Saturday, July 15, 2017

ஆயிரம் தாமரை மொட்டுகளே..,


இளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2

ஆயிரம் தாமரை மொட்டுகளே.., 

இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை குறித்து எழுதும் போது அதீத எச்சரிக்கையோடும் அதிகமான தரவுகளோடும் எழுத வேண்டும். ஏனெனில் இளையராஜாவின் இசையில் பௌத்த கூறுகள் என்பது எவரும் தொடாத கருத்தோட்டம்.  இதை முதன் முதலில் எழுத முனைந்ததற்காக பாராட்டுகின்றேன். எனினும் தரவுகளை அதிகம் தாருங்கள் என இந்த கட்டுரையின் முதல் பகுதியை படித்து பின்னுாட்டத்தை அலைபேசி வழியாக தந்த கவிஞர். யாழன் ஆதி தோழருக்கு நன்றி சொல்லி அடுத்த பாகத்தை துவங்குகின்றேன்.

       பொதுவில் பௌத்தத்தை 3 வகையாகப் பிரிக்கலாம், என்னற்ற துனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவைகள் 1. தேரவாதம். 2. மகாயானம் அல்லது பெருவழி 3. வஜ்ஜிரயானம் அல்லது தாந்தீரிகம் ஆகிய 3 பிரிவுகளாகும்.

·         தேரவாதம்.

1.   பாலி மொழியை முதன்மையாக் கொண்டது, அனைத்து போதனைகளுக்கும், தரவுகளுக்கும் பாலி மொழியை மட்டுமே தரவகளாக ஏற்றுக் கொண்டது.

2.   புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, மற்றும் சங்கம் சரணம் கச்சாமி, என்னும்  3 சரணங்களை ஏற்றுக் கொள்ளுதல்.

3.   இந்த உலகில் துண்பம் இருக்கின்றது, துன்பத்திற்கான காரணம் இருக்கின்றது, துன்பத்தை நீக்க முடியும். இந்த உலகில் மனிதர்களுக்கு உள்ள துன்பம் நீக்கம் பெறுகின்றது என்னும் நான்கு உன்னத வாய்மைகளை ஏற்றுக் கொள்வது.

4.   உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்வது, அடுத்தவரின் உடைமைகளின் மீது ஆசைப்படாமல் இருத்தல், மனைவியோடு மட்டும் மகிழ்ந்திருப்பது, உண்மையை மட்டுமே பேசுவது, மது, புகையிலை, பீடி, சிகரெட் மற்றும் போதை பழக்கத்தை பொருட்களை தவிர்ப்பது என்னும் ஐந்தொழுக்கப் பண்பாட்டை பின்பற்றி வாழ்வது.

1.   நல் உணர்வு
2.   நல் நினைவு
3.   நல் வாய்மை
4.   நற்செயல்
5.   நல் வாழ்க்கை
6.   நல் முயற்சி
7.   நல் மனம்
8.   நல் அமைதி என்னும் எண் வழிப் பாதையை கடைப்பிடித்து ஒழுகுதல்.

இவற்றுடன் பத்து வாழ்க்கை நெறிகளான.
1.   தனி மனித ஒழுக்கம்
2.   பிறர் தேவைக்கான தானம்
3.   விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.   துன்பத்திலும் இன்பத்திலும் சுய கட்டுப்பாடு
5.   விடா முயற்சி
6.   சகிப்புத் தன்மை
7.   வாய்மை
8.   உள்ள உறுதி
9.   அன்பு
10.  மைத்திரி. ( எல்லா உயிர்களையும் நிபந்தனையற்று நேசித்தல்) ஆகிய நெறிகண்டு தெளிதலும்.

இவற்றுடன் படிமங்களான அல்லது காட்சிகளாக

·         புத்தரின் பாதங்கள்
·         தாமரை
·         வெள்ளையானை
·         குடை
·         மான்
·         புத்தரின் கரங்கள்
·         புத்தரின் தலை முதலியவற்றை தொழுவதும் வணங்குவதும் வழிபடுவதும்

தேரவாத பௌத்தத்தின் சாரமாகவும் பௌத்தர்களின் கடமையாகவும் இருக்கின்றது.

மகாயான பௌத்தம்.

1.   சமஸ்கிருத மொழியை முதன்மையாக கொண்டது.
2.   திரி சரணங்களை ஏற்றுக் கொண்டது
3.   நான்கு உன்னத வாய்மைகளை ஏற்றுக் கொண்டது
4.   ஐந்தொழுக்க நெறியை பின்பற்றுவது
5.   எண்வழி மார்க்கத்தை ஏற்றுக் கொள்வது,
6.   புத்தரின் முழு உருவ சிலைக்கு வழிபாடு செய்வது
7.   ஜாதக கதைகளுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தருவது.
8.   இவை மகாயான பௌத்தத்தின் சாரமாக இருக்கின்றது.

வஜ்ஜிராயானம்

1.   தேவநாகிரியை முதன்மை மொழியாக ஏற்றுக்கொண்டது
2.   மும்மணிகள் என்றழைக்கப்படும் திரி சரணங்களையும்
3.   நான்கு உன்னத வாய்மைகளையும்
4.   ஐந்தொழுக்க நெறியையும்
5.   எண்வழி மார்கத்தையும்
6.   முத்திரைகளையும்
7.   மந்திரங்களையும்
8.   தியானங்களையும்
9.   பலவிதமான புத்தரையும் ஏற்றுக்கொண்டு வழிபாடு நிகழ்த்துவது. வஜ்ஜிரியான பௌத்தமாகும்.

பௌத்தமும் தாமரையும்

       தாமரை மலர், பௌத்தத்தில் ஞானம், அறிவு, மாசற்ற மனம் மற்றும் மன அமைதியின் குறியீடாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. புத்தரின் தாயார் மகாமாயா தனது தாய்வீட்டிற்கு செல்லும் வழியில் கபிலவஸ்த்து என்னும் இடத்தில் உள்ள நந்தவனத்தின் அழகை கண்டு அங்கு சற்று இளைப்பாற எண்ணிய போது பேறுகால வலி உண்டானதால் அங்கிருந்த சால் மரத்தின் கிளைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டே சித்தார்த்தரை நின்ற நிலையிலேயே பெற்றெடுத்தார் என புத்தரின் வரலாறு சொல்கின்றது.[1]

       அவ்வாறு குழந்தையாக பிறந்த புத்தர் ஏழு அடிகள் நடந்து சென்று தன் தாய்க்கு வணக்கம் சொல்லி தன்னை இப்பூவுலகுக்கு அளித்ததற்கு நன்றி சொல்லியது என்றும், அந்த ஞானக் குழந்தை காலடி வைத்த இடங்களில் எல்லாம் வெண் தாமரை முளைத்தது என்றும் புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சொல்லும் ஜாதக கதைகளில் படித்திருக்கின்றோம்.[2]


சித்தார்த்தர் புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஏழுவாரங்கள் தியானம் செய்கின்றார் முதல் வாரம் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்து ஞானம் அடைகின்றார், இரண்டாவது வாரம் உட்கார்ந்திருந்தாலும் விழி இமைக்காமல் தியானம் செய்கின்றார். (மன உறுதி பெறும் பொருட்டு தனக்கு ஞானம் கிடைக்க காரணமாக இருந்த போதி மரத்துக்கு நன்றி சொல்லும் நோக்கம்)       மூன்றாவது வாரம் உடலும் மனமும் ஒத்து போகும் வகையில் நடை தியானம் மேற்கொள்கின்றார், அவ்வாறு அவர் நடை தியானம் மேற்கொண்ட போது, அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும், வரலாறு சொல்கின்றது. [3] மேலும் அவ்வாறு புத்தர் நடை தியானம் பயின்று தாமரை மலர்கள் முகிழ்ந்த இடத்தில் அசோகர் நினைவுத் துான் நிறுவியதாக அசோக வந்தனம் தெரிவிக்கின்றது.

       மேலும் நடை தியானம் முழுதும் பயின்று ஞானம் பெற்றவர்கள் நடக்கும் போது தாமரை மலர்கள் அவர்களைத் தாங்கும் என்றும் பௌத்த தியானம் என்னும் நுாலில் விளக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் ஞானம் பெற்ற பிறகு அமர்ந்திருக்கும் எல்லா இடங்களிலும் சிலைகளிலும் தாமரை மலரின் மீதே அமர்ந்திருப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். கரங்களில் தாமரை தாங்கிக் கொண்டிருப்பது போலவும், இதயத்தில் தாமரை மலர்ந்திருப்பதைப் போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது, தாமரை என்பதை அன்பு, கருனை, ஞானம், செல்வம், மன அமைதி போன்றவற்றின் குறியீடாக பௌத்தம் கட்டமைத்த காரணத்தால் பௌத்தத்தில் தாமரை மிகு முக்கியத்துவம் பெறுகின்றது.

