Saturday, March 17, 2018

எனது உடலும் உயிரும் பொருளும் ரமணார்பனம். . .




இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள் - பாகம் 8

எனது உடலும் உயிரும் பொருளும் ரமணார்பனம் 

எனது உடலும் உயிரும் பொருளும் சகலம் ரமணார்பனம் என்னும் இந்த பாடல் இளையராஜா எழுதி இசையமைத்து பாடி வெளியிட்ட ராஜாவின் ரமணமாலை என்னும் ஒலி நாடாவில் உள்ள பாடலாகும். இந்த பாடல் கேட்பவர்களின் மனதை உருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாடலாகும்.  



https://www.youtube.com/watch?v=2ZI7aKQ3liQ&list=RDSbf9GgAw0qU&index=4


இந்த பாடலை முதன் முதலாக கேட்பவர்களாயினும் சரி, அல்லது ஏற்கனவே பல முறை கேட்டவர்களாயினும் சரி, இந்த பாடலை கேட்பவர்களின் உள்ளம் உருகும். நான் எனது என்னும் பற்று அறுக்கத் துாண்டும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் இது. உலகில் உள்ள அனைவருக்கும் மிகுந்த பற்று கொண்டுள்ள உடல் உயிர் பொருள் ஆகிய பற்றுகளை அறுத்து பற்றற்ற வாழ்வை வாழ வழி காட்டும் உன்னதமான பாடல் இது. அந்த பாடல் வரிகள் இதோ



இளையராஜா:   எனது உடலும் 
                                     உயிரும் பொருளும்
                                    சகலம் ரமணார்பனம்
குழு:                          எனது உடலும் 
                                    உயிரும் பொருளும்
                                    சகலம் ரமணார்பனம்

இளையராஜா:     கொடுக்கும் குணமே
                               அதுவும் உனது
                               பொறுத்து எனை ஏற்கனும்

குழு:                      கொடுக்கும் குணமே
                              அதுவும் உனது
                       பொறுத்து எனை ஏற்கனும் ( எனது உடலும் )
                   
இளையராஜா:       ஆதி அந்தம் கடந்த அறிவே  
                                       அனைத்தும் உனது ஆணையே 

குழு:                            ஆதி அந்தம் கடந்த அறிவேஆதி 
                                       அனைத்தும் உனது ஆணையே 

இளையராஜா:        ஜோதி வடிவாய் திகழும் அருளே
                                துதிக்கும் அடியேனையே  

குழு:                        ஜோதி வடிவாய் திகழும் அருளே
                                துதிக்கும் அடியேனையே 

இளையராஜா        கருனை கொண்டு கனிந்து இரங்கி
                        காத்து கரை சேர்க்கனும்.

   குழு:                     கருனை கொண்டு கனிந்து இரங்கி
                                    காத்து கரை சேர்க்கனும்    ( எனது உடலும்)


இளையராஜா :     செய்த வினையும் செய்யும் வினையும்    
                                    உனது தவத் தீயிலே 

குழு:                          செய்த வினையும் செய்யும் வினையும்    
                                     உனது தவத் தீயிலே 

இளையராஜா :      தீய்ந்து கருகி தணிந்து  நீராய்
                                     தீர்ந்த நிலையாகவே
                  
குழு:                          தீய்ந்து கருகி தணிந்து நீராய்
                                    தீர்ந்த நிலையாகவே

இளையராஜா :      ஐந்து புலனும் அடங்கிப் போகும் 
                                    ஆணைதனைப் போடனும் 

குழு:                          ஐந்து புலனும் அடங்கிப் போகும் 
                         ஆணைதனைப் போடனும்   ( எனது உடலும் 2 )

இந்த உன்னதமான பாடலை இளையராஜா அவர்கள், ஆனந்த பைரவி ராகத்தில் அமைத்து இருப்பார். ஆதி தாளத்துடன் கீ போர்டு, புல்லாங்குழல், தபேலா மற்றும் வயலின் ஆகிய இசைக் கருவிகளைக் கொண்டு இந்த பாடலை கட்டமைத்து இருக்கின்றார் இளையராஜா. ( தகவல் உதவி. முது முனைவர். பேரா. அய்யப்பன். தென்காசி. அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி

