Showing posts with label நுால் விமர்சனம். Show all posts
Showing posts with label நுால் விமர்சனம். Show all posts

Tuesday, August 13, 2013

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

மா. அமரேசனின் 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்' நூலை இயற்கை வளங்கள், சூழல், விளிம்பு நிலை மக்கள் என மூன்று தளங்களில் இயங்குவதாக வரையறுக்கலாம்.

பாலாறு குறித்தும், தண்ணீர் வியாபாரம் மற்றும் நீரை பற்றிய நான்கு கட்டுரைகளும், கவந்தி வேடியப்பன் மலை, சவ்வாது மலையின் பாதிப்புகள் என நான்கு கட்டுரைகளும், தலித் மக்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அரசியல் சார்ந்த கட்டுரைகள் என மொத்தம் 18 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.

சமூகத்தின் செயல்பாடுகள், சூழலியல் தன்மைகள் மற்றும் அதன் பாதிப்புகளை விளிம்பு நிலை மனிதனின் தெளிந்த பார்வையில், துணிவு மிக்க வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர்.

இன்றைய தமிழகத்தில் சமவெளி பிரதேசத்தில் மட்டுமல்லாது கடல், மலை சார்ந்த பகுதிகளில் வாழும் விளிம்பு நிலை மக்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

காடுகளின் பரப்பளவு 17%-ல் (சமன்நிலைக்கு 33% தேவை) ஆரம்பித்து, புலிகளின் அழிவு, யானைகளின் இறப்பு, பலவகை பறவைகளின் அழிவு மற்றும் அதன் வாழிட அழிப்பு, கிரானைட் என்ற பெயரில் மலைகளை தகர்த்தல், குவாரி என்ற பெயரில் ஆறு, ஏரிகளை சாகடித்தல், விளைநிலங்களை விட்டு விவசாயிகளை துரத்தியடித்தல், கடற்கரையை அழகு செய்தல் என்று மீனவ மக்களை வேரோடு பிடுங்கி எறிதல், கல்பாக்கம், கூடங்குளம் என 'அழிவுக்கான அறிவியலை' மக்கள் தலையில் திணித்தல், நீயூட்ரினோ ஆலை அமைத்து பேராபாய சங்கு ஊதுதல், 560-க்கும் மேற்பட்ட மீனவ சொந்தங்கள் இறந்தும் மயான அமைதி காத்தல், ஈழத்தில் இனப்படுகொலையில் 1.5 லட்சம் சொந்தங்கள் இறப்பு என தமிழகம் மற்றும் உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் அவல நிலை எட்டு திக்கும் தொடர்கிறது.

இவற்றில் இருந்து தமிழ்ச் சமூகம் எப்படி மீள்வது? என புரியாத ஒரு நிலையே இன்று அனைத்து தளங்களிலும் உள்ளது. இந்த அடிப்படையிலேயே அமரேசனின் நூலை நோக்க வேண்டியுள்ளது.


இன்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிகவும் முதன்மையானது 'தண்ணீர்' பிரச்னை. இதனை, 1. அண்டை மாநிலங்கள் நியாயமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடாமல் துரோகமிழைப்பது, 2. தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கத் தவறுவது மற்றும் கழிவு நீர் குட்டைகளாக மாற்றுவது, 3. ஆறு, ஏரி, குளங்களை வீட்டு மனைகளாக (Real Estate) மாற்றுவது, 4. நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

ஒரு பொருளைத் தயாரிப்பதில் இருந்து அதனை சந்தைப்படுத்துவது வரையிலான தொடர் செயல்பாடுகளின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர், 'புலப்படாத தண்ணீர்' என்ற புதிய கருத்தாக்கத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் கேரளாவுக்கு நம் மாநிலத்தில் இருந்து தினந்தோறும் செல்லும் அரிசி, முட்டை, காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும், உற்பத்தியில் ஈடுபடும் போது செலவாகும் தண்ணீரையும் சேர்த்து விலை நிர்ணயிக்க 'புலப்படாத தண்ணீர்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் செல்கிறது. அவர்களுக்கு அதனை தயாரிக்கும் போது ஏற்படும் தண்ணீர் இழப்பு மற்றும் செலவு இதனால் மிச்சமாகிறது. அப்போது நமது தயாரிப்பு செலவுடன் தண்ணீருக்கான அடக்க விலையையும் சேர்த்து சொல்வது சரியான முடிவாகவே இருக்கும் என்பதை நூலாசிரியர் முன்வைக்கிறார். இந்த செயல்முறையை சர்வதேச நாடுகள் நடைமுறைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார். நமது அரசியல்வாதிகள் இதனை கருத்தில் கொண்டால் நல்லது.


