Tuesday, February 6, 2018

நதியில் ஆடும் பூவனம் பாடல்

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 7 

நதியில் ஆடும் பூவனம்  பாடல்

பொதுத் தகவல்கள் :

1976  ஆம் ஆண்டு வெளியான அண்ணக்கிளி திரைப்படம் இசைஞானியாரின் முதல் திரைப்படம் என்றாலும் முதல் திரைப்படத்திலேயே இப்பொழுது நடைமுறையில் இருக்கும், டிரண்ட் வணிகத்தை உருவாக்கியப் பெருமையும் இசைஞானியையே சேரும்  ( அந்த காலத்திலேயே அண்ணக்கிளி புடவை, அண்ணக்கிளி வளையல், என விற்பனையில் வந்தமைக்கு இசைஞானியின் இசை முக்கியக் காரணம்)


 1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் திரைப்படம்  திரைப்படத்தில்  இசைஞானியார் பாடல்கள், பின்னனி இசைஎன அனைத்து நிலைகளிலும் இந்திய இசையை மட்டும் பயன்படுத்தி இந்திய இசையில் அமைந்த பாடல்களை தந்து நம்மை மகிழ்வித்திருப்பார்.


நதியில் ஆடும் பூவனம் :

நதியில் ஆடும் பூவனம் பாடல் காதல் ஓவியத்தில் இடம் பெற்ற இனிய பாடல்களில் ஒன்று. 

இந்த பாடலை எழுதியது. கவிஞர் வைரமுத்து.
பாடியவர்கள், இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி.


 அந்த பாடல் உங்களின் புரிதலுக்காக வரிகளில் இதோ,


குழு: அவித்யாநா மந்தஸ்திமிர மிர த்வீப நகரி
      ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
      தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்மஜலதௌ
      நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வரஹஸ்ய பவதி

பெண்: நதியில் ஆடும் பூவனம்
      அலைகள் வீசும் சாமரம் ( நதியில்)

ஆண்: காமன் சாலை யாவிலும்
       ஒரு தேவ ரோஜா ஊர்வலம் ( நதியில்)

பெண்: குளிக்கும் போது கூந்தலை
       தனதாடை ஆக்கும் தேவதை

ஆண்: அலையில் மிதக்கும் மாதுளை
       இவள் பிரம்ம தேவன் சாதனை

பெண்: தவங்கள் செய்யும் பூவினை
       இன்று பறித்துச் செல்லும் காமனை

ஆண்:  எதிர்த்து நின்றால் ஆஆஆ
        எதிர்த்து நின்றால் வேதனை

பெண்: அம்பு தொடுக்கும் போது நீ துனை ய்ய்ய் சோதனை ( நதியில் )

ஆண்: ஸரிநிஸா பாமரிகா
       ஸரிநிஸா பாமரிகா
       ததபமா
       மதநிஸா நிதபம
       மதநிஸா
     
       ஸாஸஸாஸ ஸஸரிநிநிதத
       தாததாத ததநி பபதத

       ரிமாதநி தபநித
       ரிஸநிதபாமக
       தாபம நிதப
       ஸாநிதப ஸஸரிரிககமமபப
       நிரிகமபா
       
       சலங்கை ஓசை போதுமே
       எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
பெண்: உதயகானம் போதுமே
       எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே

ஆண்: இரவு முழுதும் கீதமே
பெண்: நிலவின் மடியில் ஈரமே
ஆண்: விரல்கள் விருந்து கேட்குமே
பெண்: ஒரு விளக்கு விழித்துப் பார்க்குமே 
ஆண்: இதழ்கள் இதழை தேடுமே

பெண்: ஒரு கனவு படுக்கை போதுமே போதுமே….
       நதியில் ஆடும் பூவனம்
       அலைகள் வீசும் சாமரம்

ஆண்: காமன் சாலை யாவிலும்
       ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

இருவரும்: ம்ம் ஹிம் ம்ம் ம்ம்

ஒரு இசை ரசிகனாக இருந்து சொல்வதாயின் மிக டாம்பீகமான இன்னும் சற்று கூடுதலாக சொல்வதாயின் எனக்கு எவ்வளவு தெரிந்திருக்கின்றது பார் என்னும் எண்ணவோட்டத்தில் மொழியை அனுகிய நிலையில் இருந்தே இந்த பாடல் கவிஞரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே அனுமானிக்கின்றேன். 

இருப்பினும் இந்த எளிமையான பாடலை காலத்தால் அழியாத பாடலாகவும், இனிமையான பாடலாக மெருகேற்றியதும், புகழ் பெறச் செய்ததும் இசை ஞானி இளையராஜாவின் இசை என்பதை அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்வார்கள். அதற்கென ஒரு இசையமைப்பாளராய் நம் இசை ஞானி அவர்கள் நிறைய மெனக்கெட்டிருக்கின்றார் இந்த பாடல் உருவாக்கத்தின் போது.  

இந்த பாடல் கல்யாணி ராகத்தில் மத்திமசாயில்  உருவாக்கப்பட்டிருக்கின்றது.  அதிலும் பிரதி மத்திம ராகத்தின் அடிப்படையிலும் தீஸ்ரஜதி தாளக்கட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட  பாடலாகும். பொதுவாக பிரதி மத்திம ராகம் என்பது எல்லா நேரங்களிலும் பாடக்கூடிய ராகமாகும். இந்த பாடலில் கீ போர்ட்டு, சாரங்கி, வீனை, புல்லாங்குழல், செண்டை, மிருதங்கம், சலங்கை, மற்றும் தோலிசை கருவியான டிரம்ஸ் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ( இசை தொடர்பான தகவல் அளித்தது. கரிக்காத்துார் இசை. ஆசிரியர். திரு. சூசை. பாபு. தொடர்பு எண். 9786990714  அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி) 