இந்தப் பாடலில் பயன்படுத்திய ஆனந்த பைரவி ராகமானது. ஒரு மிகச் சிறப்பான மற்றும் தொன்மையான ராகமாகும். மாலை நேரத்தில் பாடக்கூடிய மனதை மயக்க கூடிய ஒரு மெல்லிசை ராகமாகும்.[1] மேலும் கர்னாடக இசை, தெலுங்கு கீர்த்தனை மற்றும் யக்ஷகானம் ( கர்நாடகத்தில் பயன்படுத்தப்படும் செவ்வியல் இசை வடிவம்) ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான ராகமாகும். இந்த ராகம் ஏழு ஸ்வரங்களையும் கொண்ட முழுமையான ராகமாகும்.[2] இந்த ராகத்தில் அமைந்த பாடலைக் கேட்பவர்களுக்கு மனதை வாட்டும் பல துன்பங்கள் மாயமாய் மறைந்து மனம் மகிழ்சி அடையச் செய்யும் ராகமாகும். 

இந்த பாடலில் இடம் பெற்றுள்ள புத்த சமயக் கோட்பாடுகள் :

பாடலின் துவக்கத்தில் இளையராஜா, ஆதி அந்தம் கடந்த அறிவே அனைத்தும் உனது ஆனையே, என்று ரமணரை விளித்திருப்பார். உண்மையில் அந்த இரண்டு வரிகள் மிக உன்னதமான உயிரோட்ட வரிகளாகும். இந்த உலகின் தோற்றம் பிரம்மாவினால் நிகழ்ந்தது, மனுவால் நிகழ்ந்தது, என்று இந்த சமய வாதிகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாதிட்டு வரும் காலத்தில்,

சாங்கிய சித்தாந்தம் மட்டுமே இந்த உலகம் உடலும் குடலும் நிரம்பிய மனிதனாலோ தேவனாலோ, அல்லது எந்த கடவுளாலும் படைக்கப்பட்டதல்ல, அது இயங்கா ஆற்றலாக இருந்த வெட்ட வெளியில் அனுக்களின் (துகள்களின்) எண்ணிக்கை அதிகமானதால் ஒன்றோடு ஒன்று மோதி இயக்கம் பெற்று உண்டான பெரு வெடிப்பினால் உண்டானது என கூறியது. அந்த துகளிலிருந்தே உயிர்களும், இயக்கமும், இரவும் பகலும், வெளிச்சமும் கோளும், நாளும் தோன்றியது என பேசுகின்றது சாங்கியத் தத்துவம்.

இந்து சமயத்தை ஏற்றுக் கொள்ளாத மற்ற சமயங்களானா, புத்த சமயம், மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட ஜைன சமயம், மற்கலி மற்றும் கோசலாரால் தோற்றுவிக்கப்பட்ட ஆசிவக சமயம் ஆகிய அனைத்து சமயங்களும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த சாங்கியத்தின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டன. அதே கருத்தை இந்த பாடலின் துவக்கத்தில் அமைத்ததின் வழியாக இந்த உலகம் பிரம்மாவினால் படைக்கப்பட்டதல்ல, அனைத்துப் பதிவுகளையும், இயக்கத்தையும், அறிவையும் தன்னுள் கொண்ட அனு என்னும் துகளால் உண்டாக்கப்பட்டது என்று கூறியிருப்பார்.

மேலும் திருவண்ணாமலை கோயில் ஆசிவகப் பள்ளியாக இருந்தது.[1] ஆசிவகமும் புத்த சமயமும் தோழமை கொண்ட சமயங்களாகும். மேலும் வைதிக எதிர்ப்பு நிலையைக் கொண்ட சமயமாகும். பகவான் இரமனரும் வைதிக எதிர்ப்பாளரே, அந்த வகையில் இளையராஜாவும் இந்த பாடலில் வைதிக எதிர்ப்பு நிலை கருத்தைக் கையாண்டு தன்னை வைதிக எதிர்ப்பாளராகவே இந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார். 



