Wednesday, April 15, 2015

அண்ணலின் சிலைக்கு மாலை கொள்கைக்கு பாடை

அண்ணலின் சிலைக்கு மாலை கொள்கைக்கு பாடை
                                               
      ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்த நாளான ஏப்ரல் 14 மற்றும் நினைவு நாளான டிசம்பர் 6 ஆகிய இரு  நாட்களில் அண்ணலின் சிலைக்கு மாலை சூடும் நிகழ்வு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும், தலித் அரசியல் கட்சி தலைவர்களாலும், சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் அண்ணலின் மீது ஆர்வம் கொண்டவர்களாலும் நிகழ்த்தப்படும் நிகழ்வாகவே இந்தியா முழுமைக்கும் உள்ளது. தமிழகத்தில் மிக அதிகமான அளவில்
      அண்ணலின் சிலைக்கு மாலை சூடும் நிகழ்வு என்பது அரசியல், சமூக, தளத்தில் தனக்கான இருத்தலை உலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு எளிய சடங்காகத்தான் இங்குள்ள ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.    மாலையிடும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் மனோபாவமும் தனக்கான இருத்தலை உலகுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே                                                                
 உள்ளது.
      இதனை வேறு விதமாக சொல்வதென்றால் ஆண்டுக்கு இரு முறை அண்ணலை நினைத்துக் கொள்கின்றோம், மற்ற நாட்களில் அவரை வசதியாய் மறந்து விடுகின்றோம். அவர் சொல்லிச் சென்ற “ கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் ” இன்றைக்கு  தலி்த் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மனதில் இருந்தும் சமூக செயல்பாட்டாளர்கள் மனதில் இருந்தும், சமூக ஆர்வலர்கள் மனதில் இருந்தும்  மறைந்து போய் விட்டது.
ஆனால் பிற சாதியினர் இந்த மூன்று கோட்பாடுகளையும் உள் வாங்கிக் கொண்டு தனக்கான இருத்தலை அம்பேத்கரை எதிர்த்துக் கொண்டு அவரின் முழக்கமான கற்பி, ஒன்றுசேர், கிளர்சி செய் என்பதை தாம் சார்ந்த சாதியிலுள்ளோரிடம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய சாதிய அரசியலிலும், சமூக அரசியலிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை நம்பியே தலித் குழந்தைகளின் கல்வி உள்ளது. ஆனால் இன்று அரசு பள்ளிகளை அரசே திட்டமிட்டு எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டு வருகின்றது. கல்வி மட்டுமே தலித் சமூகத்தில் மிகப்பெரும் சொத்தாக இன்றும் கருதப்பட்டு வருகின்ற சூழலில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அவற்றின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என என்றாவது நாம் அரசுக்கு கோரிக்கை வைத்திருப்போமா? அல்லது போராடித்தான் இருப்போமா?
தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மிகுந்துள்ள இன்றைய நிலையில் சேரியில் உள்ள குழந்தைகள் தங்களது வீட்டில் படிப்பதற்கான சூழல் மிக அருகிப் போய் உள்ளது, இதனை தவிர்க்கவும், தலித் குழந்தைகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், சேரிகள் தோறும் இலவச படிப்பு மையத்தை ஏன் இதுவரை எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும், சிந்தனையாளர்களும், அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தான் தலித் சமூகத்தில் மிகப்பெரும் ஓர் ஆளுமை என காட்டிக் கொள்ள முயற்சிக்கும் எவரும் செயல்படுத்தவில்லை,
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே உள்ளது பள்ளி கல்வித் துறையிலும், உயர் கல்வித் துறையிலும் அதை அதிகப்படுத்த இதுவரையிலும் யாரும் குரல் கொடுக்கவில்லை. பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவி, மாணவர்களுக்கென்று, தனி பள்ளிகள், விடுதிகள் இருப்பது போல பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் பட்டியல் இன மாணவ மாணவிகள் பயில்வதற்கென்று தனி கல்லுாரிகளோ, பல்கலை கழகங்களோ இல்லை, இதனால் பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் பயில்வதில் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பெரும் உளவியல் சிக்களும் சமூக நெருக்கடிகளும் நேர்கின்றது,
இதனை களைவதற்காக, பட்டியல் இன சாதி மக்கள் படிப்பதற்கென தனி கல்லுாரி மற்றும் பல்கலை கழகம் காலத்தின் கட்டாயமாகின்றது, இதை எந்த பட்டியல் இன சாதி தலைவரும், கட்சியும் இதுவரை கோரிக்கையாக்காமல் இருப்பது ஏன், கற்பதற்க்கும், கற்பிப்பதற்க்கும் யாரும் இல்லாமல், இடமும் இல்லாமல் பட்டியல் இன மாணவர்களின் எண்ணிக்கை கல்வி தரத்தில் எப்படி உயர இயலும்.