குறியீட்டு இசை 
    1. இந்த பாடலில் கதை தலைவி நதியில் நீராடும் பொழுதும், அந்த காட்சிகளிலும் சலங்கை ஒலி கேட்க்காது. அதற்கு பின் கதைநாயகி தரையில் நடக்கும் பொழுதும் நடனமிடும் பொழுதும் சலங்கை ஒலி கேட்க்கும் வகையில் நுட்பமாக இசையமைத்திருப்பார் நம் இசைஞானி. ஏற்கனவே இந்த நுட்பத்தை பல பாடங்களிலும், பாடல்களிலும் பயன்படுத்தி இருந்தாலும், பதினாறு வயதினிலே படத்தில் வரும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாட்டுக்குப் பின் இந்த பாடலில் நீர் மற்றும் நிலம் ஆகிய இரண்டு தினைகளிலும் சலங்கை ஒலியை மிக நுட்பமாகப் பயன்படுத்தியிருப்பார்
    2.  பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலின் இறுதியில் பெண் குரலின் ஆலாபனையை இனைத்துள்ள நுட்பமானது இந்த பாடலின் மிக நுட்பமான குறியீட்டு இசையாகும். அதாவது பக்தி என்பதன் உள்ளீடு காதலும் காமம் கூட, (பிற உயிர்களை நேசித்தல் ) அதனைத் தவிர்த்து இங்கு எந்த படைப்பும் இல்லை என்பதை மிக நுட்பமான குறியீட்டு இசையால் நமக்கு உணர்த்தியிருப்பார் நம் இசை ஞானி
    3. பாடலின் இடையில்  ஆண் குரலில் பாடும் ஸ்வரஜதி மற்றும் அதனை பின் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் மிருதங்க இசை இவை இரண்டையும் காதலர்களுக்குள் நிகழும் துாண்டலும் சீண்டலும் கூடிய முன் விளையாட்டுக்கான குறியீட்டாக ஸ்வரஜதியைப் பயன்படுத்தியிருப்பார்.
    4. அதற்கு பின் ஓங்கி ஒலிக்கும் மிருதங்க இசைக்கு காதலர்களின் ஊடலையும் கூடலையும் குறியீட்டு இசையாக்கி இருப்பார். நம் இசைஞானியார்.

இசை கட்டுடைத்தல் 
  • நம் இசை ஞானியார் தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளை உடைத்து புது கட்டமைப்பை உருவாக்கும் புரட்சிகரமான சிந்தனை கொண்டவர் என்பதை இசைஅறிஞர்களும், மேற்கத்திய, கிழக்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடிக், தமிழ் இசை என அனைத்து இசை வல்லுனர்களும் ஒப்புக் கொண்ட உண்மையாக இருப்பதால், இந்த பாடலில் அவர் மேற்கொண்ட கட்டுடைப்பை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இருப்பதால் இதை சுட்டிக் காட்டுகின்றேன். 
  •  இந்த பாடலின் இடையிசையில் மிக நுட்பங்களையும் மனதோடும் இனையும் இசை பேருற்றை பெருகச் செய்திருந்தாலும் பாடலின் போது சலங்கை ஒலி அதற்குப் பின் பறை இசையின் அடவுக் குறியீடான தக் தக்க திமி தா வை பயன்படுத்தியிருப்பார். 
  •  கம்பீர ராகமான கல்யாணியில், கம்பீர இசையான பறை இசையின் அடவுக்கு அவர் .இனைத்து தொடர்ந்து கம்பீரமான பறையிசையின் தக் தக்க திமி தாவை  முழக்கமாக்கி இருப்பார். தோலிசைக் கருவிகளில் எனக்கு எந்த உயர்வு தாழ்வும் இல்லை, என்னும் மனநிலையில் மற்றவர்களுக்கு உள்ள செண்டை, மிருதங்கம், தவில், டிரம்ஸ் போன்ற தோலிசைக் கருவிகள் உயர்ந்தவை. பறை இழிவானது என்னும் கண்ணோட்டத்தையும் எண்ணவோட்டத்தையும் உடைத்திருப்பார் இந்த பாடலில். 
பிறரின் பிழைகளை சரி செய்தல்

       பொதுவில் இசைஞானியார் தான் இசையமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் மற்றும் காட்சிபடுத்துதலில் உள்ள குறைபாடுகள் மற்றவர்களுக்கு தெரியாத வகையில் பாடலுக்கான இசை மற்றும் பின்னனி இசையால் அதனை ஈடு செய்வார் என்பார்கள். அந்த வகையில் இந்த பாடலிலும் சில ஈடுகட்டளை செய்துள்ளார். அவை

  • மேட்டிமைத்தனமான பாடல் வரிகளால் கேட்பவர்களுக்கு புரியாத நிலை வரக்கூடாது என்பதற்காவே தனக்கு மிக பிடித்தமான கல்யாணி ராகத்தை இந்த பாடலுக்குத் தெரிவு செய்தது.
  •  பாடலின் துவக்கத்தில் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலைப் பயன்படுத்தி இந்த பாடலுக்கு தெய்வீகத் தன்மையை கொண்டு வர முனைந்தது. இது காட்சிப் படுத்துதலில் மற்றும் பாடலில் உள்ள வார்த்தை வறட்சிப் பிழையை சரி செய்வதற்காக இசைஞானியார் செய்த முயற்சி.
  • உதாரணமாக சொல்வதெனின், எந்த ஒரு காட்சியிலும் காலமும், இடமும் தெளிவாகத் தெரியவேண்டும். ஆனால் இந்த பாட்டை சௌந்தர்ய லகரியின் முன்னொட்டு இல்லாமல் கேட்ப்பவர்களுக்கு இது கோவிலில் பாடுகின்ற பாட்டு என்பது புரியாது. மேலும் ஏதோ ஒரு மடத்திலோ அல்லது மண்டபத்திலோ பாடுவதாகவேத் தோன்றும். அத்துடன் அந்த பாடலின் இடையில் வித்தியாசமாகச் சிலர் நாயகன் நாயகி பாடுவதை வேடிக்கைப் பார்ப்பதாக காட்டும் பொழுது இன்னும் குழப்பம் பார்ப்பவர்களுக்கு அதிகரிக்கும். இதையெல்லாம் சரி செய்யவே இசைஞானியார் சௌந்தர்ய லகரியை முன்னொட்டுப் பாடலாக இணைத்தார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  
  • வறட்சியான வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முனைந்த முயற்சியின் விளைவாகவே பாடலின் இடையில் ஆண் குரலில் வரும் சரி நிஸா என்னும் ஸ்வரஜதியும் அதற்குப் பின் வரும் மிருதங்க இசையும்.

·         இவ்வாறு பாடல் மற்றும் இயக்கம் ஆகிய இரண்டில் உள்ள பிழைகளையும் சரி செய்தே இந்த பாடலை நமக்கு தந்திருக்கின்றார். மேலும் இதைப் போன்று அவர் பல பாடல்களிலும் தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளார். இருப்பினும் இரண்டு நண்பர்களுக்காக அவர் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டிருக்கின்றார் என்பதை இந்த பாடலை கேட்க்கும் அனைவருமே உணர்ந்து கொள்ள இயலும். 




