Monday, October 9, 2017

டீ குடிக்கலாமா

டீ குடிக்கலாமா?

      நம்மில் பெரும்பாலானவர்கள், தமது நட்பை, அன்பை, நன்றியை, நெகிழ்சியை, மற்றவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, அல்லது உடன் இருப்பவர்களுக்கோ, தெரியப்படுத்த வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை, டீ குடிக்கலாமா?. நம்முடைய வீட்டிற்கு வருகின்றவர்களை அன்போடு உபசரிக்கும் போது அதில் கட்டாயம் குடிப்பதற்கென்று காபி அல்லது தேனீர் இருக்கும்.

      ஆண்கள் எனில் அவர்கள் தேனீர் அருந்தும் போது, ஆறாம் விரலாய் வெண்சுருட்டு அல்லது பீடி, புகைந்து காற்றில் பரவிக்கொண்டிருக்கும், அல்லது புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் ஏதேனும் சிறுகடி, அல்லது தின்பண்டத்தை(பிஸ்கெட், பொறை, வர்க்கி) சாப்பிட்டு விட்டு பின்னர் சூடாக தேனீர் அருந்துவார்கள். இவையெல்லாம் நாம் காண்கின்ற, நமக்கு நிகழ்கின்ற , அல்லது நாமே செய்கின்ற அன்றாட நிகழ்வுகள். இதையெல்லாமா கட்டுரையாக எழுதுவார்கள் என்பவர்களுக்கு, நாம் அருந்தும் ஒரு குவலை ( அது கண்ணாடி குவலை அல்லது துரு பிடிக்காத இரும்புக் குவலை, வெள்ளிக் குவலை, வெங்கலக் குவலை, பிளாஸ்டிக் குவலை) என எதுவாக இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கின்ற அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் நம்மில் பல பேருக்கு தெரியாது. அதை சொல்லத்தான் இந்த கட்டுரை.

      தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. முதல் கதை, கி.மு. 2737- ஆம் ஆண்டு ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன் சுடு நீர் அருந்திக் கொண்டிருக்கும் போது, தற்செயலாய் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து ஒரு இலை அந்த சுடு நீரில் விழுந்ததாகவும் அதனால் நீரின் நிறம் மாறியதையும் சுவை உண்டானதையும் அதை குடித்ததும் ஒரு புத்துணர்ச்சி உண்டானதாகவும் ஒரு கதை தேனீர் குறித்த தகவலை தேடும் போது இனையத்தில் கிடைத்தது.

      சீனாவில் ஒரு பௌத்த துறவி தியானம் செய்யும் பொழுது அடிக்கடி துாங்கிவிடுவதால், அவரால் ஞானம் அடைய முடியவில்லை என்று வருந்தினாராம், எனவே துாங்காமல் இருப்பதற்காக, தனது இமைகளை வெட்டி வீசி விட்டு தியானம் செய்து ஞானத்தை அடைந்தாரம், அவர் இமைகளை வீசிய இடத்தில் சில நாட்கள் கழித்து ஒரு செடி முளைத்தது அந்த செடிதான் தேநீர் செடி, அதன் இலையிலிருந்து உண்டான தேநீர் அருந்துவோர்க்கு துாக்கம் போய் உற்சாகம் வருகின்றது என ஒரு கதையை நான் சிறுவயதில் இருந்த போது படித்தது.
     
ஆக இரண்டு கதைகளிலும் சீன வருவதால் தேனீர் சீனாவில் தோன்றி சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாகஇங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில்இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியதுஇன்று உலகில் 52 நாடுகளில் தேனீர் பயிரிடப்படுகின்றது. ,

      பொதுவாக தேனீர் இலைகளை வைத்து வகைப்படுத்தபடுகின்றது, உலகில் 3 வகையான தேனீர் பயிரிடப்படுகின்றது,