“ அடிமையிடம் போய் நீ அடிமை என்று சொல் மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான் ” என்னும் அண்ணலின் பொன்மொழிக்கு ஏற்ப இன்றைய சூழலில் உலகமயம், தாரளமயம், மற்றும் தனியார் மய கொள்கைகளால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை எளிய சேரி மக்களாக இருக்கின்றனர், இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவரவும், தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ளவும், தலித் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென நிறுவனங்கள் உருவாகாமல் இருப்பதால் தலித்துகள் பொருளாதாரத்தில் இன்னும் முன்னேற இயலவில்லை.
அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக காட்டிக்கொள்ள முனையும் தலைவர்கள் ஏன் தலித்துகளின் மேம்பாட்டுக்கென நிறுவனங்களை உருவாக்கி பொருளாதார உயர்வுக்கு வழிகாட்டவில்லை. சேரிகள் தோறும் அம்பேத்கர் சிலைகளை வைத்திருக்கும் தலித் மக்கள் இதுவரையிலும் தங்களை ஓர் அணியில் ஒன்றுபட்டு, ஒரு பெரும் அரசியல் சக்தியாக நிற்க்க இயலவில்லை தமிழ்நாட்டில் இதுவரையிலும். 
சேரிகள் தோறும் அரசியல் கட்சிகளாய் பிரிந்திருக்கும் தலித் மக்கள், இதுவரையிலும் தங்களின் வாக்கு வலிமையை உணர்ந்து ஓரணியில் திரண்டு நிற்க்க செய்ய இயலவில்லை எந்த தலித் தலைமையினாலும். ஒடுக்கு முறைகளுக்கு எதிராக திரண்டு ஒன்றுபட்டு நிற்க தெரியவில்லை.
எங்கு எந்த வண்கொடுமை நேர்ந்தாலும், நாளை அது நமக்கும் நேரிடும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். பின் பாதிக்கப்பட்டதும் புலம்புகின்றனர். தலித் மக்களிடையே தலித் அரசியல் கட்சி தலைவர்கள் நிகழ்த்துவது ஒப்பாரி அரசியலாக இருக்கின்றது. உரிமை அரசியலாக இல்லை. விழிப்புணர்வு அரசியலாக இல்லை.
சேரிகளில் படுகொலைகள் நிகழ்ந்த பின்புதான் அது அரசியல் ஆக்கப்படுகின்றது. படுகொலைகள் நிகழும் முன் தடுப்பதற்கான செயல்திட்டம் இல்லாமல் நாளொன்றுக்கு இரண்டு தலித்துகளை படுகொலைகளால் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற புரிதல்கூட இல்லாமல் சிலைக்கு மாலையிட்டு தங்களை பெரும் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் புகழ் போதை தலைமையை என்ன சொல்வது.
இறுதியாக, இந்துவாக பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன். என் சமூகத்தை இழிநிலையில் விட்டு செல்லமாட்டேன் என சூளுரைத்து, இந்து மதம் என்பது பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரித்து வைத்து இழிவுபடுத்துகின்ற மதம், எனவே அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சகோதரத்துவம் கிடைக்காது என்பதனால், பிறப்பின் அடிப்படையில் உயிரினங்களை பிரித்து பார்க்காமல், அனைத்து உயிர்களிடமும் அன்பை போதித்து. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கின்ற பௌத்த மார்கத்தை தேர்ந்தெடுத்து பௌத்தம் தழுவினார். எனது வாழ்வின் இறுதிவரைக்கும் நான் இந்த பணியை தொடர்ந்து செய்வேன் என்றும் சபதம் செய்தார்.
இந்து சமுய கோயில்களை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் பொருளாதாரத்தினால் நிலவுடைமை சாதிகள், மற்றும், பார்பணியர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். இந்து கோயில்களுக்கு செல்வதனால் தலித்துகளுக்கு எந்த பயனும் இல்லை, மாறாக அவர்கள் பாடுபட்டு சேர்த்த செல்வம் யாவும் கோயிலை மையப்படுத்திய சமய சடங்குகள் என்ற பெயரில் செலவழித்து விட்டு ஏழைகளாகவே தங்களது வாழ்வை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் ஐயப்பன் வழிபாட்டில் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு வரும் இலாபமாக கணிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றில் சேரிகளில் இருந்துதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவோர் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு, இவர்களுடைய இந்த பக்தியை புத்தரின் பேரில் திசை திருப்பவில்லை, அவ்வாறாக திசை திருப்பியிருந்தால் இருக்கும் இடத்திலிருந்தே தியானம், பௌத்த வழிபாடு மூலமாக மன அமைதிபெற்றிருப்பார். சேரி மக்களின் பொருளாதாரம் அவர்களின் வாழ்வியல் செயல்பாட்டிற்க்கு உதவியாக இருந்திருக்கும். இதைத்தான் அண்ணலும் “கடவுலுக்கு செலுத்தும் காணிக்கையை உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுங்கள்” என்றும் முன் மொழிந்திருக்கின்றார்.
