Friday, August 8, 2014

மழையும் மக்களும்

கிராமப்புறங்களில் பெய்த மழையை அளவிட்டு பேசுவார்கள். முப்பது  நாற்பது  ஆண்டுகளுக்கு முன்பு . எனக்குத் தெரிந்த வரையில் அவற்றை இங்கே பதிவு செய்கின்றேன்.

·         துாறல் ( துாத்தல் என்பார்கள் பேச்சு வழக்கில் ) ( லேசான மழை)

·         சிறு துாறல் ( மண்னுக்கு ஈரப்பதம் அளவுக்கான மழை)

·         படி மழை (பலமழை) என்பார்கள் பேச்சு வழக்கில்  ( சிறு புல்லுக்கு உகந்த மழை)

·         சால் மழை ( சால மழை அல்லது சான மழை என்பார்கள் பேச்சு வழக்கில் ) ( சுமாரான மழை) நாங்கள் எல்லாம் விளையாடும் போது எங்க ஊரில் சான மழை பொழிஞ்சது என்போம். சால் என்பது இறைப்புக்கருவி பத்துசால் பாசனம் என்று நிலத்திற்க்கு பயிரிடும் போது கவளையிறைக்கும் போது சால் முறையில் அளந்து இறைப்பார்கள் பண்டையநாளில்.

·         எறப்பு மழை ( இறைக்கின்ற அளவுக்கு பொழிந்த மழை)

·         வெள்ளம் ( நீர் நிலைகள் நிரம்புகின்ற அளவுக்கு பொழிந்த  மழை )

உங்க  ஊர்ல வெள்ளம் போச்சா என்று மழை பெய்த அளவை விசாரிப்பார்கள்.

·         கோடி மழை ( நீர் நிலைகள் நிரம்பி வழிகின்ற அளவுக்கு

இருக்கின்ற மழை )

·         பேய் மழை ( புயலும் காற்றும் சேர்ந்து அடித்தால்)

·         பெரு மழை ( விடாது பெய்து கொண்டிருக்கும் மழை)

·         மாரி (  அளவிட முடியாத அளவுக்கு பொழிந்த மழை)
அப்போது எல்லாம் வெளியூரில் இருந்து யார் வந்தாலும் முதலில் அவரைப் பற்றி நலம் விசாரித்து விட்டு, பின் அவரது குடும்பத்தினரின் நலம் விசாரிப்பார்கள். மூன்றாவதாக உங்க ஊர்ல மழை பொழிந்ததா என்று விசாரிப்பார்கள். பேச்சு வழக்கில் உங்க ஊர்ல மழை மாரி பொஞ்சதா என்பார்கள். எனக்கு இந்த மழை மாரிக்கான விளக்கம் நீண்ட நாட்களாய் தெரியவில்லை, பின்னர்தான் தெரிந்தது. மேலே உள்ள மழை அளவு முறையில் பெய்தால் அது மழை, அளவற்ற முறையில் பெய்தால் அதாவது பெரு வெள்ளத்துக்கு மேலே பெய்தால் அது மாரி என்று. மழையையும் நமது உறவினராகவே கருதி அதையும் விசாரிக்கும் பழக்கமும், பெய்கின்ற மழையை விவசாயத்துக்கு உகந்த அளவில் கணக்கிட்டு பேசும் பழக்கமும் அப்போது நம்முடைய வாழ்வோடு கலந்திருந்த ஒன்றாக இருந்தது.

இவ்வாறு  மழையை சுட்டும் பெயர்கள் எதுவுமே இப்போது வழக்கத்தில் இல்லை, நலம் விசாரிப்பு முறைகளும் இப்போது இல்லை, நம் வீட்டுக்கு யார் வந்தாலும் அவரிடம் இரண்டு வார்த்தை பேசுகின்றோம், மூன்றாவது வார்த்தை பேசுவதற்க்குள் தொலைக்காட்சி தொடர், கிரிக்கெட், சினிமா, அரசியல் இவைகளில் ஏதாவது ஒன்று வந்து மழையின் இடத்தை பிடித்துக் கொள்கின்றது.

மழை குறித்த விசாரிப்புகளே நம்மிடையே இல்லாமல் போய் விட்டது.  விவசாயத்தை தொழிலாக இல்லாமல் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த நாம்   வெகு சுலபமாக மழையை மறந்து விட்டேம். இரண்டு காரணம்,

·         விவசாயத்தை கொண்டாடுபவர்கள் மழையை கொண்டாடுவார்கள் எனவே அதன் தன்மை மற்றும் அளவை வைத்து, அழைத்தார்கள். இன்று விவசாயம் வாழ்க்கை முறை என்பதில் இருந்து மாறி, வருமானம் ஈட்டும் முறையாகிப் போனதால், நிலமற்ற விவசாய கூலிகள் நிலத்தில் இருந்து அன்னியப் பட்டு நிற்பதால் விவசாயத்தை கொண்டாட யாரும் இல்லாததால் மழையை கொண்டாட யாரும் இல்லை.

