Showing posts with label இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள். Show all posts
Showing posts with label இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள். Show all posts

Tuesday, February 6, 2018

நதியில் ஆடும் பூவனம் பாடல்

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் - 7 

நதியில் ஆடும் பூவனம்  பாடல்

பொதுத் தகவல்கள் :

1976  ஆம் ஆண்டு வெளியான அண்ணக்கிளி திரைப்படம் இசைஞானியாரின் முதல் திரைப்படம் என்றாலும் முதல் திரைப்படத்திலேயே இப்பொழுது நடைமுறையில் இருக்கும், டிரண்ட் வணிகத்தை உருவாக்கியப் பெருமையும் இசைஞானியையே சேரும்  ( அந்த காலத்திலேயே அண்ணக்கிளி புடவை, அண்ணக்கிளி வளையல், என விற்பனையில் வந்தமைக்கு இசைஞானியின் இசை முக்கியக் காரணம்)


 1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் திரைப்படம்  திரைப்படத்தில்  இசைஞானியார் பாடல்கள், பின்னனி இசைஎன அனைத்து நிலைகளிலும் இந்திய இசையை மட்டும் பயன்படுத்தி இந்திய இசையில் அமைந்த பாடல்களை தந்து நம்மை மகிழ்வித்திருப்பார்.


நதியில் ஆடும் பூவனம் :

நதியில் ஆடும் பூவனம் பாடல் காதல் ஓவியத்தில் இடம் பெற்ற இனிய பாடல்களில் ஒன்று. 

இந்த பாடலை எழுதியது. கவிஞர் வைரமுத்து.
பாடியவர்கள், இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி.


 அந்த பாடல் உங்களின் புரிதலுக்காக வரிகளில் இதோ,


குழு: அவித்யாநா மந்தஸ்திமிர மிர த்வீப நகரி
      ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
      தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்மஜலதௌ
      நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வரஹஸ்ய பவதி

பெண்: நதியில் ஆடும் பூவனம்
      அலைகள் வீசும் சாமரம் ( நதியில்)

ஆண்: காமன் சாலை யாவிலும்
       ஒரு தேவ ரோஜா ஊர்வலம் ( நதியில்)

பெண்: குளிக்கும் போது கூந்தலை
       தனதாடை ஆக்கும் தேவதை

ஆண்: அலையில் மிதக்கும் மாதுளை
       இவள் பிரம்ம தேவன் சாதனை

பெண்: தவங்கள் செய்யும் பூவினை
       இன்று பறித்துச் செல்லும் காமனை

ஆண்:  எதிர்த்து நின்றால் ஆஆஆ
        எதிர்த்து நின்றால் வேதனை

பெண்: அம்பு தொடுக்கும் போது நீ துனை ய்ய்ய் சோதனை ( நதியில் )

ஆண்: ஸரிநிஸா பாமரிகா
       ஸரிநிஸா பாமரிகா
       ததபமா
       மதநிஸா நிதபம
       மதநிஸா
     
       ஸாஸஸாஸ ஸஸரிநிநிதத
       தாததாத ததநி பபதத

       ரிமாதநி தபநித
       ரிஸநிதபாமக
       தாபம நிதப
       ஸாநிதப ஸஸரிரிககமமபப
       நிரிகமபா
       
       சலங்கை ஓசை போதுமே
       எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
பெண்: உதயகானம் போதுமே
       எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே

ஆண்: இரவு முழுதும் கீதமே
பெண்: நிலவின் மடியில் ஈரமே
ஆண்: விரல்கள் விருந்து கேட்குமே
பெண்: ஒரு விளக்கு விழித்துப் பார்க்குமே 
ஆண்: இதழ்கள் இதழை தேடுமே

பெண்: ஒரு கனவு படுக்கை போதுமே போதுமே….
       நதியில் ஆடும் பூவனம்
       அலைகள் வீசும் சாமரம்

ஆண்: காமன் சாலை யாவிலும்
       ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

இருவரும்: ம்ம் ஹிம் ம்ம் ம்ம்

ஒரு இசை ரசிகனாக இருந்து சொல்வதாயின் மிக டாம்பீகமான இன்னும் சற்று கூடுதலாக சொல்வதாயின் எனக்கு எவ்வளவு தெரிந்திருக்கின்றது பார் என்னும் எண்ணவோட்டத்தில் மொழியை அனுகிய நிலையில் இருந்தே இந்த பாடல் கவிஞரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே அனுமானிக்கின்றேன். 

