Monday, September 2, 2019

கிராமங்களில் புத்த விகார்.



கிராமங்களில் புத்த விகார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இந்திய நாட்டு மக்களுக்கு இன்னும் சமத்துவம் வந்து சேரவில்லை. இரண்டாயிரத்து ஐறுாறு ஆண்டுகளுக்கு முன் மனு மையப்படுத்திய பிறப்பின் அடிப்படையிலான சாதிய மற்றும் குல பாகுபாடுகள் அப்படியே நீடித்து இந்திய சுதந்திரம் என்னும் வார்த்தையின் பொருள், சாதிய அடுக்கில் கடை நிலையில் உள்ளவர்களை போய்ச் சேராமல் இன்னும் அன்னியப்பட்டுத்தான் நின்று கொண்டிருக்கின்றது இன்று வரையிலும். 

இந்திய சுதந்திரம் என்பது இன்று வரையிலும், பார்பணர்களுக்கும், அவர்களின் ஆளுமையை ஏற்றுக் கொண்ட இடைநிலைச் சாதிகளின்  அதிகார குவிப்பாகவே இருக்கின்றது.  அவ்வாறு அரசியல் அதிகார குவிப்பை கொண்டவர்கள் தங்களின் அதிகார குவிப்பைத் சோதித்து கொள்வதற்காகவும், பாதுகாத்து கொள்ளவும், பட்டியல் இன மக்களின் மீது தாக்குதல் தொடுப்பதும், பெண்களை வன்புனர்வு செய்வதும், சேரிகளில் உள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்துவதும், கைகளால் மலம் அள்ளச் செய்வதும், செத்த பிணத்தை துாக்கச் செய்வதும், தோட்டி வேலை செய்வதும், என இந்த இருபதாம் நுாற்றாண்டிலும், மனித மாண்புகளுக்கு ஒவ்வாத வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.


அவ்வாறு அந்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் மீதும், பழக்கப்படுத்தாமல் பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை எதிர்த்து எழும் பட்டியல் இனத்தவர்கள் என இருவரின் மீதும் இந்து மத அரசியல் அதிகாரம் பாகுபாடில்லாமல் வன் கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இன்னும் இந்தியாவில்.
 பொதுவாகவே, எந்த ஒரு செயலுக்கும் பின்புலமாக
·         சமூக ஆதரவு
·         அரசியல் ஆதரவு
·         சமய ஆதரவு -  ஆகிய மூன்று சக்திகளின் ஆதரவின் அடிப்படையில் அமையும்.

அந்த வகையில் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இந்த மூன்று வகையான பின்புலத்தின் ஆதரவும் மிக எளிதாகவே கை கோர்த்துக் கொள்கின்றன. குறிப்பாக, இந்து சமயத்தின் ஆதரவு மிக எளிதாக இடைநிலை சாதிகளுக்கும் பார்ப்பணர்களுக்கும் கிடைத்து விடுகின்றது, இதன் அடிப்படையிலேதான் அம்பேத்கரும், “ சாதி இந்துக்களும் பார்ப்பணர்களும், நாவிலே இராமனையும், கையிலே கூர் வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப் போன்று பேசுவார்கள், ஆனால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள் என்றார். 

       உலகம் முழுமைக்கும் உள்ள பொதுவான அரசியல் மற்றும் மத ஆதரவு என்பது, ஒரு வரையறையைக் கொண்டிருக்கின்றது, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமயமும், அரசியலும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இனைந்து செயல்பட்டு  தாக்கத்தை உருவாக்க வல்லவை, அதே நேரத்தில் ஒன்றின் வளர்ச்சிக்கு ஒன்று எப்பொழுதும் துனையாய் நிற்கும்.

 மதத்தை ஆதரிக்காத அரசியல் வெற்றியடையாது, அரசியலை ஆதரிக்காத சமயத்திற்கு அதிகாரம் கிடைக்காது என்பதுதான் அனைத்து மதம் மற்றும் அரசியலுக்கான அடிப்படை சட்டமாக இருக்கின்றது. எவ்வாறெனில் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் அது ஏதாவது ஒரு பெருவாரியான மக்கள் திரளைக் கொண்ட சமயத்தை ஆதரிக்க வேண்டும், அப்பொழுதுதான் அது வெற்றி பெற இயலும், அல்லது எந்த சமயமாக இருந்தாலும் அது ஒரு பெரும்பான்மை கூட்டத்தைக் கொண்ட அரசியலை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல ஒன்றையொன்று தழுவியும் ஆதரித்துமே வளர்ந்து வந்திருக்கின்றன வரலாற்றில் இன்று வரையிலும்.

இன்னும் சற்று விரிவாகச் சொல்வதென்றால், தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, மதம், மடம், மற்றும் கோயில் இவைகளைச் சார்ந்து இருக்கும் எப்பொழுதும், மாநிலக் கட்சிகளின் அரசியல் என்பது, வழிபாட்டு முறைகள் ( கோயில்களில் ஆடு, சேவல், மற்றும் உயிர்பலி தருதல்) மற்றும் வழிபாட்டு உரிமைகளைச் ( அனைத்து சாதியினரும் அர்சகர் ஆவது, கோயில் உள்ள தெருவில் அக்கிரகாரத்தில் நடப்பது) சார்ந்து இருக்கும்,

மதத்தின் அடிப்படையில் அரசியலைப் பிரிப்பதாயின், திராவிடக் கட்சிகளின் அரசியல் என்பது, கோயில் நுழைவு உரிமையைக் கோருகின்ற அரசியலாகவே இருக்கின்றது, அவர்களின் நோக்கம் எப்பொழுதும் பார்ப்பணர்களின் இடத்தை பிற்படுத்தப்பட்ட சாதிகள் பங்கிட்டுக் கொள்வது, அதே நேரத்தில் பார்ப்பணர்களின் அதிகாரத்தையும் பங்கிட்டுக் கொள்வது, இதை அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையில்லாமல் சமாதானமாகவே செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் போராடி பெறுகின்ற உரிமையை தங்களுக்குள் மட்டுமே பங்கிட்டுக் கொள்கின்றனரே ஒழிய, தங்களை விட கீழ்நிலையில் இருக்கும் பட்டியலின சமூகத்தோடு பங்கிட்டுக் கொள்வதும், அல்லது அவர்களையும் இணைத்துக் கொள்வதும் இல்லை, ஏனெனில், பார்பபணர்களுக்கு கீழ் தாங்கள் இருப்பதை எப்படி பெருமையாக கருதுகின்றனரோ, அதைப் போலவே, தங்களுக்கு கீழ் பட்டியலின சாதிகளும் இருப்பதைப் அம்மக்கள் பெருமையாக கருதவேண்டும் என நினைக்கின்றனர், அல்லது அவ்வாறு நினைக்க கட்டாயப்படுத்துகின்றனர். இத்தகைய கட்டாய சாதிய ஆதிக்கத்தை பட்டியலினத்தவர்கள் எதிர்க்கும் பொழுதுதான், சாதியக் கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

இன்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சேரிகளிலும், குடிதண்ணீர் பிரச்சனை இருக்கின்றது. சுடுகாட்டு பதை ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, பல கிராமங்களில் சுடுகாடே ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, சேரிகளுக்கான பாதைகள் இல்லாமல் இருக்கின்றது, தெருவிளக்கு இல்லாமல் இருக்கின்றது, பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது, ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினத்தவர் இருந்தால் அவர் உட்காருவதற்கு கூட இருக்கை தராத ஊராட்சிகள் இருக்கின்றது, ஊர்பகுதியில் வாழ இயலாத மற்றும் வேலை செய்ய இயலாத சூழ்நிலைதான் இருக்கின்றது. இதைப் போல எத்தனையே வன்கொடுமைகளைச் சொல்லிக் கொண்டு போகலாம், ஆனால் கட்டுரையின் பொருள் மாறிவிடும் என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். இத்தகைய வன்கொடுமைகளை உரிமையின்மையை எதிர்த்து பட்டியலினத்தவர் எவராவது குரல் கொடுத்தால் அதை சாதிய கலவரத்தை உருவாக்கி அழிக்கின்றனர்.