பாடலில் இடம் பெற்றுள்ள புத்த சமயக் கோட்பாடுகள்:

நதியில் ஆடும் பூவனம் பாடலில் எனக்குத் தெரிந்து எந்த புத்தசமயக் கோட்பாடுகளையும் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை. அது இரண்டு காதலர்களுக்குள் நிகழும் சாதாரண உரையாடலை இசை வடிவில் கொண்டுவந்த நம் இசைஞானியாரின் முயற்சி அவ்வளவே. அதற்க்கு மேல் அந்த பாடலில் சொல்வதற்கு எதுவும் இல்லை.

ஆனால் அந்த பாடலில் இசைஞானியார் செய்த முயற்சியின் விளைவாக புத்த சமயக் கோட்பாடுகளுக்குள் அது பொருந்திப் போகின்றது. அது ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலை இந்த பாடல் துவங்கும் முன் இனைத்தது. அதனையும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், நுட்பமாகவும், ஆலயத்தில் நடக்கும் பாடல் காட்சியின் பின் புலத்தில் இந்த மந்திரத்தை இனைத்திருப்பார். அது.
அவித்யாநா மந்தஸ்திமிர மிர த்வீப நகரி
      ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
      தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்மஜலதௌ
      நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வரஹஸ்ய பவதி –

என்னும் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலை ஏன் ஒரு காதல் பாட்டின் முன்னொட்டில் பயன்படுத்த வேண்டும் என்ற எளிய மிகச் சாதாரணமான கேள்வி இந்த பாடலை கேட்க்கும் எவருக்காவது தோன்றியிருக்குமாயின் இசைஞானியாரின் பௌத்த ஞானத்தையும், ஆர்வத்தையும் அறிந்து கொண்டிருப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

அவ்வாறு ஏன் அவர் நதியில் ஆடும் பூவனத்தின் முன்னொட்டில் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலை பயன் படுத்தினார். அதற்கான காரணம் என்ன என்ன என்பதை சற்று பின்னோக்கி சென்று பார்க்கும் போதுதான் நம்மால் புரிந்து கொள்ள இயலும். 

அதற்கு சில வரலாற்றுச் செய்திகளை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு பின்னோக்கி சென்று பார்க்க வேண்டியவர்களும், வேண்டியவைகளும். கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 
  1. ஆதி சங்கரர்
  2. சௌந்தர்ய லகரி
  3. அசுவ கோசர்
  4. சௌந்தர்ய நந்தா
  5. சௌந்தர்ய லகரி 3 வது பாடலுக்கான விளக்கம்
  6. சிந்தாமணி
  7. ஆதி சங்கரர் நிறுவிய தாந்திரிக வழிபாடுகள்
  8. யோகினிகள் மற்றும் அவர்களின் வகைகள் 
ஆதி சங்கரர்  


      அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சமயங்களான, சாங்கியம், ஆசிவகம், புத்தசம் ஜைனம் ஆகிய சமயங்கள் வரலாற்றில் செல்வாக்கு இழந்து நின்ற கால கட்டத்தில்,  குறிப்பாக புத்த சமயம் அப்போது மக்களிடம் மிகுந்த தாக்கத்தோடு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் புத்த சமயத்திற்கென தலைமைத்துவம் வாய்ந்த நபர்கள், மற்றும் அமைப்புகள், மடங்கள் நிறுவனங்கள் புரவலர்கள் என அனைவரையும் புஷ்யமித்திரன் மற்றும் அவருக்கு பின் வந்த அரசர்கள் அழித்தும், புத்த சமயத்தின் கருத்துக்கள் மக்களிடம் அதே செல்வாக்கோடு இருந்ததைக் கண்ட ஆதி சங்கரர், புத்த சமயத்தின் கருத்துக்களையும், நுால்களையும், வழிபாட்டு முறைகளையும் கொஞ்சம் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி இந்து சமயத்திற்கு கொண்டு வந்தார். 

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய சமய இனைப்பு கொள்கைளையும், கருத்தியல்களையும் அப்போதிருந்த அறிஞர்களும், வைணவ சமயத்தினரும் ஆதி சங்கரரின் தத்துவத்தை “ பிரசன்ன பௌத்தம்” என்றனர். அதாவது இந்து சமயத்துக்குள் மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தம் கருத்துக்கள் என்னும் பொருள்பட மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தம் என்றனர். ஆகவே ஆதிசங்கரரால் படைக்கப்பட்ட அனைத்தும் புத்த சமயத்திலிருந்து கடன் வாங்கியவை. அல்லது புத்த கருத்துக்களின் சாராம்சம் அல்லது தழுவல் என்ற புரிதலுடன் மேற்கொண்டு வாசிக்க அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். 

மேலும் ஆதி சங்கரர் இந்து சமயத்திற்கு கொண்டு வந்த சாக்த வழிபாடு என்னும் சக்தி வழிபாடு அல்லது பெண் தெய்வ வழிபாடு மற்றும் வழிபாட்டு முறைகள் யாவுமே புத்த சமயப் பெண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டு முறைகள் என்பதையும் நாம் இந்த கட்டுரையின் முடிவில் புரிந்து கொண்டிருப்போம் என்பதையும் நினைவூட்டுகின்றேன். 

சௌந்தர்ய லகரி  

சௌந்தர்ய லகரி என்று அழைக்கப்படும் நுால் 100 பாடல்களை கொண்டதாகும். இது உண்மையில் இரண்டு நுால்களின் தொகுப்பு. 41 பாடல்களை கொண்ட தொகுப்புக்கு ஆனந்த லகரி என்று பெயர். இதில் உள்ள அனைத்துப் பாடல்களும் மந்திர, தந்திர, யந்திர முறைகளைப் பற்றி விளக்குவதாகும். மீதமுள்ள 59 பாடல்களுக்கு சௌந்தர்ய லகரி என்று பெயர், இந்த பாடல்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களின் வர்ணிப்பு, அழகு, விவரிப்பு, கொடையுள்ளம், தாயுள்ளம் போன்ற பண்புகளை விவரிப்பதாகும். இதற்கு சௌந்தர்ய லகரி என்றே பெயர். உண்மையில் சௌந்தர்ய லகரி என்னும் வடமொழிச் சொல்லுக்கு அழகின் அலை என்றே தென்மொழியான தமிழில் பொருள் சுட்டப் படுகின்றது


