Tuesday, June 7, 2016

புலரும் அறத்தின் காலை – நுால் விமர்சனம்

புலரும் அறத்தின் காலை – நுால் விமர்சனம்
                                                    
அவர்கள் பார்வையில்
எனக்கு –
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில் –
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தையை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்.

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்
-    அ.சங்கரி – சொல்லாத சேதிகள் நுாலில்.

இந்த கவிதையின் உரையாடல் வடிவமாகவே பேராசிரியர். அரங்க மல்லிகா அவர்களின் புலரும் அறத்தின் காலை புத்தகத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
பெண்ணியவாதி, கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், பேராசிரியர், இலக்கிய ஆளுமை, தலித் சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர் அரங்க மல்லிகா அவர்களை இந்த  சமூகம் எப்படி புண்படுத்தியது என்பதே புலரும் அறத்தின் காலை நுாலின் சாரம். அல்லது இந்த சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் கோபமே “புலரும் அறத்தின் காலை” யாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புலரும் அறத்தின் காலை என்னும் தலைப்பே ஏதே ஒரு கவிதையிலிருந்து எடுத்த தலைப்பை போலவே உள்ளது. இந்த தலைப்பே ஒரு எதிர்மறையான தலைப்பாக இருக்கின்றது நடப்பு சமூகத்துக்கு. பேராசிரியைக்கு அறம் தவறிய இந்த  சமூகத்தின் மீதுள்ள கோபமே புலரும் அறத்தின் காலை என்னும் தலைப்பாக வெளிப்பட்டுள்ளது.
நுாலில் புகுமுன் அறம் என்பது என்ன என்றும் அது எந்த பொருளில் இந்த நுாலில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக அறம் என்றவுடன் “ அறம் செய்ய விரும்பு” என்னும் அவ்வையாரின் ஆத்திச்சூடி முதல்வரியுடன் நிறுத்திக் கொள்கின்றோம். சைவ மத நோக்கில் பொருள் கொள்ளப்பட்ட ஆத்திசூடியின் அறம் செய்ய விரும்பு என்னும் பாடலுக்கு “ தருமம் செய்ய ஆசைப்படு ( ஆசை மட்டுமே பட வேண்டும் செயல் படுத்தக்கூடாது )என்னும் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது இதுவரையிலும்.
சமண சமய நோக்கில் அறம் என்று கட்டமைக்கப்படுவது, “ அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் இழுக்கா இயன்றது அறம் ( குறள் – 35)
1.   பொறாமை
2.   பேராசை
3.   கோபம்
4.   சுடு சொல் ஆகிய இவை நான்கையும் நீக்கி வாழ்வது  அறம் என வள்ளுவர் வரையறுக்கின்றார்.
பௌத்த நோக்கில் அறம் என்பது ஐந்தொழுக்க நெறிகளுக்கு உட்பட்டு வாழ்வதே அறம் என்று வறையறுக்கப்பட்டுள்ளது. ஐந்தொழுக்கங்களையே பஞ்சசீலம் என்றும் அழைக்கின்றனர் பௌத்த சமயத்தினர். அவை
1.   உயர்வதை புரிவதை தவிர்த்திடும் ஒழுக்கம்
2.   பிறர் பொருளை கவர்தலை தவிர்த்திடும் ஒழுக்கம்
3.   பொய் பேசுவதை தவிர்த்திடும் ஒழுக்கம்
4.   பிறன்மனை நயக்கும் காமத்தை தவிர்த்திடும் ஒழுக்கம்
5.   மனதை மயக்கும் மது, புகையிலை, போன்ற போதை பொருள்களை தவிர்த்திடும் ஒழுக்கம்  ஆகிய ஐந்து ஒழுக்கங்களை வாழ்வில் கடைபிடிப்பதே அறம் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பொதுவில் சமய நோக்கமின்றி அறத்தை விளக்குவதாயின், எண்ணம், சொல், செயல் இவைகளில் நீதியையும் நேர்மையையும் கடைபிடித்து வாழ்வதே அறம் என கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அறத்திற்கான விளக்கமாக இதை சொல்லும் போது அறத்தை போதிக்கும் நுால்கள் என பேராசிரியை பதினென் கீழ் கணக்கு நுால்களையே தமிழ் இலக்கியத்தில் அற நுால்கள் என குறிப்பிடுகின்றார் அவை.
7.     ஏலாதி
16.  [இன்னிலை]]
அறம் போதிக்கும் இந்நுால்கள் கீழ் கணக்கு என வகைப்படுத்தியதில் இருந்து இந்நுால்கள் ஒரு வகையான புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கின்றன என்பவற்றை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அவ்வாறாயின் அறத்ததை போதிக்காத மற்றை நுால்கள் பதினென் மேற்கணக்கு என பெயரிட்டழைப்பதன் நோக்கம் என்ன என நோக்கும் போது வரலாற்றில் நெடுங்காலந்தொட்டே, அறம் மற்றும் அறம் அல்லாதவற்றிக்கான போராட்டம் நடந்து கொண்டே இருந்திருக்கின்றது, என்பதை அறம் சார்ந்த நுால்கள் பதினென் கீழ் கணக்கு நுால்களே என்று கூறுவதில் இருந்து அறிய முடிகின்றது.