அவ்வாறு உருவாக்கப்படும் சாதிய  கலவரங்களில் பட்டியலின மக்களின்  வாழ்வாதரத்தை அழித்து, உயிர்பலி நிகழ்த்தி, குடிசைகளையும், வீடுகளையும் கொளுத்தி அம்மக்களை அனாதைகளாக்கும் பொழுது,  அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு யாரும் இல்லை, தங்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் வாழ இயலும் என்னும் மனோபாவத்தை பட்டியலின மக்களிடம் உருவாக்குவதற்காகவே சாதிய கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

மேலும், அரசாங்கம் என்பதே, இடைநிலை சாதிகளின் கையில்தான் எப்பொழுதும் இருக்கின்றது, இத்தகைய சாதிய கலவரங்கள் நடக்கும் பொழுது, எல்லா அரசாங்கமும், சாதிய கலவரங்களுக்கு துனை போகின்ற ஒரு அமைப்பாகத்தான் இருக்கும் செயல்படும். அதற்கான அன்மைய உதாரணம், ஆணவக் கொலைகள்,

பொதுவாகவே, இடைநிலைச் சாதிகள் தாங்கள் அனுபவித்து வரும் பொதுச் சொத்துகள், மற்றும் அரசு, அரசியல் அதிகாரத்தில் பட்டியலின மக்களுக்கான பங்கேற்ப்பை விரும்பாதவர்களாக இருக்கும் பொழுது, காதல் திருமணத்தின் வழியாக, தங்களுடைய குடும்பத்திலும், குடும்பச் சொத்திலும் பங்கேற்பதை எப்படி விரும்புவார்கள் அல்லது ஏற்றுக் கொள்வார்கள், அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தை தனது கைகளில் வைத்திருப்பவர்களால் இந்த ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தற்பொழுது முன்னின்று நடத்தப்படுகின்றது.

சாதியம், மதம் மற்றும் அரசியல் இந்த மூன்று கூட்டணியின்  அனுகுமுறைகளின் வழியாகவே நாம் எதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் பட்டியல் சாதியினரின் அரசியல் மற்றும் சமய அனுகுமுறையை அலச வேண்டியுள்ளது. பட்டியல் இனத்தவர்களின் அரசியல் மற்றும் சமயம் என்பது மதம் மற்றும் அரசியல் பினைப்பை உணராத நிலையிலேயே உள்ளதாகவேத் தெரிகின்றது. மேலும் அது தான் சார்ந்த மக்களுக்கான தொலை நோக்கு கொண்ட இயக்கமாகவும் இயங்கவில்லை. உணர்வு அரசியலாகவும், ஒப்பாரி அரசியலாகவுமே தம்மை இது வரையிலும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன, அனைத்து பட்டியலின சாதி கட்சியினரும்.

எப்படி பார்ப்பணர்கள் கோயிலை அதிகார மையமாகக் கொண்டு அரசியல் செய்கின்றார்களோ, எப்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், கோயில் நுழைவு, வழிபடும் உரிமை என்ற பின்புலத்தில் அரசியல் தளத்தில் பங்கெடுக்கின்றார்களோ, அதைப் போலவே பட்டியலின மக்களுக்கும் குலசாமி, மற்றும் சோலைக் காடுகள் என உண்டு இதன் அடிப்படையில் இந்த பின்புலத்தில் பட்டியலின சாதியினரின் அரசியல் கட்டமைக்கப்படாமல், இந்து மதத்தின் உதிரிகளாகவே தமது கட்டமைப்பை தொடர்ந்து கொண்டிருப்பது, வடிவேலுவின் வசனமாகச் சொல்வதென்றால், பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மென்ட் வீக்காகவே இருக்கின்றது.

குலசாமி, சோலைக் கோயில்கள் என்பனவற்றிற்கு மூலதாரமாக பௌத்தம் வந்து நிற்க்கும், இந்த பின்புலத்துடன், பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடே, சகோதரத்துவம் மற்றும் சமத்துவம். ஆகிய இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் பொதுச் சமூகத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே தன்னை கட்டமைத்துக் கொண்டது பௌத்த சமயம்.

அதே போல், போதிசத்வா. அம்பேத்கர் அவர்களும் சமத்துவத்தை கற்பிக்காத இந்து மதத்தில் இனியும் இருந்து பயனில்லை என்ற முடிவின்படி,  இந்தியாவில் தோன்றிய மதங்களில் வயது முதிர்ந்ததும் முழுமையானதுமான பௌத்தம் ஏற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், பட்டியல் இன மக்கள் இன்னும் அம்பேத்கரை பின்பற்றி, பௌத்தம் தழுவி பிறப்பின் அடிப்படையிலான இந்து மத சாதியக் கட்டமைப்பான தீண்டத்தகாத சாதியினர் என்னும் நிலையினையும் மாற்றாமல், இந்து மதம் கட்டமைத்த இழி சாதியினன் அல்லது தீண்டத்தகாதவன் என்னும் நிலையோடு இன்றும் தங்களின் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் தோல்வி மற்றும் அம்பேத்கரின் பௌத்த சமய மாற்றம் ஆகிய இரண்டையும் நாம் இணைத்துப் பார்க்கத் தவறிவிட்டோம்.  இன்றைக்கு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குத் தோன்றுகின்ற உணர்வான, நாட்டு மக்களை சமப்படுத்தி, ஒற்றுமை உணர்வுடன் வாழ பழக்கப்படுத்ததாத இந்திய சுதந்திரம் என்பது, அதிகார மாற்றமே தவிர. சமூக மாற்றம் இல்லை என்தை  போதிசத்வா அம்பேத்கர் அப்பொழுதே தெளிவாக சொன்னார்.
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் அரசியல் பின்னடைவுக்கான காரணங்களாக இருப்பவை.
·         சமூக ஆதரவின்மை
·         சமய ஆதரவின்மை
·         அரசியல் ஆதரவின்மை ஆகிய முப்பெரும் சக்திகளின் ஆதரவை இழந்து அரசியல் களத்தில் எதை சாதிக்க இயலும் என நம்பிக் கொண்டிருக்கின்றனரோ தெரியவில்லை.
1.   தேசிய மற்றும், மாநில கட்சிகளில் இருக்கும் பட்டியலினத்தவரையும், பட்டியலின மக்களின் தலைமை கொண்ட கட்சிக்கு கொண்டு வருவதிலும் அது இன்னும் வெற்றியடையவில்லை. இது அந்த கட்சிகளுக்கு தான் சார்ந்த சமூகத்தின் ஆதரிவில்லை என்பதை காட்டுகின்றது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்சிகளில் பிரிந்திருந்தாலும் அவர்களுக்கு சமய ஆதரவு மற்றும் சமூக ஆதரவு இருப்பதால், இந்த பிரிவினையும் தங்களுக்கான வளர்ச்சியாகவே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாகவே அது அமைகின்றது.
2.   தமிழகத்தில் பட்டியல் இன அரசியல் குழுக்கள், தங்களின் சமய நெறியாக பௌத்தத்தை ஏற்காமல், தாங்கள் தனித்து நின்று வெற்றிபெற இயலாது என்ற உண்மையை  இதுவரையிலும் உணரவில்லை. மேலும் தனது மக்களை இந்து மதத்தில் இருந்து முழு அளவில் வெளியேற்றி பௌத்தம் ஏற்கச் செய்யும் செயல்திட்டம் எதுவும் இல்லை.

3.   இந்து மதத்தில் இருந்து கொண்டே தனது செயல்திட்டமான அதிகாரப் பங்கீடு, என்பதில் வெற்றியடைய இயலாது என்பதையும் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் இந்து மதம் என்பது வருணாச்சரமத்தை அடிப்படையாகக் கொண்டதால், பார்பணிய, சத்திரிய, வைசிய மற்றும் சூத்திரர்களின் அங்கிகரிக்கப்பட்ட மதமாக இருக்கின்றது, இந்த பட்டியலில் இனையாத பஞ்சமர்களின் மதமாக இந்து மதம் எப்பொழுதும் இருந்ததில்லை.

4.   தங்களுக்கான சமயமாக அம்பேத்கர் காட்டிய பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்த சமயத்தின் பின் புலத்தில் அரசியல் நிகழ்த்த வேண்டும் என்னும் சமய அரசியல் கூட்டணியை இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

5.   பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு சிதறலும், பட்டியலின மக்களின் வாக்கு குவியமும் வெற்றிக்கான முக்கிய காரணிகள் என்பதையும் இன்னும் உணரவில்லை, இதை உணர்ந்து இருந்தால், சேரிகள் தோறும் வாக்கு குவியத்தை உருவாக்கி, பெருமளவில் ஊராட்சி மன்ற தேர்தலில், சட்டமன்ற, பாராளுமன்ற தேல்தலில்  வெற்றி பெற்றிருக்க இயலும்.

இறுதியாக, இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில், பட்டியலின சாதியினரும், பட்டியலின சாதிக்கட்சியினரும், தங்களின்
·         சமூக ஆதரவு
·         சமய ஆதரவு
·         அரசியல் ஆதரவு என்னும்  மூன்று நிலைப்பாடுகளையும் வலுவாக்கி கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதன் அடிப்படையில் தங்களின் முதன்மை பணியாக, இந்துக்களாக இருக்கின்ற பட்டியலினத்தவரையும், சேரி மக்களையும், போதிசத்வா. அம்பேத்கர். முன் மொழிந்த பௌத்தத்தை ஏற்கச் செய்து, பட்டியலின மக்களுக்கான சமய ஆதரவை உருவாக்கும் தளமாக பௌத்தத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு சேரிகளிலும் ஒரு பௌத்த விகாரை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கான சமய அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியமான பணியாகும்.