இயற்கை வளங்களில் ஒன்றான, பல்லாயிரம் வருடங்களில் உருவான மலைகள், இன்று கனிம வளத்திற்காகவும், கிரானைட் கற்களுக்காகவும் முற்றாக அழிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கவுந்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு ஒப்படைத்து கொள்ளைக்கு துணை போகும் அரசின் கயமையை 'வெடிக்கும் வேடியப்பன் மலை...' என்ற கட்டுரையில் தோலுரித்துக் காட்டுகிறார்.

சுற்றுலா என்பது சுரண்டலுக்கு முதல்படி. பெரு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு குழுமங்களுக்கும் நமது இயற்கை வளங்களை சுரண்ட கிடைத்திருக்கும் துருப்பு சீட்டுதான் 'சுற்றுலா' என்ற வார்த்தை. காடு, மலை சார்ந்து பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு யாருக்காக 'சுற்றுலா' பகுதியாக மாற்றுகிறார்கள் என்ற உள் அரசியலை 'சுரண்டலுக்கு முதல் வழி சுற்றுலா' என்ற கட்டுரையில் பதிவு செய்கிறார் நூலாசிரியர் மா. அமரேசன்.

சுற்றுலாவினால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், சூழல் சீர்கேடுகளை பட்டியலிடுகிறார். நம்முடைய பண்பாடு சீரழிவதையும் சுட்டிக் காட்டுகிறார்.


பஞ்சமி நிலங்கள் மீட்பது குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உண்மை முகம் குறித்தும் தனது கூர்மையான அறிவாற்றல் மூலம் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

வியாபார உலகில் அன்னை தினமும் ஒன்று தான், காதலர் தினமும் ஒன்று தான். சந்தையை குறிவைத்து இயங்கும் இத்தகைய கூட்டத்திற்கு இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து பலியாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடத்தின் அத்தனை நாட்களையும் ஏதாவதொரு நாளாக கொண்டாட தயாராகி உள்ள பெரு நிறுவனங்களை எதிர்த்தும் குரலெழுப்பியுள்ளார் ஆசிரியர்.

சூழலில் தொடங்கி நூலின் பயணம் காடு, மலை, சமவெளி பிரதேசம் என பயணப்பட்டு பெண்ணியத்தை தொட்டு இளைஞர்களின் நலன் பேசி முடிகிறது.

எளிமையான எழுத்து நடையால் வாசகரிடம் நெருங்கி சென்று தன் கருத்தை அவர்களின் மனதில் விதைக்கிறார்.

நூலின் அட்டை வடிவமைப்பும், உள்ளடக்கமும் சிறந்த முறையில் அமைந்துள்ளது. அதே வேளையில் நூல் முழுதும் நிறைந்துள்ள எழுத்து பிழையை நீக்கியிருந்தால் நூல் வாசிப்பு முழுமையடைந்திருக்கும். மா. அமரேசனிடம் இருந்து இன்னமும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்'.



நூலின் பெயர் - நடுங்கும் நிலம் நடுங்கா மனம்-(நிலம், வனம், சூழலியல்-தலித்தியப் பார்வை)

ஆசிரியர் - மா. அமரேசன்

வெளியீடு - நெய்தல் வெளி
153C, ஈத்தாமொழி சாலை, நாகர்கோவில் - 629002.

தொலைபேசி - 04652-265655.
(0) 9442242629

பதிப்பு - டிசம்பர் 2011.

மின்னஞ்சல் - neidhalveli2010@gmail.com

விலை . ரூ. 85.00


ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.

நன்றி

திரு.ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.
http://www.thadagam.com/index.php/books/bookscategories/bookreviews/827-nadungumnilamnadungamanam

தடாகம் இணையத் தளம் 

இதையும் படியுங்கள்