1.    அசாம் வகை தேனீர், ( இலைகள் பெரிய அளவில் இருக்கும்)
2.    சீனா வகை தேனீர் ( இலை சிறியதாக இருக்கும்.
3.    கம்போட் வகை ( இலைகள் நடுத்தர அளவில் இருக்கும். இந்த 3 வகையான தேனீர் இலைகளில் இருந்து ,
                         i.   கருந்தேநீர்,
                         ii.   ஊலாங்கு தேநீர்,
                        iii.   பசுந்தேநீர்,
                        iv.   வெண்தேநீர்,
                         v.   புவார் தேநீர்
என ஐந்து வகையான தேநீர்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று உலகில் மக்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேனீர் மட்டும்தான். ஏழைகளுக்கு என ஒரு வகையான தேனீரும், நடுத்தர மக்களுக்கு, பணக்காரர்களுக்கு, மற்றும் மிக பெரும் பணக்காரர்களுக்கு என ஒவ்வொரு வகையான தேனீர் என தரம் பிரிக்கப்பட்டு தனது அந்தஸ்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நமக்கு பெரும்பாலும் தேயிலை என்று மட்டுமே தெரியும், உண்மையில் தேயிலை ஒரு மர வகை பயிராகும், தேயிலையின் கொழுந்து மட்டுமே நமக்கு பயன்படுகின்ற பொருளாக இருப்பதால், கொழுந்து பரிப்பதற்காகவும், நம்முடைய வசதிக்காவும், அதிக கொழுந்துகளை பறிப்பதற்காக தேனீர் செடி வகையாக பராமரித்து வறப்படுகின்றது.


      1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சுவை, மனம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றால்  உலகப் புகழ்பெற்ற தேயிலைகள் ஆகும்.

      இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டிலிருந்து தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் டிசம்பர் 15ஆம் தேதியை உலக தேயிலை தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

      இவையாவும் தேயிலை குறித்தான அடிப்படை செய்திகள். ஆனால் இன்று வரையிலும் சரித்திரப் புகழ்பெற்ற சம்பவமாய், சந்தைப்படுத்துதலில் பேசப்படுகின்ற நிகழ்வு தேனிரை வணிகமயப்படுத்தியதுதான். ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒரு பிரிவினரை இலக்காக வைத்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அளவுக்கான தேனீர் துாளை, இலவசமாக கொடுத்திருக்கின்றனர் தேனீர் விற்பனையாளர்கள். அவ்வாறு இலவசமாக பெற்றவர்கள் தங்களுக்கும் தங்களின் நண்பர்கள், சுற்றத்தார்கள், உறவினர்கள் என அனைவருக்குமே அந்த தேனீர் துாள் இருக்கும் வரை தாங்கள் தேனீர் தயாரித்து,  தாங்களும் குடித்து மற்றவர்களையும் குடிக்க வைத்ததன் விளைவாக, அவர்கள் தேனீர் சுவைக்கு தங்களையும் தங்களது மனதையும் பழக்கப்படுத்திக் கொண்ட காரணத்தால் ஒரு மாதத்திற்கு பிறகு, அவர்கள் டீ துாளை விலை கொடுத்து வாங்கி குடிக்கப் பழக்கப்படுத்தி கொண்டனர் தேனீர் துாள் விற்பனையாளர்கள். ஒரிரு மாதங்களுக்குப் பிறகு விற்பனையாளர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கெல்லாம் வாங்க ஆரம்பித்தனர். சந்தையிலும் தேனீர் துாள் விற்பனை உச்சத்தை எட்டியது.
 .
      தேனீர் துாள் விற்பனையாளர்கள், முதலில் தேனீர் துாளை அரசர்கள், சிற்றரசர்களுக்கும், அதன்பின் ஜமின்தார்கள், மற்றும் பிரபுகளுக்கும், இலவசமாக கொடுத்து அவர்களின் வழியாக தங்களின் வணிகத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொண்டனர். இது நடந்தது 1940க்கு முன்பு. அதன் பின் வெகு மக்களை எளிதாக சென்று சேரும் விதமாக அரசு அலுவர்களை, ஆசிரியர்களை இலக்காக கொண்டு அவர்களுக்கும் இலவசமாகவே தேனீர் கொடுத்து பழக்கினர். இது நடந்தது 1970 களில். அதற்கு பின்னர் வீதிதோறும் தேனீர் கடைகள் பெருகி, தேனீர் வணிகம் எட்டமுடியாத உயரத்துக்கு சென்று விட்டது. என்பது வணிக வரலாறு. இன்று உலகில் அதிக தேனீர் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது, அதேபோல, தேனீர் அருந்துவதிலும் இந்தியா்கள் முதலிடம் வகிக்கின்றனர். இவையெல்லாம்  தேனீர் வணிக சந்தையில் தனது வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்ட அல்லது வலிமை படுத்திக் கொள்வதற்காக, எடுக்கப்பட்ட முயற்சிகள்.