சமயம் என்பதே சமூகங்களின் ஒருங்கினைப்பு என்பதால், சமயத்தின் வழி, சமூக ஆதரவு எளிதாக கிடைக்க செய்ய இயலும், அதன் அடிப்படையில் அரசியல் ஆதரவு என்பது மிக எளிதாக கிடைக்கும். இத்தகைய பின்புலத்தை உணராத பட்டியலின சாதியினரின் அரசியல் என்பது பகல் கனவாகத்தான் முடியும்.

இதை முழுமையாக உணர்ந்த பின்னரே அம்பேத்கரும், இம்மக்களின் சமயமாக பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அவருக்கு முன்னரே, பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை, பண்டிதர். அயோத்திதாசர், பேராசிரியர். லட்சுமி நரசு, பன்மொழிப் புலவர். கா. அப்பாதுரையார், தந்தை சிவராசு,  போன்றோரும் அவர்காலத்தில் வாழ்ந்த பல பட்டியலின தலைவர்களும், பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை முன் நிறுத்தினர், மேலும் பௌத்த சமயத்தின் ஆதரவு என்னும் பின்புலத்தில் தங்களின் அரசியலையும் வடிவமைத்துக் கொண்டனர்.

இன்று சேரிகளில் உள்ள பெருந்தெய்வ கோயில்கள் பார்பணிய, இடைச்சாதிகளின் ஆதிக்கத்தின் அடையாளங்கள் என்பதை சேரி மக்களுக்கு உணர்த்தி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான புத்தரின் விகாரை சேரிகளில் கட்டமைக்க வேண்டும். அல்லது, புத்தர் ஞானம் பெற்றதற்க்கு அடையாளமாக உள்ள அரச மரத்தின் கீழ் இருக்கும் பிள்ளையார் சிலைகளைப் போல, சேரிகள் தோறும் அரச மரத்தின் கீழ் புத்தரின் சிலைகளை வைத்து வழிபாடும், தியானமும் நடைபெற வேண்டும்,

சேரியிலுள்ளவர்கள் வழிபட ஒரு கடவுள் அல்லது சமயத்தை காண்பிக்காதவரை, அம்மக்கள் இந்து மதத்தின் பெருந்தெய்வங்களையும், சிறு தெய்வங்களையும் தனக்கான கடவுளாக பாவித்து வழிபடத்தான் செய்வார். அவ்வாறு வழி படச் செய்யும் போது அவர் இயல்பாகவே பட்டியலின மக்களின் அரசியல் ஆதரவு என்னும் நிலையில் இருந்து இந்து மதம் வழியாக கட்டமைக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஆதரவாளராகத்தான் தம்மை அடையாளப்படுத்துவார். அவ்வாறுதான் அடையாளப்படுத்த இயலும்.

எனவே இந்த நிலை மாற பட்டியலினத்தவர்கள் தனக்கான சமயமாக பௌதத்தையும், கடவுளாக புத்தரையும் ஏற்க செய்ய வேண்டியது பட்டியலின சாதியினரின் அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாக மாற வேண்டிய காலத்தேவையும் தற்போது உள்ளது.
  

Saturday, August 31, 2019

இளையராஜாவின் இசைப் பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் - 9

சதா சதா உன்னை நினைந்து

பாடல் பிறந்தகதை :

      இளையராஜாவுடன் சேர்ந்து தன்ராஜ் ஆசிரியரிடம் வயலின் கற்க சென்றவரும். பழம்பெரும் இசையமைப்பாளர் திரு. சுதர்ஸன் அவர்களின் மகனான திரு.சதானந்தம் அவர்கள்  இளையராஜாவின் குழுவில் நீண்டகாலமாக இருப்பவர் பெங்களுரில் நடைபெற்ற இசை ஒலிப்பதிவின் போது, சதானந்தம் அவர்கள் ஏதோ ஒன்றை சரியாக வாசிக்காத போது அவரது தவறை சுட்டிக்காட்ட அழைத்த போது அவர் அதனை கேட்காதவராய் மெய்மறந்து வாசித்திருந்த நிலையில் உருவானதுதான் இந்த பாடல் என இளையராஜா அவர்கள் சென்னையில் ஒரு பெண்கள் கல்லுாரியில் மாணவிகளின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவராகவே தெரிவித்தக் கருத்து. 












இத்தகைய இனிமையான பாடல் உருவாக காரணமாக இருந்த சதானந்தம் அய்யாவுக்கு நன்றி சொல்லுவோம். இனி பாடலைக் குறித்து பேசுவோம். 

இந்தப் பாடலில் பலச் சிறப்புத் தன்மைகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, ஒரு பாடலைப் எப்படிப் பாட வேண்டும், என பாடக் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இளையராஜா கற்றுக் கொடுத்தது போல இருப்பது இந்தப் பாடலின் முதல் சிறப்பு. எந்த இடத்தில் முச்சுவிடாமல் பாடவேண்டும், எங்கே முச்சு விடவேண்டும், எந்த இடத்தில் ஏற்றம் இறக்கத்தோடு பாட வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் இளையராஜா பாடியப் பாடல்களிலேயே மிகச் சிறந்தப் பாடலாக இசை விமர்சகர்களால் போற்றப்படுகின்றது. 

இந்தோளம் ராகம் 

இந்த பாடல் இந்தோளம் ராகத்தில் அமைந்தப் பாடலாகும். இந்த ராகம் பொதுவில் நள்ளிரவில் பாடவேண்டியராகம் என்றும், வாயுக்கோளாறுகள் நீங்கப் பாடவேண்டிய ராகமென்றும், இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் ( தகவல் உதவி: இந்தோளம் - விக்கிப்பீடியா)

ஒரு வகையில் இந்த ராகம் இளையராஜாவிற்கு மிகப் பிடித்தமான ராகம் என்றும் சொல்லாம். எந்த வகையில் என்றால், மெல்லிசை மன்னர் இசையமைத்து  


இராஜாவின் ரமணமாலை 

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்ட ராஜாவின் ரமணமாலையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனிமையானப் பாடல்தான் 

சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய்
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா

சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா 
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய்

சதா சலித்து சளைத்த மனதினிலே
சதா சளித்து சளைத்த மனதினிலே 
சதாசிவா என்றுனை ஓர் நொடி பொழுதும் இடைவிடாது ( சதா சதா)

காம குரோத மத மாச்சர்யமும் எனை விட்டு விலகிடவும்
காம குரோத மத மாச்சர்யமும் என்னை விட்டு விலகிடவும்
சாம காண நிகர் வாசகம் என் நாவில் துலங்கிடவும்
காம குரோத மத மாச்சர்யமும் எனை விட்டு விலகிடவும்
சாம காண நிகர் வாசகம் என் நாவில் துலங்கிடவும்
நின் சிறுமலர் பதம் என் சிரமதில் திகழ்ந்திட
குருவருள் துனை வர திருவருள் தனை பெற ( சதா சதா)


அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
ஆழியின் அலை போல அலைதனில் நுரை போல
அலைந்து அலைந்து மனம் கலைந்து குலைந்து
நிலை கலங்கி தினம் தவிக்குதே
தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே
அருகினில் ஒளி வீசு நீ இருக்கும் கரை சேர ( சதா சதா)


சதா சதா என விளிப்பது, திருவாசகத்தின் உள்ள இமைப்பொழுதும் என் நெஞ்சத்தில் நீங்காதான் தாள் வாழ்க என்னும் அடியில் உள்ள இமைப்பொழுது என்பதன் தாக்கத்திலிருந்து வந்தவைதான் சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா என்னும் பாடல் வரிகளின் துவக்கம்.

Friday, August 30, 2019

மணிமேகலையில் மனம்

மணிமேகலையில் மனம்


உலகின் பழம் பெருமை வாய்ந்த மொழிகள் 5 அவை, தமிழ், கிரேக்கம், இலத்தின் , பிரஞ்ச், மற்றும் வடமொழி என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதம், இவற்றுடன் உலகின் தொடர்பு மொழியாக விளங்குகின்ற ஆங்கிலம். இவற்றில் உலகின் வணிக மொழி என்ற சிறப்புப் பெயர் ஆங்கிலத்துக்கும், உலகின் வேத மொழி என்று சமஸ்கிருதத்துக்கும், அறிவியல் மொழி என்று பிரஞ்ச்கும், உலகின் காதல் மொழி என்ற சிறப்புப் பெயர் இலத்தினுக்கும், உலகின் சமய மொழி என்ற சிறப்புப் பெயர் தமிழுக்கும் உண்டு. இவற்றில் உலகம் வியக்கும் காவியங்களான
·         இலியட்
·         ஒடிசி 
·         ஒர்க்ஸ் அண்ட் டேஸ்
·        தியோகானி 

போன்ற இலக்கிய காப்பியங்களை முதலில் உலகிற்க்கு தந்ததனால் கிரேக்கம், உலகின் காப்பிய மொழி என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. 
       