·         மழையை நம்பி பயிர் செய்யும் முறையும், ( மானாவரி விவசாயம்) சிறு தானிய உற்பத்தி முறையும் மாறிப் போனது.

·         மானாவரி பயிர் செய்யும் நிலத்தில், கிணற்றை வெட்டி, விவசாயம் செய்ததால், மழைபெய்தால்தான் விவசாயம் என்ற நிலை மாறிவிட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் கிணற்றில் இருந்து நீரை இறைக்கின்றோம் என்னும் மனோபாவம் வந்து விட்டது. நீர் இருப்பு குறைந்ததால் ஆண்டுதோறும் இரண்டு கெஜம் கிணற்றை வெட்டினால் போகின்றது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் இதனால் புவியின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகின்றது என்பதை யாரும் எண்ணவில்லை.

மழையை கொண்டாடும் மரபு போய் மழை வேண்டாத  விருந்தினராகிப் போனது நம்முடைய வாழ்க்கை முறையில் இன்று. ஆண்டிற்க்கு முன்னுாறு நாள் பெய்த மழை போய் இன்று 15 நாட்களே மழை பெய்கின்றது. இவ்வாறு பெய்யும் மழைநீர் கூட நிலத்தில் பதிய கூடாது என்பதற்காக, தெருக்களெல்லாம் சிமெண்ட் சாலைகளும், மேம்பாலங்களும், மழையை பகையாளியாக கருதி தடுப்பு முறையை கையாளுகின்றோம்.

   ஆறுகளில் இப்போது இருக்கும் மேம்பாலங்கள் எதுவும் அப்போது இல்லை, இருந்தும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அவ்வாறு பெருக்கெடுத்து ஓடுகின்ற வெள்ளத்தை பார்ப்பதற்காகவே மக்கள் ஆற்றுக்குப் போய் பார்த்து வருவார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. எங்கள் ஊர் கரிக்காத்துாருக்கு பக்கத்தில் இருக்கும் ஊர் மண்டகொளத்துார் இரண்டையும் செய்யாறு பிரிக்கின்றது, நான் சிறுவனாக இருந்த போது செய்யாற்றில் வெள்ளம் வந்தால் இரு கரையிலும் கயிறு கட்டி அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டும் ஆற்றை கடக்க,
எங்கள் ஊரில் இருந்து கயிற்றை பிடித்து ஆற்றை ஒரு முறையேனும் கடந்து போய் வர கூட்டமாக போய் வருவோம், ஒரு முறையேனும் பெருவெள்ளத்தில் கால் நனைத்து விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்வோம். கால் நனைத்து வராதவரை குற்றவாளிபோன்றும், தவறு செய்தவரை போன்றும் அடுத்த ஆண்டு வெள்ளம் வரும் வரைக்கும் பேசுவார்கள்,  
அடுத்த ஆண்டு வெள்ளம் வந்ததும் அவர் முதல் வேலையாக போய் கால் நனைத்து விட்டு வருவார். இவ்வாறு ஆற்று வெள்ளத்தை அதாவது நீரை நீருக்கு மூலாதாரமாக விளங்கும் மழையை கொண்டாடும் மரபு நம்முடைய மரபு.

   காவேரி வைகை போன்ற பெரு நதிகள் பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு மிகுந்த விமரிசையாக கொண்டாடுவார்கள், இதுவும் நீரை, நீருக்கு ஆதாரமாக விளங்கும் மழையை கொண்டாடும் மரபுதான். சிலம்பில் கொண்டாடப்படும் இந்திரன் விழாவின் எச்சம்தான் இன்றும் ஆறுகள் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் ஆற்றத்திருவிழா. இதுவும் மழையை கொண்டாடும் விழாதான். இவ்வாறு பன்டைய காலம் தொட்டு நீரையும், மழையையும் கொண்டாடும் மரபு நம்முடைய மரபு.
     என்னுடைய தாத்தா திரு. மு. பரசுராமன், சிறுமூர் கிராமத்தில் இருந்தார், அவர் மழை பெய்யும் போது, அவசரப்பட்டு ஓடி வரமாட்டார், மாடு மேய்த்துக கொண்டிருந்தாலும்  அதையும் விரட்ட மாட்டார், அவரும் நனைவார், மாடும் நனையும், அவருடன் அப்போது இருந்தால் நானும் நனைவேன்.
     ஏன் தாத்தா எல்லோரும் மழைக்கு பயந்து ஓடுராங்களே நாம ஓட வேண்டாமா என்றால், முட்ட பசங்க, மழை நம்ம மேல படுறதுக்கு நாம கொடுத்து வைத்திருக்கனும் என்பார். மழையை அவ்வளவு ரசிப்பார். இன்னும் சொன்னால் மழையில் நனைந்தால் பன்ன பாவம்கூட போகும் என்பார். அந்த அளவுக்கு மழையோடு ஒன்றி கலந்து உயிர் கலந்த உறவாக இருந்த மனிதர்களும் இருந்திருக்கின்றார்கள் என்று என்னும் போது,