ஆதி சங்கரரின் கருத்துக்கள் யாவும்பிரசன்ன பௌத்தம் அதாவது மாறுவேடம் பூண்டு வந்த புத்தசமயக் கருத்துக்கள்”  என்னும் பொழுது. ஆதி   சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லகரியின் மூலம் எது, அது எங்கிருந்து வந்தது, அதன் தழுவல் எது என்னும் கேள்விக்கான விடையை தேடும் பொழுது. சௌந்தர்ய லகரி என்னும் நுால் மகாயான புத்த சமயத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அஷ்வ கோஷர் எழுதிய சௌந்தர்ய நந்தா என்னும் நுாலின் உந்துதலாலும், சாரத்தினாலும் எழுதப்பட்டிருக்கின்றது. என்பதை உணரமுடிகின்றது

அஷ்வகோசர்

அஷ்வகோசர் என்னும் சொல்லுக்கு குதிரையின் கனைப்பை போன்ற குரல் உடையவர் என்னும் பொருள். தர்க்க வாதியான அஷ்வகோசர்  பிறப்பின் அடிப்படையில் இந்து சமயத்தினர். தனது வாதத் திறமையினால் மற்ற சமயத்தவர்களை வாதுக்கு அழைத்து வெல்லும் தன்மை உடையவர். அவ்வாறு இவர் வாதம் செய்யும் திறனை கண்ட பெர்சுவா என்னும் மூத்த புத்த பிக்கு, அஷ்வகோசருக்கு புத்த தீக்சை அளித்து புத்த சமயத்துக்கு மாற்றுகின்றார். அதற்குப் பின் அவர் வட இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பாலி மற்றும் பிரகிருதியில் இருந்த புத்த சமயக் கோட்பாடுகளையெல்லாம் துாய சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கின்றார். அவ்வாறு அவர் மொழி பெயர்த்து எழுதியவைகளில் மிக முக்கியமானது. புத்த சரிதம், அது புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் சொன்ன நுால்.


அதற்குப் பின் அவர் இயற்றிய மற்றொரு மிக முக்கியமான நுால் சௌந்தர்ய நந்தா காவியம் ஆகும். இது புத்தரின் தந்தையான சுத்தோனருக்கும், சித்தியான கௌதமிக்கும் பிறந்த ஆண் மகன் பெயர் நந்தன், மற்றும் நந்தனின் மனைவி சுந்தரி குறித்து எழுதியது சௌந்தர்ய நந்தா

சௌந்தர நந்தா

சௌந்தர நந்தா காப்பியம் புத்தரின் சித்தி மகனான நந்தனை குறித்து எழுதியது. நந்தன் புத்தரின் தம்பியாவதால் அவருடைய, குடும்ப வாழ்வு, துறவு, புத்த சமய தெய்வங்களை வழிபடும் முறைகள், கடமைகள் குறித்தெல்லாம் இந்த நுாலில் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது.

இந்த நுால் இரண்டு அடிகள், பத்து வார்த்தைகள் என 1063 செய்யுளைக் கொண்டது. 18 படலங்களைக் கொண்டது. இந்த நுால் இரண்டு பகுதியைக் கொண்டது. முதல் பகுதி. நந்தன் மற்றும் அவரது அழகான மனைவி சுந்தரி இவர்களின் மண வாழ்வினைக் குறித்து பேசுவது. இரண்டாவது பகுதி புத்தசமய தெய்வங்களையும் அவர்களை வழிபடும் சடங்குகளை குறித்தும் விவரிக்கின்றது.

ஆதி சங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியும் சௌந்தர்ய நந்தாவின் இரண்டாம் பாகத்தை தழுவியது. அதன் பாடல் முறைகள் கூட அப்படியே கையாளப்பட்டுள்ளது. 

சௌந்தர்ய லகரி 3 வது பாட்டுக்கான விளக்கம்.

அவித்யாநா மந்தஸ்திமிர மிர த்வீப நகரி
      ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
      தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்மஜலதௌ
      நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வரஹஸ்ய பவதி

இந்த பாடல் சில வரிகள் மாற்றத்துடன் சௌந்தர்ய நந்தா காவியத்திலும் வருகின்றது. அதன்படி அஷ்வகோசரின் விளக்கத்தையும் ஆதி சங்கரரின் விளக்கத்தையும் தனித் தனியே பார்ப்போம்.

அஷ்வகோசரும் அவித்யா என்னும் சமஸ்கிருத வார்த்தையைப் சௌந்தர்ய நந்தா நுாலில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். புத்தசமயத்தவர்களைப் பொருத்தவரை அவித்யா என்பது அறியாமையைக் குறிக்கும் சொல். அவித்யாவின் எதிர் சொல்லான வித்யா என்பதன் பொருள் புத்த சமயத்தவர்களைப் பொருத்தவரை அறிந்தது என்னும் பொருளிளேயே கையாளப்பட்டிருக்கின்றது.


அதாவது, புத்த சமயத்தினருக்கு வித்யா என்றால், நான்கு உன்னத வாய்மைகள் என்று சொல்லப்படும்
  1. இந்த உலகில் துன்பம் இருக்கின்றது 
  2. துன்பத்துக்கான காரணம் இருக்கின்றது 
  3. துன்பத்தை நீக்குவதற்கான வழி முறைகள் இருக்கின்றது. 
  4. துன்பம் நீங்குகின்றது என்னும் நான்கு உன்னத வாய்மைகளை அறிந்திருத்தலும். மற்றும் அதனுடன் தொடர்புடைய எண்வழி மார்கத்தை அறிந்திருத்தலுமே வித்யா என்று சுட்டப்படுகின்றது. அஷ்வகோசரால்.
ஆதி சங்கரரோ அவித்யா என்னும் சொல்லுக்கு, அஞ்ஞானம் என்றும் வித்யா என்னும் சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்கின்றார் அஞ்ஞானத்தை வெல்ல வேண்டுமாயின் சிந்தாமணியை தியானிக்க வேண்டும் என்று சொல்கின்றார் ஆதி சங்கரர் 

சிந்தாமணி  

சிந்தாமணி என்பது புத்த சமயத்தவர்களால் முழு ஞானம் என்னும் பொருளில் கையளாப்படும் சொல்லாகும். அதற்கான முழு ஞானம் அடைய நினைக்கும் புத்த சமயத்தவர் ஒருவர் சிந்தாமணியை கையில் வைத்துக் கொண்டு தியானித்தால் ஞானம் அடைவார். அவர் நினைத்தது நடக்கும் என்பது மகாயான புத்தசமயத்தவர்களின் நம்பிக்கை 

 

படத்தில் உள்ளது மகாயான புத்த சமயத்தவர்கள் ஞானம் பெற கைகளில் வைத்துக்கொண்டு தியாணிக்கும் சிந்தாமணியாகும். எனில் ஆதி சங்கரர் குறிப்பிடுவது சிந்தா தேவி என்னும் புத்த சமய பெண் தெய்வத்தை சிந்தாமணி என்கின்றார்.  அவர் புத்த சமயத்தின் பெண் தெய்வங்களின் வழிபாடு முறையான யோகினி வாழிபாட்டை சௌந்தர்ய லகரியில் நிறுவுகின்றார். இந்து சமயத்தில் ஏழு கண்ணிகள் என்று அழைக்கப்படும் சப்த கண்ணிகள் துவங்கி 64 பெண் தெய்வங்களை யோகினிகளா வழிபாட்டு முறையை சித்தரிக்கின்றார். உண்மையில் இந்த யோகினிகள் அனைவரும் மாயான புத்த சமய பெண் தெய்வமான மகாமாய வின் அம்சங்களாகவே புத்த சமயத்தில் சித்தரிக்கப்படுகின்றது. 