       மகாயான பௌத்ததை உருவாக்கிய அவலேகோஸ்வர் என்னும் அகத்தியரும் தாமரை மலருடன் நிற்ப்பது போலவே அஜந்தா குகை ஓவியங்களும், சித்தன்னவாசல் குகை ஓவியங்களும் உள்ளது.

      
புத்தர் போதித்த என்பத்து நான்காயிரம் சூக்தங்களுள் தாமரை சூக்தம் மிகு முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாறு முக்கியத்துவம் பெற்றதனாலே அது முடிவுறா சூக்தமாக நிற்கின்றது. அடுத்து வரும் மைத்திரேய புத்தர் அதனை நிறைவு செய்வார் என மகாயான பௌத்தம் உறுதிபட நம்புகின்றது.      
பௌத்தத்தை உள்வாங்கி இந்து மதத்துடன் இனைப்பு வேலைகள் நடைபெற்ற போது, புத்தர் மற்றும் பௌத்த மத பெண் தெய்வங்களை அப்படியே தாமரையோடு ஏற்றுக் கொண்டது இந்து மதம். மகாயான பௌத்த பெண் தெய்வங்களான தாரா இந்து மதத்தில் சரஸ்வதியாக வெண் தாமரையோடு இனைத்துக் கொண்டது. பௌத்ததில் செல்வத்துக்குரிய தேவதையை திருமகளாக செந்நிற தாமரையோடு ஏற்றுக் கொண்டது. இந்து தெய்வங்களின் சிலைகளுக்கு கீழ் பீடத்தில் தாமரை செதுக்கப்பட்டிருந்தால் அது பௌத்த தெய்வங்கள் என்பதை உறுதிபடச் சொல்ல இயலும்.
       
இந்திய சட்டத்தை வடிவமைத்த போதிசத்வா. அம்பேத்கரும், இந்திய தேசத்தின் தேசிய மலராக தாமரையை தீர்மானித்து அதை சட்டமாக இயற்றினார். தாமரை மலருக்கு இத்தகைய முக்கியத்துவத்தை பௌத்தம் அளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த குறிப்புகளை தர நேர்ந்தது.

பௌத்த மந்திரங்கள்       
ஓம் மணி பத்மே ஹூம் என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து  மந்திரம் (ஷடாக்ஷர மந்திரம் அவலோகிதேஷ்வரருடன்  தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி (ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.[4]  


பௌத்தத்தின் மந்திரங்களையும் இந்து மதம் தனக்கானதாக உள்வாங்கிக் கொண்டு, ஐந்தெழுத்து மந்திரம் சிவாய நம என்றும் அது சிவனுக்கு உரியது எனவும், ஆரெழுத்து மந்திரம் சரவண பவ என்பது முருகனுக்கு உரியது என்றும் புனைந்துள்ளது. உண்மையில் முருக வழிபாடு என்பது குழந்தையாய் இருந்த புத்தர் என்றே வரலாற்றாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் உண்மை விளக்கம் அறிய விரும்புவோர். பழனிக்கு செல்லும் பட்சத்தில் பழனி முருகனின் சிலையின் காதுகளில் பெரிய துளையை காணலாம். இது புத்தரின் அடையாளம். எந்த இந்து தெய்வத்தின் காதுகளில் பெரும் துளை இருந்தாலும் அது புத்தர் மற்றும் பௌத்த தெய்வங்கள் என நாம் உறுதிபட சொல்ல வேண்டும்.
              

ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரம் வஜ்ஜிராயான பௌத்தர்களுக்குரியது என்றாலும், நடப்பில் அனைத்து பௌத்தர்களும் பயன்படுத்தும் அதி சிறப்பு வாய்ந்து மந்திரமாகும். இந்த மந்திரத்தை மன அமைதிக்காகவும், மனம் துன்பம் நீங்கி உற்சாகம் அடைவதற்காகவும் பௌத்தர்கள் உச்சரிக்கின்றனர். போதிசத்வா. அம்பேத்கரும் இம் மந்திரத்தை உச்சரிப்பவராகவே, அம்பேத்கர் திரைப்படத்தின் வழியாக சுட்டிக்காட்டப் படுகின்றது.
       
ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் தேவநாகிரி சொல்லுக்கான சரியான தமிழ் பொருள் மனதில் ஆயிரம் தாமரைகள் மலரட்டும் என்பதே. உண்மையில் மன மகிழ்வும், ஞானமும் பெற்று வாழ்பவர்களின் இதயம் ஆயிரம் தாமரைகளால் நிரம்பி வழியட்டும் என்பதன் பொருளே, ஓம்_மணி_பத்மே_ஹூம் (மனதில் ஆயிரம் தாமரைகள் மலரட்டும்.)