     அய்யன் திருவள்ளுவரின் வாக்கான நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்னும் குறளுக்கு மழையை நேசிக்கின்ற நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று கூட பொருள் கொள்ளத் தோன்றும் எனக்கு,
     அப்போது எல்லாம் தெருக்கூத்து நடக்கும் போது, மாதம் மும்மாரி பொழிகின்றதா அமைச்சரே என்று ராஜபார்ட் அமைச்சரைப் பார்த்து கேட்ப்பார், சிறு பிள்ளையாக இருக்கும் நாங்கள் கொல்லென்று சிரிப்போம், அப்போது எங்களுக்கு புரியவில்லை அது, என் தாத்தாவே அதற்க்கு விளக்கமும் சொன்னார்,

·         அறிவில் சிறந்த சான்றோருக்கும் முதியோருக்கும் ஒரு மழை

·         நீதி நெறி வழுவாத அரசருக்கு ஒரு மழை

·         குடி மக்களுக்கும் கற்பு நெறி தவறா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு மழை என்பார்.
இந்த 3 மழையில் எந்த மழை குறைந்தாலும் அத்தகைய பன்புடையவர்கள் நமது நாட்டில் இல்லை என்று கருதி குடிமக்களின் நலன் காக்கும் மன்னனாக நடந்து கொள்வாராம் அரசர்.  நமது மான்பை கூட மழையை வைத்துத்தான் நாம் கணித்திருக்கின்றோம் என்பதையும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை இன்று.
மழை என்பது சமவெளியில் வாழ்ந்த மக்களுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வோடு கலந்த உறவு. கடற்கரையில் வாழ்பவர்களுக்கு காற்று என்பது உயிரோடு கலந்த உறவாக இன்றும் இருக்கின்றது, பழங்குடிகளும் மழையை கொண்டாடுகின்றார்கள். சமவெளி மக்கள்தான் இன்று மழையை மறந்து விட்டார்கள்.
கிராமங்களில்  காப்பு கட்டி விரதம் இருந்து கொண்டாடப்படும் கோயில் திருவிழா என்பது மழைக்காக ஊர் மக்களின் வேண்டுதலும்  அதற்காக கடைபிடிக்கும் அறம் சார்ந்த வாழ்வியல் நெறிமுறையும்தான், கிராமத்தில் உள்ள பெண்தெய்வமான மாரியம்மன் என்பது மழையை குறிக்கின்ற ஒரு குறியீடு என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மழை இன்று பெய்யும் அல்லது எப்போது பெய்யும் என்பதையும் நம் முன்னோர்கள் துல்லியமாக கணித்து வைத்திருந்தனர். உதாரணத்திற்க்கு, சிறு மழைக் காலத்தில் கொக்கு, நாரை, மற்றும் நீர்கோழி ஆகிய நீர் பறவைகள் நீர் நிலைகளில் நடமாடினால் 15 லிருந்து 30 நாட்களுக்குள் பெருமழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பப் போகின்றது என்று பொருள்.
தும்பிகள் பறந்தால் இன்னும் ஒரு வார காலத்தில் மழை பொழியும் என்று பொருள். எறும்புகள் தங்களது கூட்டை விட்டு இறையை இடம்மாற்றினால் இன்னும் 3 மாதத்தில் மழை பொழியும் என்று பொருள். ( எறும்புகள் தங்களின் வாயில் வெள்ளையாக கொண்டு போவது அரிசி அதாவது அதனுடைய உணவு என்றுதான் நான் வெகுகாலமாக நம்பியிருந்தேன். என் மூத்த மகளுக்கு எறும்பின் மீது திடீர் ஆர்வம் ஏற்பட்டு அதை குறித்து தீவிராமாக வாசித்து எறும்புகள் தங்களின் வாயில் கொண்டு போவது தங்களின் முட்டை என்று சொன்னாள்)
அளவுக்கு அதிகமான புழுக்கம் (வெக்கை) இருந்தால் 1லிருந்து 3 நாட்களுக்குள் மழை பொழியும். மேற்கிலிருந்து மேகம் கிழக்கே போனால் மழை விசிறிவிட்டுப் போகும் என்பார்கள். கிழக்கிலிருந்து மேகம் மேற்கே போனால் கன மழை பொழியும் என்பார்கள்.

