பல்கு நதிக்கரையில்
அரச மரத்தின் கீழ் இருந்த
மரங்களின் தேவனுக்கு
பால் சோறு படைக்கிறாள்
பழங்குடி இளவரசி சுஜாதா
துறவி சாப்பிடும் போது
சிந்திய சோற்றுப் பருக்களை
எங்கிருந்தோ வந்த
காகம் ஒன்று தன்
அலகால் கொத்தி தின்றது
சுஜாதா கையை தூக்கி
காகத்தை விரட்ட எத்தனிக்க
பார்வையால் தடுக்கிறார் சித்தார்த்தர்
கௌதமர் அமர்ந்திருந்த இடத்தை
சுத்தம் செய்த மகிழ்ச்சியை
கா கா என கத்தி சொன்னது காகம்
தூக்கம் கலைந்து நானும்
காகா என கத்திக் கொண்டிருந்தேன்
No comments:
Post a Comment