதே கழிவிறக்கம் கொள்கின்றாள், உதயகுமாரணின் மரணத்திற்க்கு தான்தான் காரணமாக இருந்து விட்டோம் என்ற எண்ணம் மேலிட குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றாள், இவ்வாறு மணிமேகலை மனநிலையில் பழிக்கு அஞ்சும் எண்ணமும், குற்ற உணர்ச்சியும் மேலிடும் போதெல்லாம் பௌத்தம் அவளை அரணாக நின்று காக்கின்றது என்பது மணிமேலையை படிப்பவர்களுக்கு புரியும்.

சிறையில் அடைபட்டு கொடுமைகள் அடையும் பொழுது மிகுந்த மன உறுதியும் மனத்தெளிவும் கொண்டவளாக சித்தரிக்கப்படுகின்றாள், அந்நிலையில் பௌத்தம் அந்த உணர்வை அனைவருக்குள்ளும் உருவாக்கும் என்ற செய்தியும் உணர்த்தப்படுகின்றது. இன்றைய நிலையில் மணிமேகலை என்னும் பெயரும், மணிமேகலை காப்பியமும் ஒரு குறியீடாகத் திகழ்கின்றது, அது சமூக தளத்தில்
·         தலித்துகள்
·         அறவாணிகள்
·         மீணவர்கள்
·         பழங்குடிகள் –
போன்ற சமூக தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை சமநிலைக்கு கொண்டுவருவதற்கான காரணியாகவே பௌத்தம் திகழ்கின்றது. மனித குலத்தின் மகத்தான பாதியாக இருக்கின்ற ஒடுக்கப்பட்ட பெண் குலத்தின் போராட்ட குணம் கொண்ட பெண் பிரதிநிதியாகவே மணிமேகலை உணர்த்தப்படுகின்றாள்.

இறுதியாக இன்றைக்கும் ஜைணமதம் உயிர்ப்புடன் இருக்கின்றது தமிழகத்தில் ஆனால் பௌத்தம் தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் இல்லை அதற்க்கு காரணம், கொல்லாமை, மற்றும் சைவத்தை போதிக்கும் சமயமாக மட்டுமே ஜைணம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நிலைத்து நின்றது, ஆனால்,

பௌத்தம் இன்றும் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் நிகழும் பாகுபாடுகளை களைந்து சமத்துவத்தை போதிக்கும் சமயமாக உள்ளதால், இந்தியாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் சமத்துவத்தை உருவாக்கும் பெண் குலத்தின் குறியீடாகவும், மனம் படைத்தவளாகவும் மணிமேகலை திகழ்கின்றாள். 

- 13. 09.2014 சென்னை எத்திராஜ் கல்லுாரியில் நடைபெற்ற மணிமேகலையில் தொன்மம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

இதையும் படியுங்கள்