ஐம்பெரும் காப்பியத்துள் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கூட மாமழை போற்றுதும் என்று சொல்லி மழையை வனங்கியிருப்போம்.அவ்வையாரும் தனது கொன்றை வேந்தனில் நீரகம் பொருந்திய ஊரகத்து இரு என்று சொல்வார். அதாவது நீர் வளம் உள்ள பகுதியில் வாழ வேண்டும் என்று. இவ்வாறு மழையை கொண்டாடும் மரபில் வந்தவர்கள் நாம்.
கோயில்களில் கூட ஸ்தல விருட்சம் என்ற பெயரில் மரங்களைத்தான் வளர்த்துக் கொண்டிருந்தோம் நாம், இவ்வாறு வழிபடும் கோயில் முதற்கொண்டு வாழிடம் வரை மரங்களை வளர்த்துக் கொண்டிருந்ததால் மழை அதிகமாக பொழிந்தது.

கார்த்திகைக்குப் பின் மழையில்லை, கர்ணனுக்குப் பின் சண்டையில்லை என்று பழமொழிகளில் கூட மழைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போம் நாம். தை மாதத்தில் மழை பொழியாது, ஆயினும் பொங்களுக்குப் பின் இரண்டு நாட்களுக்கு சிறு மழை பொழியும், கிராம புறத்தில் கேட்டால் பொங்கள் கோலத்தை கலைப்பதற்காக மழை பொழியும் என்பார்கள்.

பொங்கல் என்பது மழைக்கு நன்றி சொல்லும் திருவிழாவாக கருதப்படுவதால், மகிழ்ந்து மக்கள் சிரத்தையோடு போட்ட கோலத்தை ஏற்றுக் கொள்கின்றது என்ற பொருளில் பொங்கல் கோலத்தை கலைப்பதற்க்கு மழை பொழிகின்றது என்ற நமக்கும் மழைக்குமான புரிதலை நன்றியோடு வெளிப்படுத்துவர். ஆனால் இன்று அரிசி மாவுக் கோலம் போய் பெயின்ட கோலம் வந்ததால், கோலத்தை கலைப்பதற்க்கு மழை வந்தாலும் வராவிட்டாலும் கவலைப் படுவதில்லை நாம்.

இராகத்தில் கூட அமிர்த வர்ஷினி என்றொரு ராகம் மழையை வருவிக்கும் என்று சொல்வார்கள். பாவேந்தர் கூட மழையை அமிழ்தம் என்றுதான் சொல்லுவார். இவ்வாறு நமது மரபு மழையைக் கொண்டாடும் மரபு என்ற நிலையிலிருந்து போய், மழையை வெறுக்கும் இயல்பாக மாறிவருவது மிகவும் வேதனைக்குரியது.

இளைஞர்களோ, கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை சொன்னால் மழை பெய்யக்கூடாது என்று கடவுளை வேண்டுகின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தை விட தங்களின் பொழுது போக்கே முக்கியத்துவம் என நினைப்பதன் வெளிப்பாடு இது.

வேலைக்குச் செல்லும் பெண்களோ, அலுவலகத்துக்கு செல்லும் நேரம் மற்றும் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் மழை பெய்யக்கூடாது என எண்ணுகின்றனர். முன்பு பருவகாலங்களில் மட்டுமே செங்கல்சூளை போட்டனர். இப்போது ஆண்டு முழுவதும் செங்கல் சூளை போடுவதால் எப்பொழுதும் மழை வரக்கூடாது என எண்ணுகின்றனர்.

அரசில்வாதிகளோ, தங்களுடைய கூட்டம் நடக்கும் நாட்களில் மழைவந்தால் மக்கள் வரமாட்டார்கள் எனவே அன்று மழை வரக்கூடாது என எண்னுகின்றனர். 

பள்ளி செல்லும் குழுந்தைகள் மழைக்காலத்தில் பள்ளிக்கு செல்வது மிகுந்த சிரமமாக இருப்பதால் அவர்களும் மழை வரக்கூடாது என என்னுகின்றனர். உண்மையில் கோடையில் விடுகின்ற பள்ளி விடுமுறையை மழைக்காலத்தில் விட்டால் பிள்ளைகளும் மகிழ்வார்கள், பெற்றோர்களும் மகிழ்வார்கள்.

இவ்வாறு அனைவரும் தன்னுடைய பங்குக்கு முதல் எதிரியாக மழையை கருதி ஏதோ மழையில் தாங்கள் நனைந்தால் உயிர் போவது போல நினைத்து மழை வரக்கூடாது என்று நினைக்கின்றனர். இவ்வாறு உயிர்களின் வாழ்வாதாரத்துக்கு காரணமாக இருக்கும் மழையை தங்களின் விருப்பத்திற்காக வரகூடாது என நினைக்கின்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் இந்த நாட்டில்.