உலகம் வியக்கும் வகையில் அதிகமான காதல் கவிதைகளையும், ஆழமான காதல் கதைகளையும் தந்துள்ள காரணத்தினால் உலகின் காதல் மொழி என்றே இலத்தின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது.
       
தொழிற் புரட்சிக்குப் பிறகு, பெரும் இயந்திரங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்து தமது மொழிப் பெயரிட்ட காரணத்தினால், பிரஞ்ச் மொழி உலகின் அறிவியல் மொழி என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. வேதங்களை, கொண்டிருப்பதால் சமஸ்கிருதத்துக்கு வேதமொழி என்ற சிறப்பு பெயர் உள்ளது. தமிழுக்கு எதன் அடிப்படையில் சமய மொழி என்ற பெயர் வந்தது என்பதை இங்கு விளக்க இயலாது. காரணம், தமிழில் மட்டுமே அனைத்து இலக்கியங்களும், சைவம் அல்லது வைணவம் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டு அதைத்தவிர வேறு சமயங்கள் தமிழில் இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன இதுவரையிலும். 
       
தமிழிலக்கியம் இன்று வரையிலும் அறிவியல் வழி நின்று கற்பிக்கப்படுவதில்லை, எல்லா செய்திகளும், விவரங்களும், வர்ணணைகளாகவும் சமய நோக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அல்லது வெறும் தகவலாக விளங்கி கொள்ள வைப்பது இவை இரண்டும் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உதாரணமாக ஒரு சில..

அவ்வையாரின் “ ஆழ அழுக்கினும் ” என்னும் மூதுரை பாடலில் இருப்பது அறிவியல் அடிப்படையில் பாஸ்கல் விதி என்னும் கோட்பாடு, ஆனால் இன்று வரையிலும் தமிழறிஞர்கள் எவரும், தமிழிலக்கியத்தில் அவ்வையார் இந்த கருத்தை எங்கிருந்து எடுத்து கையாண்டார், அந்த கருத்து எப்படி வந்தது என்ற ஆய்வு நோக்கில் விளக்கம் அளிக்க வில்லை,

அதைப்போலவே, கம்பர், “ அனுவிலும் உளனே, அனுவை சத கூறக்கினும் உளனே, என்று தனது கம்பராமாயனத்தில் கூறியுள்ளார், அனு என்னும் கோட்பாடும், அனுவை பிளக்க இயலும் என்ற கருத்தும் இருபதாம் நுாற்றாண்டில் மட்டுமே உலகிற்க்கு தெரியவந்த கருத்துக்கள், ஆனால் அதற்க்கு முன்பே கம்பர், தனது நுாலில் அனு மற்றும் அனுவை நுாறாக பிளப்பது போன்ற அறிவியல் கருத்துக்களை முன் மொழிந்திருக்கின்றார் என்றால், கம்பரால் அந்த கருத்து எங்கிருந்து எப்பொருளில் எடுத்துக் கையாளப்பட்டது, கம்பர் கையாளுவதற்க்கு முன்பு அந்த வாக்கியம் எங்கிருந்தது வேறு எவரெல்லாம் அந்த பொருள் குறித்து விளக்கியுள்ளனர்  என்ற நோக்கில் இன்றும் யாரும் விவரிக்கவில்லை, மாறாக பக்தி நோக்கில் அதை கொண்டுபோய் தட்டையானப் பார்வையை முன் வைக்கின்றனர், வாசகர்களுக்கும், கேட்பவர்களுக்கும், அவர்களும் இதை ஒரு தகவலாகக் கேட்டுக் கொண்டு எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமனைவரும் மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தையும் இது நாள் வரை வாசித்து வந்திருக்கின்றோம், அல்லது கடந்து வந்திருக்கின்றோம். உண்மையில் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரு கற்பனை காப்பியமாகும். எவ்வகையில் சொல்வதென்றால், தமிழர்களின் மரபு பாடல்கள் அல்லது கவிதைகளாகத்தான் இருந்திருக்கின்றது. அவர்கள் எந்த செய்தியையும் பாடல்களாக விவரித்து பழக்கப்பட்டவர்கள், காப்பிய மரபு அவர்களிடம் இல்லை,

ஆனால் வட இந்தியர்களுக்கோ, காப்பிய மரபு உண்டு, அவர்கள் எந்த செய்தியானாலும் பாடல் வடிவிலே காப்பியமாக்குவர், அதில் அந்த காப்பிய பாத்திரங்களுடன், தானும் ஒரு பாத்திரமாக வந்து போவார்கள், இந்த மரபில் எழுதப்பட்ட கற்பனைக் காப்பியங்கள்தான், இராமாயணம், இதில் இந்த காப்பியத்தை எழுதிய வால்மிகி, ஒரு பாத்திரமாக வந்து போவார்,


அதைப்போலவே, மகாபாரதமும், இவற்றை எழுதிய வியாசரும் ஒரு பாத்திரமாக வந்து போவார், வட இந்தியாவின் இந்த மரபின் தாக்கத்தில் முகிழ்ந்த மொட்டுக்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், வடஇந்திய காப்பிய மரபின்படியே இதை இயற்றிய இளங்கோவடிகள், மற்றும் சீத்தலை சாத்தனார் ஆகிய இருவருமே ஒரு பாத்திரங்களாக வந்து போகின்றனர், இந்த காப்பியங்களில், இதன் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது, வட இந்திய மரபுப்படி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் காவியம்தான் சிலம்பும் மணிமேகலையும்.

பொதுவில் எழுத்து என்பது, “ வாழ்வியற் சம்பவங்களின் பாதிப்பாகும். அந்த வகையில் இளங்கோ அடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார் ஆகிய இருவரும், கண்டுணர்ந்த, கேட்டுணரந்த, அல்லது வாசித்துணர்ந்த சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்தவைதான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

மணிமேகலை காப்பியத்தை நாம் சிலப்பதிகாரத்தில் இருந்தே தெரிந்து கொள்ள இயலும், சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில், வாழ்த்துப் பாடலில், காப்பியத்தில் உள்ள, பெரும் பாத்திரங்கள் தவிர்த்த சிறு பாத்திரங்களின் முடிவையும் சொல்லியிருப்பார் நுாலாசிரியர். அதன்படி, கோவலணின் தந்தை சமண மதத்தையும், கண்ணகியின் தந்தை ஆசிவகத்தையும், தழுவுகின்றார்கள். கோவலணின் தாயாரும், கண்ணகியின் தாயாரும் தங்களின் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் தாங்காமல் இறந்து போகின்றனர். மாதவியும் கண்ணகியும் பௌத்தம் தழுவுகின்றனர்.

உண்மையில் இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தமிழ் சமுகத்துக்கு இலக்கியத் தளத்தில் நின்று நிகழ்த்தியிருப்பது சமயங்களின் அறிமுகம் அல்லது வட இந்தியாவில் உள்ள சமயத்துக்கும், அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த வைதீக சமயங்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்.


காப்பியத்தில் உள்ள பிற கதாபாத்திரங்கள் தழுவுகின்ற மதத்தின் அடிப்படையில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமணம் ( அல்லது ) ஜைணம், பௌத்தம் அல்லது புத்த மதம், ஆசிவகம் இவை 3 மதங்களுமே வட இந்தியாவில் தோன்றியவை, அறிவைக் கற்பிக்கும் மதங்களாகும்.  அறிவின் அடிப்படையில் நின்று எதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் மதங்களாகும்.  இதைத்தவிர அப்போது தமிழ்நாட்டில் இருந்த மதங்கள் (இருக்கும்) மதங்கள் யாவும் நம்பிக்கையை போதிக்கும் மதங்களாகும். எதையும் நம்ப வேண்டும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏன் எதற்க்கு என்ற கேள்விகள் எழகூடாது அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகள் மதத்திற்க்கு எதிரானவை என்ற கோட்பாடுகளை உடையவை.

அறிவை கற்பிக்கும் மதத்திற்க்கும், நம்பிக்கையை போதிக்கும் மதத்திற்க்குமான ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்க்காக எழுதப்பட்ட காப்பியங்கள்தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், இவற்றில் சிலப்பதிகாரம் மெண்மையாக இந்த சங்கதிகளைத் தொட்டுச் செல்கின்றது, மணிமேகலை மற்ற மதத்தினருடன் வாதம் புரிந்து நம்மை இட்டு செல்கின்றது இந்த நிலையில் இருந்துதான் அல்லது இந்த புரிதலில் இருந்துதான் நாம் இரு பெரும் காப்பியங்களையும் அனுக வேண்டிய தேவையுள்ளது.

இதன் அடிப்படையில்தான் இளங்கோ அடிகள், தன் கதை மாந்தர்களை ஆசிவகத்துக்கும், ஜைணத்துக்கும், பௌத்தத்துக்கும் பயணப்படுத்துகின்றார். இவற்றில், உயர்சாதியினராகிய கோவலனின் தந்தையும், கண்ணகியின் தந்தையும் ஜைணம், மற்றும் ஆசிவகம் தழுவுவதில் எந்த சிக்கலும் இல்லாததால் ஒரு பாடலின் வழி நின்று அந்த தகவலை சொல்லிச் செல்ல இயலுகின்றது.