ஜோதி வடிவாய் திகழும் அருளே
துதிக்கும் அடியேனையே 
கருனை கொண்டு கனிந்து இரங்கி
காத்து கரை சேர்க்கனும்.
செய்த வினையும் செய்யும் வினையும்    
உனது தவத் தீயிலே 
தீய்ந்து கருகி தணிந்து  நீராய்
தீர்ந்த நிலையாகவே
 ஐந்து புலனும் அடங்கிப் போகும் 
ஆணைதனைப் போடனும் 

இந்த வரிகளில் உள்ள புத்த சமயக் கோட்பாடுகளை விளக்க வேண்டுமெனில், இது புத்தர் போதித்த ஆதித்திய பரியாய சுக்தத்தை குறித்துப் பேசுகின்றன.

ஆதித்திய பரியாய சுக்தம் :

இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள புத்த சமயக் கோட்பாடுகளை விளக்கும் முன் புத்தர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகின்றேன். அதற்குப் பின் இந்த பாடலில் இடம் பெற்றுள்ள புத்த சமயக் கோட்பாடுகளை விளக்குவது மிகப் பொருத்தமாகவும் எளிமையாகவும் இருக்கும்.



புத்தர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள புத்தகயாவில் அரசமரத்தின் அடியில் 7 வாரங்கள் தியானித்து முழு ஞானம் பெற்றபின் சில காலங்கள் கழித்து புதிதாக தன்னுடன் சேர்ந்த 1000 பிக்குகள் சூழ கயாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரம்மயோனி மலைக்குச் சென்றார். அங்கு அவர் பிக்குகளுக்கு உபதேசித்தது

பிக்குகளே இந்த உலகம் மனிதர்களின் ஆசை என்னும் பெருந்தீயில் எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த பேராசை என்னும் பெருந்தீயே நமது பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு, துக்கம், புலம்பல், துயரம், மற்றும் விரக்தி ஆகியவைகளுக்கு மீண்டும் மீண்டும் காரணமாக அமைகின்றது. ஆசை கொண்ட மனதின் ஒவ்வொரு செயலிலும்   ஆசை என்னும் பெரு நெருப்பு நம் முன் கொழுந்து விட்டு எரிந்து நம்மை பொசுக்குகின்றது. நம்மிடம் உள்ள இந்த ஆசைத் தீயை நாம் அனைக்க வேண்டும். ஆசை என்னும் பெரு நெருப்புக்கான காரணங்களாக நமது ஐம்புலன்களான

1.   மெய் என்னும் உடல்
2.   வாய்
3.   கண்
4.   மூக்கு
5.   செவி  
இந்த ஐம்புலன்களால் உருவாகும் ஐந்து புலனுனர்வுகள் என அழைக்கப்படும்