     அன்று நம்மோடு மழை உயிர் கலந்த உறவாக இருந்தது இன்று அது அவ்வாறு இல்லை, அன்னியப்பட்டு போய் நிற்கின்றோம் மழையோடு, அதனால்தான் வீடுதோறும் மழையே மழையே துார போ, சின்ன பையன் ஜானி விளையாடனும் என்று பொருள் புரியாமலே மழையை விரட்டிக் கொண்டிருக்கின்றது நமது குழந்தை, மழை வரக்கூடாது என்று மரங்களை வெட்டிக் கொண்டிருக்கின்றோம் நாம்.
- நன்றி . காக்கை சிறகினிலே இதழ்

Saturday, May 3, 2014

பௌத்த வாழ்வியல்


உலகில் தோன்றிய மதங்களுள் உன்னதமானது  பௌத்தம். உலகில் உள்ள  மற்ற எல்லா மதங்களும் தன்னை மறுசீரமைப்புக்கு அல்லது காலத்திற்கு தகுந்தாற்போல் தம்மை புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத போது பௌத்தம் மட்டுமே எப்பொழுதும் தன்னை மறுசீரமைத்து காலத்துக்கு தகுந்தாற் போல் தன்னை தகவமைத்து அதன் சாரம் கெடாமல் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஒன்றை சொல்ல இயலும்.

புத்தரின் அறவழி போதனையான எண்வழி மார்கம்

1.   நல் உணர்வு - Right  view

2.   நல் நிணைவு - Right Intention

3.   நற் பேச்சு -  Right Speech

4.   நற் செயல் -  Right Action

5.   நல் வாழ்வு - Right Livelihood

6.   நல் முயற்சி - Right Effort

7.   நல் மனம் - Right Mindfulness

8.   நல் நிணைவு - Right Concentration

நல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிறஎன்பார்.


தெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், ” உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.


இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதை ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும்மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். ”


புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.


இது புத்தர் பெருமான் கூறிச் சென்ற நல்லுணர்வு இன்றைய விஞ்ஞான உலகில் உணர்வு மேலாண்மையாக   ( Emotional Management)  காலத்திற்க்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டு, அறிவியல் வழி நின்று வளர்ந்து வருகின்றது. இவ்வாறு அறிவியல் வழி நின்று வளர்வதால்தான் பௌத்தம் இன்று  வெள்ள முடியாத மதமாக வாழ்வியலாக, நெறிமுறைகளாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.

 இதில்  தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றி கலந்த நெறிமுறையாக பௌத்தம் எப்போதும் இருந்திருக்கின்றது. வரலாற்றில் சமுகம் எப்பொழுதும் மதத்தை கொண்டாடியது இல்லை, ஆனால் மத கோட்பாடுகளை, மத கருத்துக்களை எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கும், அதை காலத்திற்க்கு தகுந்தாற்போல் தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்க்கு நல்ல உதாரணம் பௌத்த மதம் மட்டுமே.

பௌத்த மதக் கோட்பாடுகளை மற்ற மதங்கள் குறிப்பாக இந்து மதம் திருடிக் கொண்டாலும், அல்லது தன் வயப்படுத்திக் கொண்டாலும், பௌத்தம் வீழ்ந்து விடவில்லை, அது இந்தியாவில் தோன்றி, கிழக்காசிய நாடுகள் வரையிலும் பல்கி பெருக அதனுடைய அறிவியல் தன்மை வாய்ந்த கொள்கைகளும் கோட்பாடுகளுமே காரணம்.

      இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் அம்பேத்கரும். ஆயினும் இருவரது பார்வைக்கும் பெருத்த வேறுபாடுண்டு. பண்டிதர் அயோத்திதாசர் முன் மொழிந்த பௌத்தமானது. அன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்த சூழ்நிலைக்கு மாற்றானது.

      அயோத்திதாசரின் காலமான மே 20, 1845 - 1914;  வெள்ளார்களின் எழுச்சிகாலமாக இருந்தது. தமிழிலக்கியங்கள் மற்றும் தமிழ கலாச்சாரத்திற்க்கு சைவ, திருமாலிய சமய சாயங்கள் வலிந்து திணிக்கப்பட்ட நேரமாக அது இருந்தது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலமது. தமிழர்களின் வரலாறு, சாதிய வரலாறாக திரிக்கப்பட்டிருந்த காலத்தில், இத்தகைய திரிபு, புரட்டு ஆகியவற்றிற்க்கு மாற்றாக, அவர் பௌத்தத்தை முன் மொழிந்தார்.

      குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வியல் சைவத்தை சார்ந்தது என்ற புரட்டுக்கு எதிராகவும், சாதிய கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கவுமே அவர் பௌத்தத்தை முன் மொழிகின்றார்.. குறிப்பாக அப்போது ஓலைச்சுவடியில் இருந்து அச்சுக்கு கொண்டு வரப்பட்ட அணைத்து இலக்கியங்களையும் சைவ சமய சாயத்துடனே கொண்டு வந்தனர்.
மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, ஆகிய நுால்களைத் தவிர்த்து, ஏனைய நுால்களை சைவ , வைணவ சாயல்களில் கொண்டு வந்து, சைவம் தான் தமிழை வளர்த்துது, என்ற நிலைப்பாட்டை நிறுவ அப்போதிருந்த தமிழ் அறிஞர்கள் முனைந்து நின்ற காலத்தில்தான், அயோத்திதாசர் சைவ புரட்டுக்கு எதிராக பௌத்த உண்மையை கொண்டு வந்தார்,

      சைவர்கள் மட்டும் தமிழை வளர்க்கவில்லை, பௌத்தர்களும் தமிழை வளர்த்தனர். என்று நிலை நிறுத்தினார், அதே கண்ணோட்டத்திலேதான், அவர் சமணத்தையும் பாரத்தார். தமிழ் இலக்கியத்தில் மற்றும் தமிழ் வளர்ச்சியில் பௌத்தர்களின் பங்களிப்பு மற்றும், சமணர்களின் பங்களிப்பை உலகுக்கு உணர்த்துவதே அவர்தம் முதற்பணியாக இருந்தது.

சைவத்துக்கு எதிரான  நிலைப்பாட்டை கொண்டிருந்ததால் பௌத்தம், மற்றும் சமணம் ஆகிய இரண்டையும் அவர் ஆதரித்தார், சாதிகளை முன் மொழியாத காரணத்ததால் சைவத்துக்கு எதிராக பௌத்தம் மற்றும் சமணத்தை ஒருங்கிணைத்தார்.  அதே பார்வையில் பார்த்ததாலேதான் அவரால் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றார்.

பண்டிதரின் பார்வையில், மொழி மற்றும் இலக்கிய சூழலில் நிலவிய சைவர்களின் ஆதிக்கத்திற்க்கு மாற்றாக பௌத்தத்தை முன் மொழியும் பணி அயோத்திதாசரின் பணியாக இருந்தது.

புரட்சியாளர் அம்பேத்கர் முன்நிறுத்திய பௌத்தமானது, இந்து மதத்திற்க்கு எதிரானது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யக்கூடியது. சுயமரியாதைக்கான வித்தாக போற்ற வேண்டியது. சாதிய பாகுபாடு, மற்றும், சமுக ஏற்றத்தாழ்வுகளின் மூலாதாரம் வரை சென்று ஆய்ந்து தீர்வை முன் மொழிந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் வாழவே அம்பேத்கர் பௌத்தம் தழுவினார். தான் மட்டும் தழுவியதோடு அல்லாமல் தன் மக்களையும் பௌத்தம் ஏற்க வைத்ததார்.

இன்றைய நிலையில், தமிழகத்திற்க்கு, அயோத்திதாசரின் பார்வையில் இலக்கண இலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, சைவ வைணவத்திலிருந்து, பௌத்த நோக்கில் இலக்கியங்களை உருவாக்கவேண்டிய தேவையும், ஏற்கனவே உள்ள இலக்கியங்களை மீள் வாசிப்பிற்க்கு உள்ளாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அதே வேளையில் அம்பேத்கரின் சுயமரியாதை எழுச்சியை சேரிகள் தோறும் உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. சேரிகள் தோறும் உள்ள தீண்டத்தகாத மக்கள் பௌத்தம் ஏற்று தங்களை தீண்டத்தகாதவர்கள் இல்லை, என்று பறைசாற்ற வேண்டிய தேவையும் இருப்பதால், அயோத்திதாசர், மற்றும் அம்பேத்கரின் நோக்கில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டியது, சேரிமக்களின் தலையாய கடமையாக உள்ளது இன்றைய நிலையில்.

      - நன்றி. சமுகப் பயணம் மாத இதழ் -மே 2014

Wednesday, January 29, 2014

எட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு?

எட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு?

இயற்கை விவசாயம் என்றொரு சொல் இப்போது பரவலாக ஒளித்துக் கொண்டிருக்கின்றது தமிழகம் எங்கெங்கும். உண்மையில் இயற்கை விவசாயம் செயற்கை விவசாயம் என்றொரு சொல் தொடருக்குப் பின் இருக்கின்ற உண்மைகளை உணர்ந்து இருக்கின்றோமோ என்று தெரியவில்லை.

இந்திய திருநாட்டில் விவசாயம் என்பது தொழில் அல்ல வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமே விவசாயத்திலும் எதிரொலித்தது. நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு. என்பதுதான் நமது பாரம்பரியம். அதற்கேற்ற பயிர்களை பயிர்செய்தோம், உழவு கருவிகளையும் கையான்டுாம். ஆனால் இந்த வாழ்க்கை முறையில் இருந்து பிழன்று, வீரிய வகைக்கு தாவியதன் பயனாக, வீரியத்திற்காக இயற்கை உரத்தினின்று செயற்கை முறைக்கு அரசாங்கமே முன்னின்று இந்த மக்களை மாற்றியதுதான் பசுமை புரட்சி.