இருப்பினும் இந்த எளிமையான பாடலை காலத்தால் அழியாத பாடலாகவும், இனிமையான பாடலாக மெருகேற்றியதும், புகழ் பெறச் செய்ததும் இசை ஞானி இளையராஜாவின் இசை என்பதை அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்வார்கள். அதற்கென ஒரு இசையமைப்பாளராய் நம் இசை ஞானி அவர்கள் நிறைய மெனக்கெட்டிருக்கின்றார் இந்த பாடல் உருவாக்கத்தின் போது.  

இந்த பாடல் கல்யாணி ராகத்தில் மத்திமசாயில்  உருவாக்கப்பட்டிருக்கின்றது.  அதிலும் பிரதி மத்திம ராகத்தின் அடிப்படையிலும் தீஸ்ரஜதி தாளக்கட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட  பாடலாகும். பொதுவாக பிரதி மத்திம ராகம் என்பது எல்லா நேரங்களிலும் பாடக்கூடிய ராகமாகும். இந்த பாடலில் கீ போர்ட்டு, சாரங்கி, வீனை, புல்லாங்குழல், செண்டை, மிருதங்கம், சலங்கை, மற்றும் தோலிசை கருவியான டிரம்ஸ் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ( இசை தொடர்பான தகவல் அளித்தது. கரிக்காத்துார் இசை. ஆசிரியர். திரு. சூசை. பாபு. தொடர்பு எண். 9786990714  அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி) 

குறியீட்டு இசை 
    1. இந்த பாடலில் கதை தலைவி நதியில் நீராடும் பொழுதும், அந்த காட்சிகளிலும் சலங்கை ஒலி கேட்க்காது. அதற்கு பின் கதைநாயகி தரையில் நடக்கும் பொழுதும் நடனமிடும் பொழுதும் சலங்கை ஒலி கேட்க்கும் வகையில் நுட்பமாக இசையமைத்திருப்பார் நம் இசைஞானி. ஏற்கனவே இந்த நுட்பத்தை பல பாடங்களிலும், பாடல்களிலும் பயன்படுத்தி இருந்தாலும், பதினாறு வயதினிலே படத்தில் வரும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாட்டுக்குப் பின் இந்த பாடலில் நீர் மற்றும் நிலம் ஆகிய இரண்டு தினைகளிலும் சலங்கை ஒலியை மிக நுட்பமாகப் பயன்படுத்தியிருப்பார்
    2.  பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலின் இறுதியில் பெண் குரலின் ஆலாபனையை இனைத்துள்ள நுட்பமானது இந்த பாடலின் மிக நுட்பமான குறியீட்டு இசையாகும். அதாவது பக்தி என்பதன் உள்ளீடு காதலும் காமம் கூட, (பிற உயிர்களை நேசித்தல் ) அதனைத் தவிர்த்து இங்கு எந்த படைப்பும் இல்லை என்பதை மிக நுட்பமான குறியீட்டு இசையால் நமக்கு உணர்த்தியிருப்பார் நம் இசை ஞானி
    3. பாடலின் இடையில்  ஆண் குரலில் பாடும் ஸ்வரஜதி மற்றும் அதனை பின் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் மிருதங்க இசை இவை இரண்டையும் காதலர்களுக்குள் நிகழும் துாண்டலும் சீண்டலும் கூடிய முன் விளையாட்டுக்கான குறியீட்டாக ஸ்வரஜதியைப் பயன்படுத்தியிருப்பார்.
    4. அதற்கு பின் ஓங்கி ஒலிக்கும் மிருதங்க இசைக்கு காதலர்களின் ஊடலையும் கூடலையும் குறியீட்டு இசையாக்கி இருப்பார். நம் இசைஞானியார்.