1.   சுவை
2.   ஒளி
3.   ஊறு
4.   ஓசை
5.   நாற்றம்

இந்த ஐந்து புலனுனர்வுகள் செயல்பட காரணமாக இருக்கும் ஐந்து வினையுறுப்புகளான

1.   வாய்
2.   கை
3.   கால்
4.   எருவாய்
5.   கருவாய் இவற்றுடன் இவைகளை இயக்கும் 

3 வகையான மனங்கள்
1. அறிவு
2. அகந்தை மற்றும் 
3. தன்னுர்வு 

ஆகிய வற்றை நாம் தீயிலிட்டு பொசுக்க வேண்டும் என்று விளக்கி கூறி அதன் பின் ஒவ்வொன்றாக பெயரைச் சொல்லி அதன்  பயனைச் சொல்லி அதனை தீயிலிட்டு பொசுக்குகின்றேன் என தியானம் செய்ய அமர்ந்த  பிக்குகளுக்கு முன்பாக இருந்த பெருந்தீக்கு முன்னர் , தியான நிலையிலேயே தமது ஐம்புலன்கள், அதற்கு காரணமான ஐம்புலன் உணர்வுகள், அதற்கு காரணமான ஐந்து வினையுறுப்புகள், இவை எல்லாவற்றையும் இயக்குகின்ற மனம், அந்த மனதில் உள்ள அறிவு, அகந்தை, ஆனவம், தன்னுனர்வு, ஆகிய அனைத்தையும் ஒவ்வொன்றாக தீயிலிட்டு பொசுக்குவது போல பாவிக்கச் சொன்னார்.. இன்னும் உதாரணமாக சொல்வதெனில், 


மெய் என்னும் உடலை தீயிலிட்டு பொசுக்குகின்றேன். அதன் வழியாக நான் பெரும் இன்பம், துன்பம், காதல், காமம், விருப்பு, வெறுப்பு எரிச்சல், கோபம், பழிவாங்கும் உணர்வு ஆகிய உணர்வுகளையும், பலம், பலவீனம் ஆகிய குணங்களையும் தீயிலிட்டு பொசுக்குகின்றேன்.    

ஐம்புலன்களுள் ஒன்றான எனது கண்களை என் முன் உள்ள நெருப்பிற்கு காணிக்கையாக்குகின்றேன். அதனால் நான் பெருகின்ற, காட்சி, மற்றும் காட்சி இன்பம், அதன் வழி உணர்கின்ற, இரவு பகல், வெளிச்சம் இருள், ஆகிய அனைத்தையும் நெருப்புக்கு காணிக்கையாக்குகின்றேன்.
      
செவி என்னும் உறுப்பை தீயிலிட்டு பொசுக்குகின்றேன். அதன் வழி நான் கேட்கின்ற சத்தம், இசை, மொழி, பேச்சு, இயற்கை ஒலிகள், மென்மையான பேச்சு, வன்மையான பேச்சு போன்ற அனைத்தையும் தீயிலிட்டு பொசுக்குகின்றேன்.
      
மூக்கு என்னும் உறுப்பை தீயிலிட்டு பொசுக்குகின்றேன். அதன் வழி நான்  உணர்கின்ற நறுமனம், நாற்றம், சுவாசம், ஆகிய அனைத்தையும் பொசுக்குகின்றேன்

வாய் என்னும் உறுப்பை தீயிலிட்டு பொசுக்குகின்றேன். அதன் வழி நான் உணர்கின்ற சுவைகளாகிய, இனிப்பு, உவர்ப்பு, கசப்பு, காய்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, ஆகிய சுவைகளையும், பேசுவதால் உருவாகும் துன்பம் மற்றும் இன்பம், விருப்பு வெருப்பு ஆகிய அனைத்தையும் தீயிலிட்டு பொசுக்குகின்றேன். என ஒவ்வொன்றையும் நெருப்பில் காணிக்கையாக்குவதால், அவைகள் நெருப்பில் பொசுங்குவது போல் தங்களை பிடித்து ஆட்டுகின்ற ஆசையும் நெருப்பில் பொசுங்கும் என்பது புத்த சமயத்தவர்களின் நம்பிக்கை.

இவ்வாறு ஐம்புலன்கள், ஐந்து புலன் உணர்வுகள், ஐந்து புலன் கருவிகள் ஆகிய அனைத்தையும் தீயிலிட்டு பொசுக்கிய பின் பிக்குகளின் புலன்கள் மற்றும் புலன் இன்பத்துக்கான வேட்க்கை அடங்கிப் போனதால், பற்று என்னும் நெருப்பு பற்றாத புதிய பிறப்பாளர்களாக உருமாறி பற்று அற்ற நிலைக்கு உயர்ந்தனர் என்கின்றது. புத்த சமயத்தில் உள்ள ஆதித்த பரியாய சுத்தா, மேலதிக விவரங்களுக்கு ஆனந்த புத்த சுத்தா, ஆதபுத்த சுத்தா, ஆதித்த சுத்தா, குக்குல சுத்தா, ஆகிய சுத்தங்களைப் படித்து புத்த சமயத்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்வு புத்த சமயத்தவர்களால் நெருப்பு பேருரை, அல்லது தீ பிரசங்கம் என்னும் பொருளில் ( Fire Sermon) என அழைக்கப்படுகின்றது.