      சமிபத்தில் சந்தைக்கு வந்து பசுந்தேனீர், எலுமிச்சைத் தேனீர் முதலியன எல்லாம், சர்க்கரை நோயாளிகள் பெருகிப் போனதால், சரிவுக்கு உள்ளான தேனீர் சந்தையை உயர்த்துவதற்காக செய்த வணிக யுக்திதான். நமது நாட்டில் கழிவுத்துாள், தேனீரை நமக்கு தந்து உயர்தரமான வெண்மை தேனீர், பசுந்தேனீர், போன்ற தரமான, உயர்தரமான, தேனீர் துளையெல்லாம் மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தவர்கள், தங்களின் வணிக சந்தை சரிவுக்கு உள்ளானதால், பசுமை தேனீரை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

      இவ்வாறு இலவசமாக கொடுத்து பின்பு வணிகப் பொருளாக்கியதில் நடந்த சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் சிலவற்றை  நினைவுபடுத்திக் கொள்வோம். முதலாவதாக, நமது வாழ்வும், உணவு முறையும் நம் சுற்றுப்புறத்தையும், சூழலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. தேனீர் அறிமுகமாவதற்கு முன்பு, வெப்ப மண்டல பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள், அதன் வெயிலுக்கு ஏற்றவகையில், காலையில் எழுந்தது முதல், இரவு வரையிலும், எப்பொழுதெல்லாம் மிகுதியான தாகம் வருகின்றதோ, அப்பொழுதும், உணவுப் பழக்கமாகவும் பானமாகவும்,  நீராகாரம், நீர் மோர், தயிர் மோர், இளநீர், நன்னாரி சாறு, போன்ற தாகம் தனிக்கும் பானங்களையும், அருந்தினர். இவை நமது சூழலுக்கு ஏற்ற செலவில்லாத பானங்களாகும். மாறாக,
      சமூகத்தில் பழைய உணவு முறையில் இருந்த நீராகாரம், நீர்மோர், தயிர் மோர், இளநீர், நன்னாரி, போன்றவைகள் ஏழ்மையின் அடையாளமாகவும், பழைமையின் அடையாளமாகவும், தேனீர் அருந்துவது என்பது வளமையின் அடையாளமாகவும் புதுமையின் அடையாளமாகவும் மாறிப்போனது. இதனால் தேனீரும், காபியும் நமது கலாச்சாரத்தில் இரண்டற கலந்து பிரிக்க இயலாத நிலைக்கு சென்றுவிட்டன.
      `முதலில் தேனீர் எந்த வகையான பானம் என்பதை பார்ப்போம், அடிப்படையில் தேனீர் குடித்தால் புத்துனர்ச்சி வருகின்றது, இதய நோய்கள் வருவதில்லை என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், அடிப்படையில் தேனீர் பசியின்மையை உருவாக்குகின்ற ஒரு பானம், இதனை அதிகமாக அருந்தும் போது பசியின்மையை உருவாக்கும், மேலும் நாம் 3 வேலை நேரா நேரத்திற்க்கு சாப்பிட்டு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டதால், பசியில்லை என்றாலும் சாப்பிட பழகியதன் விளைவாக இன்று சர்க்கரை நோய் 80 சதவிகித மக்களுக்கு உள்ளதாக ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. இந்த அளவு சர்க்கரை நோய் உயர்வதற்க்கு அடிப்படை காரணம் தேனீர் என்பதை ஊடகங்களும், நாமும் வசதியாக மறந்து விட்டோம்.
·         அடுத்ததாக தேனீர் மற்றும் காபி நம் வாழ்வில் பழக்கமான பின், அதனுடன் இலவச இனைப்பாக வெள்ளை சர்க்கரை அல்லது சீமை சர்க்கரை, ஆகியவையும் நம்முடன் வந்து இணைந்து கொண்டன. அதற்க்கு முன்பு வரை நாம் இனிப்புக்காக, வெள்ளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தோம், வெல்லம் என்பது மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகின்ற ஒரு பொருள். வெள்ளம் சாப்பிட்டால் நமது உடலில் வெளியேறாமல் தேங்கி நிற்கின்ற கழிவுகளை வெளியில் அனுப்பி நமது உடலை சுத்தம் செய்யும் பணியை வெல்லம் செய்கின்றன. ஆனால் சீமை சர்க்கரை, நமது உடலை நஞ்சாக்கும் பணியை செய்கின்றன.
·         தேனீருடன் சாப்பிடுவதற்கென, பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு பொருளான மைதா மற்றும் சீனி கொண்டு தயாரிக்கும் நம் உடல் நலனுக்கு ஒவ்வாத, பிஸ்கெட்டும் நம் வாழ்வில் வந்து இணைந்து கொண்டன.