இசை கட்டுடைத்தல் 
  • நம் இசை ஞானியார் தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளை உடைத்து புது கட்டமைப்பை உருவாக்கும் புரட்சிகரமான சிந்தனை கொண்டவர் என்பதை இசைஅறிஞர்களும், மேற்கத்திய, கிழக்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடிக், தமிழ் இசை என அனைத்து இசை வல்லுனர்களும் ஒப்புக் கொண்ட உண்மையாக இருப்பதால், இந்த பாடலில் அவர் மேற்கொண்ட கட்டுடைப்பை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இருப்பதால் இதை சுட்டிக் காட்டுகின்றேன். 
  •  இந்த பாடலின் இடையிசையில் மிக நுட்பங்களையும் மனதோடும் இனையும் இசை பேருற்றை பெருகச் செய்திருந்தாலும் பாடலின் போது சலங்கை ஒலி அதற்குப் பின் பறை இசையின் அடவுக் குறியீடான தக் தக்க திமி தா வை பயன்படுத்தியிருப்பார். 
  •  கம்பீர ராகமான கல்யாணியில், கம்பீர இசையான பறை இசையின் அடவுக்கு அவர் .இனைத்து தொடர்ந்து கம்பீரமான பறையிசையின் தக் தக்க திமி தாவை  முழக்கமாக்கி இருப்பார். தோலிசைக் கருவிகளில் எனக்கு எந்த உயர்வு தாழ்வும் இல்லை, என்னும் மனநிலையில் மற்றவர்களுக்கு உள்ள செண்டை, மிருதங்கம், தவில், டிரம்ஸ் போன்ற தோலிசைக் கருவிகள் உயர்ந்தவை. பறை இழிவானது என்னும் கண்ணோட்டத்தையும் எண்ணவோட்டத்தையும் உடைத்திருப்பார் இந்த பாடலில். 
பிறரின் பிழைகளை சரி செய்தல்

       பொதுவில் இசைஞானியார் தான் இசையமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் மற்றும் காட்சிபடுத்துதலில் உள்ள குறைபாடுகள் மற்றவர்களுக்கு தெரியாத வகையில் பாடலுக்கான இசை மற்றும் பின்னனி இசையால் அதனை ஈடு செய்வார் என்பார்கள். அந்த வகையில் இந்த பாடலிலும் சில ஈடுகட்டளை செய்துள்ளார். அவை

  • மேட்டிமைத்தனமான பாடல் வரிகளால் கேட்பவர்களுக்கு புரியாத நிலை வரக்கூடாது என்பதற்காவே தனக்கு மிக பிடித்தமான கல்யாணி ராகத்தை இந்த பாடலுக்குத் தெரிவு செய்தது.
  •  பாடலின் துவக்கத்தில் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலைப் பயன்படுத்தி இந்த பாடலுக்கு தெய்வீகத் தன்மையை கொண்டு வர முனைந்தது. இது காட்சிப் படுத்துதலில் மற்றும் பாடலில் உள்ள வார்த்தை வறட்சிப் பிழையை சரி செய்வதற்காக இசைஞானியார் செய்த முயற்சி.
  • உதாரணமாக சொல்வதெனின், எந்த ஒரு காட்சியிலும் காலமும், இடமும் தெளிவாகத் தெரியவேண்டும். ஆனால் இந்த பாட்டை சௌந்தர்ய லகரியின் முன்னொட்டு இல்லாமல் கேட்ப்பவர்களுக்கு இது கோவிலில் பாடுகின்ற பாட்டு என்பது புரியாது. மேலும் ஏதோ ஒரு மடத்திலோ அல்லது மண்டபத்திலோ பாடுவதாகவேத் தோன்றும். அத்துடன் அந்த பாடலின் இடையில் வித்தியாசமாகச் சிலர் நாயகன் நாயகி பாடுவதை வேடிக்கைப் பார்ப்பதாக காட்டும் பொழுது இன்னும் குழப்பம் பார்ப்பவர்களுக்கு அதிகரிக்கும். இதையெல்லாம் சரி செய்யவே இசைஞானியார் சௌந்தர்ய லகரியை முன்னொட்டுப் பாடலாக இணைத்தார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  
  • வறட்சியான வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முனைந்த முயற்சியின் விளைவாகவே பாடலின் இடையில் ஆண் குரலில் வரும் சரி நிஸா என்னும் ஸ்வரஜதியும் அதற்குப் பின் வரும் மிருதங்க இசையும்.