இந்த பின்புலத்தையெல்லாம் உணர்ந்து கொண்டபின் மீண்டும் ஒரு முறை நீங்கள் நதியில் ஆடும் பூவனம் பாடலைக் கேட்பீர்களேயானால், உங்களுக்கு அந்த பாடலில் இடம் பெற்றுள்ள புத்தசமயக் கோட்பாடுகள் நன்றாக விளங்கும் .  நான்கு உன்னத வாய்மைகளயும் எண்வழி மார்கத்தையும் அறியாத ஒருவன் அறியாமை என்னும் துன்பத்தில் உழலுவான் என்னும் புத்தசமய கோட்பாட்டுடைய பாடலையே இசைஞானியார் நதியில் ஆடும் பூவனம்  பாடலின் முன்னொட்டில் கையாண்டுள்ளார்  . 



இந்த கட்டுரைக்கு துனை நின்ற நுால்கள்

  1. https://ta.wikipedia.org/s/62x8
  2. Aśvaghoṣa - Wikipedia
  3. A Metaphorical Study of Saundarananda by Linda Covill
  4. Yogini Tantra by Biswanarayan Shasthri 
  5. Soundariya Lahari - English Version
  6. பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள்
  7. Asvaghosa and His Times






Thursday, December 28, 2017

தும்பி வா பாடல்

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் -  6

தும்பி வா பாடல்  

கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப்பதே தேரவாத பௌத்தம். கௌதம புத்தரின் போதனைகளில் செயலுக்கான காரண, காரணியங்களை போதிப்பதே மகாயான பௌத்தம் ஆகும். அதே புத்தரின் போதனைகளில் செயலுக்கான  காரண காரியங்களை மந்திர தந்திரங்களின் படி தீர்க்க இயலும் அல்லது மாற்ற இயலும் என நம்புவதே வஜ்ஜிரயான பௌத்தம். இந்த 3 பெரும் பிரிவுகளுடைய பௌத்தம் பல்வேறு துனை பிரிவுகளாகவும், உப பிரிவுகளாகவும் பரந்து விரிந்து உலகளாவி நிற்கின்றது இன்று வரையிலும்.

தேரவாத புத்த சமயப் பிரிவு

தேரவாத பௌத்த பிரிவினருக்கு எப்போதுமே புத்தர் ஒரு வழிகாட்டி, பேராசான், அவரை அற்புங்கள் எதுவும் நிகழ்த்தாத தத்துவஞானியாகவே ஏற்றுக் கொண்டவர்கள். எந்த  நாளிலும் அவரை கடவுளாகப் பார்க்காதவர்கள் அவர்கள். புத்தருக்கு முன்னும் பின்னும் வேறு யாரும் இல்லை என்பவர்கள்.   அதனிலும் தேரவாத இந்தியப் பிரிவான நியோ பௌத்தர்களுக்கு, பேராசான் புத்தரின் திரி சரணங்கள், நான்கு உன்னத வாய்மைகள், ஐந்தொழுக்க கோட்பாடுகள் இவற்றுடன் போதிசத்வா. அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்  இவைகள் மட்டுமே அவர்கள் பின்பற்ற வேண்டியவைகள் என்பதில் மிக உறுதியாக இருப்பவர்கள்.

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் -

  1. பிரம்மா விஷ்னு சிவன் ஆகிய மூன்றையும் கடவுளாக கருதி வணங்க மாட்டேன்.
  2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் கடவுளின் அவதாரமென கருதி வணங்க மாட்டேன்.
  3. கணபதி, கௌரி மற்றும் இந்துக் தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்க மாட்டேன். 
  4. கடவுள் பிறந்ததாகவோ மற்றும் அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
  5. மகா விஷ்னுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன். 
  6. இறப்பு நிகழ்ச்சியில் இந்து மத சடங்குகளைச் செய்ய மாட்டேன். 
  7. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீற மாட்டேன்.
  8. பார்ப்பணர்களின் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
  9. மானுட சமத்துவத்தை நம்புவேன்
  10. சமத்துவத்தை நிலை நிறுத்த முழு மூச்சாகப் பாடுபடுவேன்.
  11. புத்தரின் எண் வழி மார்கத்தை நம்பிக்கையோடு பின் பற்றுவேன்.
  12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்.
  13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழ வைப்பேன்.
  14. பொய் பேச மாட்டேன்
  15. களவு செய்ய மாட்டேன்
  16. உடல் இன்பத்துக்காக தவறுகள் இழைக்க மாட்டேன்.
  17. மது அருந்த மாட்டேன்
  18. புத்தரிக் அன்பு, அறிவு, பரிவு, ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வேன்.
  19. மனித நேயத்துக்கு முரனான சமத்துவம் இல்லாத கேடு  கெட்ட இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக் கொள்கின்றேன்.
  20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கின்றேன்.
  21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகின்றேன்.
  22. புத்தரின் கொள்கை கோட்பாடுகளுக்கு ஏற்ப இன்று முதல் செயல் படுவேன்.

 இவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் மேலே உள்ளவைகள் மட்டும்தான், பௌத்த தியானங்களில் உச்சபட்சமாக இவர்கள் விபாசன தியானத்தை மேற்கொள்பவர்களாகவே வாழ்கின்றார்கள்.