ஆனால், ஆடல் பெண்டிர், கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியும், மணிமேகலையும், பௌத்தம் தழுவுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் சமூக முரண்பாடுகளை சொல்லிச் செல்ல எழுதப்பட்ட காப்பியம்தான் மணிமேகலைக் காப்பியம். ஏன் கணிகையர் குலத்தி்ல் பிறந்த மணிமேகலையும், மாதவியும் பௌத்தம் ஏற்றார்கள் என்றால், உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட பௌத்தம் மட்டுமே யாரையும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதில்லை,

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கின்ற வழிமுறையாக இருந்தது. அன்பையும் அறிவையும் போதிக்கின்ற மதமாக இருந்தது. இந்த அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் இழிவான குலமாக கருதப்பட்ட அவர்கள் இருவரையும் பௌத்தம் சம நோக்கோடு ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவர்களால் பௌத்தம் ஏற்க  முடிந்தது. பௌத்த மதத்திலும் அவர்களுக்கு இடமிருந்தது.

பௌத்தம் இரண்டு வகையான மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தும், அது முதலில் தன்னை மாற்றும், தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தின் வழியாக இந்த சமூகத்தை மாற்றும் இந்த இரு பணியையும் பௌத்தம் ஒருங்கே நிகழ்த்தும் இதுதான் பௌத்த வாழ்க்கை முறை.

மாதவி மற்றும் மணிமேகலையிடம் முதலில் தங்கள் கணிகையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மாற்றுவது, பின்னர் அவர்களையும் பொது சமூகத்தவரின் வாழ்க்கையையும் பொது சமூகத்தினரோடு  சேர்ந்து  வாழ வைப்பது ஆகிய இரண்டு பணிகளையும் புத்தரும் அவரின் போதனைகளின் வழியாக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளே மணிமேகலை காப்பியத்தில் விரித்துரைக்கின்றது.

இந்த முயற்சியில் அவர்கள் சந்தித்த பேராட்டங்களையும் போர்களங்களையும் விளங்கி கொள்வோமேயோனால் மணிமேகலையின் மனத்தையும் விளங்கிக் கொள்ள இயலும். மணிமேகலை காப்பியத்தில் கதை புரியும், ஆனால் அதனுள் வரும் பௌத்தம் குறித்த சங்கதிகளும் செய்திகளும் புரிவதில்லை எளிதில் எவருக்கும்.

அதற்க்கு காரணம் தமிழக நிலம்சார் அரசியல் சூழலில், தமிழகத்தின் மேலே இருக்கும் ஆந்திர மாநிலத்தில் நிலவிய பௌத்தம் மகாயாண பௌத்தமாக இருந்தது, கீழிருந்த இலங்கையில் இருந்த பௌத்தம் ஈனயான பௌத்தமாக இருந்திருக்கின்றது, இவை இரண்டுக்கும் இடையில் இருந்த தமிழ்நிலப்பகுதியில் இந்த மண்ணுக்கு ஏற்ற நிலையில் ஒரு பிரிவு பௌத்தம் இருந்திருக்கின்றது.

அது ஆந்திரம் மற்றும் இலங்கையில் இருந்த பௌத்தத்திற்கான ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கின்றது, இந்த இரு நிலப்பரப்பில் நிகழ்ந்த பௌத்தங்களின் பின்புலத்தில் நின்று மணிமேகலையில் வரும் சமய உரையாடல்களை கவனிக்கும் போது நமக்கு புரியும்.

எளிய நடையில் இருக்கும் பௌத்தமாக மணிமேகலை இருந்ததற்க்கு காரணம் எளியமக்களின் வாழ்வில் கலந்த பௌத்தமாக அன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்த பௌத்தம் இருந்தது என்பதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் நிலவிய பௌத்த சூழலின் பிரதிபலிப்பாகத்தான் பண்டிதர் அயோத்திதாசர், லட்சுமி நரசு, ஆகியோரின் பௌத்தத்தை கணிக்க வேண்டும், பௌத்தம் என்பதே பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளை பாவிக்காமல், சமத்துவத்தை நிலை நிறுத்துவதே, அதே அடிப்படையில்தான், பிறப்பின் அடிப்படையில் கணிகையான மணிமேகலையை, பெண் என்னும் நிலையில் சமத்துவத்தை நோக்கி நகரச் செய்ததே மணிமேகலை காப்பியத்தின் ஒற்றை வரி செய்தி,

இதில் மணிமேகலையின் மனம், எந்த நிலையில் இருந்தது, என்று நோக்கும் பொழுது, பெதும்பை பருவத்தில் இருக்கும் காலத்தில் இருந்தே, பிறப்பின் அடிப்படையில் தனது சமுகத்தின் மீது வெறுப்பும், தன் சமூகம் தனக்கு கற்ப்பித்த வாழ்வை எந்த நிலையிலும் வாழ கூடாது என்ற போராட்ட குணம் நிரம்பியவளாகத்தான் காட்டப்படுகின்றது, அதனால்தான் தன் தாய் இந்திர விழாவில் நாட்டியமாட சென்றதையும் கண்டிக்கின்றாள்,

பின்னாளில் உதயகுமாரன் தன் மீது கொண்ட காதலை நினைத்து. காதல் உணர்வு வருவதற்க்கு எந்த வகையில் தான் காரணமாக இருந்தோம், இருக்கின்றோம் என்பதை நினைத்து தன்மீதே கழிவிறக்கம் கொள்கின்றாள், உதயகுமாரணின் மரணத்திற்க்கு தான்தான் காரணமாக இருந்து விட்டோம் என்ற எண்ணம் மேலிட குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றாள், இவ்வாறு மணிமேகலை மனநிலையில் பழிக்கு அஞ்சும் எண்ணமும், குற்ற உணர்ச்சியும் மேலிடும் போதெல்லாம் பௌத்தம் அவளை அரணாக நின்று காக்கின்றது என்பது மணிமேலையை படிப்பவர்களுக்கு புரியும்.

சிறையில் அடைபட்டு கொடுமைகள் அடையும் பொழுது மிகுந்த மன உறுதியும் மனத்தெளிவும் கொண்டவளாக சித்தரிக்கப்படுகின்றாள், அந்நிலையில் பௌத்தம் அந்த உணர்வை அனைவருக்குள்ளும் உருவாக்கும் என்ற செய்தியும் உணர்த்தப்படுகின்றது. இன்றைய நிலையில் மணிமேகலை என்னும் பெயரும், மணிமேகலை காப்பியமும் ஒரு குறியீடாகத் திகழ்கின்றது, அது சமூக தளத்தில்
·         தலித்துகள்
·         அறவாணிகள்
·         மீணவர்கள்
·         பழங்குடிகள் –
போன்ற சமூக தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை சமநிலைக்கு கொண்டுவருவதற்கான காரணியாகவே பௌத்தம் திகழ்கின்றது. மனித குலத்தின் மகத்தான பாதியாக இருக்கின்ற ஒடுக்கப்பட்ட பெண் குலத்தின் போராட்ட குணம் கொண்ட பெண் பிரதிநிதியாகவே மணிமேகலை உணர்த்தப்படுகின்றாள்.

இறுதியாக இன்றைக்கும் ஜைணமதம் உயிர்ப்புடன் இருக்கின்றது தமிழகத்தில் ஆனால் பௌத்தம் தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் இல்லை அதற்க்கு காரணம், கொல்லாமை, மற்றும் சைவத்தை போதிக்கும் சமயமாக மட்டுமே ஜைணம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நிலைத்து நின்றது, ஆனால்,

பௌத்தம் இன்றும் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் நிகழும் பாகுபாடுகளை களைந்து சமத்துவத்தை போதிக்கும் சமயமாக உள்ளதால், இந்தியாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் சமத்துவத்தை உருவாக்கும் பெண் குலத்தின் குறியீடாகவும், மனம் படைத்தவளாகவும் மணிமேகலை திகழ்கின்றாள். 

- 13. 09.2014 சென்னை எத்திராஜ் கல்லுாரியில் நடைபெற்ற மணிமேகலையில் தொன்மம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் – 2


புத்தச் சமயத் தாவரங்கள் 


புத்தச் சமயம் பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கான பொதுவான சமயமாகும், இயற்கையை தாவரங்களை மிகவும் நேசித்து பாதுகாத்து வருகின்ற ஒரு உன்னதமான சமயமாகும். இந்திய வரலாற்றில் சுற்றுச்சூழலின் பொற்காலம் என அழைக்கப்படுவது புத்தர் வாழ்ந்த காலம் மற்றும் புத்தச் சமயம் உச்சம் பெற்றிருந்த புத்தச் சமய அரசர்களின் காலமேயாகும்.