பௌத்தம் என்னும் கருத்தியல் பன்னெடுங்காலமாக பட்டியலின மக்களின் மரபில் கலந்து வழிவழியாக இயற்கையாகவே முன்னெடுக்கும் வாழ்வியலாக உள்ளதாலும், யாரும் சொல்லாமலே சேரி சனங்களால் ஐந்தொழுக்க பன்பாட்டின் படி வாழ்க்கையை அமைத்து கொள்ள முடிகின்றது. பட்டியலின மக்களின் வாழ்க்கையில் பௌத்த கூறுகளை நாம் தனியாக தேட முடியாது ஏன் எனெனில் அவர்களின் அக வாழ்வும், புற வாழ்வும், பௌத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
       
அதைப் போலவே, இசைஞானியாரின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியனவற்றை இனைத்தலுமே பௌத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பௌத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
      
மன அமைதியும், உற்சாகமும், வேண்டுவோர், நாள் முழுவதும் அமர்ந்து ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தாந்திரிக ( வஜ்ஜிராயான பௌத்தர்களைப் போல் ) கைகளில் உருளை மணி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் ஒலிநாடாவில் இந்த மந்திரத்தை கேட்ப்பதெனில் இரண்டு மணி நேரம் கேட்க்க வேண்டும்.
       
இவை எதுவும் இல்லாமல் வெறும் நான்கே நிமிடங்களில் இசைஞானியால் இந்த மந்திரத்தின் அடிப்படையில் அமைந்த பாடலொன்றின் வழியாக கேட்ப்பவரின் மனதில் உற்ச்சாகத்தை தன்னுாத்தாக கொப்பளிக்க வைக்க இயலும். அந்த பாடல் ” ஆயிரம் தாமரை மொட்டுகளே. ” பௌத்தம் முழுவதையும் அறிந்து, பௌத்த தியானங்களை முற்றிலும் கற்று தெளிந்த இசை ஞானியரால், ஆயிரம் தாமரை என்றதும், ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரமே நினைவுக்கு வந்ததால், அந்த பாடலின் வரிகளை  ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் கட்டமைப்பிலே அமைத்திருப்பார். அந்த பாடலின் வரிகளை துாக்கி விட்டு அப்படியே ஓம்_மணி_பத்மே_ஹூம் என்று உச்சரித்தாலும், அந்த பாடலின் இசையும் வடிவம் எள் முனையளவும் மாறாது. அது தரும் உற்சாகமும் குறையாது.
       

இசை வல்லுனர்கள் அது காவடிச் சிந்து வடிவத்தில் அமைக்கப்பட்டது எனலாம், நாட்டுப்புற ஆய்வாளர்கள் அது தெம்மாங்கு பாட்டு எனலாம், அல்லது கிராமப்புற பாட்டு என்று கருத்துச் சொல்வோரும் உண்டு. உண்மையில் இவை எல்லாவற்றிற்க்கும் வரலாற்றின் துவக்கமாக இருந்தது பௌத்தம், உண்மையில் காவடி என்பது தாந்தீரிக பௌத்தர்களின் உடமைகளையும், புத்தருக்கு படைக்க வேண்டிய பொருட்களை இரண்டு பக்கமும் மூங்கில் பெட்டிகளாக செய்து அதனை சுமந்து செல்வதாகும்.

சுமைதாங்கி அதனை சுமந்து செல்லும் போது சுமை தெரியாமல் இருக்க பாடிய பௌத்த செவ்வியல் பாடல். அதன் திரிபு, கிராமங்களில் பாடப்படும், கும்மிப் பாடலும், வேலை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க பாடும் தெம்மாங்கு பாட்டும் என்பதை நாம் மீள் நினைவு கூறும் போது. இசைஞானியாரின் இசையில் உள்ள பௌத்த கூறுகளை உணர இயலும்.
       

பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பௌத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பௌத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன.
தொடரும். . . .[1]  புத்தரும் அவர் தம்மமும். பக்கம் 5
[2]  புத்த ஜாதக கதைகள்
[3] The Life of Buddha. Edward J.Thomas. Page 55
[4] https://ta.wikipedia.org/wiki/ ஓம்_மணி_பத்மே_ஹூம்


No comments:

தற்போதைய பதிவு

அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...

பலராலும் படிக்கப்பட்ட கட்டுரைகள்