·         தேனீர் குடித்ததால் பசியின்மை ஏற்பட்டு, அதனால் கனையத்தில் செயல் தன்மை குறைந்து, இறுதியில் நீரிழிவு என்று சொல்லப்படுகின்ற சர்க்கரை நோய்க்கு நம்மை கொண்டு சென்று, நம்மையெல்லாம் நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதையொட்டி, சர்க்கரை நோய்க்கான மருத்துவம், மற்றும் மருந்துப் பொருட்கள், என ஒரு பிராமாண்ட வலை பின்னல் வழியாக நமது பணத்தை பிடுங்கும் பணியின் துவக்கப் புள்ளியாக தேனீரும் காபியும் இருக்கின்றன.
·         பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளை நமக்கு அறிமுகப்படுத்தும் பொழுது அதை ஒட்டி ஒரு நுகர்வு நோக்கில் பெரிய வலை பின்னப்படுகின்றது என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை டீ, காபியை இலவசமாக கொடுத்து சந்தையை தக்க வைத்துக் கொண்டபின் அதன் வழியாக நமது பணத்தை எந்த வகையில் எல்லாம் பிடுங்க முடியும் என திட்டமிட்டு நம்மிடமிருந்து நமது பணத்தை நமக்கே தெரியாமல் சுரண்டும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன பன்னாட்டு நிறுவனங்களின் வசமிருக்கின்ற தேனீர் மற்றும் காபி உற்பத்தி மற்றும் விற்பனை சார் நிறுவனங்கள்.
இவையெல்லாம் ஏதோ தேனீருக்கு மட்டுமே நடப்பதாகவும், காபி உடலுக்கு மிகவும் நல்லதென்றும் நினைக்க வேண்டாம், உண்மையில் காபியை சுற்றிலும் ஒரு வலை பின்னப்பட்டிருக்கின்றது. முதலில் காபியிலும் தேனீரில் உள்ளதைப் போலவே பல வகைகள் இருக்கின்றன. என்பதையும், காபி பிரேசில் நாட்டில் உள்ள கால்டீ என்னும் ஆடு வளர்ப்பவனால் கண்டறியப்பட்டது என்பதையும் நினைவில் கொள்வோம், காபி செடியை மேய்ந்து வந்த ஆடுகள் உற்சாகத்தோடு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பதையும், இரவில் உறங்காமல் இருப்பதையும் கண்டறிந்து அதன் தழைகளை கண்டு பிடித்து, அதன் சாறை மனிதர்களுக்கும் குடிக்க பழக்கப்படுத்தியதாக வரலாறு சொல்கின்றது.
      காபி குடிப்பதால், செரிமானம் மிகும், அதே நேரத்தில் உடலின் சம நிலை பாதிக்கப்பட்டு உறக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டு அது மன நிலை பாதிப்பை உருவாக்குகின்றது, இன்று இந்தியாவில் 80 சதவிகிதம் மக்கள் துாக்கமின்மை, மற்றும் மன அமைதியின்மை நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரம் சொல்கின்றது. அதற்காக காரணத்தில் காபியின் பங்கும் இருக்கின்றது என்பது மறுக்க இயலாத உண்மை. உண்மையில் தேனீர் என்பது ஏழைகள் மற்றும் உடல் உழைப்பாளர்களின் பானமாகவும், காபி என்பது உயர்சாதியினர் மற்றும் பணக்காரர்களின் பானமாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது இந்தியாவில்.
      ஒரு பொருளை நாம் ஏற்றுமதி செய்யும் பொழுது, அல்லது விற்பனைக்கு வரும் பொழுது, அந்த பொருள் உற்பத்தி செய்வதற்க்கு எடுத்துக் கொண்ட தண்ணீரையும் சேர்த்து நாம் விற்பனை செய்கின்றோம் என்னும் கருத்தாக்கமே புலப்படாத் தண்ணீர் என அழைக்கப்படுகின்றது, அதன்படி இந்தியாவில் ஒரு கப் காபி தயாரிக்க, அதாவது, 120 மில்லி கிராம் காபியை உற்பத்தி செய்ய 140 லிட்டர் தண்ணீரை செலவழிக்கின்றோம், அதே போல் ஒரு கப் டீயை (250மில்லி கிராம்) உற்பத்தி செய்ய,  34 லிட்டர் நீரை செலவழிக்கின்றோம், அதாவது டீ யை விட எட்டு மடங்கு அதிகமான நீரை செலவழித்து காபி உற்பத்தி செய்யப்படுகின்றது.