மகாயான பௌத்த சமயம்

புத்தர் எந்த காலத்திலும் அழிவில்லாதவர் அவர் எல்லா காலத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்,என  மகாயான பௌத்த சூக்தங்கள் கூறுகின்றன. கௌதம குலத்தில் தோன்றிய சித்தார்த்தர் ஞானம் பெற்ற  புத்தரானதைப் போல இந்த பூமியில் 28 புத்தர்கள் அவருக்கு முன்பு வரையிலும் வாழ்ந்தவர்கள் என்பதை மிக உறுதியாக நம்புவது மகயான பௌத்த சமயமாகும். கௌதம புத்தருக்கு பின் அடுத்த புத்தராக  மைத்ரேய புத்தர்  உருவெடுப்பார்  என்றும் அவர் கௌதம புத்தர் போதித்து பாதியில் நிறுத்திய தாமரை சூக்தத்தை நிறைவு செய்வார் என்றும்  அவர் இப்பூமியிலுள்ள அனைவருக்கும் மைத்திரி தியானத்தை கற்பிப்பார் என்றும்  உறுதியாக நம்புகின்றது.

28 புத்தர்களின் பெயர்கள் 

  1.  தன்அங்கர்
  2. மேதங்கர்
  3. சரணங்கர்
  4. தீபங்கர்
  5. கொண்டஞ்ஞர்
  6. மங்கலர்
  7. சுமனர்
  8. ரேவதர்
  9. சோபிதர்
  10. அனோமதஸ்ஸி
  11. பதுமர்
  12. நாரதர்
  13. பதுமுத்தர்
  14. சுமேதர்
  15. சுஜாதர்
  16. பியதஸ்ஸி
  17. அத்ததஸ்ஸி
  18. தம்மதஸ்ஸி
  19. சித்தாத்தர்
  20. திஸ்ஸ
  21. புஸ்ஸ
  22. விபஸ்ஸி
  23. ஷிகி
  24. வேஸ்ஸபூ
  25. ககுசந்தர்
  26. கொன கமனர்
  27. கஸ்ஸபர்
  28. கௌதமர் 
இத்துனை புத்தர்கள் இப்பூவுலகில் பிறந்தார்கள், இனியும் பிறப்பார்கள் என்று நம்புகின்றவர்களாக மகாயான சமயப் பிரிவினரும், வஜ்ஜிரயான புத்த சமயத்தவர்களும் நம்புகின்றனர். இவர்கள் அனைவரும் பொதுவாக நம்பும் மற்றொரு கருத்து. இப்புவியில் பிறந்த மற்றும் பிறக்க இருக்கின்ற அனைத்து புத்தர்களுக்கும் தாயாக தாரா தேவியை வழி படுகின்றனர். 

தாரா தேவி 

புத்த சமயத்தில் உள்ள பெண் தெய்வங்களுள் மிக முக்கியமானவர் தாரா தேவி . 21 வகையான தாரா தேவியை மகாயானம் மற்றும் வஜ்ஜிரயான பௌத்தர்கள் வழிபடுகின்றனர்.
மகிழ்ச்சி, துக்கம், பணம், புகழ், பதவி, அமைதியை பெற்றுத் தருபவராகவும், பயங்களை போக்குபவராகவும் தாரா தேவி கருதப்படுகின்றார்.  தாரா தேவியை வழிபடுவதும், அவரது மந்திரத்தைத் துதிப்பதும், மகாயான பௌத்தர்களின் கடமையாக இருக்கின்றது.

21 தாரா தேவியின் பெயர்கள்

பச்சைத் தாரா தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த  பௌத்த பெண் தெய்வங்கள்

  1. கதிரவானி தாரா
  2. வசிய தாரா
  3. அரிய தாரா 
  4. மகத்தரி தாரா
  5. வரத தாரா 
  6. துர்காத்தரனி தாரா
  7. தண்டத் தாரா
  8. ஜங்குலி
  9. பரனாஸ்பரி
வெள்ளைத் தாரா தெய்வத்தின்  குடும்பத்தைச் சேர்ந்த  பெண் தெய்வங்கள்

10. அஸ்தாம் அபையா
11. மிருத்துவ வஞ்சன தாரா
12. சத்ருஜ்ஜா சித்த தாரா
13. சதபுஜ சித்த தாரா
14. விஷ்வாத்மா
15. குருகுலா
16. ஜாங்குரி

மஞ்சள் தாரா  தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் தெய்வங்கள்

17. வஜ்ஜிர தாரா
18. ஜங்குலி
19. பிரனாஸ்பரி
20. பிர்குட்டி

நீலத்தாரா  தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் தெய்வங்கள்

21. ஈஜித்தா
22. மகா சீனத் தாரா ( இவர் சீன நாட்டைச் சேர்ந்த, தார தெய்வம், சீனர்கள் 23 தாரா தேவியை வழிபடுகின்றனர்

சிகப்புத் தாரா தேவியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தெய்வங்கள்

23. குருகுலா

ஜாங்குலி பெண் தெய்வத்தை இரண்டு வகையிலும் சேர்த்துக் கொண்டாலும் அது ஒற்றைத் தெய்வம்தான், இரண்டு வகையான பலன்களையும் தருவதால் மஞ்சள் தாராவின் குடும்பத்திலும் பச்சைத் தாராவின் குடும்பத்திலும் இடம் பெற்றுள்ளது.

தென்னகத்தில் தாரா தேவி வழிபாடு

தமிழகம் 

வரலாற்றில் எப்போதும் ஒரு சமயத்தை மற்றொரு சமயம் அழிக்கலாம், ஆனால் சமயக் கருத்துக்களை எப்பொழுதும் அழிக்க இயலாது என்னும் உண்மை  உலகம் அறிந்தது. அதன்படி பௌத்தம் வீழ்ச்சியுற்றிருந்த காலத்தில் அதன் கருத்துக்களை, கொள்கைகளை, புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனங்களில் இருந்து இந்து மதத்தினரால்  அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இனைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகனங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்த்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இனைத்துக் கொண்டது.  இதனை தமிழறிஞர். மயிலை. சீனிச்சாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்னும் நுாலில் விரிவாக பேசுகின்றார். அதிலிருந்து சில பகுதிகள்.

" மணிமேகலை, சம்பாபாதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக் காலத்தில், பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்த தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக்கொண்டு இவைகளுக்கு காளி, பிடாரி, திரௌபதை அம்மன் என்னும் புதுப் பெயர்களைச் சூட்டி கிராம தேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடு பேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், பௌத்தர்களின் தாரா தேவி ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். அவ்வாறே அங்காங்கு திரௌபதையம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாரா தேவி ஆலயங்களாக இருந்தன என்றும் கூறுவர்,  என்கின்றார்.