பொதுவில் இந்து சமயம் என்பது யாகங்களுக்காகவும், வேள்விகளுக்காகவும், காட்டை அழிக்கின்ற சமயமாகும், விலங்குகளை கொல்கின்ற சமயமாகும். இவ்வாறு ஈவு இரக்கம் இல்லாமல் காடுகளை அழித்ததனாலும், விலங்குகளை கொன்று புசிப்பதனாலும் புத்தர் வேள்விகளையும், யாகங்களையும் கடுமையாக எதிர்த்தார்.

வசதியான பிராமணர்கள் பலரும் ஒன்றுகலந்து பேசி, புத்தருடன் சமரம் பேச, தேவஜானா என்ற இடத்தில் சந்தித்து பணக்காரருமான, மெத்தப் படித்தவருமான குடதந்தா, மற்றும் உஜ்ஜயா, உதயன் ஆகிய மூன்று பிராமணர்கள் புத்தரிடம் தொடர்ந்து பிராமணர்கள் யாகம் நடத்துவதை புத்தச் சமயமும் புத்தரும் அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சமரசம் பேசினர்.[1],[2] அவர்கள் மூவருமே ஒன்றாக யாகங்களை குறித்து தாங்கள் அறிந்துள்ளதை அறிய விரும்புகின்றோம் என்றனர். அப்போது புத்தர் அவர்களிடம் கூறியது, “ பிராமண மதம் யாகங்களை அடிப்படையாகக் கொண்டது, அவை நித்தியம் என்றும், நைமித்தியம் என்றும் இரண்டு வகைப்படும். நித்திய யாகங்கள் என்பவை, பிராமணர்களின் தினசரி கடமைகளாகும், அவைகளை செய்வதால் பிராமணர்களுக்கு பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவை தினசரியோ அல்லது குறிப்பிட்ட தினங்களிலோ, ( அமாவசை, பௌர்ணமி, திதிகள்) நடத்தப்பட வேண்டியவையாகும். இவைகள் தொடர்ந்து நடைபெறுவதில் எனக்கு எந்த தடையும் இல்லை. அவை ஒரு தனிநபருக்கு அவர் சார்ந்த சமயத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் விளைவாக கடைபிடிக்க வேண்டிய சமய முறை இதை பிராமணர்கள் செய்வதாலும், செய்யாமல் விடுவதாலும் சமூகத்துக்கு எந்த நன்மை தீமையும் ஏற்படுவதில்லை என்றார்.

நைமித்திய யாகங்கள் என்பவை, தனிநபர்களின் விருப்பங்களை
நிறைவேற்றிக்கொள்ள, பிராமணர்களால் நிகழ்த்தப்படுவதாகும். நைமித்திய யாகங்களோ, மது அருந்துதல், உயிர்கொலை செய்தல், கேளிக்கைகளில் ஈடுபடுதல், காணிக்கைகளைப் பெறுதல், ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவைகள் தனிப்பட்ட பிராமணர்களின் பேராசைகளின் காரணமாக நிகழ்த்தப்படுகின்றதாகும். இவ்வாறு சுயநலத்தின் காரணமாகவே நிகழ்த்தப்படும் நைமித்திய யாகங்கள் பிராமண மதங்களின் சடங்குகளாகவே கருதப்படுகின்றன.[3]

எனில் தாங்கள் ஆதரிக்கும் யாகங்களைக் குறித்து தங்களின் கருத்தை நாங்கள் அறிய விரும்புகின்றோம் என்றார் குடதண்டர், அவரின் வினா முடிவதற்கு முன்பாகவே, பகவான் புத்தர் இவ்வாறு பதிலளித்தார். யாகங்கள் வீணானவை, மிருகங்களைப் பலியிடும் யாகங்கள் கொடியவை. யாகங்கள் சமயத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. ஓர் உயிரைக் கொல்வதன் மூலம் நீ மோட்சத்திற்குச் செல்ல இயலும் எனக்கூறும் மதம் தீய வகையானது. என்றார்.

மூவரும் ஒரு மித்த குரலில் அவ்வாறெனில் நாங்கள் எந்த வகையான யாகத்ததைத்தான் செய்வது என்றனர். புன்முறுவலுடன் புத்தர் இவ்வாறு பதிலளித்தார். எருதுகளைப் பலியிடாத யாகம், ஆடுகளோ, பறவைகளோ, கொழுத்தப் பன்றிகளோ, உயிர் வாழும் விலங்கினங்களை எதையுமே பலியிடாத யாகம். துாண்களாய் பயன்படுத்த மரங்களை வெட்டாத யாகம். யாகம் நடத்தும் இடத்தை சுற்றிலும், கூரையின் மீது வேயப்படுவதற்காக தர்பைப் புல்லை அறுக்காத யாகம். தடியாலோ, அச்சத்தினாலோ விரட்டப்படாத பணியாளர்களும், துாதுவர்களும், அடிமைகளும், வேலையாளர்களும்  கொண்டிருக்கும் யாகம். அவர்கள் தமக்கு கட்டளையிடப்பட்ட பணியை கண்ணீருடனும், கவலை தோய்ந்த முகங்களுடனும் அழுதவாறும் புரியாத யாகம்.

உதவ விரும்புவோர், யாரும் உழைக்கலாம், உதவ விரும்பாத யாரும் உழைக்க வேண்டியதில்லை, அவரவர் தேர்ந்தெடுக்கும் பணியை அவரவர் புரியலாம். எண்ணெய், வெண்ணெய், பால், தேன், சர்க்கரை, ஆகியவற்றைக் கொண்டு நடத்தப்படும் யாகங்கள் இவைகளை பிராமணர்கள் செய்யத் தகுந்த யாகங்களாக நான் விரும்புவது குடதண்டரே என்றார். 

கவுதமரே, விலங்குகளைக் கொன்று பலியிடுவதைவிடப் பயன்மிக்க, இலாபகரமான யாகம் ஏதேனும் இருக்கின்றதா என்றார் குடதண்டர். பிராமணர்களே கவனத்துடன் கேளுங்கள், ஒரு மனிதன் நம்பிக்கையுடன் கீழ்கண்ட 5 ஒழுக்க நெறிகளை ஏற்பானாகில் அதுவே மிகச் சிறந்த யாகமாகும் என்பது எனது கருத்து.
அந்த போற்றுதலுக்குரிய 5 ஒழுக்க நெறிகளை எங்களுக்கு உரைக்க வேண்டுகின்றேன் கவுதமரே என்றார் உஜயன் என்னும் பிராமணர்.
1.   விலங்குகளைக் கொல்லாதிருத்தல்
2.   பிறர் உடமைகளின் மீது ஆசையற்று இருத்தல், குறிப்பாக கொடுக்கப்படாத எதையும் எடுக்காது இருத்தல்.
3.   பிழையுறு காமத்தைத் தவிர்த்தல்,
4.   பொய் உரைத்தலைத் தவிர்த்தல்.
5.   மனதை மயக்கும் மது குடியினை தவிர்க்கும் செயல் ஆகிய இந்த ஐந்து ஒழுக்க நெறிகளே, எந்த வகையான யாகத்தை விடவும், பூதானம் அடிளிப்பதை விடவும், சடங்கு முறைகளை விடவும் சிறந்தது என்றார். கவுதமர்.

இதைக் கேட்டதும், குடதண்டர் அருமை கவுதமரே என்று வியந்து பாராட்டினார். மற்றவர்கள் பதில் ஏதும் சொல்ல இயலாமல் மவுனமாக இருந்தனர்.
பின்னர் புத்தரே தொடர்ந்து, 5 வகை ஒழுக்கத்தை விடவும் உயரிய வேள்வியை நிகழ்த்திய மகா விஜிதா என்னும் அரசனின் கதையைக் கேளுங்கள். அளவற்ற செல்வ வளமும் கருவூலமும் கொண்ட மகாவிஜிதா என்னும் அரசன் முன்னொரு காலத்தில் தனது நாட்டையும் மக்களையும் மிக நேசித்து அன்பொழுக ஆண்டு வந்தார். தொடர்ந்து 3 ஆண்டுகள் நாட்டில் மழை இல்லாத காரணத்தால் வறட்சியும், காடுகளில் திருடர்களும் பெருகினர். இவற்றை போக்க, அந்த நாட்டில் இருந்த பிராமணர்கள் யாகங்களை நடத்தினால் மழை பொழியும், மக்களின் வறுமை நீங்கும் என ஆலோசனை வழங்கினர். அரசன் அதை கேட்கமறுத்து விட்டார்.