      எனில் டீ உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் சொல்கின்றது, ஆண்டொன்றுக்கு சராசரியாக, டீ துாளை ஏற்றுமதி செய்வதின் வழியாக தண்ணீரையும் மேலை நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கின்றது. உதாரணமாக, 2014 ஆண்டின் இந்தியாவின் தேயிலை மொத்த உற்பத்தி, 12,07,310 மெட்ரிக் டன் ஆகும் அதாவது 120,73,10,000 கிலோ ஆகும். அதாவது 1000 மில்லி லிட்டர் என்பது ஒரு லிட்டர் கொண்டால், நாம் அயல்நாடுகளுக்கு தேயிலையின் வாயிலாக எவ்வளவு நீரை ஏற்றுமதி செய்கின்றோம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 2014 ஆண்டின் இந்தியாவின் மொத்த தேயிலை ஏற்றுமதி 2,07,440 மெட்ரிக் டன் என்பதையும், அதன் வழியாக இந்தியா மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும் தண்ணீர் எவ்வளவு என்பதையும் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி உற்பத்தி 3,27,000 மெட்ரிக் டன். ஏற்றுமதி செய்த அளவு 1,72,858 அளவுள்ள மெட்ரிக் டன் ஆகும், இதன் மூலம், இந்தியாவில் இருந்து காபி, மற்றும் தேனீரை துளை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக  கணகிட முடியாத அளவுக்கான நீரையும் சேர்த்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றோம் என்பது யதார்த்தமான உண்மையாக உள்ளது.
      அதே நேரத்தில் இந்தியாவில் வட மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளதென்றும், தண்ணீர் கொண்டு வருவதற்காகவே, தண்ணீர் மனைவிகள் என ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை உள்ளதையும், தண்ணீர் பிடிக்க செல்லும் பத்து வயது சிறுமிகள் கூட கிணற்றில் தவறி விழுவதையும் பத்திரிகை செய்தியாவே படித்து கடந்து செல்கின்றோம், நாம், அத்தகைய தண்ணீர் பஞ்சத்திற்க்கு பின்னால் நம் நாட்டின் தண்ணீர் இவ்வாறு மேலை நாடுகளுக்கு பொருளாக ஏற்றுமதியாகின்றது என்றும் அதுவும் நம்முடைய தண்ணீர் பஞ்சத்திற்க்கு ஒரு காரணம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவும், மற்றவர்களுக்கு சொல்லவும் மறந்து போகின்றோம்.
      இந்தியப் பெண்கள் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் தண்ணீருக்காவே செலவழிக்கின்றார்கள் என்கின்ற செய்திக்கு பின்னால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பணக்காரர்களின் பணப்பயிர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்றும், அது மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது என்ற உண்மையையும் இங்கு சொல்வதற்க்கு யாருமில்லை.
      இறுதியாக, 3 லட்சம் ஆண்டுகளாக இந்தியாவில் பெய்து கொண்டிருந்த பருவ மழையை நாம் 150 ஆண்டுகளாக தவற விட்டுக் கொண்டிருக்கின்றோம், தேயிலை மற்றும் காப்பி உற்பத்திக்காக மலைகளில் மீது இருந்த உயரமான மரங்களையெல்லாம் வெட்டி தேனீர் மற்றும் காபி பயிரிட ஆரம்பித்ததால். உண்மையில் உயரமான மலைகளுக்கு மேல் செல்லும் மேகத்திலிருந்து ஈரப்பதத்தை ஈர்க்க மரங்கள் தேவை அதுதான் மழையாக பூமிக்கு வருகின்றது, அவ்வாறு மேகத்திலிருந்து ஈரப்பத்ததை ஈரக்க மரங்கள் மலைகளின் மேல் அவை காற்றோடிகளாக வானில் மிதந்து கொண்டே செல்கின்றன. அதனால் இந்தியாவிற்க்கு பருவ மழை என்பது இல்லாமல் போய் புயல்களால் மட்டுமே மழை பெய்கின்றது, அல்லது காற்றழுத்த தாழ்வு நிலையினால் மட்டுமே மழை பெறுகின்றோம்,
இமயமலை தொடங்கி நீலகிரி மலை வரைக்கும் அனைத்து மலைவாழிடங்களிலும், தேனீரும் , காப்பியும் போட்டி போட்டிக் கொண்டு உற்பத்தியாகின்றது, இதன் விளைவு இங்கெல்லாம் மலைகளின் மீது உயரமான மரங்கள்  இல்லாததால் பருவ மழை பொய்த்து போகின்றது. உலகின் அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சியிலும் குடி நீர் பஞ்சம் உள்ளது என்றும், அங்கும் மழை பொழிவு குறைந்து கொண்டு வருகின்றது என்பதையும் படிக்கும் பொழுது அதற்கான காரணங்கள் நமக்கு தெரிவதில்லை, இமய மலையில் உள்ள பனி பாறைகள் அதிக அளவில் கரைந்து கொண்டு வருகின்றன, இன்னும் 60 ஆண்டுகளில் அவை முற்றிலும் கரைந்து விடும் என ஒரு தகவலை படிக்கும் பொழுது நாம் சூரியனின் மேல் பழியை போடுகின்றோம், வெய்யில் அடிப்பதால் பனிப்பாறைகள் கரைந்து நீராக மாறுகின்றது என நினைத்துக் கொள்கின்றோம், உண்மையில் அங்கெல்லாம் தேயிலை மற்றும் காபிக்காக மலைகளில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டதால், பருவ மழை தவறியதால் பனி பாறைகள் உருகுகின்றன என்பதை நமக்கு சொல்ல எந்த ஊடகங்களும் தயாராக இல்லை.