மேலே சொன்ன நிகழ்வுக்கு பாட்டும் மெட்டும் அமைத்தது போலவே இருக்கும். எனது உயிரும் உடலும் சகலம் ரமணார்பனம். என்னும் பாடல். ஆதித்த பரியாய சுக்தத்தை மிக எளிமையாக இந்த பாடல்  வரிகளில் விளக்கி இருப்பார். இளையராஜா.

தீ பிரசங்கமும் திருவண்ணாமலையும்:
       
சைவ சமயத்தவர்களால் சிவன் முதலும் முடிவும் இல்லாத பெரு நெருப்பு வடிவாக நின்ற இடம் திருவண்ணாமலை, என்றும் ஈசன் அக்னிவடிவமாக அக்னி லிங்கமாக உள்ளார் என்றும் நம்பப்படும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சைவர்கள் திருவண்ணாமலையின் புகழை காலம் காலமாகப் பரப்பி வருகின்றார்கள். உண்மையில், திருவண்ணாமலை உலகின் மிகப் பழமையான மலை, அதே போல் உலகின் முதன் முதலில் குளிர்ந்த அல்லது உயிரிழந்த எரிமலை[3] என்பதை புத்த சமயத்தவர்கள் மிக நன்றாக அறிவார்கள். இதனை பால் புருன்டன் என்னும் மெய்யியல் சமய கழத்தவரும் Message From Arunachala என்னும் புத்தகத்தில் விளக்கியுள்ளார். அவர் இரமணரின் தீவிர பக்தர் என்பதும் குறிப்பிடத் தக்கது.


      
தீ பிரசங்கம் என்னும் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் விதமாகவும், இது எரிமலை என்பதை உணர்த்தும் விதமாகவும் கார்த்திகை தீபம் புத்த சமயத்தவர்களால் கொண்டாடப் படுகின்றது. கார்த்திகை தீபம் என்பது புத்த சமயத்தவர்களின் பண்டிகை என்று விளக்கியிருக்கின்றார். பண்டிதர். அயோத்தி தாசரும்[4].
  
கார்த்திகை தீபம் என்பதே புத்தர் கயாவில் பிரம்ம யோனி மலையின் மீது நிகழ்த்திய தீ பேருரையின் மற்றொரு வடிவம் என்பதனை அதன் கூறுகளோடு பொருத்திப் பார்க்க கேட்டுக் கொள்கின்றேன். திருவண்ணாமலை மலையின் மீது பெரு நெருப்பை எரியவிட்டு அந்த நெருப்பில் தமது புலன்களையும், புலன் உணர்வுகளையும், புலன் இன்பத்தையும் பொசுக்கியவர்கள் புத்த சமயத்தவர்கள். இந்த நிகழ்வே கார்த்திகை தீபம். இவ்வாறு பாவப்பட்ட புலன்களை எரித்ததால் பாவம் அழிந்து புதுப் பிறவி எடுத்தனர் என்னும் புத்த சமயத்தவரின் கோட்பாட்டை திரித்து திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சைவர்கள் பரப்பி வருகின்றனர்.
   
புத்த சமயத்தவர்களின் மிக முக்கியமான  நாள் பௌர்ணமி நாளாகும். ஏனெனில் புத்த சமயத்தை உருவாக்கிய கௌதம சித்தார்த்தரின் பிறப்பு, பால் சோறுட்டல்,திருமணம்,  ஞானம் அடைதல், மற்றும் நிர்வாணம் என அனைத்துமே முழுநிலவு நாளான பௌர்ணமியில் நடைபெற்றதால், புத்த சமயத்தவர்களைப் பொருத்த வரை பௌர்ணமி மிக முக்கியமான நாளாகும்.