அவரின் மறைவுக்கு பிறகு நாம் யாரும் அந்த வேலையை செய்யவில்லை, சுயமரியாதை இல்லாத இந்து மத சகதியில் உழன்றுகொண்டு பெருமை பேசிக்கொண்டிருப்பது என்பது பௌத்த மார்க்கம் தீர்வு என்று சொன்ன அண்ணலை நாம் இழிவுபடுத்துவதற்கு சமம் என்பதை இங்கு யாரும் உணரவில்லை, தலித் மக்களுக்கும் உணர்த்தவில்லை. ஆனால் அண்ணல் உருவாக்கித்தந்த சட்டங்களின் மூலமும், இட ஒதுக்கீட்டின் மூலமும் பயனை அனுபவிக்கவும், மட்டும் நமக்கு அண்ணல் தேவைப்படுகின்றார் இதுதான் இன்றைக்கு யதரார்தமான உண்மை.
 அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை தலித் மக்களின் ஆகசிறந்த ஆளுமைகள் என காட்டிக் கொள்ளும் எவரும் முதலில், பௌத்தம் தழுவட்டும், அதற்கு பின் தன் சார்ந்தவர்களை பௌத்தம் ஏற்க வைக்கட்டும், இந்து மத கோட்பாட்டின் படி பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இழிவான நிலையில் இருந்து, பௌத்தம் தழுவுவது மட்டுமே நம்மை சம நிலைக்கு உயர்த்தும் என்பதாலே அண்ணல் பௌத்தம் ஏற்றார்.
இந்து மதத்தில் இருந்து கொண்டு ஒரு தலித் ஒரு மனிதனை நோக்கும் போது, அவர் நமக்கு மேல் உள்ள சாதியா அல்லது கீழ் உள்ள சாதியா என்ற  கேள்வியும் பாகுபாடான எண்ணமும் மட்டுமே நிலைத்து நிற்க்கும். ஆனால் பௌத்த மார்கத்தின்படி மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் சமமானவர்கள் என்ற எண்ணம் உருவாகும். அண்ணல் போதித்த அல்லது தழுவிய பௌத்த மார்கமே சமத்துவமானவர்கள் என்ற நிலைக்கு நம்மை உயர்த்தும், அதை ஏன் இங்கு செய்வதற்க்கு யாரும் இல்லை.
உலகின் மிகசிறந்த சிந்தனையாளர், அறிவாளி, படிப்பாளர் என்றெல்லாம் அயல்நாடுகளில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை மதித்துவிட்டு பிறர் போற்றவும், பராட்டவும் வேண்டும் என்பதற்கா அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை அடையாளப்படுத்துவது சுய போதையும் புகழ்போதையும் தலைக்கேறிய செயல்தானே.
ஆண்டுக்கு இருமுறை அண்ணலின் சிலைக்கு மாலையிடுவோர், ஏன் இதுவரை சேரிகள் தோறும்  ஆண்டுக்கு இருமுறை தான் சார்ந்தவர்களையும் தன் மக்களையும் இந்து மதத்தில் இருந்து வெளியேற்றி, பௌத்தம் தழுவச் செய்ய இயலவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இந்நேரம் இந்து மதம் என்கின்ற ஒரு மதமே இருந்திருக்காது. நம்மை பின்பற்றி சாதியக் கொடுமையையும் தீண்டாமை கொடுமையை அனுபவித்து வரும் அனைவரும் பௌத்தம் தழுவி சமத்துவத்தை நிலைநாட்டி இருப்பார்கள். பௌத்தம் தழுவுவதை ஒரு செயல்திட்டமாக ஏன் எந்த தலித் கட்சியும் இயக்கமும் முன்னெடுக்கவில்லை என்பதே எனது கேள்வி, அம்பேத்கரின் சிலைக்கு மாலைசூடுவது இல்லை. அவரின் பௌத்தம் ஏற்க்கும்  செயலை தொடர்ந்து செய்யாத அல்லது ஆதரிக்காத  எவருக்கும் அண்ணலின் சிலைக்கு மாலைசூடும் தகுதியில்லை.

      இறுதியாக அண்ணலை அவமானப்படுத்த வெளியில் யாரும் இல்லை இந்தியாவிலும் தமிழகத்திலும் இன்னும் இந்து மதத்தில் இருக்கும்.  தலித்துகளைத் தவிர என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்