உலகின் மொத்த தேனீர் வணிகத்தில் 31 சதவிகிதம் இந்தியாவின் வசம்  உள்ளது. இந்திய தேனீர் வணிகம் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி கொள்முதலை கொண்டிருக்கின்றது, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தேயிலை உற்பத்திக்கான நிலப்பரப்பு 250 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது எனில் அந்த அளவுக்கு மலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்களாக ஆக்கப்பட்டதால் பருவ மழையை இழந்து தவிக்கின்றோம் என்பதுதானே நிதர்சனமான உண்மை. இந்தியாவில் உள்ள இமயமலைச் சாரலும், தென்னிந்தியாவில் உள்ள மேற்கு மலைத் தொடரும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ மழை பொழிவுக்கு முக்கிய காரணிகளாககும், இவை இரண்டு மலைத் தொடர்களும், தேனீர் மற்றும் காபி உற்பத்தியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தேயிலைக்காடு மற்றும் காபி காடுகளாக உருமாற்றப்பட்டிருக்கின்றது.
      இவ்வாறு மலைகளை காபி காடுகளாகவும், தேயிலை காடுகளாகவும் மாற்றுவதற்காகவே, அங்குள்ள மலை வாழ் மக்களை வெளியேற்றும் பணியை சுற்று சூழல் அமைச்சகம் செய்து வருகின்றது, காடு வளர்ப்புக்கு தடையாக இருப்பதாக அங்குள்ள மலை வாழ் மக்களை முன்னிருத்தி, வெளியேற்ற முனைப்பு காட்டுகின்றது. அவர்கள்தான் மரங்களை அழிக்கின்றார்கள் அதனால்தான் இந்தியாவில் சுற்றுசூழல் பாதிக்கின்றது என கதை கட்டுகின்றது. உண்மையில் மலை வாழ் மக்கள், மரங்களை வெட்டுவதில்லை, காடுகளை அழிப்பதில்லை.
      அதே போல் ஒரு நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையில் சுற்றுசூழல் சார்ந்த விஷயங்களை கண்கிடுவதில்லை என்று சொல்கின்றார். எழுத்தாளர் பாமயன், அது முற்றிலும் உண்மை, ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடும் முறையில் இங்கு பணம் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது, அதை தவிர, நாட்டின் இயற்கை வளம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு தேவையான பணிகளை செய்வது போன்றவற்றிக்கு அளிப்பதில்லை. அந்த வகையிலும் சுற்று சூழல் காப்பகம் போன்ற துறைகளும் மலைகளின் மீது மரங்களின் அவசியத்தை உணராமல் தேனீர் வளர்ப்புக்கு தாரை வார்க்கின்றன.
      இந்தியா போன்ற விவசாயத்தை நம்பி இருக்கின்ற  நாடுகளில் மழை மட்டுமே முக்கிய வாழ்வாதாரம் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருந்தும் மழை பொழிவிற்க்கு முக்கிய காரணமாக இருக்கின்ற மரங்கள், வனங்கள், மலைகள், காடுகள் போன்றவற்றை காப்பாற்றாமல் அழித்துக் கொண்டிருப்பது, ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு சமம் என்பதை நம்மில் யாரும் உணர்ந்தவர்களாக இல்லை. நாம் உணர மறந்த உண்மையை நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்களும் உணர வில்லை என்பதும் மறுக்க இயலாத உண்மை.
      இந்த சூழலில் மழை பொழிவு குறைவதையும், பருவ நிலை மாற்றத்தையும், இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் உயர்வதையும், தேனீர் மற்றும் காப்பி உற்பத்தியோடும், இனைத்து பார்க்க வேண்டியதை காலத்தின் கட்டாயமாக்க வேண்டும்.

      மழை பொய்த்து போகாமல் பருவ மழை பொழிவிற்காக, மலைகளின் மீது மரங்களை வளர்க்க வேண்டும், தேனீர் மற்றும் காபி ஆகிய பயிர்கள் உவர் மண், கரடு மண், சரளை மண் போன்ற மண்ணிலும் பயிரிடக்கூடியவை என்பதால், சமவெளியில் அவைகளை பயிரிடுவதற்கான தொழில் நுட்பத்தை வேளாண் துறையினர் கண்டறிந்து பரவலாக்க வேண்டும், மலைகளின் மீது காடுகளையும், மரங்களையும் பயிரிட்டு மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பதை உணர வேண்டும்.
      நிறைவாக இந்த மண்ணிலிருந்து ஏற்றுமதியாகும் ஒவ்வொரு கிராம் தேனீர் மற்றும் காபி துாளுக்கு பின்னால், இந்த மண்ணிலிருந்து மறைமுகமா தண்ணீரும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது, என்ற உண்மை ஆட்சியாளர்களுக்கு உணர்த்ப்பட வேண்டும். மேலும் நாம் அருந்துகின்ற ஒவ்வொரு காபி மற்றும் தேனீருக்கு பின்னால் இந்த மண்ணை வறட்சிக்குள்ளாக்கும் திட்டமும், மழை பொழிவிக்கும் மரங்களை வெட்டி தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்படுவதால், மக்களின் வறுமை விகிதம் அதிகமாகின்றது என்ற எண்ணமும் உருவாக வேண்டும்.


            ஒரு செடியிலிருந்து பூவை பறிக்கும் நம்முடைய செயல் கூட இந்த உலகின் சுற்றுசூழல் மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்னும் போது, உலகின் உயிர் கோள மண்டலங்களின் பாதுகாப்பு மையங்களாக விளங்கும், இமயமலைத் தொடர், மற்றும் மேற்கு தொடர்சி மலை ஆகியவைகளில் உள்ள மரங்களை வெட்டி உருவாக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் உலகின் பல்லுயிர் சூழல் மண்டலம் பாதிக்கப்படுவதால் அதில் மனிதனும் பாதிக்கப்டுகின்றான், என்ற உண்மையை உணர்ந்தவர்கள், உணராதவர்களுக்கு உணர்த்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். மலைகள் மழை மேகங்களால் சூழப்பட்டு மழை மண்டலங்களாக உருமாற்றம் அடைய வேண்டும்.      

எனது சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும் நுாலில் உள்ள கட்டுரை. மீள் பதிவு

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்