·         இவ்வாறு பாடல் மற்றும் இயக்கம் ஆகிய இரண்டில் உள்ள பிழைகளையும் சரி செய்தே இந்த பாடலை நமக்கு தந்திருக்கின்றார். மேலும் இதைப் போன்று அவர் பல பாடல்களிலும் தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளார். இருப்பினும் இரண்டு நண்பர்களுக்காக அவர் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டிருக்கின்றார் என்பதை இந்த பாடலை கேட்க்கும் அனைவருமே உணர்ந்து கொள்ள இயலும். 




பாடலில் இடம் பெற்றுள்ள புத்த சமயக் கோட்பாடுகள்:

நதியில் ஆடும் பூவனம் பாடலில் எனக்குத் தெரிந்து எந்த புத்தசமயக் கோட்பாடுகளையும் என்னால் சுட்டிக்காட்ட இயலவில்லை. அது இரண்டு காதலர்களுக்குள் நிகழும் சாதாரண உரையாடலை இசை வடிவில் கொண்டுவந்த நம் இசைஞானியாரின் முயற்சி அவ்வளவே. அதற்க்கு மேல் அந்த பாடலில் சொல்வதற்கு எதுவும் இல்லை.

ஆனால் அந்த பாடலில் இசைஞானியார் செய்த முயற்சியின் விளைவாக புத்த சமயக் கோட்பாடுகளுக்குள் அது பொருந்திப் போகின்றது. அது ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலை இந்த பாடல் துவங்கும் முன் இனைத்தது. அதனையும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், நுட்பமாகவும், ஆலயத்தில் நடக்கும் பாடல் காட்சியின் பின் புலத்தில் இந்த மந்திரத்தை இனைத்திருப்பார். அது.
அவித்யாநா மந்தஸ்திமிர மிர த்வீப நகரி
      ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
      தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்மஜலதௌ
      நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வரஹஸ்ய பவதி –

என்னும் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலை ஏன் ஒரு காதல் பாட்டின் முன்னொட்டில் பயன்படுத்த வேண்டும் என்ற எளிய மிகச் சாதாரணமான கேள்வி இந்த பாடலை கேட்க்கும் எவருக்காவது தோன்றியிருக்குமாயின் இசைஞானியாரின் பௌத்த ஞானத்தையும், ஆர்வத்தையும் அறிந்து கொண்டிருப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

அவ்வாறு ஏன் அவர் நதியில் ஆடும் பூவனத்தின் முன்னொட்டில் சௌந்தர்ய லகரியின் 3 வது பாடலை பயன் படுத்தினார். அதற்கான காரணம் என்ன என்ன என்பதை சற்று பின்னோக்கி சென்று பார்க்கும் போதுதான் நம்மால் புரிந்து கொள்ள இயலும். 

அதற்கு சில வரலாற்றுச் செய்திகளை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு பின்னோக்கி சென்று பார்க்க வேண்டியவர்களும், வேண்டியவைகளும். கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 
  1. ஆதி சங்கரர்
  2. சௌந்தர்ய லகரி
  3. அசுவ கோசர்
  4. சௌந்தர்ய நந்தா
  5. சௌந்தர்ய லகரி 3 வது பாடலுக்கான விளக்கம்
  6. சிந்தாமணி
  7. ஆதி சங்கரர் நிறுவிய தாந்திரிக வழிபாடுகள்
  8. யோகினிகள் மற்றும் அவர்களின் வகைகள் 
ஆதி சங்கரர்  


      அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சமயங்களான, சாங்கியம், ஆசிவகம், புத்தசம் ஜைனம் ஆகிய சமயங்கள் வரலாற்றில் செல்வாக்கு இழந்து நின்ற கால கட்டத்தில்,  குறிப்பாக புத்த சமயம் அப்போது மக்களிடம் மிகுந்த தாக்கத்தோடு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் புத்த சமயத்திற்கென தலைமைத்துவம் வாய்ந்த நபர்கள், மற்றும் அமைப்புகள், மடங்கள் நிறுவனங்கள் புரவலர்கள் என அனைவரையும் புஷ்யமித்திரன் மற்றும் அவருக்கு பின் வந்த அரசர்கள் அழித்தும், புத்த சமயத்தின் கருத்துக்கள் மக்களிடம் அதே செல்வாக்கோடு இருந்ததைக் கண்ட ஆதி சங்கரர், புத்த சமயத்தின் கருத்துக்களையும், நுால்களையும், வழிபாட்டு முறைகளையும் கொஞ்சம் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி இந்து சமயத்திற்கு கொண்டு வந்தார். 

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய சமய இனைப்பு கொள்கைளையும், கருத்தியல்களையும் அப்போதிருந்த அறிஞர்களும், வைணவ சமயத்தினரும் ஆதி சங்கரரின் தத்துவத்தை “ பிரசன்ன பௌத்தம்” என்றனர். அதாவது இந்து சமயத்துக்குள் மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தம் கருத்துக்கள் என்னும் பொருள்பட மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தம் என்றனர். ஆகவே ஆதிசங்கரரால் படைக்கப்பட்ட அனைத்தும் புத்த சமயத்திலிருந்து கடன் வாங்கியவை. அல்லது புத்த கருத்துக்களின் சாராம்சம் அல்லது தழுவல் என்ற புரிதலுடன் மேற்கொண்டு வாசிக்க அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். 

மேலும் ஆதி சங்கரர் இந்து சமயத்திற்கு கொண்டு வந்த சாக்த வழிபாடு என்னும் சக்தி வழிபாடு அல்லது பெண் தெய்வ வழிபாடு மற்றும் வழிபாட்டு முறைகள் யாவுமே புத்த சமயப் பெண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டு முறைகள் என்பதையும் நாம் இந்த கட்டுரையின் முடிவில் புரிந்து கொண்டிருப்போம் என்பதையும் நினைவூட்டுகின்றேன். 

சௌந்தர்ய லகரி  

சௌந்தர்ய லகரி என்று அழைக்கப்படும் நுால் 100 பாடல்களை கொண்டதாகும். இது உண்மையில் இரண்டு நுால்களின் தொகுப்பு. 41 பாடல்களை கொண்ட தொகுப்புக்கு ஆனந்த லகரி என்று பெயர். இதில் உள்ள அனைத்துப் பாடல்களும் மந்திர, தந்திர, யந்திர முறைகளைப் பற்றி விளக்குவதாகும். மீதமுள்ள 59 பாடல்களுக்கு சௌந்தர்ய லகரி என்று பெயர், இந்த பாடல்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களின் வர்ணிப்பு, அழகு, விவரிப்பு, கொடையுள்ளம், தாயுள்ளம் போன்ற பண்புகளை விவரிப்பதாகும். இதற்கு சௌந்தர்ய லகரி என்றே பெயர். உண்மையில் சௌந்தர்ய லகரி என்னும் வடமொழிச் சொல்லுக்கு அழகின் அலை என்றே தென்மொழியான தமிழில் பொருள் சுட்டப் படுகின்றது


ஆதி சங்கரரின் கருத்துக்கள் யாவும்பிரசன்ன பௌத்தம் அதாவது மாறுவேடம் பூண்டு வந்த புத்தசமயக் கருத்துக்கள்”  என்னும் பொழுது. ஆதி   சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லகரியின் மூலம் எது, அது எங்கிருந்து வந்தது, அதன் தழுவல் எது என்னும் கேள்விக்கான விடையை தேடும் பொழுது. சௌந்தர்ய லகரி என்னும் நுால் மகாயான புத்த சமயத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அஷ்வ கோஷர் எழுதிய சௌந்தர்ய நந்தா என்னும் நுாலின் உந்துதலாலும், சாரத்தினாலும் எழுதப்பட்டிருக்கின்றது. என்பதை உணரமுடிகின்றது