தை மாத பௌர்ணமி:
.
அன்றைய தினத்தில் புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பு மகத அரசர் பிம்பிசாரருக்கு அளித்திருந்த உறுதிமொழியின் படி ஞானம் அடைந்த பிறகு முதன் முதலாக மகத அரசின் தலைநகரான இராஜகிரகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த தென்னை மரச் சோலையான யஷ்டி வனத்தில் தங்கியிருந்த நாள்.

மாசி மாத பௌர்ணமி:

அன்றைய பௌர்ணமி நாள் அன்று சபால சைத்தியம் வசிக்கும் தருணம் புத்தர் இன்று முதல் இன்னும் மூன்று மாதங்களில் தாம் இறந்து விடுவதாக வணக்கத்துக்குரிய ஆனந்தரிடம் தெரிவித்த நாள்.

பங்குனி மாத பௌர்ணமி:

முழு ஞானம் பெற்ற புத்தர் கபிலவஸ்த்துவின் அரசரான தனது தந்தை சுத்தோனரின் அழைப்பை ஏற்று கபிலவஸ்த்துக்கு நடைபயணமாகப் புறப்பட்ட நாள்.

சித்திரை மாத பௌர்ணமி:

முழு ஞானம் அடைந்த புத்தர் தாம் ஞானம் அடைந்த பின் முதன் முறையாக தாம் பிறந்த பூமியான கபிலவஸ்த்துக்கு வருகை புரிந்த நாள்.

வைகாசி மாத பௌர்ணமி:

முழு ஞானம் பெற்ற புத்தரின் வாழ்வில் அன்றைய தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஏனெனில் புத்தரின் பிறப்பு, ஞானம் அடைந்த நாள் மற்றும் அவரின் இறப்பு ஆகிய 3 நிகழ்வுகளும் இந்த நாளில் நடந்துள்ளதால் புத்த சமயத்தவர்களுக்கு இந்த நாள் மிக முக்கியமான நாளாகும்.
·         
மாமன்னர் அசோகர், புத்த சமயத்தை பரப்புவதற்காக தனது மகன் மகேந்திரனுடன் துாதுக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பிய நாள்.

ஆனி மாத பௌர்ணமி:

மாமன்னர் அசோகரின் துாதுக்குழு தனது மகன் மகேந்திரனுடன் இலங்கைக்கு வந்த நாள்.

ஆடி மாத பௌர்ணமி:

மழைக்காலம் துவக்க நாள். அனைத்து பிக்குகளும் அவரவர்களின் சங்கத்தில் தங்கி, உபாசக மற்றும் உபாசகிகளுக்கு தம்மத்தை போதிக்கும் நாள்.
·         
புத்தர் தாம் ஞானம் பெற்ற பிறகு முதன் முறையாக தமது தம்மத்தை சாரநாத்தில் உள்ள மான் தோப்பில் தனது 5 சீடர்களுக்கு தம்மத்தை போதித்த நாள்.

ஆவணி மாத பௌர்ணமி:

புத்தரின் அனுக்க சீடரான ஆனந்தர் உயர் ஞானம் எய்திய நாள்.
முதல் புத்த சமய ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நாள்.

புரட்டாசி மாத பௌர்ணமி:

பிக்குனிகள் சங்கத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கென சங்கம் அமைக்கப்பட்ட நாள். முதல் பிக்குனியாக புத்தரின் சிற்றன்னை மகா பிரஜாபதி கௌதமி சீவரம் ஏற்ற நாள்.

ஐப்பசி மாத பௌர்ணமி:

மழைக்கால முடிவுறுதல், பிக்குனிகளுக்கு பிரத்யோக அங்கி தானமளித்தல்.
வணக்கத்துக்குரி பிக்கு சாரி புத்திரரை தலைமை சீடராக புத்தர் அறிவித்த நாள்.

கார்த்திகை மாத பௌர்ணமி:

வணக்கத்துக்குரிய பிக்குகளுக்கு உயரிய சீவர ஆடை தானமளிப்பு சடங்கு நிகழ்த்தும் நாள்.
ஞானம் அடைந்த புத்தர் முதன் முறையாக சங்கத்தை கட்டமைத்த நாள்.