பசுமை புரட்சியின் பயனாக மண் மலடாகிப் போனதும், செயற்கை உரங்களுக்கு அடிமையாகிப் போனதும் தான் நடந்தது. ஆனால் இந்த நிலையில் இயற்கை விவசாயம் என்று பேசுகின்றனர். அதற்கென இயற்கை அங்காடி முதல் அணைத்தையும் வணிக நோக்கில் நின்று செயல்படுத்துகின்றனர்.
 தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு அடி மண்ணுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்று” இதன் பொருள் உழவு செய்து விளைச்சலுக்கு உள்ளாக்கும் பொருட்கள் அணைத்தும் அடிப்பகுதி நிலத்தில் வெயில் படாமல் இருந்து மண் வறண்டு போவதை தடுத்து மண்ணின் அடிப்பகுதியில் நுன்னயிர் பெருக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த யுக்தியும்.

விளைவித்த பயிர்களின் அடிப்பாகம் மண்ணுக்கு  என்று அடிப்பாகத்தை விட்டு விட்டு நடுப்பாகத்தை விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்நடைகளுக்கு தீணியாக, தீவனமாக பயன்படுத்துவதுதான் நடு பாகம் மாட்டுக்கு, மிஞ்சிய நுனி பாகத்தில் விளைச்சல் இருப்பதால் அதை வீட்டுக்கு என்று சொலவடை உள்ளது.. இதுதான் இயற்கை விவசாயத்தின் தாரக மந்திரம்...

இந்த முறைப்படி பயிர் செய்த உழவர்களால் உழவு முறையில் லாபம் எஞ்சியது. கால்நடை களும் வீட்டில் தேவைக்கு அதிகமாக இருந்தது. அதனால் மனிதனும் கால்நடைகளும் பயிர்கள் என ஒன்றை ஒன்று சார்ந்த உயிர் சங்கிலி அறுபடாமல் இருந்ததால் அணைவருக்கும் லாபமும் நன்மையும் கிட்டியது.

அடி மண்ணுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்ற வகைப்பாட்டின் படியே பழைய நெல் பயிர்கள் விளைவிக்கப்ட்டன. அதை மெய்பிக்கும் வகையில் யானை நின்றாலும் மறைக்கும் உயரத்தில் நெல் விளைந்ததாக தமிழிலக்கியத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம்.  இந்த உயிர்சங்கிலி அருபட்டால்தான் வெள்ளையர்களின் வீரிய உரமும் விவசாய கருவிகளும் இந்திய விவசாய சந்தையில் விற்பனைக்கு போகும் என்று தெரிந்து கொண்டு அதற்கென முதலில் அவர்கள் கொண்டு வந்தது.

உயரம் குறைந்த நெல் பயிர்கள் அதை பயிரிட்டோம் அந்த பயிர் விளைந்து அறுவடைக்கு வந்ததும் நமது பழமொழியின் படி பயிர்  மண்ணுக்கும் போக வில்லை, மாட்டுக்கும் போக வில்லை, மனிதனுக்கும் போதவில்லை. மனிதனுக்கு போத வேண்டும் என்றால் உரங்கள் போட வேண்டும் என்று உர விற்பனையை அதிகமாக்கி, நமது உயர் சங்கிலியை அறுத்ததன் வாயிலாக இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றிலிருந்து குழந்தையின் தாய் பால் வரை மாலதியான் மருந்து கலந்து ஒரு நாடே விசத்தை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதுதான் யதார்தமான உண்மையாக இருக்கின்றது.


ஆனால் இன்று இயற்கை விவசாயம் என்று பேசுவோர் நமது பழைய முறைப்படி உயரமான நெல் வகைகளை உருவாக்கி மீண்டும் நமது உயிர்சங்கிலியின் தொடர்பை உறுதி படுத்தாமல், அதை ”பஞ்ச காவ்யா”, பசுந்தீவனம், ஆசோலா, என்றெல்லாம் வணிகப்படுத்துகின்றனரே ஒழிய இயற்கை விவசாய முறையின் உயிர் நாடியான சிறுதானிய உற்பத்தியில் மறைந்து போன சிறு தானியங்களை மீண்டும் கொண்டு வந்து விளைவிப்பதில் ஆர்வம் இல்லை. நமது மண்ணுக்கேற்ற ஊடு பயிர் விவசாயத்தில் ஆக்கரை காட்டுவதில்லை.