கொள்ளையர்களால் நாட்டின் அமைதி கெடுகின்றது, அவர்களை பிடித்து, சிறையில் அடைத்து கொடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற பிராமணர்களின் பரிந்துரைகளையும் ஏற்க மறுத்து, நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனது கருவூலத்தை திறந்து விட்டார், குடி மக்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தேவையான கோதுமை, மற்றும் நெல்மணிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அன ஆனையிட்டார்.  பிடிபட்ட கொள்ளையர்களையும் மன்னித்து, அவர்களுக்கும் தானியங்களை தர உத்தரவிட்டார். இவ்வாறு மக்கள் அனைவருக்கும், தனது கருவூலத்தை திறந்து வைத்ததால் அவரது அளவற்ற செல்வமும், தானியக் களஞ்சியங்களும் மிக விரைவில் காலியானது.

அதற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மழை பொழிந்த போது, மக்கள் அரசர் அளித்திருந்த தானியத்தை கொண்டு, விவசாயம் செய்தனர். அதன் பின் அறுவடை முடிந்ததும், அரசரிடம் இருந்து பெற்ற தானியங்களை திருப்பி தந்தனர். இதுவே நான் விரும்பும் யாகம். [4]

பிராமணர்களே, கவனத்துடன் கேளுங்கள், மரங்களை வெட்டாத, உயிரினங்களை அழிக்காத, கொல்லப்படாத, பலியிடப்படாத யாகங்களை நான் ஆதரிக்கின்றேன். அவ்வகையான யாகங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஊரெங்கும் நிறுவப்படும் அற நிலையங்கள், அனைத்து மக்களுக்கும் கல்வி கற்பிக்கும் கல்விக்கூடங்கள், இல்லறச் செழுமைக்கா இயற்றப்படும் அறச்செயல்கள் ஆகியவற்றையே நான் யாகங்களாகப் போற்றுகின்றேன் என்றார்.[5],[6]
       
“ நம்முடையப் பெற்றோர்களையும், சுற்றத்தினரையும் போலவே, தாவரங்களும், கால்நடைகளும் நமக்குப் பெரும் நண்பர்கள்தான், அவை, நமக்கு உணவு, வலிமை, அழகு, மகிழ்ச்சி, ஆகியவற்றைத் தருகின்றன என்று கூறியவர் பகவான் புத்தர். அவரின் இந்த போதனையைக் கேட்டப் பிறகு வேள்விகளும் யாகங்களும் முற்றிலுமாக நின்று போயின.[7] இந்தக் காரணத்தாலேயே, புத்தச் சமயத்தை தாவரங்கள், வனங்கள் மற்றும் விலங்குகளின் பொற்காலம் என அழைக்கின்றனர். வரலாற்று ஆய்வாளர்கள்.

புத்தச் சமயத் தாவரங்கள்

                புத்தரின் சரித்திரம் முழுவதிலும், புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்தின்போதும் ஏதேனும் ஒரு தாவரம் சாட்சியமாக்கபட்டிருக்கின்றது, அல்லது முக்கியத்துவப் படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புத்தரின் வாழ்வோடு நிகழ்ந்த நிகழ்வுகளையும் அதனுடன் தொடர்புடைய தாவரங்களையும் இந்தக் கட்டுரையில் நினைவுபடுத்துகின்றேன்.

நிகழ்வு -1

                புத்தரின் தாயார் மகாமாயா தேவி புத்தரை கருவுற்றிருந்தபொழுது, அவருக்கு வந்த கனவொன்றில் திசைக்காவலர்கள் நால்வர் அவரை ஏந்திச் சென்று
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு அருகில் உள்ள பெருத்த சால் மரத்தின் அடியில் கிடத்தினர். அவருக்கு அருகே திசைக்காவலர்கள் நால்வரும் காவல் நின்றபொழுது, திசைக்காவலர்களின் மனவைியர் நால்வரும் அங்கு வந்து மகாமாயாவை மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த ஏரியில் அவரை நீராட்டி, நல்லுடை உடுத்தி, நறுமனம் தெளித்து பூக்களால் அலங்கரித்தனர். மிக்குயர்ந்தோரை கானச் செல்வோர்க்குப் பொருந்தும் வண்ணமாய்.  அதன் பின்னர் சுமேதர் என்னும் போதி சத்துவர் அங்கு தோன்றி மகாமாயாவிடம் என் இறுதிப் பிறப்பை பூவுலகில் எய்த விரும்புகின்றேன், எனக்குத் தாயார் இருக்கச் சம்மதிப்பீர்களா என்றார். அப்படியே ஆகட்டும் அது எனக்கு மகிழ்ச்சியே என்றார் மகாமாயா. இந்தக் கட்டத்தில் கனவிலிருந்து விழித்தார். [8],[9],[10] 

நிகழ்வு – 2
                மகாமாயா பிரசவத்துக்காக தனது தந்தையின் ஊரான தேவதகைக்கு செல்லும் வழியில், சால் மரங்களும், மற்ற மரங்களும் பூத்தும், பூவாமலும் அடந்திருந்தஅழகிய மன மகிழ்வூட்டும் சோலை வழியே கடந்துச் சென்றார் மகாமாயா. அச்சோலை லும்பினி சோலை (வனம்) எனறு அழைக்கப்பட்ட இடமாகும். அந்த நேரத்தில், லும்பினி வனம் சிறந்த சித்தலதா சோலை பேன்றோ, அல்லது வலிமை மிக்க மாமன்னரை வவேற்க அலங்கரிக்கபட்ட மகாமண்டபம் போன்ற அழகும் வசிகரமும் மிக்கதாயிருந்தது

               
வேரிலிருந்து கிளைவரை மரங்கள் பழங்களால் நிரம்பியிருந்தன. மலர்களும், வகைவகையாய் ரீங்கரிக்கும் வண்ண, வண்ண வண்டுகளும், பல்வகைப் பறவைக் கூட்டமும் மணத்தாலும் இன்னிசையாலும் அவ்விடத்தை நிரப்பியிருந்தன. இவ்வழகிய காட்சிகளைக் கண்ட மகாமாயவுக்கு, அவ்விடத்தில் சற்று இளைப்பாறும் ஆசை எழுந்ததால், தன்னைச் சால்மரத் தோப்புக்குள் அழைத்துச் சென்று இருத்திவிட்டுச் சற்று நேரம் காத்திருக்குமாறு சேவகர்க்குக் கட்டளையிட்டார் மகாமாயா.
               
பல்லக்கிலிருந்து இறங்கி அழகிய பெரிய சால்மரம் ஒன்றை மகாமாய அணுகினார். அங்கு வீசிய இனிய இளம் தென்றலில் மேலும் கீழும் அசைந்த கிளைகளில் ஒன்றைப் பிடிக்க எண்ணினார் அவர் விரும்பியபடியே ஒரு கிளை காற்றின் அசைவினால் அவரது கை வரை தாழ்ந்து வந்தது. எனவே அதை பிடிக்க எழுந்தார் மகாமாயா. காற்றின் மேல்நோக்கிய வீச்சினால் கிளை உயரவும், மகாமாயா தடுமாறி, பிரசவ வலி கண்டார். சால்மரக் கிளையைப் பிடித்தபடியே, நின்ற நிலையிலேயே மகனைப் பிரசவித்து விட்டார் அவர். இது நிகழ்ந்தது கி.மு. 563 ம் ஆண்டு, வைசாக பவுர்ணமி நாளில் பிறந்தார் கௌதம புத்தர். [11],[12].[13].

இதுவரையிலும் கண்டறியப்பட்ட புத்தச் சமய இலக்கியங்கள் மற்றும் புத்தச் சமயப் பயணிகளின் குறிப்புகளின் படி புத்தரின் பிறப்பு நிகழ்ந்தது 5 வகையான மரங்களின் கீழே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் சுற்றுச்சூழலின் அடிப்படையிலான தகவலுக்காக பதிவிடுகின்றேன்


அசோகா மரம்:

அசோகவந்தனத்தின்படி பேரரசர் அசோகர், புத்தரின் ஆசிரியரான உபகுப்தரின்  குறிப்பின்படி பகவான் புத்தர் பிறந்தது அசோகா மரத்தின் அடியில் என குறிப்பிடப்பட்டுள்ளார். சீனப் பயணியான பாகியான் (கி.பி. 5 ஆம் நுாற்றாண்டு) லும்பினி வனத்திலுள்ள புத்தர் பிறந்த அசோகா மரத்தினை உயிருடன் பார்த்தாக குறிப்பிட்டுள்ளார். சீனப்பயணி, யுவான் சுவாங்கும் உயிரற்ற நிலையில் அதே அசோகா மரத்தைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். [14],[15],[16],[17]

சர்வத்தா வினயத்தின் குறிப்பு மற்றும் பிற சான்றாவனங்களின்படி புத்தர் பிறந்தது அசோகா மரத்தின் கீழ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மகாமாயா தேவி லும்பினித் தோட்டத்திற்குள் நுழைந்து ஒரு கரத்தினால் அசோகா மரத்தின் கிளையைப் பிடித்தபடியே புத்தரைப் பெற்றெடுத்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது


நவீன காலத்தில் எழுதப்பட்ட ஆய்வு நுால்கள் சிலவற்றிலும் புத்தர் அசோகா மரத்தின் கீழ் பிறந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மகாமாயா தேவி, அசோகா மரத்தின் கிளையை தனது வலது கரத்தில் பிடித்தவாறே லும்பினித் தோட்டத்தில் புத்தரைப் பெற்றெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. [18],[19]

கருங்கல் புடைப்புச் சிற்பங்கள் சிலவற்றிலும், மகாமாயா தேவி, அசோகா மரத்தின் கிளையை தன் வலது கரத்தால் பற்றிக்கொண்டு புத்தரை பெற்றெடுத்ததாகவே காட்சிகள் உள்ளது. மேலும் அசோகா மரத்தின் இலைகளும் சிறப்பாக நன்கு தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரமாநிலம் நாகார்ஜீனகொண்டாவில் கண்டறியப்பட்ட புடைப்புச் சிற்பம் ஒன்று தற்போது தேசிய அருங்காட்சியகம் புதுடில்லியில் உள்ளது. இந்த சிற்பத்தில் மகாமாயா தேவி கால்விரல்களின் நுனியில் அசோகா மரத்தின் கிளையை வலது கரத்தால் பற்றிக்கொண்டு நிற்பது போலவும், அருகில் இரண்டு பெண் பணியாளர்கள் உடன் இருப்பதைப் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது


நாளாந்தா அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் ஒன்றில் புத்தரின் பிறப்பைக் காண, இந்திரன் மற்றும் பிரம்மா இவர்களுடன் விஷ்ணுவும் காண வந்திருப்பதாகவும் உள்ளது. இதிலும் வலது கரத்தால் அசோகா மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு மகாமாயா தேவி இருப்பதைப் போல் உள்ளது. இலைகளைக் கொண்டு இது அசோகா மரம் என்று கனிக்கும்படியாகவே உள்ளது.

ஆந்திர மாநிலம் கோலியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம்மொன்றில், கூரை வேயப்பட்ட மாட்டுவண்டியில் செல்லும் ஒரு தாய் மற்றும் இரண்டு சிறுவர்களை காண்கின்ற வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் அசோகா மரம் அதன் இலைகளைக் கொண்டு கண்டறியும் வகையில் உள்ளது. தற்போது இந்த சிற்பம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

காந்தாரகலையின் அடிப்படையில் அமைக்கப்பெற்ற கற்சிற்பம் ஒ்னறு தற்போது, விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம் லண்டனில் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் மகாயமாயா தேவியின் வலது பக்கத்தில் குழுந்தை சித்தார்த்தர் தரையில் உள்ளது போலவும், மகாமாயா தேவி தன் வலது கரத்தால் அசோகா மரத்தைப் பற்றிக் கொண்டு இருப்பதுப் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது


தற்போது பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிற்பத்திலும் மகாமாயா தேவி அசோகா மரத்தின் கிளையை பற்றிக் கொண்டிருப்பது போலவும் வலது பக்கத்தில் குழந்தை சித்தார்த்தர் இருப்பதுப் போலவும் சிற்பம் உள்ளது. [20], [21], [22],[23],[24],[25]

புத்தச் சமயம் பத்தொண்பதாம் நுாற்றாண்டிலும் அதற்கு முந்தைய நுாற்றாண்டுகளிலும், இலங்கையிலிருந்தே மேற்கு உலக நாடுகளுக்கும் கிழக்குத் தேசத்து நாடுகளுக்கும்  பரவியது. அதற்கு காரணம், அவர்கள் பராமரித்து வரும் புத்தச் சமய இலக்கியங்களில் இருந்து ஆங்கில மொழியாக்கம் மற்றும் மொழி பெயர்ப்பு வெகு எளிதாக இருந்ததுதான். அவ்வாறு இலங்கையில் இருந்து உலகெங்கும் பரவிய புத்தச் சமயக் கருத்துகளில் இவ்வாறு சால் மரத்திற்குப் பதிலாக அசோகா மர குழப்பம் இன்றளவிலும் பரவிக்கொண்டுதான் இருக்கின்றது. அதற்கென இரண்டு காரணங்களை சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

முதலாவதாக, இந்தியாவின் பனிபடர்ந்த இமய மலைச் சாரலில் வளரும் தன்மை கொண்ட சால் மரத்தை இலங்கையில் உள்ளவர்கள் அந்தக் காலத்தில் பார்க்கும் வசதியில்லை. மேலும் சால்மரம் இலங்கயைில் வளரும் சூழலும் இல்லாததால், இலங்கையில் பெருமளவு வளரும் அசோகா மரத்தையே சால் மரம் என இலங்கை இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன . அதுவே புடைப்புச் சிற்பிகளுக்கும் காண்பிக்கப்பட்டதால் அதன் வழி சிற்பமாக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. [26] 

இரண்டாவதாக நான் இந்த மரக் குழப்பம் குறித்து கயாவில் ஒரு முதிர்ந்த படித்த இலங்கை புத்தக பிக்குவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது, இலங்கைக்கு புத்தச் சமயம் மாமன்னர் அசோகரின் மகன் மகேந்திரன் மற்றும் சங்கமித்திரை வழியாகத்தான் வந்தது. அவர்கள்தான் புத்தர் பிறந்த சால்மரம், புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆகியவற்றின் கன்றுகளை இலங்கைக்கு கொண்டுவந்து அதன் வழி புத்தச் சமயத்தை பரப்பினர். சால் மரத்தின் பெயர் எங்களுக்கு எளிதில் நினைவுக்கு வரவில்லை, மேலும் எங்களுக்கு சால் மரம் அசோகரின் வழியாக வந்ததால் நாங்கள் மாமன்னர் அசோகரை கௌரவப்படுத்தும் விதமாக சால் மரத்தை மாமன்னர் அசோகரின் மரம் என்றே அழைத்தோம், அது வரலாற்றிலும் சிற்பங்களிலும் எங்கள் விளிப்பு பெயரான  அசோகா மரம் என்றே பதிந்து போனது என்னும் வாய்வழியான தகவலையும் தந்தார்.

தொடரும் . .
- நன்றி - புதிய கோடங்கி - ஆகஸ்டு் 2019


[1] . புத்தநெறி, கேப்டன்.எஸ்.கலியபெருமாள். பக்கம் 44
[2] . பசுவின் புனிதம் மறுக்கும் ஆதாரங்கள். டி.என்.ஜா. – தமிழில் வெ.கோவிந்தசாமி.
  பக்கம். 43
[3] . புத்தரும் அவர் தம்மமும். பீ.ஆர். அம்பேத்கர். தமிழில். பெரியார்தாசன். பக்கம் 227
[4]  குதண்ட சுத்தம்.
[5] . புத்தரும் அவர் தம்மமும். பக். 231
[6]  குடதண்ட சுத்தம்
[7] சுத்த நிபானம், 13-14 பக்கம். 58 ( தரவு 29, மற்றும். 30 க்கான மேற்கோள்கள் பசுவின்
 புனிதம் மறுக்கும் ஆதாரங்கள் . ஜே.என் ஜா. தமிழில் வெ.கோவிந்தசாமி நுாலில் இருந்து
 எடுக்கப்பட்டது.)
[8] . புத்தரும் அவர் தம்மமும் – தமிழில் பெரியார்தாசன். பக்கம். 3
[9]  B.R.Ambedkar – Buddha and His Dhamma – Page No. 22

[10]  Attandanda Sutta
[11] . புத்தரும் அவர் தம்மமும் – தமிழில் பெரியார்தாசன். பக்கம். 4 – 5.

[12] .  B.R.Ambedkar – Buddha and His Dhamma – Page No. 24

[13]   அஸ்வகோஷ். புத்த சரித்திரம். அத்தியாயம் 1, பாடல் 77
[14] . John.S.Strong, The Legend of King Ashoka – A Study and Translation of the Asokavadana. Page - 
  121.
[15] . Storrs, J.and Adrain, Discovering Trees – in Nepal, and Himalayas, Kathmandu, 1984
[16] .  Enjoy Trees, Kathmandu,1987.

[17] .  Wallers, T., On Yan Chawang’s Travels in India, Munsi Ram. 
[18] . B.D. Kyokai. The Teaching of Buddha. The Corporate Body of Buddha Educational Foundation. Taiwan 1989
[19] . D.V.Cower. Flowering Trees and shrubs in India.
[20] . Mitra D., Buddhist Monuments, Sahitya Samasad, Calcutta, 1980.
[21] . Snellgrove, D.(Ed) The Image of Buddha, Vikas Publishing House, Delhi, 1974
[22] . Huntington, S.L, The Art of Ancient India, John Weatherhill, New York and Tokyo, 1985
[23] . Publication Division< The Way of the Buddha, Ministry of Information and Broadcasting Govt. of. India, 1959
[24] .Indrama, The magazine of India, July/Sep.1988.
[25] . India Perspective ( Hindi) Vol. July. 1992
[26] . S. Dhammika. Trees in the Buddhist Scriptures. 

இதையும் படியுங்கள்