கேரளம் மற்றும் ஆந்திரம்

கேரளத்திலும் தாரா தேவியின் ஆலயங்களை எல்லாம் பகவதி அம்மன் ஆலயங்களாக இந்து மதம் சுவிகரித்துக் கொண்டது. அதே போல் ஆந்திரத்திலும் பத்மாவதி தாயாராகவும் லட்சுமியாகவும் வழிபடும் தெய்வங்கள் தாரா தேவியின் ஆலயங்களாகும்.

கர்னாடகம் 

அதேபோல் கர்னாடாகாவிலும், உள்ள அம்மன் ஆலயங்கள் யாவும் தாரா தேவியின் ஆலயங்களே, அதிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக வழிபடும்  கொல்லேகால் மற்றும் கொல்லுாரில் உள்ள அம்மன் ஆலயங்கள்  தாரா தேவியின் ஆலயங்கள் ஆகும்.

குறிப்பாக கொல்லுார் மூகாம்பிகை அம்மன் ஆலயம் பௌத்த தெய்வமான தாரா தேவியின் ஆலயமாகும். சிதிலமைடந்திருந்த பௌத்த விகாரையிலிருந்து பெண்சிலைகளை எடுத்து   ஆதி சங்கரர் இந்த ஆலயத்தை நிறுவினார் என்று வரலாறு சொல்கின்றது.
தென்னகமெங்கும் பௌத்த தெய்வமான தாரா தேவியின் ஆலயங்களே வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு அம்மன் தெய்வங்களாக வழிபடப் படுகின்றது என்பது பௌத்த வரலாறாக இருக்கின்றது.

இந்து மதத்தில் இருந்தாலும் பௌத்தர்களின் நம்பிக்கையின் படி, வேண்டிய வரத்தை தரும் தெய்வமாக தாரா தேவி இருப்பதால் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருப்பதால், இந்து மதத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தாரா தேவியின் ஆலயங்களுக்கு பக்தர்களின் படையெடுப்பும் வழிபாடும் மிகுதியாக இருக்கின்றது வரலாறு முழுவதும்.

இன்று இந்து மதத்தில் அம்மனாக, காளியாக, பார்வதியாக, சக்தியாக, ஊர்காவல் தெய்வங்களாக வழிபடப்படும் அனைத்து பெண் தெய்வங்களும் புத்த சமயத்தில் மகாயானப் பிரிவு மற்றும் வஜ்ஜிரயானப் பிரிவினரால் வழிபடப் பெற்ற பௌத்த பெண் தெய்வமான தாரா தேவியின் ஆலயங்களே.

தும்பி வா பாடல் 


தும்பி வா தும்பக்குடத்தின் என்னும் பாடல் 1982 ஆம் ஆண்டு வெளியான ஓலங்கள் மலையாளப் படத்தில் இடம் பெற்ற மிகப் புகழ் பெற்றப் மலையாளப்  பாடலாகும். இப்பாடலைப் பாடியவர். எ ஸ்.ஜானகி, இந்தப் படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா.

இந்த  பாடலை இயற்றியவர் மலையாள கவிஞரான ஓ.என்.வி.குருப் என்பவராவார். இவர் கேரளத்தில் புகழ்பெற்ற கவிஞர். இவருக்கு இவருடைய எழுத்துப் பணியை பாராட்டி கேரள பல்கலைக் கழகம் கௌரவ டாக்கர் பட்டம் 2007ல் அளித்தது. அதே ஆண்டில் இவருடைய இலக்கியப் பணியைப் பாராட்டி இந்திய ஜனாதிபதியிடம் இருந்தும் விருது பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், பின் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். அனைத்துக்கும் மேலாக இடது சாரி சிந்தனையாளர். கேரளாவின் அனைத்து மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இத்தகைய உச்சம் பெற்ற ஆளுமையோடு இசை உச்சம் பெற்ற நம் இசை ஞானியும், இனைந்த தும்பி வா பாடல் இளையராஜாவின் இசை ரசிகர்களுக்கு  ஒரு மிகு உச்சமான பாடல் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

 
                                                          தும்பி வா பாடல்
https://www.youtube.com/watch?v=xAl7_PiZV9I



சிருங்கார ராகமான காபி ராகத்தில்  அமைக்கப்பட்ட பாடலாகும். பொதுவாக இந்த ராகம் மாலை வேலையில் பாட ஏதுவான ராகம்.  சதுஸ்ரஜாதி திரிபுடைத் தாளம் மற்றும் திஸ்ரஜாதி ஏக தாளம் என இரண்டு ராகத்தையும் குழைத்து இந்த பாடலை அமைத்திருப்பார் நம் இசை ஞானி.  வீனை, புல்லாங்குழல், தபேலா, பேஸ், கிடார், ஆகிய இசை கருவிகளை பயன்படுத்தி நம் காதுகளையும் மனத்தையும் வசிகரித்திருப்பார்.



கதிரவானி தாரா



நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே 

இந்த மெட்டமைப்பில் அமைத்த தமிழ் பாடல் ஒன்றை  மீண்டும் அதே ஆண்டு வெளியான  ஆட்டோ ராஜா படத்திலும் இடம் பெறச் செய்தார் நம் இசை ஞானி. அதற்க்குப் பின் பாலுமகேந்திரா இயக்கிய நீராக்ஷனா என்னும் தெலுங்குப் படத்திலும் இதே காபி ராகத்தில் அமைந்த இந்த மெட்டமைப்பில் ஒரு பாடலை அமைத்தார். அதே படம் மீண்டும் கண்ணே கலைமானே என தமிழில் மொழி மாற்றம் செய்த போது நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே என்று ஒரு பாடலை அமைத்தார்.

காபி ராகத்தின் அடிப்படையில் அமைந்த தும்பி வா பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  என பல மொழிகளில் பயணித்து, அந்த ரசிகர்களையும் கவர்ந்தபாடலாக இருக்கின்றது. அத்துடன் இந்த பாடல் இளையராஜாவுக்கு மிகப் பிடித்தமான பாடல் என ஒரு நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா அவர்கள் சொல்லியும் உள்ளார்.

தும்பி வா பாடலில் அமைந்துள்ள புத்தசமய கோட்பாடுகள்

பொதுவில் நாம் கேட்கும் எந்த ஒரு திரை இசைப் பாடலும் நான்கு விதமான நபர்களை நிறைவு செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.