மார்கழி மாத பௌர்ணமி:

மாமன்னர் அசோகரின் மகள் வணக்கத்துக்குரிய பிக்குனி சங்கமித்திரை புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தின் வலது கிளையிலிருந்து பதியமிட்ட போதி கன்றுடன் இலங்கை அனுராதபுரம் அடைந்த நாள். ( தகவல் உதவி: பொறியாளர். . அசோகன்புத்தரும் முழுநிலவும் கையேடு)


மேல சொல்லியுள்ள காரணங்களால் ஆண்டின் அனைத்து பௌர்ணமி நாளும் புத்த சமயத்தவர்களுக்கு முக்கியமான நாளாகும். இவற்றுடன் தனது புலன்களால் உண்டாகும் ஆசை என்னும் துன்பத்தை தீயிட்டு பொசுக்கும் நிகழ்வாகவே புத்த சமயத்தவர்களின் திருவண்ணாமலை பௌர்ணமி கிரி வலம் நிகழ்வு நடந்துள்ளது முந்தைய வரலாற்று நிகழ்வுகளில்



       
அதே வேலையில் திருவண்ணாமலையில் உள்ள புத்த சமயத்தவர்களுக்கு பௌர்ணமி நாள் என்பது, புத்தர் கயா மலையில் நிகழ்த்திய, தீ பிரசங்கத்தை நினைவுகூறுவதற்காகவும், தாங்களும் நெருப்பில் தங்களின் புலன்களை பொசுக்குவதற்கான நாளாகும்





புத்த சமயத்தின் செல்வாக்கு மங்கிய காலத்தில் புத்த சமயத்தினரின் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவல நிகழ்வை சைவ சமயம் சொந்தம் கொண்டாடி  தனக்கான ஒன்றாக்கி விட்டது. அதற்கென பல கட்டுக் கதைகளும் இட்டுக் கதைகளும் பரப்பி அதனை நிலைபெறச் செய்து விட்டது


திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த புத்த சமயத்தவர்கள் தற்போது எங்கிருக்கின்றனர் என்ற கேள்வியும், நான் ஏதோ பௌர்ணமி நாள் குறித்தும்ஏதை எதையோ பிதற்றுவதாகக்கூட இந்த கட்டுரையைப் படிக்கும் நபர்களுக்குத் தோன்றும்.

உண்மையில் சைவ சமயத்தவர்கள் எழுச்சி பெற்ற காலத்தில், புத்த சமயத்தவர்களை கழுவில் ஏற்றுவதும் கொலை செய்வதும், தலையை கொய்வதும் நடந்த அந்த காலத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த புத்த மற்றும் ஜைன மற்றும் ஆசிவக சமயத்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைக் காடுகளில் தஞ்சம் அடைந்தார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள  புத்த சமயத்தவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையிலும் மேல் செங்கம், மற்றும் ஜவ்வாது மலையின் அடிவாரத்திலும் தஞ்சம் அடைந்தார்கள். இந்த இரு பழங்குடிகளிடம் இன்றும் இந்து மத தெய்வங்களை வழிபடும் பழக்கம் இல்லாமல் இருப்பதையும், தங்கள் பழங்குடிகள் இனத்தை சார்ந்தவர்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் சென்று எவராவது உங்களின் பூர்வீகம் எது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்றால் ஜவ்வாது மலையில் உள்ளவர்கள் தயங்காமல் தங்களின் பூர்வீகம் காஞ்சிபுரம் என்பார்கள். அதேபால் சேர்வராயன் மலையில் உள்ளவர்கள் தங்களின் பூர்வீகம் எது என்றால் அவர்களும் தயங்காமல் தங்களின் பூர்வீகம் திருவண்ணாமலை என்பார்கள். இதற்கு பின் உள்ள வரலாற்று உண்மை அவர்களுக்குத் தெரியாது

அதே வேளையில் உங்களின் சாதி என்ன என்று கேட்டால் அதற்கும் அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது. ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் இந்து மதம் நிர்ணயித்த சாதி என்னும் கருத்தியலை எதிர்த்த சமயங்களான ஆசிவகம், மற்றும் பௌத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு சாதி கிடையாது என்பதாலும் அவர்களால் தங்களுக்கான சாதி தெரியாது. தங்கள் பழங்குடிகள் என தங்களின் இனத்தை மட்டுமே அவர்கள் சொல்கின்றனர்.