அறம் குறித்த கருத்துக்கள் மற்றும் நுால்களின் படி இன்றைய நமது வாழ்க்கை முறையானது அறம் சார்ந்த வாழ்க்கை முறையை நாம் வாழவில்லை, மாறாக அறத்திற்க்கு எதிரான ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்று நாம் கடைபிடித்துக் கொண்டிருக்கும் மதம், சாதி, பண்பாடு, ஆகியவைகள் அனைத்தும் அறத்திற்க்கு எதிரானவைகளாகவே இருக்கின்றன. என் மதம் உயர்ந்தது என்றொருவன் சொல்லும் பொழுது இயல்பாகவே அடுத்தவன் மதம் கீழான மதமாகின்றது, என் சாதி உயர்ந்தது என்று சொல்லும் போதும் இதேதான் நிகழ்கின்றது, பண்பாடு என்பது இன்றைக்கு நல்லவனாய் இருப்பதை விட வல்லவனாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் மொழிகின்றது, இன்னும் தெளிவாக சொல்வதென்றால், “ நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை” அதாவது நாலு பேருக்காக நாற்பது பேரையும் கொள்ளலாம், துன்புறுத்தலாம், என்பன போன்ற வன் முறைகளை நியாயப்படுத்தும் சமூகமாகத்தான் இன்றைய சமூகம் இருக்கின்றது.
புலரும் அறத்தின் காலை புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 130, இதில் உள்ள மொத்த கேள்விகள் 125. இவற்றில் பேராசிரியை அவர்களின்
·         தன் அனுபவ பகிர்வு கேள்விகள் – 39
·         சாதியம் குறித்த கேள்விகள்     - 12
·         பெண்ணியம் குறித்த கேள்விகள் – 20
·         சிறுபத்திரிகை குறித்த கேள்விகள் – 02
·         பௌத்தம் குறித்த கேள்விகள் -     12
·         அரசியல் குறித்த கேள்விகள் –      07
·         இலக்கியம் குறித்த கேள்விகள் -    33
இந்த புத்தகத்தில் உள்ள சற்றேறக்குறைய உள்ள 4420 வரிகளுக்குள் உள்ளவைகள்  யாவும் இரண்டு செய்திகளை சொல்கின்றன. ஒன்று பேராசிரியை அவர்களுக்கு ஆண் சமூகம் தந்த வலி, மற்றொன்று தலித்துகள் மீது நிகழ்ந்த, நிகழும் வன்முறைகளின் வரலாறு என எழுத்துக்களின் இடையே வலியையும் வரலாற்றையும் மறைத்து வைத்திருக்கின்ற புத்தகமாக இது உள்ளது.
      இந்த புத்தகத்தை படிக்கும் எவருக்கும் பேராசிரியை விவரிக்கும் நோக்கில் இயல்பாகவே தன்னையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள துாண்டுகின்றது, அதுவே இந்த புத்தகத்தின் வெற்றியாக அமைகின்றது. உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல வேண்டுமெனில், பேராசிரியை அவர்களின் ஆரம்ப கல்வி குறித்து பேசும் போது, தான் நன்றாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் தலித் என்பதாலேயே, வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், மதிப்பெண்கள் குறைத்து போட்டதாகவும் சொல்கின்றார். உண்மையில், அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு ஆரம்ப கல்வி படித்து கொண்டிருந்த அனைத்து தலித்துக்குமே ஏற்பட்டிருக்கின்றது, ஆனால் அதை படிக்கும் போதுதான் நாம் நமக்கும் இது நிகழ்ந்தது, இப்படி நிகழ காரணமாக இருந்தது, கற்பிப்போருக்குள் இருந்த சாதிய மனோபாவம் என்பதை உணர்கின்றோம்.
      அதே வேலையில் தலித்துகளின் தலைநிமிர்ந்த வாழ்வுக்கு முதல் காரணியாக இருக்கின்ற கல்வியானது, கல்விகூடத்தில் எத்தகைய சாதுர்யத்துடன் மறுக்கப்படுகின்றது, நன்றாக படிக்கின்ற மாணவர்கள் எப்படி திட்டமிட்டே கல்வியின் மீது ஆர்வம் குறையவும், இடைநிற்க்கவும் ஆசிரியர்களால் துாண்டப்படுகின்றனர் என்பதை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளக்குன்றார். இன்றைக்கும் அரசு பள்ளிகளில் தலித் பிள்ளைகள் நடத்தப்படும் விதம், அவர்களை எடுபிடி அடியாட்களாக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை, இந்த சூழ்நிலைக்கு பழகாத மாணவர்கள் இடை நிற்க்கும் அவலம் ஆகிய அனைத்தையும் நுாலின் ஆரம்ப அத்தியாங்களிலே நீரோடை போல தெளிவாக சொல்லி நம்மையும் அந்த சூழலுக்கே இட்டு சென்று உணர்த்துகின்றார் ஆசிரியர்.
      அதே போல் தேவதாசி முறை ஒழிந்தது என்று பெருமை பேசிக்கொள்ளும் நபர்களைப் பார்த்து, தேவதாசி முறை ஒழிப்பிற்க்கு முனைப்பு காட்டும் உங்களால் தலித் சமூகத்துக்குள் நடந்து கொண்டிருக்கும் மாத்தம்மா முறையை ஏன் ஒழிக்க முன் வரவில்லை என்று கேள்வியும் கேட்டு விளக்கமாய், தேவதாசி முறை என்பது ஆதிக்க சாதிகளுக்குள் நிகழ்ந்தது, மாத்தம்மா என்னும் பொட்டு கட்டும் முறை தலித்துகளுக்குள் நிகழ்வது, எனவே இந்த சமூகத்தில் தலித் பெண்களுக்கு நிகழும் இழிவை குறித்து யாரும் பேசுவதில்லை என்று எழுத்து சாட்டையால் விளாசுகின்றார்.