அஷ்வகோசர்

அஷ்வகோசர் என்னும் சொல்லுக்கு குதிரையின் கனைப்பை போன்ற குரல் உடையவர் என்னும் பொருள். தர்க்க வாதியான அஷ்வகோசர்  பிறப்பின் அடிப்படையில் இந்து சமயத்தினர். தனது வாதத் திறமையினால் மற்ற சமயத்தவர்களை வாதுக்கு அழைத்து வெல்லும் தன்மை உடையவர். அவ்வாறு இவர் வாதம் செய்யும் திறனை கண்ட பெர்சுவா என்னும் மூத்த புத்த பிக்கு, அஷ்வகோசருக்கு புத்த தீக்சை அளித்து புத்த சமயத்துக்கு மாற்றுகின்றார். அதற்குப் பின் அவர் வட இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பாலி மற்றும் பிரகிருதியில் இருந்த புத்த சமயக் கோட்பாடுகளையெல்லாம் துாய சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கின்றார். அவ்வாறு அவர் மொழி பெயர்த்து எழுதியவைகளில் மிக முக்கியமானது. புத்த சரிதம், அது புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் சொன்ன நுால்.


அதற்குப் பின் அவர் இயற்றிய மற்றொரு மிக முக்கியமான நுால் சௌந்தர்ய நந்தா காவியம் ஆகும். இது புத்தரின் தந்தையான சுத்தோனருக்கும், சித்தியான கௌதமிக்கும் பிறந்த ஆண் மகன் பெயர் நந்தன், மற்றும் நந்தனின் மனைவி சுந்தரி குறித்து எழுதியது சௌந்தர்ய நந்தா

சௌந்தர நந்தா

சௌந்தர நந்தா காப்பியம் புத்தரின் சித்தி மகனான நந்தனை குறித்து எழுதியது. நந்தன் புத்தரின் தம்பியாவதால் அவருடைய, குடும்ப வாழ்வு, துறவு, புத்த சமய தெய்வங்களை வழிபடும் முறைகள், கடமைகள் குறித்தெல்லாம் இந்த நுாலில் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது.

இந்த நுால் இரண்டு அடிகள், பத்து வார்த்தைகள் என 1063 செய்யுளைக் கொண்டது. 18 படலங்களைக் கொண்டது. இந்த நுால் இரண்டு பகுதியைக் கொண்டது. முதல் பகுதி. நந்தன் மற்றும் அவரது அழகான மனைவி சுந்தரி இவர்களின் மண வாழ்வினைக் குறித்து பேசுவது. இரண்டாவது பகுதி புத்தசமய தெய்வங்களையும் அவர்களை வழிபடும் சடங்குகளை குறித்தும் விவரிக்கின்றது.

ஆதி சங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியும் சௌந்தர்ய நந்தாவின் இரண்டாம் பாகத்தை தழுவியது. அதன் பாடல் முறைகள் கூட அப்படியே கையாளப்பட்டுள்ளது. 

சௌந்தர்ய லகரி 3 வது பாட்டுக்கான விளக்கம்.

அவித்யாநா மந்தஸ்திமிர மிர த்வீப நகரி
      ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
      தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜந்மஜலதௌ
      நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வரஹஸ்ய பவதி

இந்த பாடல் சில வரிகள் மாற்றத்துடன் சௌந்தர்ய நந்தா காவியத்திலும் வருகின்றது. அதன்படி அஷ்வகோசரின் விளக்கத்தையும் ஆதி சங்கரரின் விளக்கத்தையும் தனித் தனியே பார்ப்போம்.

அஷ்வகோசரும் அவித்யா என்னும் சமஸ்கிருத வார்த்தையைப் சௌந்தர்ய நந்தா நுாலில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். புத்தசமயத்தவர்களைப் பொருத்தவரை அவித்யா என்பது அறியாமையைக் குறிக்கும் சொல். அவித்யாவின் எதிர் சொல்லான வித்யா என்பதன் பொருள் புத்த சமயத்தவர்களைப் பொருத்தவரை அறிந்தது என்னும் பொருளிளேயே கையாளப்பட்டிருக்கின்றது.


அதாவது, புத்த சமயத்தினருக்கு வித்யா என்றால், நான்கு உன்னத வாய்மைகள் என்று சொல்லப்படும்
  1. இந்த உலகில் துன்பம் இருக்கின்றது 
  2. துன்பத்துக்கான காரணம் இருக்கின்றது 
  3. துன்பத்தை நீக்குவதற்கான வழி முறைகள் இருக்கின்றது. 
  4. துன்பம் நீங்குகின்றது என்னும் நான்கு உன்னத வாய்மைகளை அறிந்திருத்தலும். மற்றும் அதனுடன் தொடர்புடைய எண்வழி மார்கத்தை அறிந்திருத்தலுமே வித்யா என்று சுட்டப்படுகின்றது. அஷ்வகோசரால்.
ஆதி சங்கரரோ அவித்யா என்னும் சொல்லுக்கு, அஞ்ஞானம் என்றும் வித்யா என்னும் சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்கின்றார் அஞ்ஞானத்தை வெல்ல வேண்டுமாயின் சிந்தாமணியை தியானிக்க வேண்டும் என்று சொல்கின்றார் ஆதி சங்கரர் 

சிந்தாமணி  

சிந்தாமணி என்பது புத்த சமயத்தவர்களால் முழு ஞானம் என்னும் பொருளில் கையளாப்படும் சொல்லாகும். அதற்கான முழு ஞானம் அடைய நினைக்கும் புத்த சமயத்தவர் ஒருவர் சிந்தாமணியை கையில் வைத்துக் கொண்டு தியானித்தால் ஞானம் அடைவார். அவர் நினைத்தது நடக்கும் என்பது மகாயான புத்தசமயத்தவர்களின் நம்பிக்கை 

 

படத்தில் உள்ளது மகாயான புத்த சமயத்தவர்கள் ஞானம் பெற கைகளில் வைத்துக்கொண்டு தியாணிக்கும் சிந்தாமணியாகும். எனில் ஆதி சங்கரர் குறிப்பிடுவது சிந்தா தேவி என்னும் புத்த சமய பெண் தெய்வத்தை சிந்தாமணி என்கின்றார்.  அவர் புத்த சமயத்தின் பெண் தெய்வங்களின் வழிபாடு முறையான யோகினி வாழிபாட்டை சௌந்தர்ய லகரியில் நிறுவுகின்றார். இந்து சமயத்தில் ஏழு கண்ணிகள் என்று அழைக்கப்படும் சப்த கண்ணிகள் துவங்கி 64 பெண் தெய்வங்களை யோகினிகளா வழிபாட்டு முறையை சித்தரிக்கின்றார். உண்மையில் இந்த யோகினிகள் அனைவரும் மாயான புத்த சமய பெண் தெய்வமான மகாமாய வின் அம்சங்களாகவே புத்த சமயத்தில் சித்தரிக்கப்படுகின்றது. 

இந்த பின்புலத்தையெல்லாம் உணர்ந்து கொண்டபின் மீண்டும் ஒரு முறை நீங்கள் நதியில் ஆடும் பூவனம் பாடலைக் கேட்பீர்களேயானால், உங்களுக்கு அந்த பாடலில் இடம் பெற்றுள்ள புத்தசமயக் கோட்பாடுகள் நன்றாக விளங்கும் .  நான்கு உன்னத வாய்மைகளயும் எண்வழி மார்கத்தையும் அறியாத ஒருவன் அறியாமை என்னும் துன்பத்தில் உழலுவான் என்னும் புத்தசமய கோட்பாட்டுடைய பாடலையே இசைஞானியார் நதியில் ஆடும் பூவனம்  பாடலின் முன்னொட்டில் கையாண்டுள்ளார்  . 



இந்த கட்டுரைக்கு துனை நின்ற நுால்கள்

  1. https://ta.wikipedia.org/s/62x8
  2. Aśvaghoṣa - Wikipedia
  3. A Metaphorical Study of Saundarananda by Linda Covill
  4. Yogini Tantra by Biswanarayan Shasthri 
  5. Soundariya Lahari - English Version
  6. பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள்
  7. Asvaghosa and His Times






இதையும் படியுங்கள்