Sunday, December 20, 2015

இயக்கமாய் மாற வேண்டிய இலவச இரவுப் பள்ளிகள்

ஒவ்வோராண்டும் தமிழக நிதி நிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடும் அளவு குறைந்து கொண்டே வருவதும், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டே குறைத்துக் கொண்டு வருவதும், காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்திக் கொண்டு வருகின்றது. இது யாருடைய கல்வியை பாதிக்கும் செயல் என்று என்றேனும் நாம் எண்ணிப் பார்த்திருப்போமா?

உண்மையில் நமது கல்வி முறை ஏழை மக்களுக்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் உள்ளது என்பதை அனைவரும் உணருவார்கள். அரசாங்கமே தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கின்ற விதத்தில்தான் உள்ளது. ஏழைகள் அதிகம் பயன்படுத்துகின்ற, அரசுப் பள்ளிகளிகளில் விளிம்பு மக்களின் குழந்தைகள்தான் அதிகம் படிக்கின்றனர்.
அவர்கள் தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களோடும், தேர்வு முறைகளோடும் போட்டி போடுகின்ற நிலையில்தான் இன்றும் உள்ளனர்.

மேலும் நமது வாழ்க்கை முறையில் திரைப்படங்களும், தொலைக்காட்சியும், கிரிக்கெட்டும் ஒரு அங்கமாகிப் போனதால், அரசு பள்ளியில் பயிலும் மாணவனுக்கு பள்ளிப் படிப்போடு வீடுகளில் படிக்க வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது, இது ஏழை மாணவர்களின்  தேர்ச்சி நிலையை பாதிக்கும் செயலாகவே இருந்து கொண்டு வருகின்றது.
குறிப்பாக சேரிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவனுக்கு இரவுகளில் தகப்பனின் குடியும், வீடுகளில் தொலைக்காட்சி நீள் தொடர்களின் ஒலிபரப்பும், மாணவனின் இரவு நேர படிப்பை பெருமளவில் பாதிப்பதால் அவனால் இரவு நேரத்தில் வீடுகளில் படிக்க முடிவதில்லை, இதனால் தாழ்த்தப்பட்ட மாணவனின் கல்வி நிலை உயரமுடியாமல் தேர்ச்சி பெற முடியாததாலும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியும், தோல்வியுறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றான் பின் ஆனாக இருந்தால்  அவன் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைமையும், பெண்ணாக இருந்தால் திருமணம் செய்து கொடுக்கும் நிலையும்தான் பெரும்பாலும் நிகழ்கின்றது நமது நாட்டில்,

இந்த நிலையை தவிர்க்க ஒவ்வொரு சேரிகள் தோறும், இலவச இரவுப் பள்ளிகளை ஆரம்பித்து அதில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சியும், படிக்க வாய்ப்பும் அளிக்க வேண்டும், இதனால் தலித்  கிராமப்புற மாணவ மாணவிகளின் கல்வித் தரம் உயரும். இதனை ஒரு இயக்கமாகவே செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

சேரிகளில் உள்ள அரசியல் இயக்கம் அல்லது கட்சிகள், சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசுப் பணியில் இருப்போர் கூட இதனை பொறுப்பேற்று செய்ய வேண்டும், இதனால் அரசியல் கல்வியும் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கிடைத்து தெளிவான அரசியல் புரிதலோடு வளர்வார்கள்.. கல்வி நிலையும் உயர்கின்ற வாய்ப்பு இயல்பாகவே அமைகின்றது.

வேலுார் மாவட்டத்தில் உள்ள தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்பு, வேலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள 25 கிராமங்களில் சேரிகள் தோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கென்று இலவச இரவுப் பள்ளியை நடத்தி வருகின்றது சுமார் 25 ஆண்டு காலமாக, இந்த பள்ளியில் படிக்கின்ற மாணவர்களே, பள்ளிப் படிப்பை முடிந்தது பள்ளி ஆசிரியர்களாக தன்னார்வத்துடன் பொறுப்பேற்று ஆர்வத்துடன் நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இதனை நானே நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன்.

அதே போல திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் ஒன்றியத்தில் உள்ள கரந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களில் 50 ஆண்டுக்கும் மேலாக இலவச இரவுப் பள்ளிகள் தன்னெழுச்சியாக  நடந்து கொண்டு வருகின்றது, இந்த கிராமங்களில் தலித் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கின்றது, கல்லுாரியில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது, மேலும் அரசு பணியில் உள்ள தலித்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.

கல்வி மட்டுமே சமத்துவத்தை கொண்டு வரும் கருவியாக இருக்கும், ஒரு சமூகம் கல்வியில் பின் தங்கியிருப்பது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் செயலாகவே இருக்கின்றது, எனவே இந்த நிலை நீடிக்காமல் இருப்பதற்கு, சேரிகள்தோறும் இலவச இரவுப் பள்ளிகளை இயக்கமாக கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கின்றது. அந்த பணி இன்றைக்கு முதன்மையாக பணியாக முன்னெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்