      தமிழ் துறை பேராசிரியர் என்பதால் தமிழ் கல்வி குறித்தும் அதிலுள்ள குறைபாடுகள் குறித்தும் கூட பேசுகின்றார். இன்றைய கல்வி முறையில் தமிழில் பேசும் முறை குறித்தும், தமிழில் எழுதும் முறை குறித்தும், கரிசனப்படுகின்றார். தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதற்க்கும் , எழுதுவதற்க்கும் கூட பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கல்வி முறையின் அடிப்படை கேளாற்றை எளிதாக  அதே வேலையில் நுட்பமான புரிதலுடன் விளக்குகின்றார்.
      தற்போதுள்ள சமூகங்களை தலித் சமூகம் மற்றும் பொது சமூகம் என இரண்டாக பிரித்து, பொது சமூகத்தின் பத்திரிகைகளை பெரும் பத்திரிகை என்றும், தலித் சமூகத்துக்கான பத்திரிகையை சிறு பத்திரிகை என்றும் பிரித்து பட்டியல் இடுகின்றார். இன்றைய இலக்கிய வாசிப்பு உலகில் பெரும் பத்திரிகை என்பவைகள் பார்பணிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கின்ற அமைப்பாகவும், பொய்யுரைத்து புகழ் மற்றும் பணம்  சேர்க்கும் பத்திரிகையாகவும் ஆசிரியர் சுட்டுகின்றார். சிறு பத்திரிகைகள் என்பவை உழைக்கும் மக்களின் கருத்துக்களை கொண்டவை என்பதால் அவற்றில் மக்களின் நலன் சார்ந்த எழுத்துக்களே இடம் பெறுகின்றன என்பதால் சிறு பத்திரிகைகளை வாசிக்க வலியுறுத்துகின்றார். அவ்வாறு  அவர் வாசிக்க முன் மொழியும் சிறு பத்திரிகைகளாக
1.   மேலும்
2.   நிறப்பிரிகை
3.   நிகழ்
4.   தலித் முரசு
5.   புதிய கோடாங்கி
6.   களம்
7.   மந்திரச் சிமிழ்
8.   தடம்
9.   தளம்
10.  யுகமாயினி
11.  கல்குதிரை
12.  கல்வெட்டு பேசுகிறது ஆகிய இதழ்களை வாசகர்களுக்கு படிப்பதற்காகவும் அறிவை பெருக்கிக் கொள்ளவும் முன் மொழிகின்றார்.
நல்ல நுால்களை வாசிப்பவனே நல்ல வாசகன் ஆகின்றான், நல்ல வாசகனே சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் சமூக செயல்பாட்டாளான் ஆகின்றான் என்ற புரிதலோடு சில நல்ல நுால்களையும் வாசகனுக்கு முன் மொழிகின்றார் அவை.
1.   தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்
2.   பெண்ணியக் குரல் அதிர்வும் தலித் பெண்ணிய உடல் மொழியும்
3.   வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும்
4.   நீர் கிழிக்கும் மீண்கள்
5.   பெண்ணின் வெளியும் இருப்பும்.
6.   தலித் பெண்ணிய அழகியல்
7.   தலித் அறம்
8.   கருப்பு பெண்ணியம் ( Aren’t I a women )
9.   Golden Treasury
10.  மரப்பசு
11.  மோகமுள்
12.  செம்பருத்தி
13.   நாளை மற்றொரு நாளே
14.  ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
15.  புளியமரத்தின் கதை
16.  தோட்டியின் மகன்
17.  அஞ்ஞாடி
18.  கோவேறு கழுதை
19.  ஆறுமுகம்
20.  செடல்
21.  கருப்பர் பெண்ணியம்
22.  கவலை
23.  மீண்டும் ஆதியாகி
24.  கருக்கு
25.  ஆனந்தாயி
26.  பழையன கழிதல்
27.  சுவற்றுக்கு வெளியே இருக்கிற கிராமங்கள்
28.  ஆல்பர்ட்
29.  குட்டி இளவரசன் ஆகிய நுால்களை வாசகனுக்கு முன் மொழிகின்றார்.
தன் வாழ்வில் சம்பந்தப்பட்ட நபர்களாகவும், அல்லது தான் வியந்த ஆளுமைகளாக சிலரையும் ஆசிரியர் முன் மொழிகின்றார்.
1.   அம்மா – அஞ்சுகம்
2.   அப்பா – ரெங்கசாமி
3.   அக்கா – செந்தமிழ் செல்வி
4.   அண்ணன் – இராசேந்திரன்
5.   முனைவர். தேவதத்தா
6.   கலைஞர் – கருனாநிதி
7.   மிசோரம் ஆளுனர். அ. பத்தநாபன்
8.   குட்டி ரேவதி.
9.   மாலதி.மைத்திரி
10.  சுகிர்தராணி
11.  முபின் சாதிகா
12.  சில்வியா பிளாத்
13.  ராஜம் கிருஸ்ணன்
14.  ஜெயகாந்தன்
15.  வண்ணநிலவன்
16.  வண்ணதாசன்
17.  நாஞ்சில் நாடன்
18.  நகுலன்
19.  இமயம்
20.  ஸ்ரீதர கணேசன்
21.  பெருமாள் முருகன்
22.  தமிழ் செல்வி
23.  பாமா
24.  சிவகாமி
25.  அழகிய பெரியவன்
26.  ஆ. மார்க்ஸ்
27.  தீபச் செல்வன்
28.  ராஜ்கௌதமன்
29.  பஞ்சாங்கம்
30.  செந்தில் குமார்
31.  யாழன் ஆதி. 
ஆகிய எழுத்தாளர்களை சமூகத்துக்கான எழுத்தாளர்களாக அடையாளப்படுத்துகின்றார்.
.இலக்கியத்தில் அடித்தட்டு மக்களின் பால் கரிசனம் கொண்டவர்களாக அவர்களின் குரலை ஒலித்தவர்களாக
1.   மணிமேகலை
2.   ஓளவையார்
3.   வெள்ளி வீதியார்
4.   நச்செல்லையார்
5.   ஆண்டாள்
6.   குண்டலகேசி ஆகியோர்களை முன்மொழிகின்றார்.