பண்டைய விவசாய முறையில் நிலமுடையவர்களில் பணக்கார்களால் நீர் தேவை மிகுந்த பயிர்களான நெல் வழை மஞ்சள் முதலிய பயிர்கள் பயிரிடப்பட்டன. ஏழை விவசாயிகளால் கம்பு,கேழ்வரகு,சோளம், வரகு, எள், கொள்ளு, என சிறு தானியங்கள் பயிரிட்ப்பட்டன அதனால் ஏழை விவசாயிக்கும் பணக்கார விவசாயிக்கும் ஒரு வகையில் பண்டமாற்றுகூட நிகழ்ந்தன. இதனால் அவர்களும் ஒற்றுமையாக இருந்தனர்.

இதை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இயற்கை விவசாயம் என்று பேசுவது எதிர்வினையான விளைவைத்தான் உருவாக்குமே ஒழிய இயற்கை விவசாயத்தை வளர்க்காது...

Sunday, December 29, 2013

தாய்வீடு திரும்பா தலித்துகள்...

தமிழகத்தில் உள்ள அணைத்து சமுக இயக்கம், மற்றும் அரசியல் கட்சிகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அனைத்திலும் தலித்துகளின் பங்களிப்பு மிகுதியாகவே இருந்திருக்கின்றது....
ஆரம்ப காலத்தில் நீதி கட்சியில் படித்த தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு பங்காற்றியிருக்கின்றனர்...

அதற்கு பின் வந்த திராவிட இயக்கத்திலும், தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார்கள்...

பேராய கட்சிக்கு ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களின் கட்சி என்றே பெயர் இருந்திருக்கின்றது... காந்தி, நேரு, பட்டேல், போன்ற பார்பன, பணியா தலைவர்கள்... சொல்லுக்கு செத்து மடிந்தது தலித்துகளாகவே இருந்திருக்கின்றனர்....
அவர்களுக்குப் பிறகு பொதுவுடைமை கட்சி வந்த போது, அதிலும் உயிர் நீத்தவர்களும் களப்பணி செய்து கடைசி வரை தொண்டனாக இருந்தவர்களும் தலித்துகள் தான், தலைவர்களாக பார்பணர்களும், பணியாக்களும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு நிறுவனமயமாக்கினர் அந்த கட்சிகளை.
திராவிட முன்னேற்ற கழகத்தின், சின்னமே தலித்துகளின் சின்னம்தான்... அந்த கட்சியிலும் ஆரம்ப காலங்களில் பெருமளவு தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றியவர்களும் பலியானவர்களும் தலித்துகள்தான்... அதில் தலைவர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினர்...
அடுத்து வந்த அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெருவாரியாக இணைந்ததும், இருப்பதும் தலித்துகள்தான்... ஆனால் அந்த கட்சிக்கு இப்போ தேவர்களின் கட்சி என்ற  பெயரும் வந்து விட்டது...

மதிமுக வில் முதல் பலியானதும் தலித்துதான்... ஆனால் அந்த கட்சியின் தலைவர் நாயுடு... அவர் தமிழர்களின் நலன் குறித்து பேசுவார், ஆனால் தலித்துகளின் நலன் குறித்து எதுவும் பேசமாட்டார்....
தேமுதிகாவில் கூட முதல் பலி தலித்துதான்... அவருடைய கட்சியில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான்... ஆனால் அவருக்கு தலித்துகளின் பிரச்சனையே தெரியாது...

இங்கு சொல்ல வந்த செய்தி தலித்துகள் அந்த கட்சியில் இருப்பதல்லல, தலித்துகளைப் போலவே மற்ற சாதியினரும் அந்த அந்த கட்சிகளில் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டு ஆரம்ப காலங்களில் செயல்பட்டவர்கள்தான், காலப்போக்கில் அவர்களிடம் இரண்டு விதமான மாற்றங்கள் நிகழ்ந்தது... அவர்களில் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு தலைமைக்கு நெருக்கமானார்கள்... மாவட்ட செயலாளர்கள் ஆணார்கள்... மந்திரி ஆனார்கள்.. இது எதுவும் நடக்க வில்லை அல்லது அந்த கட்சியில் தங்களின் சாதிக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு தாவினார்கள்....
ஆனால் தலித்துகள் மட்டுமே தாங்கள் கட்சி மற்றும் தலைவர்மீது கொண்ட விசுவாசத்திற்காக, அந்த கட்சி தொடர்ந்து தங்களுக்கு அநீதி இழைத்தாலும், பலியிட்டாலும் தொடர்ந்து அதே கட்சியில் தொடர்வது ஏன்...
இவர்களுக்கு ஏன் தலித் கட்சிகள் மீது நம்பிக்கை வருவதில்லை, இன்று மற்ற கட்சிகளில் இருக்கும் தலித்துகள் தங்களது தாய்வீடான, தலித்கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டாலே 48 சட்ட மன்ற உறுப்பினர்கள் நமக்கானவர்களாக இருப்பார்களே... தாய்வீடு திரும்ப மறந்த தலித்துகளால் அவர்களுக்கும் அவர்களது சமுகத்துக்கும் என்ன பயன்...?

இதையும் படியுங்கள்