புத்தச் சமயத் தாவரங்கள் - 3
நிகழ்வு – 8
சித்தார்த்தரின் திருமணம்:
சித்தார்த்தரின் திருமணம்
குறித்தச் செய்திகளை மிக விரிவாக விவரிக்கின்றது லலிதவிஸ்தாரா சூக்தம். இது மகாயான
புத்தப் பிரிவைச் சேர்ந்த சூக்தமாகும். முழுவதும் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதாகும்.
இந்த சூக்தம் 27 அத்தியாங்களைக் கொண்டது. இந்த சூக்தத்தில் புத்தர் தனது முந்தையப்
பிறப்பில் இருந்து சித்தார்த்தராக பிறந்து தனது முதல் போதனையை சாரனாத்தில் போதித்தது
வரை இடம் பெற்றுள்ளது. லலிதவிஸ்தாரா சூக்தத்தின் 12 வது அத்தியாயத்திம் சித்தார்த்தரின்
திருமணம் குறித்த செய்திகளை மிக விரிவாக விவரிக்கின்றது.
சித்தார்த்தருக்கு 16 வயது
துவங்கியதும் அவருடைய தந்தை சுத்தோதனருக்கு அமைச்சர்களும் அவை மூத்தவர்களும் ஆலோசனை
சொல்கின்றனர். திருமண வயதில் திருமணத்தை செய்து வைப்பதால் இளவரசரின் துறவியாகும் எண்ணம்
சற்றேத் தள்ளிப்போகும் என்கின்றனர். அவர்களின் யோசனை, தன் பிரியத்துக்குரிய மகன் எங்கே
தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவானோ என்னும் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த சுத்தோதனருக்கு
சற்றே மகிழ்ச்சியளித்தது. அதன்படி அவருக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
அந்த சுயம்வரத்தில் 500 இளம்பெண்கள் சாக்கிய நாட்டிலிருந்தும் பக்கத்து தேசமான கோலியத்
நாட்டிலிருந்தும் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடும் கலந்து கொள்கின்றனர்.
அவ்வாறு கலந்து கொண்டவர்களுக்கு இளவரசர் சித்தார்த்தர் அவரவர் விரும்புகின்ற பரிசுகளையும்,
துணிகளையும், அணிகலன்களையும், தங்கம், வெள்ளி போன்றவற்றையும் தந்து அனுப்பி வைக்கின்றார்.
இவ்வாறு சிறப்பாக நடைபெற்றுக்
கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் இறுதியாக சாக்கியகுலத்தைச் சேர்ந்த தண்டபானியின் மகளான,
கோபா என்கின்ற யசோதராவும் கலந்து கொள்கின்றார். அப்போது பரிசுப் பொருட்கள் அனைத்தும்
தீர்ந்த காரணத்தால் பணியாளர்கள் வேறு சிலப் பரிசுப் பொருட்களை கொண்டுவர சென்றிருந்த
நேரத்தில் கோபா என்கின்ற யசோதரா பரிசுக்காக வந்து எதையும் சொல்லாமலும் எதையும் கேட்காமலும்
சித்தார்த்தரின் அழகையும் கருனை வடிவான அவரது கண்களையும், முகத்தையும் சூரியனைக் கானும்
அல்லியைப்போல கண்டு மெய்மறந்திருந்தார். அவரைப் பார்த்ததும் சித்தார்த்தரின் புருவம்
விரிந்து அகல கண்கொண்டு இமைக்காமல் கோபாவின் அழகையும், அடக்கத்தையும் கண்ணுற்றுக்கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை மறந்து தான் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, கோபாவுக்கு
அணிவித்தார். பின் அவரிடம் இந்தப் பரிசு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றதா எனவும்
வினவினார். கோபா வெட்கத்துடனும், நாணத்துடனும். இளநகையுடனும் மெல்ல அங்கிருந்து சென்றார்
அதன் பிறகு சித்தார்த்தரை,
அமைச்சர்களும், தந்தையும், தன் சித்தி, கௌதமியும் வந்திருந்த அழகான பெண்களில் தங்கள்
மனம் கவர்ந்தது யார் என வினவ, சாக்கிய குலத்து தண்டபாணியின் மகள் கோபா என்கின்றார்
சித்தார்த்தர். அதன் பிறகு, தண்டபானியிடம் தனது மகனுக்கு சித்தார்த்தர் பெண் கேட்ட
போது, உங்கள் மகன், எப்போதும், சாமியார், துறவு, தியானம் என சுற்றிக்கொண்டிருப்பவர்,
அவருக்கு நான் எனது பெண்னை திருமணம் செய்துவித்தால், எனது மகளைக் காப்பாற்றும் அளவுக்கு
அவருக்குள்ள ஆற்றலை நிருபிக்கட்டும் அதற்குப் பின் எனதுப் பெண்னைத் தருகின்றேன் என
பதிலளிக்கின்றார். அந்த சவாலை சித்தார்த்தர் ஏற்றுக் கொள்கின்றார்.
நிகழ்வு – 9
கௌதம புத்தரின் வாழ்க்கை
வரலாற்றை எழுதிய அனைத்து எழுத்தாளர்களிடமிருந்தும் அயோத்திதாசர் சித்தார்த்தரின் திருமணம்
குறித்தான கூடுதல் விவரங்களை தனது ஆதிவேதத்தில் தருகின்றார். அந்த விவரனைகள் சுற்றுச்சூழல்
நோக்கில் இருப்பதால், அதனையும் இங்கே பதிவிடுகின்றேன். ஆதி வேதத்தில் அயோத்திதாசர்
ஒவ்வொரு சமஸ்கிருதம் மற்றும் பாளி மொழி பெயருக்கு உண்டான தமிழ் பொருளையே இங்கே பெயர்களாக
சுட்டுகின்றார். அதனையும் அப்படியேத் தருகின்றேன்.