இறுதியாக, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக உள்ளதால் இயற்கையாகவே இது பெண்களுக்கு எதிரான சமூகமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற சமூகத்தின் இழிநிலையை ஒளிவு மறைவில்லாமல் உணர்த்துகின்றார். பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தை பெண்ணியம் X தலித் பெண்ணியம் என்ற விளக்கத்தை சொல்லும் போது எளிதாகவும் ஆழமாகவும் விளக்குகின்றார். இந்த புத்தகத்தின் சாரமாக பெண்கள்தான் அறம் என்றும் அவர்கள் மட்டும்தான் அறம் சார்ந்த வாழ்வை வாழ்கின்றனர் என்றும் உணர்த்துகின்றார், ஆயினும் பெண்களுக்கான விடுதலை என்பதே அறத்துக்கான விடுதலை என்ற கருத்தை மிக நுட்பமாக முன்மொழிந்து அனைவரையும் அறம் சார்ந்த வாழ்வை வாழ வலியுறுத்தும் படைப்பாகவே புலரும் அறத்தின் காலை நுால் உள்ளது. கேள்விகளை கேட்ட முபின் சாதிகா அவர்களுக்கும் வெளியிட்ட கலைஞன் பதிப்பகத்தையும் இந்த புத்தகத்துக்காக தமிழ் கூறும் நல்லுலகம் பராட்ட கடமை பட்டிருக்கின்றது.

- நன்றி. காக்கை சிறகினிலே மாத இதழ். பிப்ரவரி 2016 

Sunday, May 8, 2016

காத்திருக்கும் கடமை

சென்ற ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில்  மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அதைப் போலவே பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடைசி இடம்.இந்த புள்ளி விவரத்தை இங்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கம் என்ன வென்றால். இன்று அரசு பள்ளிகளை பெருமளவு நம்பி இருப்பதும். அரசு பள்ளிகளில் படிப்பதும் விளிம்பு நிலை சமுகம் மக்கள்தான். வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே இன்று அரசு பள்ளிகளில் பெருமளவுக்கு தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப் புறத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

அதிலும் திருவண்ணாமலை போன்ற இடம்பெயர்வு மக்கள் அதிகம் இருக்கும் மாவட்டத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு அரசு பள்ளிகளும், அதன் மதிய உணவும் தான் முதன்மை புகலிடம். இன்று தனியார் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் இயல்பான ஒரு செய்திதான் படித்த நடுத்தர மக்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகினறனர்.

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து போனதற்க்கு முழு காரணம் ஏற்க வேண்டியது அந்த பள்ளி ஆசிரியர்களும், அந்த கிராம மக்களுமே,                                           

Wednesday, January 27, 2016

போளுர் வரதன் – நினைவு குறிப்பு

போளுர் வரதன் – நினைவு குறிப்பு
      
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம், கரிக்காத்துார் காலணியில் 25.02.1952 அன்று பிறந்தார். அவர் பிறக்கும் போது திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட வில்லை அப்பொழுது அது வட ஆற்காடு மாவட்டம்.  வசதியானவர்களின் வீட்டில் முதல் பிள்ளையாக பிறக்க வேண்டும், ஏழையின் வீட்டில் கடைசி பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று ஒரு பழ மொழி இருப்பது போல,  ஏழைக் குடும்பத்தில் கடைசி ஆண் மகனாக பிறந்தவர் திரு. வரதன் அவர்கள்.
வரதனின் தந்தை பெயர் திரு. மதுரை.  தாயார் பெயர். திருமதி. முனியம்மாள், தம்பதிகளுக்கு நான்கு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தனர். முதல் மகனுக்கு சுப்பிரமணி என்றும், இரண்டாவது மகனுக்கு இளங்கோவன் என்றும், மூன்றாவது மகனுக்கு ஏழுமலை என்றும், நான்காவதாய் பிறந்தவருக்கு வரதன் என்று தன் தந்தையாரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் மதுரை, முனியம்மாள் தம்பதியினர். இவரின் தாத்தா பாட்டியின் பெயர் திரு. வரதன் மற்றும் சின்னக்கண்னு என்பதாகும். இவருக்கு இரண்டு தங்கைகள் அவர்களின் பெயர். திருமதி. குப்பு ஆறுமுகம், மற்றொருவர். திருமதி. பார்வதி சின்னக்குழந்தை, தன் உறவுகளை எந்த நிலையிலும் கைவிடாத இயல்பு கொண்டவர் அவர். 
சமூக பின் புலம்:
     இந்தியாவை பிடித்த தீராத நோய் என வருணிக்கப்படும் சாதி மற்றும் ஏழ்மை இரண்டும் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் தான் பிறந்தார் அவர். அவர் பிறக்கும் போது பறையர்களுக்கு மேலாடை அணியும் உரிமை கூட இல்லாமல்தான் இருந்தது கரிக்காத்துாரில். வறுமை தலை விரித்து ஆடிய நிலையில் தான் அவரின் இளமைக்கால வாழ்வு இருந்தது. இதை பின்னாளில் அவர் பேசியும் போக்கியும் இருக்கின்றார்.
குடும்ப பின் புலம் :
     வரதனின் தந்தை திரு. மதுரை மிகச் சிறந்த மனிதர், நெடிய உயரமும் கனத்த உருவமும் கொண்டவர், செக்க செவேல் என்று இருப்பார், கெளுத்தி மீசை வைத்திருப்பார், எப்பொழுதாவது வெற்றிலை போடுவார். கரிக்காத்துார் ஊராட்சி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முதல் பிரதிநிதியாக வரலாற்றில் தம்மை பதிவு செய்து கொண்ட படிக்காத அரசியல் மேதை அவர். மேலும் தபால் நிலையத்தின் ஆயுள் கால சாட்சிய உறுப்பினர் இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கரிக்காத்துார் காலணியில் குடிநீர் தேவையை நிறைவு செய்ய இரண்டு கிணறு வெட்டினார், அதனை நினைவு கூறும் வித்தில் அந்த கிணற்றின் மீது மதுரை என்று ஆங்கிலத்தில் எழுதி 1959 என ஆண்டையும் எழுதியிருப்பார்.
     வரதனின் தந்தை மிக சிறந்த மதி நுட்பமும், சாதுர்யமும் கொண்டவர், வரும் காலத்தை நிகழ் காலத்திலேயே கனிக்கும் மதி நுட்பம் அவருக்கு இயல்பாய் இருந்தது, அதனால் அவர் கரிக்காத்துார் காலணி மக்களின் நாட்டாமையாக இறக்கும் வரையிலும் இருந்தார், அவருடைய தீர்ப்புகள் எவரையும் திருப்திபடுத்துவதற்காக எப்பொழுதும் இருந்தது இல்லை, அதே நேரத்தில் யாரையும் காயப்படுத்தும் விதத்திலும் இருக்காது. புகார் கொடுத்தவனும், எதிர் வாதி என இருவரும் மகிழும் விதத்தில் தீர்ப்பு சொல்லுவார் அவர். தகப்பனுக்கு கடைசி பிள்ளைமேல் பாசம் அதிகம், தாய்க்கு முதல் குழந்தையின் மேல் பாசம் அதிகம் என்று சொல்வதைப் போலவே மதுரைக்கும் இயல்பாகவே வரதன்  மீது பாசம் அதிகம் இருந்தது, அதற்கு காரணம் அவருக்கு அவரின் தந்தையின் பெயரை சூட்டியதும் ஒரு காரணம். வரதனின் எந்த செயலுக்கும் தடையோ முட்டுக் கட்டையோ எதிர்ப்போ வெளிப்பட்டதில்லை அவரின் தந்தையிடம் இருந்து.

     திரு. மதுரையின் நயத்தக்க பேச்சுக்காகவும், மதிநுட்பமான ஆலோசனைக்காவும், தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினர் கூட இவரிடம் ஆலோசனை கேட்டு செல்வார்கள், மேலும்  இவருடைய தீர்ப்புக்காவே, இவருக்கு மிகப்பெரும் புகழும் செல்வாக்கும் கரிக்காத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் இருந்தது. பேசும் பொழுது கம்பீரமாய் மீசையை வலது கையால் தடவிக்கொண்டே பேசும் பாணி இவருடையது.
 ( போளுர் வரதனின் தந்தை மதுரை மற்றும் தாய் முனியம்மாள், )
     தீண்டாமை கொடுமைகளில் ஒன்றான ஆண்களில் எனில் மேல் சட்டை போடாமலும், பெண்களாயின் ரவிக்கை அணியாமல் இருந்த காலம் அது, அதன்படி  கரிக்காத்துார் பறையர்களில் ஆண்கள் சட்டையணியும் பழக்கம் இல்லாததால் இவர் எப்பொழுதும் தோளில் துண்டுடனும் வெற்று மார்புடனும் கம்பீரமாக காட்சியளிப்பார். அவர் சட்டை அணிந்த ஓரே நிகழ்வு, வரதன் அவர்களின் திருமண நிகழ்வு மட்டுமே. அதுவும் அவர் கரிக்காத்துார் மற்றும் எட்டிவாடி காடுவரையிலும் சட்டையை மடித்து அக்குளிலே வைத்திருந்து பேருந்து ஏறியதும் மிக கட்டாயத்தின் பேரிலேயே சட்டையை அணிந்து இருக்கின்றார். திருமணம் முடிந்து எட்டிவாடியில் இறங்கியதும், முதல் வேலையாக சட்டையை கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டார் என உறவுகள் இன்றும் அவரைப் பற்றி பசுமையாக பேசிக் கொள்ளும். சாதிய பாகுபாடுகள் குறைய ஆரம்பித்ததும், அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேர்ந்ததால், ஜிப்பா அணிய ஆரம்பித்தார். 
வரதனின் தாயார், மிகுந்த குணவதி, பிள்ளைகளிடம் மிக பாசமானவர், அதே நேரத்தில் கணவரின் குறிப்பறிந்து நடந்து உறவுகளை கட்டி காப்பாற்றியவர். 
ஆரம்ப கல்வி :
     திரு. வரதன் அவர்கள், தனது ஆரப்ப பள்ளி கல்வியை கரிக்காத்துாரில் உள்ள கீற்றுக் கொட்டாய் பள்ளியில் படித்தார், அதன் பின் ஐந்தாம் வகுப்பில் இருந்து பியுசி வரை வடமாதி மங்கலம் அரசு பள்ளியில் படித்தார், தனது கல்லுாரி படிப்பை சென்னையில் உள்ள மாநில கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார். படிக்கும் காலத்தில் எம்.சி.ராஜா விடுதியில் தங்கி படித்ததால் இயல்பாகவே அரசியல் ஆர்வமும், தலித்திய நோக்கும் அவருக்குள் அதிகம் வேர்கொள்ள துவங்கியது. அதற்கு பின், சென்னை சட்ட கல்லுாரியில் சேர்ந்து சட்டம் படித்து தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து, கொண்டு வழக்கறிஞர் தொழிலும் பார்த்தார்.  படிக்கும் காலத்தில் மிகுந்த சுறு சுறுப்புடனும், புத்தி கூர்மையுடனும் இருந்தார் என்று சொல்லிக் கொள்வார்கள் ஊரில்

கரிக்காத்துார் காலணியை சார்ந்த போளுர் வரதன்,  திரு. ரங்கன் மாமாவும், திரு. சின்ன குழந்தை சித்தப்பாவும்  மூவரும் சம வயதுள்ளவர்கள், இவர்கள் மூவரும்தான், கரிக்காத்துாரில் முதல் தலைமுறை கல்வியாளர்கள், இவர்களுக்கு முன்பு வரையிலும் யாரும் கல்லுாரிக்கு சென்று படித்தது இல்லை கரிக்காத்துாரில்.

அரசியல் ஆர்வம்
     கல்லுாரி படிக்கும் காலத்தில், மாணவர் காங்கிரஸில் மாவட்ட தலைவராக இருந்திருக்கின்றார், அதுதான் அவர் அரசியலில் வகித்த முதல் பதவி. அன்றைய காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பறையர்களின் கட்சி என்றே பெயர் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் அந்த அளவுக்கு பறையர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். காந்தியை தலைவராக ஏற்றுக் கொண்டாலும் அம்பேத்கர் மற்றும் அவரின் கொள்கையில் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் குறையாமல் இருந்தது. அதுவும் கல்லுாரி மாணவர்களுக்கு அந்த காலத்தில் மிக அதிகமாகவே இருந்த காலம் அது.

திரு வரதனுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட தந்தையின் ஆளுமை மிக முக்கிய காரணமாக இருந்தது. அவரைப் போலவே பேசவும், பிரச்சனையின் ஆழத்தையும் விளைவுகளையும் எளிதில் கணிக்கும் திரனும் இயல்பாகவே அவருக்கு தந்தையிடம் இருந்து வந்தது. தன் அரசியல் காலம் முழுவதும் மிகுந்த மதி நுட்பத்துடன் இருந்தார் என்றால் அதற்கு அவருடைய தந்தையின் ஆளுமை மிக முக்கிய காரணம். அதே நேரத்தில் யார் தவறு செய்தாலும் தவறு என்று தைரியமாக சுட்டி காட்டும் மனோதைரியம் அவருடன் கூட பிறந்த இயல்பாக இருந்தது அவரின் இறுதி காலம் வரையிலும்.
குடும்பம்
      சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார், அதுவும் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல அதில் அவருக்கு மிக ஆனந்தம். மற்றும் பெருமை, திருமதி. பிரேமா வரதன் அவருக்கு, சிறந்த வாழ்க்கை துணையாக இருந்து அவருடைய குடும்பம் மற்றும் அரசியல் பணிக்கு மிக சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். இவர்களுக்கு திரு. ராஜிவ் வரதன்  என்னும் ஒரே மகன் தற்போது அரசியலில் வளர்ந்து வரும் இளம் தலைவராக உருவாகிக் கொண்டு வருகின்றார்.

அரசியல் வாழ்வு

     திரு. வரதன் அவர்கள் முதன் முறையாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டடு அடைந்த முதல் வெற்றி 1991 ஸ்ரீ பெரும்புத்துார் தொகுதியில், அது ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்ந்த தொகுதி என்பதாலும், அந் நிகழ்வின் போது அவரும் உடன் இருந்தார் என்பதால், கரிக்காத்துார் கிராமத்தில் ராஜிவ் காந்தியுடன் போளுர் வரதனும் இறந்து விட்டார் என்றே பேசிக் கொண்டார்கள், மூன்று நாட்களுக்கு பிறகுதான் அவர் காயங்களுடன் தப்பித்தார் என்று தெரிந்து கரிக்காத்துார் நிம்மதியானது. 1991 தேர்தலில் 63,656 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதன் முறையாக சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதற்கு பிறகு 2001 – ல் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 53,366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், பின்னர் மீண்டும் 2006 –ல் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 54,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று 3 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் பொது செயலாளராக 3 முறை இருந்துள்ளார், தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் மாநில உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார். தாழ்த்தப்பட்டோர் மாநில பிரிவின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார்.  தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு இவரது பெயர் அடிபட்டு சாதியின் காரணமாக அது நிறைவேறாமலே போயிற்று.
     சுய மாரியாதை உணர்வு மிகுந்தவர் திரு. போளுர் வரதன், தன் சுயமரியாதை குறைவு படுவதை அவரால் எப்பொழுதும் தாங்கிக் கொள்ள இயலாது, கொதித்தெழுந்து விடுவார். ஒரு முறை  மாநில அளவில் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தன் சாதியை சொல்லி இழிவு படுத்தியதால் அவரை செறுப்பால் அடித்து விட்டு சிங்கம் போல் செறுக்குடன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறினார் என்று பெருமை பொங்க பேசுவார்கள் கரிக்காத்துாரில்.  
     அவர் சென்னையில் இருந்து கரிக்காத்துாருக்கு வந்தால், அன்று ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும், எல்லோரும் அவரை சென்று பார்ப்பார்கள், அனைவரையும் நலம் விசாரிப்பார். தான் ஊரில் இல்லையென்றாலும் ஊரில் உள்ளவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார், தந்தையைப் போலவே அதற்கான தீர்வையும் சொல்லுவார். அவர் தலைமையில் கரிக்காத்துார் காலணிக்கு மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு குட முழுக்கும் கம்பீரமாக நடத்தப்பட்டது. அதே போல் அவருடைய குல சாமியான மதுரைவீரன் சாமி கோயிலுக்கும் விழா கொண்டாடுவார் வருடந்தோறும். அவருடைய மறைவுக்குப் பின் அவர் மகன் ராஜிவ் வரதன் மதுரை வீரன் கோயிலை கட்டி  குட முழுக்கும் நிகழ்த்தினார். அவரும் வரதனைப் போலவே உறவுகளை ஆதரித்தும் அனுசரித்தும் நடந்து கொள்வது பராட்டுக்குரியதாக இருக்கின்றது. 

     ஊர் தலைவர்கள் மற்றும் மேட்டுக் குடிகளும் அவரை வந்து சந்திப்பார்கள், அவரிடம் உதவி கேட்பார்கள் செய்வார், ஆனால் கோயில், குட முழுக்கு போன்ற செயல்களுக்கு அவரிடம் உதவி கேட்டாலும் அவர் செய்தது இல்லை, காரணம் கேட்டால், என் மக்கள் வெளியே நின்று சாமி கும்பிடும் கோயிலுக்கு நான்  என் பணத்தை செலவு செய்ய மாட்டேன் என்று கறாராக பேசுவார்.
     அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் சலவை செய்தது போல் புத்தம் புதிதாக இருக்கும் ரூபாயைத்தான் தருவார், நான் கூட ஒரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன், எப்பொழுதும் புது ரூபாயாக தருகின்றீர்களே எப்படி மாமா என்று, அதற்க்கு அவர், நம்மிடம் பணம் என்று கேட்டு வருகின்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி கொடுத்தோம் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள், புது நோட்டாக இருந்தால் அது அவர்களை கௌரவ படுத்தியது போல இருக்கும் என்று சொல்லுவார்.
     செங்கம் தாலுக்காவில் இருந்த தண்டராம் பட்டு செங்கத்திலிருந்து மிகுந்த தொலைவு இருந்ததால், அவர்தான் அதற்க்கு தீர்வாக தண்டராம்பட்டுவை தனி தாலுக்காவாக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று முன் மொழிந்தவர், பின்னாளில் அதன் பெருமையை திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தண்டராம் பட்டுவை சேர்ந்த ஏ.வா. வேலு பெற்றுக் கொண்டார், அந்த வகையில் தண்டராம் பட்டு தாலுக்கா கோரிக்கையை முன் மொழிந்த திரு. வரதன் திராவிட முன்னேற்ற கழகத்தால் மறைக்கப்பட்டார்.
போளுரில் உள்ள செய்யாற்றின் குறுக்கே, தடுப்பனை கட்ட வேண்டும் என்று சட்ட சபையில் பேசினார், பின் அது குறித்து எதுவும் பேசாமல் அதைியாக இருந்து விட்டார், காரணம் கேட்டதற்க்கு, அணை கட்டுவதால், நிலவுடைமையாளர்களுக்கு பயன் போய் சேறும், நிலமற்றவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், மீண்டும் அவர்களின் நிலத்தில் போய் கூலி வேலை செய்ய வேண்டும், அது  என் சமூகத்தை தலை குனிய வைக்கும், அதை நான் செய்ய மாட்டேன் என்பார்.
     ஒரு முறை போளுரில் வன்னியர்கள் தெருவில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது மிக துணிச்சலாய், நான் பறையன்தான், என் அப்பா மாட்டு கறி கொண்டுவருவார், அதை சாப்பிட்டுத்தான் நான் வளர்ந்தேன், எனவே என்னிடம் தைரியமும், துணிச்சலுமும்  அதிகம் என்று பேசியிருக்கின்றார், அதை கேள்வி பட்டதும், அந்த தாலுக்காவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் அவரை கொண்டாடி இருக்கின்றனர்,
     அதே போல், கரிக்காத்துார் ஏரிக்கரையில் கீழ் உள்ள நிலம் முழுவதும் தனது சொந்தகளுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அதை நிகழ்த்திக் காட்டினார், அது அவரை பெருமை கொள்ளும் நிகழ்வு. அதே கரிக்காத்துார் ஏரியில் இரண்டு ஏரிகள் கலக்கும் இடத்தில் வெள்ளையர்கள் காலத்தில் கட்டிய பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலத்தை இடித்து, மீண்டும் புது பாலத்தை கட்ட ஆதிக்க சாதியினரும், அரசு அதிகாரிகளும் ஒப்பந்த காரர்களும் திட்டம் தீட்டிய போது அதனை தடுத்து, கரிக்காத்துார் சேரி மக்களுக்கு ஏரி தண்ணீர் கிடைக்க காரணமாக இருந்தவர். அவர். செங்கம் தொகுதியில் பழங்குடிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு பல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டார். பழங்குடிகள் அவரை மிக பெருமையாக பேசியதை கேட்டும் இருக்கின்றேன். 


  ( செங்கம் தொகுதியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பிணர்களுக்கு நிதி உதவி அளித்த போது )
     அவருடைய சட்ட அறிவு மிக நுட்பமானது, மிக சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதாக அதே நேரத்தில் நுனுக்கமான தீர்வுகளையும், பலருக்கும் சொல்லியிருக்கின்றார். அதை அனைவருமே பெருமையாக சொல்லுவார்கள்.
     திருவண்ணாமலை, வேலுார் மாவட்டத்தில், காங்கிரஸ் அடிமட்ட தொண்டன் வரைக்கும் அவரோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவர்மீது மிகுந்த மரியாதையும் இருந்தது. சேரி மக்களிமும், பிற சாதியினரிடமும் அவர் கட்சி ரீதியாக நெருக்கமான உறவு வைத்திருந்தார். அவரிடம் திருமண அழைப்பிதழ் கட்சிகாரன் கொடுத்தால் அவசியம் திருமணத்திற்கு வருவார். அதை போல நிறைய நிகழ்வை சொல்லிக் கொண்டு போகலாம். 

     இறுதியாய், ஒரு சிறு கிராமத்தில் இருந்து , விளிம்பு நிலை மக்களில் இருந்து அரசியல் வானில் நட்சத்திரமாய் ஜொலித்த, போளுர் வரதன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கின்றார். அவரின் மரணம் 27.01.2011 அன்று நிகழ்ந்தது. அதுவரையிலும் அவர், தன் மக்களின் தலை நிமிர்ந்த வாழ்வுக்காவே வாழ்ந்தார். அந்த வகையில் கரிக்காத்துார் மக்களை பெருமை படுத்திய முக்கியமான மற்றும் முதல் அரசியல் ஆளுமை திரு. போளுர் வரதன். 
( இந்த கட்டுரைக்கான பெரும்பாலான தகவல்கள் கரிக்காத்துார் சேரி மக்களின் வாய்மொழி பதிவு மற்றும் போளுர் வரதனின் மகன் திரு. ராஜிவ் வரதன், அவரது அண்ணன் மகன் திரு. கமலநாதன் அவரிடம் இருந்து பெறப்பட்டது. புகைப்படங்களை தந்தவரும் திரு. கமலநாதன் தான் இவர்களுக்கு நன்றி.)

இதையும் படியுங்கள்