 இந்த இரண்டு மலைகளில் வாழும் பழங்குடிகள் அல்லது பூர்வ பௌத்தர்கள் யாராவது பாவம் செய்தவர்களாகவோ அல்லது குலத்துக்கு இழுக்கு தேடி தந்தவர்களாகவோ  இருந்தால் இன்றும் இந்த இரண்டு மலையில் வாழும் பழங்குடிகளும் சம்பந்தப்பட்ட நபரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து மலை உச்சியில் சில சடங்குகளை செய்வார்கள். அது தீ பிரசங்கத்தில் புத்தர் உபதேசித்த சடங்குஅதில் சில பாலி மொழிச் சொற்களும் திரும்ப திரும்ப வரும். அதற்கான பொருள்கூட அவர்களுக்குத் தெரியாது

இறுதியாக அந்த சடங்கின் நெருப்பிலிருந்து எரியூட்டப்பட்ட விளக்கை அனையாமல் தங்களின் வாழிடத்துக்கு கொண்டு சேர்த்தால் அவர் புனிதடைந்து விட்டதாகவும் நம்புகின்றனர். இந்த நிகழ்வும் புத்தர் நிகழத்திய தீ பிரசங்கத்தை போன்றே இருப்பதும், தங்களின் பாவத்தை தொலைத்து புது பிறவி எடுக்க இந்த நிகழ்வை பழங்குடிகள் மேற்கொள்வதையும் புத்த சமய நோக்கிலே இருப்பதை புரிந்து கொள்ளவும் பொருத்திப் பார்க்கவும் கோருகின்றேன்.

எனது உடலும் 
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்பனம்
கொடுக்கும் குணம
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்

என்னும் இந்த வரிகளில்  ஆதித்திய பரியாய சுக்தத்தின் படி, நான் எனது என்னும் பற்று அறுத்து, ஐம்புலன்களும் புனிதம் அடைந்த பின் ஒரு மனிதனின் உயிர், உடல், பொருள் ஆகிய அனைத்தின் மீதும் பற்று அறுந்து அதனையும் தானம் அளிக்கும் மனோ பாவத்தில் இருப்பார் என்பதற்கான விளக்கமாகும். இந்த விளக்கத்தைத்தான் பாடலின் துவக்க வரிகளாக அமைத்து இருப்பார். இளையராஜா. 



இந்த வரிகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில், மகா பாரதத்தில் வரும்  புத்த அரசனான கர்ணனிடம் சென்று உனது உயிரைத் தா என்று கேட்க்கும் பொழுது அவரால் மகிழ்ந்து தர முடிந்தது எனில். அவர் உயிர் உடல், பொருள் என்னும் பற்று அறுந்த நிலையில் வாழ்ந்தார் என்பதை உணர முடிகின்றதல்லவா. அந்த நிலையைத்தான் இளையராஜா இந்த பாடலின் துவக்கமாகக் கொண்டு பண் அமைத்திருக்கின்றார்.


நிறைவாக  இளையராஜாவின் இரமண மாலையில் வரும் எனது உடலும் உயிரும் பொருளும் சகலம் இரணார்பனம் என்னும் பாடலில் மேலே கூறிய புத்த சமய ( தீ பிரசங்கம் )கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ள பாடலாகும்




[1] . Siragu Tamil Online Magazine, News

[2]  Anandabhairavi – Wikipedia


[4] . அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2. தொகுப்பு ஞான அலாய்சிஸ்




[1] . https://www.yarl.com/forum3



No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்