  1.  சாதாரணமாக இந்த இசையை அடிக்கடி கேட்க்கும் வாய்ப்புள்ள சாமானிய ரசிகன். இவர் ஒரு பாடலை கேட்க்கும் போது அந்த பாடல் அவருக்கு ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை, நிறைவை, சந்தோஷத்தை தர வேண்டும் என விரும்புகின்றார். அவர் விருப்பம் நிறைவடைந்தால் அவர் அந்த பாட்டை மிக விரும்பும் நபராகின்றார். அந்த பாடலில் அவர் விரும்பியது எதை எனக் கேட்டால் அவருக்கு பதில் சொல்ல தெரியாது, குரலிசையாக இருக்கலாம், இசைக் கருவிகளாக இருக்கலாம், தாளமாக இருக்கலாம், பாவமாக இருக்கலாம். ஏதாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த இசையும் பாடலும் அவருக்கு பிடித்த பாடலாக இருக்க வேண்டும். அந்த விருப்பம் நிறைவேறும் போது அது அவருக்கு பிடித்த பாடல்.
  2. இரண்டாவதாக அந்த பாடலை உருவாக்கியவர்களுக்கு அந்த பாடல் நிறைவை தர கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு நிறைவை தராத நிலையில் அந்த பாடலை உருவாக்கியவர்கள் மீண்டும் மீண்டும் நிறைவு அடையும் வரையில் அந்த ராகத்தை தாளத்தை, வாத்தியத்தை தமது பாடல்களில் பயன்படுத்துவார்கள்.
  3. மூன்றாவதாக சங்கீதம் என்று சொல்லப்படுகின்ற இசை அறிந்தவர்களை இசையின் தரம், மற்றும் இசைக் கோவையினால் அவர்களையும் வியக்க வைப்பது அல்லது ஏற்க்கச் செய்வது, இந்த வகையில் வருபவர்கள் மிக சொற்பமானவர்களே. இவர்களை   இசையமைப்பில் புதுமைகளை புகுத்து, அல்லது இசையின் கட்டமைப்புகளை இனிமை என்னும் தன்மையைப் புகுத்தி அதன் கட்டமைப்புகளை உடைப்பது போன்ற தன்மைகளை பயன்படுத்தி நம் இசைஞானி ஒவ்வொரு பாடலிலும் இவர்களோடு தமது உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். 
  4. மற்ற இசையமைப்பாளர்கள் மேலே உள்ள மூன்று கோட்பாடுகளோடு நிற்க்கும் போது , நமது  இசைஞானி தனது ஒவ்வொரு பாடலிலும் இசைமொழியாக தமது உணர்வுகளை புகுத்தி நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு அவர் நம்மோடு உரையாடுவதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் அவரது இசைமொழியை புரிந்து கொள்ள வேண்டும். அத்தகையை இசை மொழியை புத்த சமயக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளும் ஒரு பெரும் முயற்சிதான் இந்த சிறு தொடர். இதற்கான மெனக்கெடலும், தேடலும் மிகப் பெரிது என்பதை இங்கே பனிவோடு சொல்லிக் கொள்கின்றேன். 
வெள்ளைத் தாரா 
மேலே சொல்லிய தாரா தேவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மந்திரம் இருந்தாலும் அனைத்து தாரா தேவிக்கும் பொதுவான மந்திரம் “ 

ஓம் தாரே து தாரே துரே சுவா” 
இந்த மிகப் புனிதமான மந்திரம் உலகில் உள்ள புத்த சமயத்தினர் உச்சரிக்கும் மந்திரங்களில் இரண்டாம்  இடத்தில் உள்ளது. இது புத்தசமயத்தினர் மன அமைதிப் பெறவும், பயமின்றி வாழவும், சஞ்சலம், கவலை, கோபம் , முதலிய மன அமைதியை குலைக்கும் தளைகளில் இருந்து விடுபட உச்சரிக்கும் மிக புனிதமான மந்திரமாகும்.  

இசைக்கு தலைவியான வெள்ளைத் தாரா, இவரைத்தான் இந்து மதம் கலைவானி என்று கைகளில் வீனையை தந்து தனதாக்கிக் கொண்டது.

முதலிடத்தில் புத்த சமயத்தினர்  தமது பிறவித் தலையை அறுக்கவும், உயர் ஞானம் அடையவும் உச்சரிக்கும் “ஓம் மணி பத்மே ஓம்” உள்ளது. இந்தப் மந்திரத்தின் அடிப்படையில் ஆயிரம் தாமரை மொட்டுகளேப் பாடலை படைத்திருக்கின்றார். அது குறித்த கட்டுரை இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் வந்துள்ளது. படிக்காதவர்கள் படித்துக் கொள்ளவும். ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும். 



 தும்பி வா பாடலின்  பின் புலமா இசைஞானி அவர்கள் தான் வணங்கும் தாய் முகாம்பிகா தேவியின் மூலமான தாரா தேவிக்கு நன்றி சொல்லும் விதமாக தாரா தேவியின் மந்திரமான ஓம் தாரே துா தாரே துாரே சுவா என்னும்  இசைக்குறிப்பின் அடிப்படையில் இந்த மந்திர இசை மொழியிலேயே தும்பி வா பாடலை அமைத்திருப்பார். இந்த மந்திரத்துக்கான இசை அட்சரம்( என்றும் ஆங்கிலத்தில் நோட்ஸ் என்று சொல்லப்படுவதும்) பாடலின் பின் புலத்தில் மிக நுட்பமாக பொருந்திப் போகும். 

மேலும் காபி ராகம் ஆண் ராகம், அது வசியப்படுத்தும் ராகம் அத்தகைய ஆண் ராகத்தைக் கொண்டு பெண் தெய்வமான தாரா தேவியை வசமாக்க அவர் செய்த இசை முயற்சியே இந்த பாடல். அத்துடன் காபி ராகம் என்பது வட இந்திய ராகம், வட இந்திய தெய்வமான தாராவுக்கு வட இந்திய ராகத்திலேயே பாடலும் பன்னமைத்ததும் இசை மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் மிக நுட்பமான வித்தையாகும்.  








Thursday, December 21, 2017

படிக்கவேண்டிய புத்தகம் :

சேரி ரெண்டுபட்டால் - மா. அமரேசன்

அரசின் சலுகைகள் பல பெற்றும் பிற சமூகங்களைப் போல தலித் மக்களின் நிலை அரசியல், சமூகம், வணிகம் உள்ளிட்டவற்றில் ஏன் உயரவில்லை என்பதை ஆய்வுப்பூர்வமாக அலசும் நூல் இது. பிரச்னைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் தெளிவாக முன்வைத்து விளக்கிப் புரியவைப்பது ஆசிரியரின் எழுத்தாளுமைக்குச் சரியான சான்று. ...See More

இதையும் படியுங்கள்