“ அரசபுத்திரன் எழுந்து,
யுத்த சன்னத்தராய் தனியே வெளிவந்ததைக் கண்ட அரசன் பதினாறுவயதுள்ள சிறுவனாச்சுதே என்ன
யுத்தஞ் செய்வானென்று பயந்து, ரத கஜ துரக பதாதிகளாகுஞ் சதுரங்க சேனைகளைத் தொடரவிட்டான்.
அந்த சதுரங்க சேனைகள் யாவையும், முன்னேரவிடாமல், தனியே முன்சென்று சகல அரசர்களையும்,
விற்போர், வாட்போர், மற்போர், வாகுபோரென்னும் சதுரங்க வீரத்தால் ஜெயித்து அசோதரையைக்
கைப்பற்றிக்கொண்டார்.
உடனே மலையரசனாகும் சுப்ரத்தி
( தண்டபானி) மண்முகவாகை ( சுத்தோதனர்)
அனுகி, அரசே எனது புத்திரி அசோதரை பிறந்தகாலத்தில் ஓர் பெரியோன், சாக்கைய கணிதர் வந்து
குழந்தை பிறந்த காலவரைகளைக் கணக்கிட்டு, இம்மகவை மணம்புரியும் மணாளன் மனோதிடமும், ஞானோதயனுமாக
விளங்குவதன்றி, அவன் கரங்களால் பூமியைப் பரித்து வருத்த வித்தை ( விதைகளை) விதைக்கினும்
முளைக்கும். பட்டமரத்தை நட்டினந்துளிர்க்கும். அந்தக் காட்சியே எக்காலத்திலும் நித்திய
மங்கலமாக வழங்குமென்று கூறியிருக்கின்றார். அதையும் நான் சோதிக்க வேண்டியிருக்கின்றதே
என்றான்.
அப்போது அவ்விடமிருந்தவர்களிற்
சிலர் பலதானியங்களையும் வருத்து வைத்துக்கொண்டிருந்ததுடன் பட்ட மரத்திற்கு பதிலாயப்
பூணிலா உலக்கையையுங் கொண்டுவந்து சித்தார்த்தி கரத்தில் அளித்து விதைகளை பூமியில் விதைப்பதுடன்
இப்பட்டமரமாகும் உலக்கைகோலையும் பூமியில் நட்டுங்கோளென்று வேண்டினார்கள். வாலறிஞன்
அவற்றைக் கரத்தில் ஏந்தி பூமியைத் திருத்தி விதைகளை விதைத்து உலக்கையையும் பூமியில்
ஊன்றினார். பதின் கடிகைபோதுள் பலதானியங்களும் முளை தோன்றியதுடன் உலக்கையும் கல்லாலிலைக்
கொழுந்திட்டு வளர்ந்தது. அதைக்கண்ட அரசர்களும் பெரியோர்களும் ஆட்சரியங்கொண்டு நிற்குங்கால்
மணமகன் மணாளியின் கரத்தைப்பற்றி இரதமூர்ந்து நுாதன மாளிகயைச் சேர்ந்தார்.
அவ்விடம் வந்திருந்த பெரியோர்கள்
வருத்தவித்து முளைத்ததைப் பாலி என்றும் உலக்கைக் கொழுந்துவிட்டதைப் பிண்டி என்றும்
பெயரளித்து பதினாறு வயதுக்கு மேற்பட்ட குமாரனும், பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட குமாரியும்,
சுகவாழ்க்கையுற்றதை அனுசரித்து பின்சந்ததியாரும் பதினாறு வயதுக்கு மேற்பட்ட குமரர்களுக்கும்,
பனிரண்டு வயதிற்கு மேற்பட்ட குமரிகளுக்கும் விவாகம் நியமித்து நவதானிய முளைகள் எழும்பும்
பாலிசோதனைகளோடு உலக்கையில் கல்லாலிலைகட்டி மங்கலபீடம் வகுத்துவந்தார்கள்.[3]
இன்றும் நம்முடைய திருமணச்
சடங்கின்போது, நவதானியங்களை முளைவிடுவதையும், அரசாணிக்கால் என்று சொல்லப்படுகின்ற அரசமரம்
அல்லது மூங்கிலின் கிளைகளை பூசைசெய்து மங்கல நீரால் கழுவி வழிபடுவதையும் சித்தார்த்தரின்
திருமண நிகழ்வில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நிகழ்விலிருந்து நமக்கு வரலாறாக சுட்டுகின்றார்.
பண்டிதர் அயோத்திதாசர்.
- - தொடரும்.
நன்றி - புதிய கோடாங்கி - அக்டோபர் 2019 இதழ்.
[1]
. லலிதவிஸ்தாரா
சூக்தம். 12வது அத்தியாயம்.
[3]
. அயோத்திதாசர் சிந்தனைகள். பாகம்
2. தொகுப்பாசிரியர். ஞான அலாய்சிஸ். பக்கம்
199 – 201. ( ஆதிவேதம். சித்தார்த்தரின் திருமணக்காதை
)
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDelete